மரத்தடியில் குளிர்கால இலக்கியப் போட்டி

மரத்தடிக் குழுமத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகவும் சரியான பாதையில் செல்வதாகவும் இருக்கின்றது. ஆக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, கருத்துகளையும் விமர்சனங்களையும் எந்தவித ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வந்த மிகச் சில குழுக்களில் மரத்தடியும் ஒன்று. அந்தக் குழுமம் அடுத்த தளத்தில் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்கவேண்டிய, சந்தோஷப்படவேண்டிய விஷயம்.

விடலைப்பருவத்தில் கதை எழுத ஆசையிருந்தது என்றாலும் அனுபவமற்ற கதைகள் வெறும் விழலுக்கு இறைத்த நீராய் அமைந்துவிடுமென்ற எண்ணத்தால், சிலவற்றைக் கதைகள் என்கிற பெயரில் என் டைரியில் கிறுக்கி வைப்பதோடு நின்று போனது என் எழுத்தார்வம். அப்படிக் கிறுக்கிவைத்த ஒன்றிற்கு தினகரன் தீபாவளி மலர்-நெல்லைப்பதிப்பு முதல் பரிசு அளித்து என்னை உறையச்செய்தது. அதற்குப்பின் எழுத முனைந்த சிறுகதைகள் எல்லாமே வெறும் சம்பாஷனைகளின் தொகுப்பாய் அமைந்துபோக, கதையை எழுதுவதைக்காட்டிலும் என் முதல் தேவை நல்ல கதைகளைப் படிப்பது என்ற முடிவெடுத்தேன். அப்படியே தொடர்ந்த என் கதை படிக்குமார்வம் மெல்ல மெல்ல வளர்ந்து, தமிழ்ப்புத்தகம் படிக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்ற் முத்திய ஒரு நிலையில் துபாய் என்னை வரவேற்றுக்கொண்டது. அதன்பின் புத்தகங்கள் கைகளில் கிடைக்காததால் என்னார்வம் ஆனந்தவிகடன், துக்ளக், இந்தியாடுடே என்ற வாரப்பத்திரிகைகள் வாசிப்போடு நின்றுபோக, எனக்குள் நாவல்கள் படிப்பதன் மீதான ஏக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

வந்தது ஒரு சுபநாள்.

மரத்தடிக்குழுமத்தில் இணைந்தேன். மஸ்கட்டிலிருந்து வந்திருந்த ஹரீஷ்குமார் சொன்னதன்பேரில் மரத்தடியில் இணைந்து வாசிப்பாளனானேன். இரண்டாம் நாளே எழுத்தாளனானேன்! மனதுள் குடியிருந்த காதல் என்னைக் காதல் கவிதைகளைத்தான் எழுதத் தூண்டியது. அதைத்தான் நானும் எழுதினேன். அதுமட்டுமல்லாமல் தமிழ் எழுத்துரு, முரசு பற்றிய முறையான பயிற்சியோ அறிவோ இல்லாததால் சிறிய கவிதைகள் எழுதுவது எளிதானதாக இருந்தது. இப்படி எழுத ஆரம்பித்த நான் மெல்ல சிறுகதைகளுக்குள் புகுந்தேன் அல்லது செலுத்தப்பட்டேன்.

அவ்வப்போது சேரியதாகவும் பெரும்பாலும் நகைச்சுவையாகவும் போய்கொண்டிருந்த குழு, ஒரு கட்டத்தில் தன் இருப்பை உணர்ந்து, வெற்றுக் கதையாடல்களைக் குறைத்துக்கொண்டு, கருத்துப்பரிமாற்றம், விமர்சனம் உள்ளிட்ட பல சேரிய செயல்களைத் தொடங்கியது. இதற்கு நட்புக்குழுக்களிலுள்ள வளர்ந்த எழுத்தாளர்கள் முதல் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் சொல்லிய அறிவுரையும் முக்கியக்காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படிப் போய்க்கொண்டிருக்கிற குழு இன்னொரு தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. குளிர்கால இலக்கியப் போட்டி. இந்த முயற்சிக்கான ஒட்டுமொத்த பாராட்டிற்கும் உரியவர் நண்பர் பி.கே.எஸ். சிவகுமார். அவருக்கு பாராட்டும் நன்றியும்.

இந்தப் போட்டி முயற்சி புதியதல்ல. ஏற்கனவே ராயர்காபிக்ளப் குழுமம் மாதமொரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. குழுமங்களில் சிறுகதைப்போட்டியை முதன்முதலில் நடத்தியது க்ளப்பாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நேரமின்மை உள்ளிட்ட சில காரணங்களால் அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது சோகமான விஷயம். மரத்தடியில் போட்டியை ஏற்று நடத்தும் உபயதாரர்களும் மட்டுறுத்தனர்களும் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அறிவுப்புடன் மேள தாளத்துடன் ஆரம்பிப்பது எளிதல்ல. சவால்களை எதிர்கொண்டு அதை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டியதுதான் முக்கியம்.

குளிகாலப்போட்டி வெற்றிகரமாக நடக்க இறையருள் துணைசெய்யட்டும்.

மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்!

மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹ¥ குழுமமும் வாழ்வின்\பாலும், வாழ்கின்ற சமூகத்தின் பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படுவன. மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விடயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓர் ஆரோக்கியமான இணையக் குடும்பமாக ஆனால் விதவிதமான வண்ணங்களைப் போன்ற எண்ணங்களுடன் நாங்கள் மரத்தடியில் வாழ்ந்து வருகிறோம். வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, மரத்தடியில் “குளிர்கால சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகளை” அறிவித்திருக்கிறோம். முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கும், புதுக்கவிதைக்கும் தலா இரண்டு பரிசுகள் வழங்க இருக்கிறோம். முதல் பரிசாக இந்திய ரூபாய் 5000-ம், இரண்டாம் பரிசாக இந்திய ரூபாய் 2500-ம் வழங்க உள்ளோம். திண்ணை ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம் அவர்கள் பரிசுக்குரிய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும், எழுத்தாளர் திருமதி. காஞ்சனா தாமோதரன் அவர்கள் பரிசுக்குரிய புதுக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும் இருந்து உதவ அன்புடன் இசைந்துள்ளார்கள். இலக்கியத்தின் மீது ஆர்வம் உடைய புதுமுக மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். போட்டிக்கான விதிகளை மரத்தடி யாகூ குழுமச் செய்திகளில் காணலாம். உங்களுக்காக அவற்றை மீண்டும் கீழே தந்திருக்கிறோம்.

1. மரத்தடி யாகூ குழுமத்தில் இதுவரை உறுப்பினராக இல்லாதவர்களூம்கூட, போட்டியின் இறுதி நாளுக்குள் (பிப்ரவரி 15, 2004 EST) உறுப்பினராகிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மரத்தடி யாகூ குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்களே போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.

2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தரத் தயாராக இருக்கவேண்டும். தனிப்பட்ட விவரங்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளத் தயக்கமென்றால் அவற்றை குழுமத்தின் மட்டுறுத்துனரிடமோ போட்டியின் ஒருங்கிணைப்பாளருடனோ பகிர்ந்து கொள்ளலாம்.

3. பிரபல பத்திரிகைகளுக்கு இணையான பரிசுகளை மரத்தடி வழங்குவதால், போட்டியில் வெல்கின்ற படைப்புகளை வேறெங்கும் அவற்றின் ஆசிரியர்கள் பின்னர் பிரசுரத்திற்கு அனுப்பக்கூடாது. போட்டியில் வெல்கின்ற படைப்புகள் மரத்தடி இணையதளத்தில் பிரசுரிக்கப்படும். பிற இடங்களில் பிரசுரிப்பது குறித்து மட்டுறுத்துனர் சந்திரமதி கந்தசாமி அனுமதி வழங்கவோ மறுக்கவோ செய்வார். போட்டிக்கு அனுப்பப்படும் எல்லாப் படைப்புகளைப் போட்டியின் முடிவுகள் தெரியும் வரையும் அவற்றின் ஆசிரியர்கள் வேறெங்கும் (இணையக் குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) பிரசுரிக்க அனுப்பக்கூடாது.

4. பி.கே.சிவகுமார் இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். ஒருங்கிணைப்பாளரோ அவர் குடும்பத்தினரோ இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாது.

5. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

6. போட்டியில் பங்குபெறும் படைப்புகளை “மரத்தடி குளிர்கால சிறுகதைப் போட்டி – கதையின் தலைப்பு”, “மரத்தடி குளிர்கால புதுக்கவிதைப் போட்டி – புதுக்கவிதையின் தலைப்பு (தலைப்பு இருக்குமானால்) என்கிற “Subject” உடன் மரத்தடி குழுமத்தில் பொதுவில் மடலிடுங்கள்.

7. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் போட்டிக்காகவென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்; அதாவது, வேறெங்கும் (இணையக்குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) முன்னமே பிரசுரமாகியிருக்கக் கூடாது.

8. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும்.

9. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே முடிவானது; உறுதியானது. போட்டிக்கு உதவலாம் என்கிற எண்ணத்துடனும், முரண்களையும் சர்ச்சைகளையும் களையும் விதத்துடனும், இந்தப் போட்டியின் விதிகளை மாற்றவோ, தளர்த்தவோ, கூட்டவோ ஒருங்கிணைப்பாளருக்கு உரிமை உண்டு.

10. போட்டிக்கான படைப்பு என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.

11. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15, 2004 11:59 PM EST.

12. போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 29, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.

13. ஒருவர் அதிகப்பட்சமாய் ஒரு சிறுகதையும், ஒரு புதுக்கவிதையும் மட்டுமே போட்டிக்கு அனுப்ப இயலும்.

14. மேலும் விவரங்களுக்கு mathygrps@yahoo.com அல்லது pksivakumar@att.net ஆகிய மின்னஞ்சல்களுக்கு மடலிடுங்கள்.

வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

….வேண்டுகிறேன்.

Share

Comments Closed