பேரறிவாளன் தூக்குத் தண்டனை தொடர்பாக

இக்கடிதம் ஜெயமோகன் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

 

01. பேரறிவாளன் நல்லவர், அப்பாவி, எனவே தூக்குத் தண்டனை கூடாது, அவருக்கு சாதாரண தண்டனைகூட அநியாயம் என்றுதான் இங்குள்ள தமிழுணர்வாளர்கள் பேசுகிறார்கள். இது தவறு. தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம் அவர்கள் தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் என்று அவர்கள் போராடவேண்டும்.

02. புலிகள் இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இவர்களுக்கு தூக்குத் தண்டனை அவசியமில்லை என்பது என் கருத்து. உடனே புலிகள் இல்லை என்று வைகோ, பழ நெடுமாறன் சொன்னார்களா என்கிறார்கள். அவர்கள் ஏன் சொல்லவேண்டும். அவர்கள் புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்வதே அவர்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை நிற்க வைத்துக்கொள்ளவும், உணர்வுரீதியாக ஏமாற்றவும்தானே.

03. அரசாங்கமே தடையை நீக்கவில்லை என்பது அடுத்த நியாயம். புலிகளில் ஒன்றிரண்டு பேர் அல்லது ஒரு சிறிய குழு மிச்சமிருக்கலாம் என்பது அரசின் கருத்தாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் புலிகள் இன்று ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. புலிகள் பிரபாகரன் ஒருவரைச் சுற்றிக் கட்டப்பட்ட இயக்கம். பிராபகரன் கொல்லப்பட்டதுமே புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதே பொருள். பின் லாடன் கொல்லப்பட்டதும் அடுத்த ஒருவர் தலைமை ஏற்பதுபோல இங்கே நடைபெற வில்லை. புலித் தொடர்ச்சி நடக்கவில்லை. எனவே இவர்கள் மூவரையும் தூக்கில் இடுவது தேவையில்லை.

04. இவர்கள் மூவருக்கும் விடுதலை அளிப்பதையும் நான் ஆதரிக்கவில்லை. சிறையில் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒரு முன்னாள் பிரதமரை, இந்தியத் தலைவரைப் படுகொலை செய்தது என்பது இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே.

05. ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் எதிர்ப்பதை நான் ஏற்கவில்லை. இந்திய நீதிமன்றமே தூக்குத் தண்டனை குறித்த திர்ப்பை இறுதி செய்யவேண்டும். கருணை மனுவும் உள்ளது. இந்த தற்போதைய நடைமுறையே போதுமானது.

06. கசாப், அன்சாரி போன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பதை நான் ஏற்கிறேன். வரவேற்கிறேன்.

07. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கும் ஆயுள் தண்டனையே தரப்படவேண்டும். மூன்று மாணவிகளுக்கும் என தனித்தனியாகத் தண்டனை அனுபவிக்கச் சொல்லி வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க வைக்கலாம். ஒரு அரசியல்வாதிக்காக அராஜகமாக பஸ் எரித்தது அநியாயம். ஆனால் தூக்கு என்பது அதிகபட்சம் என்பது என் எண்ணம்.

08. பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்த மக்களும், ஜெயலலிதாவும் முன்வரவேண்டும். ஜெயலலிதாவின் ‘அரசியலுக்கு’ இது நல்ல ஒரு வாய்ப்பு. தமிழர் தலைவர் என்ற கருணாநிதியின் வேடத்தை ஒரேடியாகக் கலைத்துப்போட்டு, அந்த ‘வேடத்தை’ தான் எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கருதியாவது ஜெயலலிதா இதனைச் செய்யவேண்டும். வேடத்துக்காக அல்லாமல், உணர்வு ரீதியாக, உண்மை நிலை கருதி, இந்த மூவருக்குமான தூக்குத் தண்டனை எதிர்ப்பை ஜெயலலிதா செய்தால், அவருக்கு வாழ்த்துகள்.

Share

Comments Closed