திறந்திருக்கும் ஜன்னலோடு சில மணித்துளிகள் – கவிதை

நீண்ட நெடுவனமாய்
மாறிவிட்ட நிலத்தில்
நான் நடந்துகொண்டிருந்தபோது
பூ கொண்டுவந்து கொடுத்தாள்
ஒரு சிறுமி
நேற்று காலையில்
சாலையைக் கடக்கும்போது
அடிபட்ட நாய்க்குட்டி
துடிதுடித்துக்கொண்டிருந்தது;
அதன் இரத்தத் துளிகளை
அப்பூவில் கண்டேன்
பழம் வேண்டுமா என்றாள் ஒரு பாட்டி.
இன்று காலையில்
வீட்டின் முன்பு
வெகு நேரம்
பிச்சைக்காகக் காத்துக்கொண்டிருந்தவளின்
சாயலில் இருந்தாள் அவள்.
தேன் கொண்டுவந்தவனின்
முகத்தைப் பார்க்க நான் மறுத்தேன்
அவன் என்னைக் கேலி செய்யத் தொடங்கினான்
நடந்துகொண்டிருந்த என் கால்கள்
ஓடத் துவங்கின.
நீண்ட நெடும் வனம்
முடியவே இல்லை.
பெரும் மூச்சிரைப்புக்கு நடுவே
தேன் கொண்டு வந்தவன்
கத்தத் துவங்கும்போது
அறைந்து சாத்தினேன்
என் ஜன்னல்களை.

Share

Comments Closed