கவிதைக்காகக் காத்திருக்கிறேன்

நீல வானத்தில்
வெள்ளைத் திட்டுக்களாய்
கால் பாவும் மேகங்கள்
பூமியைப் படித்தபடி
நகர்ந்துகொண்டிருக்க
மிதப்பில் இருக்கின்றன மரங்கள்

காற்றின் குறும்புதாளாது
கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன
என் கையில்
வெள்ளைக் காகிதங்கள்

நான்
கவிதைக்காகக் காத்திருக்கிறேன்

தவத்தைக் கலைக்கிறது
ஓடை நீரில்
தொப்ளக் சத்தம்.

எவனோ குதித்துபோது
தெறித்த துளிகள் பட்டு
திறந்திருக்கும்
தொட்டாச்சிணுங்கிச் செடியின்
இலைகள் மூடிக்கொள்ளும்
அழகைவிட
நல்ல கவிதை
எழுதமுடியாதாகையால்
இன்னும்
வெள்ளையாகவே இருக்கின்றன
காகிதங்கள்

Share

Comments Closed