சேரனின் "ஆட்டோகிராஃப்" – ஒரு விமர்சனம்


தமிழ்த்திரையில் நம்பிக்கை அளிக்கும் இயக்குநர்களில் சேரனும் ஒருவர். இந்தப் படத்திலும் அதை நிரூபித்திருக்கிறார். எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும் அனுபவம் படமாக்கப்பட்டுள்ளது. சிறப்பாகவே படமாக்கப்பட்டுள்ளது.

பத்தாவது படிக்கும்போது ஏற்படும் ஈர்ப்பு படமாக்கப்பட்டிருக்கும் விதம் கவிதை மாதிரி இருக்கிறது. அந்தச் சிறுவனும் அந்தப் பெண்ணும் பேசிக்கொள்ளும் விதம் படு யதார்த்தம்.

கேரளச்சூழலில் இரண்டாவது பெண்ணைச் சந்திக்கிறார். காதல் மலர்கிறது. அதைப் படமாக்கியவிதமும் வெகு இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. இதுவரை எந்தவொரு தமிழ்ப்படமும் இத்தனை நல்ல மலையாளம் பேசி படமாக்கப்படவில்லை. மலபார் போலீஸ் படத்தைப் பார்த்த மலையாளிகள் சத்யராஜின் மீது இன்னும் வன்மமாகத்தான் இருக்கிறார்கள். 🙂

“அந்த ஏழு நாள்களில்” வரும் மலையாளம் கொஞ்சம் தேவலாம் என்றாலும் அதுவும் தரமான மலையாளமில்லை. அலைபாயுதேவில் வரும் அழகம்பெருமாளும் நித்யாவும் தரமான மலையாளம் பேசினார்களென்றாலும் மிககுறைவாகத்தான் பேசினார்கள். ஆட்டோகிரா·பில் மட்டுமே மலையாளம் சரியாகக் கையாளப்பட்டிருக்கிறது.

முதலிரண்டு பெண்கள் வரும் காட்சிகளின் நேர்த்தியை மூன்றாவது பெண் (ஸ்நேகா) வரும் காட்சியில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். முதலிரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எத்தனை இயல்போ எத்தனை யதார்த்தமோ அத்தனைக்கு அத்தனை ஸ்னேகா வரும் காட்சிகள் முழுவதும் செயற்கைத்தனம்.

வித்தியாசமாக வேலை கேட்கிறோம் என்று சொல்லி, அந்த முயற்சியில் வேலை கிடைத்தது என்று சொல்லும்போது படத்தின் யதார்த்தம் தொலைந்துபோக ஆரம்பிக்கிறது. சேரன் ஸ்நேகாவைச் சந்திக்கும் காட்சிகளிலேயே ஸ்னேகா தைரியசாலியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. ஆனால் திடீரென்று ஒரு காட்சியில் “முன்னல்லாம் இப்படி இல்ல. ரொம்ப கோழை. இப்ப ரொம்ப தைரியமா இருக்கேன்னா அதுக்குக்காரணம் friedship” என்று டயலாக் அடிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஸ்னேகாவிற்குப் பின் இரண்டு பெரிய சோகம் இருப்பதைக் காண்பிக்கிறார்கள். ஒன்று அவர் ஏமாற்றப்பட்டது; இன்னொன்று அவரது தாயின் நிலை. அப்படிப்பட்ட தாய் இறந்தும் அவர் அதை மறைத்து சேரனின் வெற்றிக்காக முயல்வதும், அதில் சேரன் வெற்றி பெறுவதும் பின்னர் அதை அறிந்த சேரன் “ஏண்டா ஏன்” என்று கேட்கும்போது friendship என்று பதில் சொல்லும்போது இது சேரன் படமா “அக்மார்க் விக்ரமன் படமா” என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

படத்தின் கவிதைத்துவமான காட்சிகள் பத்தாவது படிக்கும்போது காட்டப்படும் காட்சிகளும் கேரளக் களத்தில் வரும் காட்சிகளும். இவற்றிலும் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார் சேரன்.

பத்தாவது படிக்கும் சிறுவனுக்கு சேரனே குரல் கொடுத்திருக்கிறார் (என நினைக்கிறேன்). அந்தக் குரல் மிகுந்த முதிர்ச்சியோடு இருப்பதால் அந்தச் சிறுவனை நம்மிடமிருந்து கொஞ்சம் அந்நியப்படுத்தி விடுகிறது.

கேரளக் காட்சிகளில் வரும் டூயட் பாட்டு, ஆதாம் ஏவாளாகக் கற்பனை செய்து பார்ப்பது – அபத்தமான காட்சிகள்.

படத்தின் அடுத்த மிகப்பெரிய குறை பாடலும் பின்னணி இசையும். ஒரு நல்ல படத்திற்கு, கொஞ்சம் வித்தியாசமான முயற்சிக்கு சையமைக்கிறோம் என்கிற எண்ணம் பரத்வாஜுக்கும் சபேஷ்-முரளிக்கும் கொஞ்சம் கூட இருந்ததாகத் தெரியவில்லை. ஞாபகம் வருதே பாடல்தான் நல்ல பாடல் என்று சொல்லவேண்டிய துர்பாக்கிய நிலை.

நடிகர் சேரன் இனி இயக்குநராக மட்டும் இருத்தல் அவருக்கும் நமக்கும் நல்லது. காட்சி நமக்குத் தரவேண்டிய சோகத்தைத் தரவிடாமல் நடிப்பில் கொண்டு வர முயற்சித்து தரையைப் பார்த்து சோகப்பட்டு அவர் நடிக்க யத்தனிக்கும் விதம் ஸ்டீரியோ டைப்பிக்காக அமைந்துவிட்டது. அவர் நிறுத்திக்கொள்ளுதல் நலம்.

லதிகா (கேரளாவில் வரும் காதலிக்கதாபாத்திரத்தின் பெயர். நடித்திருப்பவர் கோபிகா) விதவையாகக் காட்டப்படும் காட்சி எதிர்பார்த்த ஒன்று. ஆனாலும் அதை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.

இவற்றையெல்லாம் மறக்கடிக்கும் அளவிற்குப் படத்தை உயரத் தூக்கி நிறுத்துகிறது படத்தின் உச்ச கட்ச காட்சிகள். கல்யாணம் நடக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிந்தும் சேரன் தனக்கு வரப்போகும் மனைவியை மனதளவில் ஏற்கத் தயாராகும் காட்சிகளைக் காட்டும் விதம் படு அசத்தல். புதுப்பெண் சொன்னதும் தாடியை எடுப்பதும், புகைப்படம் எடுக்கும்போது தோளில் கையைப் போட்டுக்கொள்வதும் ஒவ்வொருத்தராக வந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும் படத்தின் ஒட்டுமொத்த இனிய நினைவுகளைக் கண்முன் கொண்டுவந்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல், மூன்று பெண்களுமில்லாமல் நாலாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் காண்பிக்குமிடத்தில் இயக்குநர் சேரன் ஜெயிக்கிறார்.

படத்தில் நான் மிகவும் இரசித்த காட்சி என்றால் பத்தாவது படித்த போது விருப்பப் பட்ட பெண்ணைத் தன் திருமணத்திற்கு அழைக்கச் செல்லும் காட்சிகள். அவளது மகனின் பெயர் செந்தில் என்றதும் “உம் பேரு என்னப்பா” என்று கூட வந்த நண்பர் கேட்க “சுரேஷ்” என்று சொல்லவும், “பாத்தியா உனக்கு முன்னாடியே ஒருத்தன் இருந்திருக்கான்” என்னும்போது தியேட்டரே அலறுகிறது. (அப்போது சேரன் அந்த நண்பரை அறைவது கூட சரியான இயக்கம் இல்லை என்றுதான் சொல்வேன். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பின்பு அந்த கமெண்ட்டை யார் கேட்டாலும் சிரிக்கத்தான் செய்வார்கள். சேரன் செந்திலின் கதாபாத்திரத்தை மிகுந்த உணர்ச்சிபூர்வமாகக் காட்ட அப்படி கையாண்டார் போல!) அதைத் தொடர்ந்த காட்சிகள் எல்லாமே வெகு இயல்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் நல்ல படங்கள் வருகின்ற சீசன். அதில் ஆட்டோகிரா·ப்-ம் ஒன்று.

Share

Comments Closed