ஆய்த எழுத்து – ஒரு விமர்சனம்


எடுத்த எடுப்பில் மாதவன் சூர்யாவைச் சுட பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது. அந்தப் பரபரப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து கொண்டு செல்கிறார் மணிரத்னம் இடைவேளை வரையில். வெவ்வேறு வாழ்க்கைத் தளங்கள், வெவ்வேறு பிரச்சனைகள், வெவ்வேறு இலக்குகளுடன் மூன்று இளைஞர்கள்.

மொட்டைத் தலையுடன் அடியாளாக, அதேசமயம் உள்ளுக்குள் ‘பெரியாளாக வேண்டும்’ கனவுடன் மாதவன். மாதவனின் நடிப்பும் டயலாக் டெலிவரியும் அசத்தல். கிட்டத்தட்ட நெகடிவ் கேரக்டர். துணிச்சலாகச் செய்திருக்கிறார் மாதவன். மூன்று நடிகர்களில் மாதவன் முந்துகிறார். அரசியலில் நல்லவர்கள் இறங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சூர்யா. கூடவே காதல். பல தடைகளை எதிர்த்து, ச்¢த்தார்த்தும் கைகோர்க்க, மாதவனை முறியடித்து, பேண்ட் ஷர்ட்டுடன் சட்டசபைக்குள் செல்ல.. கொட்டாவி.

படத்தின் ஆரம்ப கட்டக் காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு இடைவேளை வரை தொடர்வது படத்தின் பெரிய பலம். இடைவேளைக்குப் பின் வரும் சித்தார்த்- த்ரிஷா லாலிபாப் காதல் படத்தின் மிகப்பெரிய பலவீனம். சூர்யா மாதவன் காட்சிகளில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்பு சித்தார்த்தின் காட்சிகளில் இல்லாமல் போனது இன்னொரு ஸ்பீட் ப்ரேக்கர். சிவகாசி மாப்பிள்ளை என்று த்ரிஷா சொல்லும் காட்சிகளெல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. தேவையே இல்லாமல் சூர்யா- ஈஷா தியோல் காதல். ஈஷோ தியால் “நடிப்பு கிலோ எவ்வளவு ரூபாய்?” என்கிறார். த்ரிஷா, ஈஷோ தியோல் இருவரும் நம் பொறுமையைச் சோதிக்கும்போது ஆறுதல் அளிப்பது மீரா ஜாஸ்மினின் அழகும் நடிப்பும். அசத்தல் மீரா ஜாஸ்மின்.

படத்தின் ஆச்சரியம் பாரதிராஜா. அவரும் சூர்யாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் படத்தின் ஹைலைட். பாரதிராஜாவுக்கு இன்னும் அதிக வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.

ஏ.ஆர்.ரகுமான். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே வந்தது போன்ற பிரமை. மற்றப் பாடல்கள் வருகின்றன, போகின்றன. ஒன்றும் மனதில் நிற்பதில்லை. பாடலைத் தனியே போட்டு நூறு முறை கேட்டுவிட்டுப் படத்திற்குப் போகவேண்டும் என்பார்கள் ஏ.ஆர்.ரகுமான் இரசிகர்கள். பின்னணி இசை சுத்த மோசம். (பாரதிராஜாவும் மாதவனும் கடைசியில் பேசிக்கொள்ளும் காட்சி நீங்கலாக) பாடலின் ஹம்மிங்கையோ இசையையோ போட்டு படம் முழுதும் ஒப்பேற்றி விடுகிறார். பின்னணி இசை பிரவீன்மணி என்கிறார்கள். எழுத்துப் போடும்போது அப்படிக் காட்டவில்லை.

சுஜாதா நீண்ட நாள்களுக்குப் பிறகு பளிச். பல வசனங்கள் நல்ல கைதட்டைப் பெறுகின்றன.

மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைத் தனித்தனியாகக் குழப்பமில்லாமல் காண்பிப்பதில் வென்ற மணிரத்னம் படத்தின் டெம்ப்போவை இழுத்துப் பிடிப்பதில் சறுக்கியிருக்கிறார். சித்தார்த்- த்ரிஷா காதல் படத்தின் சீரியஸ்தன்மையை உடைக்கிறது. மாதவன் கேரக்டரில் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சுகிறது. சூர்யா சொன்னதும் கல்லூரி மாணவர்கள் படைபோல் பின்னால் வருவதெல்லாம் சுத்தப் பூச்சுற்றல். சித்தார்த் திடீரென அரசியலுக்கு வந்து சூர்யாவுக்குத் தோள் கொடுக்கும் காட்சியும் த்ரிஷா மீண்டும் சித்தார்த்திடமே வந்து சிவகாசி மாப்பிள்ளை ட்ரெயின் ஏத்திவிட்டார் என்று சொல்வதும் இது மணிரத்னம் படமா என்று சந்தேகம் வரும் நேரங்களில் சில.

ஆய்த எழுத்து – கொஞ்சம் எழுத்துப்பிழை!

===

ஒரு முக்கியமான கேள்வி:

மாதவன் ஜெயிலிலிருந்து வெளிவரும்போது போலீஸ்காரர் அவரிடம் அவரது பணத்தை ஒப்படைக்கிறார். ‘பத்துப் பைசா குறையுதே’ என்று மாதவன் சொல்லவும் போலீஸ் பத்துப் பைசாவைத் தேடித் தருகிறார். (கைதிகளோட பழகிப்பழகி நகைச்சுவை உணர்ச்சியே இல்லாமப் போச்சோ என்கிறார் மாதவன். சுஜாதா பஞ்ச்) பத்துப் பைசாதான் செல்லாதே.. அப்புறம் எப்படி???

Share

Comments Closed