God is with us…

நேற்று கேள்விப்பட்ட விஷயமொன்று.

பெண்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது, ஒரு குழுவாகப் பார்க்குமிடத்துப் போதாது என்றாலும் சில தனிப்பட்ட பெண்களின் சுயப்பிரக்ஞை ஆச்சரியமளிப்பதாகவும் சந்தோஷமேற்படுத்துவதாகவும் உள்ளது.

எங்கள் ராயர் ஜாதியில் (எனக்கு ஜாதி நம்பிக்கையில்லை யென்றாலும் நான் என்ன ஜாதியென்று சில சமயங்களில் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைச் சொல்லும்போது கல்யாண்ஜியின் நல்ல கவிதையொன்று நினைவு வருகிறது.) நல்ல மாப்பிள்ளைகள் அமைவது கஷ்டமென்பார்கள். சிலர் ஆசிரியர்களாக இருக்கலாம். வேறு சிலர் அரசாங்கப்பணிகளில். பெரும்பாலானோர் என்னவோ சமையல் தொழிலில் மற்றும் கோவில் பூஜைகளில்தான். இன்றுவரை இந்த நிலைமை அதிகம் மாறியதாகத் தெரியவில்லை.இப்படி சமையலோ, கோவில் பூஜையோ அல்லாத நல்ல மாப்பிள்ளையொருவர் என் நண்பரின் அண்ணனாகிப்போனார்.

நண்பர் மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்கவர். ஒரு வகையில் எனக்கு இருப்பதாக நான் நினைத்துக்கொள்ளும் இலக்கிய ஆர்வம் கூட அவரிடமிருந்து எனக்கு வந்ததுதானோ என நான் யோசிப்பதுண்டு. நண்பரின் மீது நான் வைத்திருந்த “மாதிரி” (Model) என்ற பிம்பம் அவரது சில தவறான முடிவுகளால் உடைந்தது, இத்தனைக்கும் அந்த முடிவுகளின் போதே அது தவறென்று நான் சொல்லியும் அவர் ஏற்காததால் அந்தப் பிம்பம் உடைந்ததென்றே நினைக்கிறேன். அது ஒருபுறமிருக்கட்டும்.

நிஜமாகவே இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பதால் என் கடுமையான குற்றச்சாட்டு மற்றும் அவர் மீதான தனி நபர் விமர்சனம் எல்லாவற்றையும் ஒரு சிரித்த புன்முகத்தோடு எடுத்துக்கொள்பவர். நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. 🙂 அப்படி அற்றவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாகத்தான் இருக்கமுடியும் என்பதும் இன்னொரு அ.மு.ந. 🙂

நண்பரின் அண்ணனுக்குக்காகப் பெண் பார்க்கப்போனார்கள். நண்பரின் அண்ணா நான் மேலே சொன்ன சமையல் மற்றும் பூஜைப்பணியில் இல்லாததால் பெண் தகைவதில் அத்தனைச் சிரமமிருக்காதென்பதே நண்பரின் குடும்ப நம்பிக்கையாக இருந்தது. எனது தனிப்பட்ட நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது.

நேற்று நண்பரிடமிருந்து “God is with us!” என்று ஒரு தலைப்பிட்டுக் கடிதம் வந்தது. ஸ்பேம் மெயிலோ என்ற சந்தேகத்துடனேதான் திறந்தேன். பிரித்துப் படிக்காமல் போயிருந்தால் நல்லதொரு நிகழ்ச்சியினைப் படிக்காமற் போயிருப்பேன்.

“அன்பார்ந்த ஹரி, (என்னை என் சொந்தக்காரர்கள் ஹரி என்றேயழைப்பார்கள்)

நேற்றுப் பெண் பார்க்கப் போயிருந்தோம். எல்லாருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. அண்ணா உடனே பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான். அவன் முகத்தில் வெட்கமும் சந்தோஷமும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. என் மாமா பெண்ணும் பையனும் தனியாகப் பேசட்டும் என்று சொன்னார். அண்ணா “எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லை, எனக்குப்பிடித்திருக்கிறது” என்றான். ஆனால் பெண் பேசவேண்டுமென்று சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் ஆச்சரியப்படும்போதே தீர்மானமாகப் பெண் எல்லார் முன்னிலையும் பேசத்தொடங்கினாள்.

“எனக்கு ஹிந்துமத நம்பிக்கைகளிலே நம்பிக்கையில்லை. நான் எந்த ஹிந்துக் கடவுள்களையும் தொழமாட்டேன். கோவில்களுக்கு வரமாட்டேன். பூஜை, புனஸ்கார வகையறாக்கள் ஆகவே ஆகாது.”

அண்ணா கொஞ்சம் அரண்டுவிட்டான் என்றேதான் சொல்லவேண்டும். “ஏன்” என்றான்.

“எனக்குப் பிடிக்கலை”

“அப்ப யாரைத்தான் கும்பிடுவீங்க?”

“ஜீஸஸ். எனக்குக் கிறிஸ்தவத்துலதான் நம்பிக்கை. I like Jesus!”

“ஓ”

அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அண்ணா இதைக் கேட்ட பின்பு ஒரேடியாக மறுத்துவிட்டான். அங்கேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நிலைமை இரசாபாசமாவதற்குள் வீடு வந்துவிட்டோம்.

நல்லவேளை! அந்தப் பெண் தைரியமாக இப்போதே சொன்னாள். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? Thank God!.

உன் வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்….. ”

என்று தொடர்ந்தது அக்கடிதம்.

என் நண்பரின் அண்ணாவின் மறுப்பில் எனக்குப் பேதமில்லை. அவர் துணைவி எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பது அவர் உரிமை. என் நண்பர் God is with us” என்று தலைப்பிட்டிருந்ததையும் புரிந்துகொள்ளமுடிந்தது. நண்பரின் அண்ணாவின் அன்றைய மனநிலை எப்படி இருந்திருக்குமென்பதையும் சில நிமிடங்கள் யோசித்தேந்தான். ஆனால் அதையெல்லாம் மீறி வியப்பில் ஆழ்த்தியது அந்தப் பெண்ணின் உறுதியும் தெளிவும்.

சமையற்காரர்கள் மற்றும் கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு மத்தியில் ஓர் அரசாங்கப் பணி மாப்பிள்ளைக்காக அந்தப் பெண்ணை எத்தனைச் சொல்லிச் சொல்லித் தயார்ப்படுத்தியிருப்பார்கள்? அத்தனையும் தூள் தூள்!

ஆடைக்குறைப்புப் புதுமைப் பெண்களுக்கு மத்தியில் நிஜத்திலேயே ஒரு புதுமைப்பெண். அண்ணாவின் திருமணம் நிச்சயமாகாமற் போனதே என்ற நண்பரின் வருத்தத்தில் கூட என்னைப் பங்குகொள்ள வைக்கமுடியாமற் செய்தது அந்த முகம் தெரியாத பெண்ணின் துணிவும் தெளிவும்.

வாழ்க வளமுடன்.

(இந்த உள்ளிடுகையைத் தொடர்ந்து நான் வலைப்பதிவிற்கென்றே தனியாக எழுதுவதில்லையென்ற, உலகைப் பீடித்திருந்த பெருநோய் அகன்றது!)

Share

Facebook comments:


4 comments

 1. பரி (Pari) says:

  Please enable full text for RSS readers

  1.Login to blogger,
  2. goto Settings->Site Feed
  3. Choose “Full” in Descriptions and Save Changes.

 2. Haranprasanna says:

  Pari, done.

 3. Anonymous says:

  புதுமைப் பொண்ணுன்னா துணிச்சல் இருக்கும் சரிதான். ஆனா துணிச்சல் இருந்தாலே புதுமைப் பெண்ணாக்கும்? ஒரு எண்ணம்/குறிகோளில் உறுதியினால் வரும் துணிச்சலுக்கும் இயற்கையான துணிச்சலுக்கும் எவ்வளவு வித்யாசம்! மதம்ன்னு மட்டும் இல்லை, பொதுவாவே எல்லா விஷயத்திலும்.

  அப்பறம், இப்படி எல்லாரும் முழு கண்டண்ட்டையும் ஆர்.எஸ்.எஸ். ஃபீட்ல குடுத்தா டௌன்லோட் ஆக எவ்வளவு நேரம் ஆகிறது தெரியுமா ஆர்.எஸ்.எஸ் ரீடர்ல? எப்படியும் கமெண்ட் பகுதில என்ன இருக்குன்னு பாக்கறதுக்கு கண்டிப்பா இங்க வந்து பாக்கதானே போறோம்?

  க்ருபா

 4. Haranprasanna says:

  நீங்க என்ன சொல்றீங்க பரி? 🙂 எனக்குப் புரியலை. பரி சொன்னார்னு செஞ்சேன், இப்ப க்ருபா வேண்டாங்கிறார். என்னவோ போங்க.

  க்ருபா, நெஜமாவே அந்தப் பொண்ணு எனக்குப் புதுமைப்பெண்தான். நச் பதில் சொல்லிச்சுல்ல எல்லார் முன்னாடியும். சொல்லாம கல்யாணம் பண்ணியிருந்தா நண்பரோட அண்ணனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்திருக்கும். அதைத் தவிர்த்தது அந்தப் பெண்ணின் துணிவும் தெளிவும்தான?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*