தமிழ்மணம்

http://www.thamizmanam.com/

காசியின் முயற்சிக்குப் பாராட்டுகள். இதுவரை வலைப்பதிவுகளில் ஒவ்வொன்றாகச் சென்று பார்க்கவேண்டியிருந்தது. இனி அப்படியில்லாமல் தமிழ்மணத்திலேயே பார்த்துக்கொள்ளமுடியும். பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை புதிதாக வந்த உள்ளிடுகைகளைச் சேகரிக்கிறது தமிழ்மணம். இதுவரை பார்க்காத வலைப்பதிவுகளையெல்லாம் இன்றுதான் பார்வையிட்டேன். தலைப்பிலிருந்து அதைப் பற்றி வாசிக்கவேண்டுமா வேண்டாமா என்று இனி தீர்மானித்துவிடலாம். ஒவ்வொரு வலைப்பதிவையும் ஓடையில் சேர்த்துப் பார்க்கலாம்தான். ஆனால் காசியின் தமிழ்மணம் ஒவ்வொரு வலைப்பதிவாக ஓடையில் சேர்க்கும் பணியைக் குறைக்கிறது.

காசிக்கு நன்றி பல.

மரத்தடியில் அவர் உள்ளிட்ட மடல் உங்கள் பார்வைக்கு.

==============================================================

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

தமிழ் வலைப்பதிவுகள் எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் பாலமாக இருக்கும்படி ‘தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்’ என்ற பெயரில் ஒரு மேடைத்தளம் (வெப்போர்ட்டல்) அமைத்துள்ளேன்.

அதன் முகவரி:

http://www.thamizmanam.com/

இயங்கும் வலைப்பக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் கீழ்க்கண்ட வசதிகளைப் பெற்றிருக்கிறது.

வலைப்பதிவுகளுக்குப் புதியவர்களுக்கு:

– வலைப்பதிவுகளைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு, முழு வலைப்பதிவர் பட்டியலும் காணக்கிடைக்கிறது

– இந்தப் பட்டியல் உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுதும் வலைப்பதிவர்களை பெயரின் முதலெழுத்து வாரியாகவோ, தொடங்கிய தேதி வாரியாகவோ, வசிப்பிடம் வாரியாகவோ தேர்ந்தெடுத்து வாசிக்கவும் முடிகிறது.

வழக்கமான வலைப்பதிவு வாசகருக்கு:

கூடுதலாக

– புதிதாக வலைப்பதிவுகளில் எழுதப்பட்டவற்றின் தலைப்பும் சாரமும் 15 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்பட்டு காட்டப்படுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளுக்கு ஒருவர் தேடிப்போய் புதிதாக எதுவும் எழுதப்பட்டுள்ளனவா என்று தேடுவது தவிர்க்கப்படுகிறது.

– தங்கள் செய்தியோடை படிப்பான்களிலேயே வாசிக்க விருப்பமிருப்பவ்ர்களுக்காக செய்தியோடைத் தொகுப்பும் (OPML file ofNewsfeeds) பதிவிறக்கம் செய்துகொள்ளக்கிடைக்கிறது.

வலைப்பதிவு தொடங்க விருப்பமிருப்பவர்களுக்கும், ஏற்கனவே செய்துகொண்டிருப்பவர்களுக்கும்:

– வலைப்பதிவு தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எளிய ஐயங்களைத் தீர்க்க ஏதுவாகும் சில கட்டுரைகளின் தொடுப்புக்கள் காட்டப்படுகின்றன. (இது இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை)

– வலைப்பதிவு தொடங்கியவர் தன் வலைப்பதிவின் விபரங்களைப் பட்டியலில் உடனடியாக சேர்க்கும் வசதி

– பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட வலைப்பதிவின் செய்தியோடை முகவரி உடனடியாக செய்தியோடைத் தொகுப்பில் ஏற்றப்படுகிறது. எனவே திரட்டியின் மூலம் காட்டப்படும் ‘புதிதாக

எழுதப்பட்ட விஷயங்கள்’ பட்டியலில் இந்தப் புதிய பதிவும் இடம் பெறுகிறது. இதன் மூலம் ஒரு புதிய வலைப்பதிவர் உடனடியாக ஒரு வாசகர் வட்டத்தைப் பெறுகிறார்.

இதுபோக ஒவ்வொரு நிலையிலும் (விருந்தினர், வாசகர், வலைப்பதிவர்) இருப்பவர்களுக்குப் பொருத்தமான தொடுப்புகள் அங்கங்கே காட்டப்படுகின்றன.

எந்த மனித ஈடுபாடும் இன்றி இவை அனைத்தும் தானியங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதால், பிழையின்றி, ஓய்வின்றி இந்தத் தளம் இயங்கிக்கொண்டிருக்கும்.

இத்தகைய புதிய முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர் என்ற முறையில் இந்தத் தளத்தை பயன்படுத்திக்கொள்ளவும், பொருத்தமானவர்களுக்கு சுட்டிக்காட்டவும் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

இது பற்றி மேலும் கேள்விகள்/கருத்துக்கள்/ஆலோசனைகளை எனக்கு எழுதவும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்,

-காசி ஆறுமுகம்

============================================================

Share

Comments Closed