சுவர்கள் : சில குறிப்புகள் – கவிதை

[முன்குறிப்பு:

ஒரே சுவர் பிரித்தாலும்

எம் வீட்டின் சுவர் ஆகாது உம் வீட்டின் சுவர்]

எதிர்வீட்டின் வெளிச்சுவரில் பம்பரம் சின்னம்

முனியம்மா வீட்டுச் சுவர் காரைகள் உதிர்ந்து

என் வீட்டுச் சுவரில்

கண்ணீர் விட்டுக்கொண்டு படபடக்கும் போஸ்டர்

(குணசேகர பாண்டியன் செத்துப்போனது பற்றி பிறிதொரு சமயம்)

சில சுவர்களில் கோலியின் புள்ளித் தடங்கள்

இன்னும் சில சுவர்கள்

மழை வெயிலில் பட்டு நீலம் வெளுத்துப்போய்

பாம்புகளும் பல்லிகளும் ஊர்ந்த தடங்களை

சுவர்கள் மறைத்துவிடுகின்றன

வீட்டுக்குள் நடப்பதை உலகிலிருந்து பிரிப்பது போலவே

தெருக்களின் ரேகைகளாக நிற்கும் சுவர்கள்

ஒருவகையில் நம்மை மட்டுப்படுத்துகின்றன

கொஞ்சம் உற்று நோக்குங்கள்,

உங்கள் தெருவில் கிடக்கும் சுவர்கள்

ஒரு கணத்தில் முகிழும் முப்பரிமாணப் பிம்பம் போல

நவீன ஓவியங்களாய் கிடக்கலாம்

எம் தெருக்கள்

சில சமயம்

ஆகலாம் உம் தெருக்கள்

Share

Facebook comments:


3 comments

 1. -/பெயரிலி. says:

  பிரசன்னா,
  நன்றாக விழுந்திருக்கிறது கவிதை; குறிப்பாக, முன் குறிப்பும் “பாம்புகளும் பல்லிகளும் ஊர்ந்த தடங்களை சுவர்கள் மறைத்துவிடுகின்றன வீட்டுக்குள் நடப்பதை உலகிலிருந்து பிரிப்பது போலவே. தெருக்களின் ரேகைகளாக நிற்கும் சுவர்கள் ஒருவகையில் நம்மை மட்டுப்படுத்துகின்றன”.

  ஆக, பொருந்தாத கடவாய்ப்பற்கள்போல (முன்பற்களாக அல்ல) துருத்திக்கொண்டு உதைக்கும் இரு வரிகள்:
  “ஒரு கணத்தில் முகிழும் முப்பரிமாணப் பிம்பம் போல
  நவீன ஓவியங்களாய் கிடக்கலாம்.” கவிதையின் அறுதிப்புள்ளியிலே கொஞ்சம் அழுத்தமாக விழுந்திருக்கலாமோ? (ஆனால், கவிதை உணர்தல் ஆளுக்காள் வேறானது அல்லவா?)

 2. Haranprasanna says:

  பெயரிலிப்பெரியம்மா. 🙂 (இப்படி அழைக்கலாம்தானே?!)

  எங்கே இந்தக் கவிதை கவனிக்கப்படாத கவிதை ஆகிவிடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை!

  கடைசி வரிகள்: முன்குறிப்புக்கு எதிரான கருத்தைச் சொல்வதுபோல் அமைக்க நினைத்தேன். ஆனாலும் இரண்டுமே உண்மை என்பது போல. மேலும் சுவர்களை உற்று நோக்கச் சொல்லும்போது சரியான உவமை வேண்டும் என்று நினைத்து எழுதப்போய், யதார்த்தம் பிசகி வலிந்த தன்மை வந்துவிட்டதோ. எழுதிய உடனே வாசகப்பார்வை கொண்டு வர ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே கவிதை விழத்தான் வேண்டும்.

 3. Anonymous says:

  யொஉர் பொஎம் இச் நிcஎ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*