சுவர்கள் : சில குறிப்புகள் – கவிதை

[முன்குறிப்பு:

ஒரே சுவர் பிரித்தாலும்

எம் வீட்டின் சுவர் ஆகாது உம் வீட்டின் சுவர்]

எதிர்வீட்டின் வெளிச்சுவரில் பம்பரம் சின்னம்

முனியம்மா வீட்டுச் சுவர் காரைகள் உதிர்ந்து

என் வீட்டுச் சுவரில்

கண்ணீர் விட்டுக்கொண்டு படபடக்கும் போஸ்டர்

(குணசேகர பாண்டியன் செத்துப்போனது பற்றி பிறிதொரு சமயம்)

சில சுவர்களில் கோலியின் புள்ளித் தடங்கள்

இன்னும் சில சுவர்கள்

மழை வெயிலில் பட்டு நீலம் வெளுத்துப்போய்

பாம்புகளும் பல்லிகளும் ஊர்ந்த தடங்களை

சுவர்கள் மறைத்துவிடுகின்றன

வீட்டுக்குள் நடப்பதை உலகிலிருந்து பிரிப்பது போலவே

தெருக்களின் ரேகைகளாக நிற்கும் சுவர்கள்

ஒருவகையில் நம்மை மட்டுப்படுத்துகின்றன

கொஞ்சம் உற்று நோக்குங்கள்,

உங்கள் தெருவில் கிடக்கும் சுவர்கள்

ஒரு கணத்தில் முகிழும் முப்பரிமாணப் பிம்பம் போல

நவீன ஓவியங்களாய் கிடக்கலாம்

எம் தெருக்கள்

சில சமயம்

ஆகலாம் உம் தெருக்கள்

Share

Comments Closed