தலைமுறை

என் தாத்தாவிற்கு தனது எழுபதாவது வயதில் சம்பாதித்து எங்களைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். தனது கடைசிக்கால ஆசிரியப்பணியில் இரண்டு ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். மீண்டும் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது அவர் உடனே தேர்ந்தெடுத்தது தனிப்பயிற்சியாகத்தான் இருக்கமுடியும். ஒன்றிரண்டு மாதங்களிலேயே நிறைய மாணவர்கள் அவரிடம் தனிப்பயிற்சிக்குச் சேர்ந்தனர். அவர் ஆங்கிலம் நடத்தும் பாணியே அலாதியானது. தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்கள் பலருக்கு ஆங்கிலம் என்றாலே என்ன என்று தெரியாது. அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கு என் தாத்தா மேற்கொண்ட முயற்சிகளைச் சொல்லி மாளாது. சளைக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லித்தருவார். அதுவரை இல்லாத வழக்கமாக காலை நான்கரைக்கும் தனிப்பயிற்சிக்கு வரவேண்டும் என்று சொன்னார். தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்களுக்கெல்லாம் ஆச்சரியமும் எரிச்சலும் ஒருசேர எழுந்தது. மாணவர்கள் வீட்டில் அதிசயித்துப்போனார்கள். இதுவரை அந்தப் பகுதியில் – அப்போது மதுரையில் இருந்தோம் – யாரும் காலை நான்கரைக்குத் தனிப்பயிற்சி சொல்லித்தந்ததில்லை. நான்கரைக்குத் தனிப்பயிற்சி ஆரம்பிக்கும். தாத்தா மூன்றரைக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஒரு கா·பியோ டீயோ சாப்பிட்டுவிட்டு, தனிப்பயிற்சி நடக்கும் இடத்தைத் தூற்று, மேஜை விளக்கு வைத்து, நான்கு மணிக்குத் தயாராகிவிடுவார். நான்கரைக்கு வரவேண்டிய பையன்கள் ஐந்துமணிக்குத்தான் வரத் தொடங்குவார்கள். ஆனாலும் என் தாத்தா எல்லா நாளிலும் சரியாக நான்கு மணிக்கே தயாராகிவிடுவார். இது எங்கள் தூக்கத்திற்கும் இடஞ்சலாகத்தான் இருக்கும். ஆனாலும் தாத்தாவை எதிர்த்து ஒன்றும் பேசிவிடமுடியாது. தாத்தா முடிவெடுத்துவிட்டால் அதை மாற்ற யாராலும் முடியாது. சரியோ தவறோ அவர் நினைத்ததை அவர் செய்துகொண்டே இருப்பார். உறுதியுடன் செய்வார். இறுதிவரை செய்வார்.

எங்கேனும் ஊருக்குச் செல்லவேண்டுமென்றால் புகைவண்டியின் நேரத்தைக் கேட்டுக்கொள்வார். வண்டி வரும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே அங்கிருக்கவேண்டும் என்பது அவர் கொள்கை. ஒருமணி நேரமாவது தாமதமாக வரவேண்டும் என்பது வண்டியின் கொள்கை. அவருடன் ஊருக்குச் செல்லும் தினங்களில் இரண்டு மணிநேரம் புகைவண்டி நிலையத்தில் தவித்துக்கிடப்போம் நேரம் போகாமல். சில சமயம் எரிச்சலில் நான் கத்தியிருக்கிறேன். ஆனாலும் அவர் மசிய மாட்டார். ஒரு மணிநேரத்திற்கு முன்பு போயே ஆகவேண்டும்.

அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது துணியையும் என் பாட்டியின் துணியையும் அவரே தன் கைப்படத் துவைப்பார். அவர் நடை தளர்ந்து போகும்வரை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகள், அதாவது அவரது எழுபத்தி எட்டாவது வயது வரை இதைச் செய்தார். துவைப்பது என்றால் வாஷிங் மெஷின் துவைத்தல் அல்ல. பளீரென்ற வெண்மைக்குச் சான்று என்றால் என் தாத்தாவின் வேட்டி, சட்டைகளைத்தான் சுட்டமுடியும். அப்படி ஒரு வெண்மை. ஒரு நாள் அணிந்த துணியை மறுநாள் அணியமாட்டார். ஒரு சிறிய பொட்டாக அழுக்குப் பட்டுவிட்டாலும் அதைத் துவைக்கும்வரை அவருக்கு ஆறாது. கடைசி காலங்களில் அவர் இதையே எங்களிடமும் எதிர்பார்க்க, எங்களால் அப்படிச் செய்யமுடியாமல் போனது. துணிகளைச் சேர்த்தெடுத்து, வாஷிங் மெஷினில் போட்டு, காலரை ஒரு கசக்குக் கசக்குவதே எங்களுக்குத் தெரிந்த துவைக்கும் முறை. இதைத் தாத்தாவால் ஏற்கமுடியவில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.

தாத்தாவின் குணநலன்கள் எனக்குக் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னிடமில்லை. அவரைப் போல் என்னால் விஷயத்தை முழுமையாக அணுகமுடியவில்லை. (புத்தகம் படிக்கும் விஷயத்தையும் எழுதும் விஷயத்தையும் தவிர!) நானும் சில வருடங்கள் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். ஐந்து மணிக்கு தனிப்பயிற்சி சென்றால் நான்கு அம்பத்தைந்துக்குத்தான் நான் தயாராவேன். தாமதம் இருக்காது. ஆனால் ஏதேனும் சிறு தடங்கல் ஏற்பட்டால் தாமதாகிவிடும் அபாயம் உண்டு. நெருக்கிப் பிடித்துத்தான் தயாராவேன். ஐந்து மணிக்குப் பேருந்து என்றால் நான்கே முக்காலுக்குத்தான் பேருந்து நிலையத்தில் இருப்பதை விரும்புவேன். போகும் வழியில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அந்தப் பேருந்தைப் பிடிக்கமுடியாமல் போய்விடும்.

நான் மிக இரசித்துச் செய்யும் விஷயத்தில் கூட என்னால் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படமுடியவில்லை என்றே நினைக்கிறேன். வயது ஒரு காரணமாக இருக்கலாம். என் தாத்தா என் வயதில் இப்படி இருக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும். அவர் என் வயதில் மிக அதிகமான பொறுப்புடனும் அதிக அர்ப்பணிப்பு உணர்வுடனும்தான் இருந்தார் என்று அவர் உட்பட பலர் சொல்லியிருக்கிறார்கள்.

இது என் தவறு மட்டும்தானா அல்லது இந்தத் தலைமுறையின், அதாவது என் தலைமுறையின் தவறா எனத் தெரியவில்லை. எல்லா விஷயங்களும் கைக்கெட்டும் தொலைவில் இருப்பதால் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோமோ என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் மேலிடும். தாத்தாவிற்குக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருந்தது. அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வை அவர் அளிக்காதிருந்தால் ஒன்றிரண்டு பையன்கள் தனிப்பயிற்சியிலிருந்து விலகும் அபாயம் இருந்தது. அது குடும்பத்தில் வரவு செலவில் உதைக்கும் நிலை இருந்தது. அதனால் அவருக்கு அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருந்ததோ என்றும் யோசிக்கிறேன்.

அதை ஒன்றை மட்டுமே காரணமாகச் சொல்லிவிடமுடியாது. அர்ப்பணிப்பு உணர்வு என்பது பிறப்பிலேயே இருக்கும் ஒன்று என்று நினைக்கிறேன். என்னிடமிருக்கும் அலமாரியை ஒருநாள் சுத்தம் செய்வேன். அதன்பின் அதை எப்போதும் சுத்தமாகவே வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தேவையற்ற காகிதங்களைச் சேர விடக்கூடாது என்றும் நினைத்துக்கொள்வேன். ஆனால் என்னால் அதில் வெற்றி பெற முடிந்ததே இல்லை. ஒருவகை சோம்பேறித்தனமும் அலட்சிய மனப்பான்மையும் தலைதூக்க, என் அலமாரி பழைய நிலைக்கே திரும்பும். இப்படி ஒரு அலட்சியத்தையும் சோம்பேறித்தனத்தையும் என் தாத்தாவிடம் பார்த்ததில்லை.

உறங்கும்போது விரிக்கும் விரிப்பில் ஒரு சிறு சுருக்கம்கூட இல்லாதவாறு நான்கு முனைகளையும் இழுத்து இழுத்து விடுவார் என் தாத்தா. நான் ஒருநாள் கூட இதைச் செய்ததில்லை. ஆனால் என் சித்தியின் பையன் இதைச் செய்கிறான். அவனை அறியாமலேயே செய்கிறான். அப்படியானால் (perfection) கனகச்சிதத்தை எதிர்பார்ப்பது பிறப்பிலேயே நிறுவப்படுவதா?

இதே அர்ப்பணிப்பு உணர்வையும் கனகச்சிதத்தையும் நம்முடைய முன்தலைமுறையில் அதிகம் பேரிடம் காணமுடிகிறது என்றே உணர்கிறேன். என் வயதையொத்த பல நண்பர்களும் கொஞ்சம் சீனியர்களும் உள்ளிட்ட நம் தலைமுறையில் பெரும்பாலானவர்கள் என்னையொத்தே இருப்பதைக் காண்கிறேன். ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு உள்ள இடைவெளியில் அர்ப்பணிப்பு உணர்வும் கனகச்சிதத்தை நோக்கிய நகர்தலும் அடிபட்டுப்போனதா? அல்லது தனிமனிதன் சார்ந்த விஷயமா? நம் தலைமுறைகளில் பலர் இன்னும் அதே கனகச்சிதத்தன்மையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும்தான் இருக்கிறார்களா?

எனக்கென்னவோ இல்லை என்றுதான் படுகிறது.

கடந்த தலைமுறையில் உள்ள நமது முன்னோர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வும் செயலாற்றும் தீவிரமும் நம் தலைமுறையில் குறைந்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். நினைத்த மாத்திரத்தில் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கையும் வறுமையைக் கொஞ்சம் கடந்துவிட்ட வாழ்க்கை முறையும் இந்த அர்ப்பணிப்பு உணர்வைக் குறைத்து நம்மனதுள் அலட்சியத்தன்மையை வளர்த்துவிட்டது என்றேதான் நினைக்கிறேன். இதில் பணத்தின் அருமையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு ரூபாயின் மதிப்பு நமக்குத் தெரிவதே இல்லை. இன்றும் என் அம்மா ஒரு ரூபாயைப் பெரிதாக நினைக்கிறாள் என்று எனக்குத் தெரியும். எனக்கும் அவளுக்குமான இடைவெளி இந்த ஒரு ரூபாயால் மிகப்பெரியதாவதைப் பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் எனக்கும் அந்தப் பொறுப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் வருமா இல்லை என் வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டிருக்குமா என்கிற என் கவலையே எனக்கு இப்போது முதன்மையானதாக இருக்கிறது.

இதை எழுதவேண்டுமென்று மூன்று மாதங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

Share

Facebook comments:


9 comments

 1. rajkumar says:

  “அர்ப்பணிப்பு உணர்வு” பற்றிய பல கேள்விகள் என்னுள்ளும் எழுந்ததுண்டு.சிந்திக்க வைத்த கட்டுரை.

  மானுடம் வெல்லும் ஆப்பிள் பழமாய் … எல்லைகளின்றி விரியட்டும் உங்கள் சிந்தனையும், படைப்புகளும்.

  அன்புடன்

 2. Haranprasanna says:

  Thanks Rajkumar.

 3. சாகரன் says:

  //எனக்கும் அந்தப் பொறுப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் வருமா// ?

  அந்த கேள்வி… எனக்குள்ளும் உண்டு,
  நல்ல பகிர்தல் ஹரன்பிரசன்னா….

 4. Haranprasanna says:

  Thanks sakaran. I read in valaippU you quoted my blog. ?Thanks for that too. 🙂

 5. Anonymous says:

  ஹரன்பிரசன்னா…
  மிக மிக நல்ல கட்டுரை!
  உங்க தாத்தா போன்ற ‘Product’லாம் இப்போ
  ‘Market’ல வர்றதே இல்லை…இந்தக் கட்டுரையின்
  கடைசி வரி யதார்த்தத்தை நச்சென சொல்லியது.
  ரொம்ப நல்லாயிருக்கு!

  – அழியா அன்புடன் அருண்

 6. Haranprasanna says:

  அழியா அன்பு, 🙂

  நீங்கள் சொன்னது மிக மிக உண்மை. என் தாத்தா மாதிரி ப்ராடெக்ட் வருவதில்லை. அதேபோல் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, அன்பு, கண்டிப்புக் கலந்த ப்ராடெக்ட்களும் கிடைப்பதில்லை. ஃப்ராங்க்ளின் நார்மன் என்கிற ஆசிரியர் மதுரையின் தெருக்களில் எப்போதாவது என்னைப் பார்க்க நேர்ந்தால் எனக்குக் காசு கொடுத்துவிட்டுப் போவார். (“ஐயர்ப்பயலே, பஜ்ஜி வாங்கித்தின்னுக்கோ”.) ஜான் என்கிற ஆசிரியர் சைக்கிளில் டபுள்ஸ் வைத்து என்னைக் கூட்டிச் சென்று வீட்டுக்குவிட்டுவிட்டு, திரும்ப கூட்டி வருவார்! அதேசமயம் வகுப்பில் கண்டிப்பிற்கு அவர்கள் குறை வைத்ததே இல்லை. இப்போதைய ஆசிரியர்கள் (அதாவது இன்றைய தலைமுறையினர்) நிலை சொல்வதற்கில்லை. (விதிவிலக்குகள் உண்டு என்றாலும்!). ஓ, மீண்டும் ஒரு பொதுப்படுத்துதல்! ஆனாலும் இது உண்மையே!

 7. Anonymous says:

  Dear Hari..

  It is well written article. (Though i know all the facts) Everybody has that question within them and frequently asked or remembered. But as you told since everything is available in hands reach nobody has to try hard.

  I become bad to worst now a days. I roll my bed whenever i feel very bad about me.

  What to do.. When we are all going to change or it is going to be like this . God only knows….

  Jayakumar – Muscat

 8. Haranprasanna says:

  Dear Muscut Kumar,

  Thanks for yr comments. But who is hari? OH! You addressed me?! I am haranprasanna. 😛

 9. Anonymous says:

  Good haranprasanna un thathavai eduthukattaha vachu valanumnu neenga irukeenga. ungalipolae nalu paeru irukanumnu ean ethiparka mateengiriga.ithu avasara ulagam namathu valai entha vaalaiyaha irunthalum namathan seivom correctaha seivom.performance romba nallavae irukkum
  BY
  This Generation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*