சைக்கிள் முனி – என் பார்வை


சைக்கிள் முனி, சிறுகதைத் தொகுப்பு, இரா. முருகன், கிழக்குப் பதிப்பகம்.


ஒன்பது சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு.

முதல் கதை சாயம். கதை சொல்லும் நேர்த்தியில் இக்கதையே மற்றக் கதைகளை விட முன்னுக்கு வருகிறது. மற்றக் கதைகளெல்லாம் ஒரு “கதையை” தன்னகத்தே கொண்டிருக்கும்போது “சாயம்” மட்டுமே கதையில்லாத, ஒரு காட்சி விவரிப்பையும் அதைத் தொடர்ந்து எழும் சந்தேகங்கள், கேள்விகள், பதில்கள் என்பதை உள்ளிட்ட மன நிகழ்வுகளாகவும் விரிகிறது. கதை சொல்லியின் பார்வையில் கதை நிகழ்வதால் இது மிகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது. கடைசி வரியில் ஒரு புன்னகை நம் இதழ்களில் விரிவதையடுத்து இந்தக் கதை மனதுள் ஒட்டிக்கொள்கிறது.

“சில்லு” அறிவியல் புனைகதை. அறிவியல் யுகத்தில் நடக்கும் சில்லுப் பதிப்பில் தவறு என்கிற கற்பனையே அழகுதான். மூன்றாம் அத்தியாத்தோடு கதை முடிந்திருந்தால் ஒரு “நச்” கதையாக இருந்திருக்கும். (ஆனால் கதைக்கு வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கும்!) அதற்குப் பின்னும் கதை வளர்ந்துகொண்டு போவது தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் கதை செல்லும் வேகமும் நம்மைக் கொஞ்சம் அந்நியப்படுத்துகிறது.

“சைக்கிள் முனி” கதையில் முனி பேசுகிறது. பாலன் கடைசியில் “உங்க மகளை விட்டு வேலைக்கு அனுப்பாதீங்க” என்னும்போது முனி பேசுவதை நம்பும் பாலனின் சித்திரம் கண்முன் வருகிறது. வறுமையைச் சொல்கிறது.

“கருணை” கடைசியில் ஒரு அதிர்ச்சியை முன்னிறுத்தி அதை வைத்து நடக்கும் கதை. முடிவைக் கொண்டு முதலில் சொல்லப்படும் விஷயங்களை ஊகித்து பச்சாபத்தை வரவழைத்துக்கொள்ளவேண்டிய, அதிகம் பயன்படுத்தப்பட்ட வடிவம். “காலையில் பசியாறாமல் வந்திருக்கவேண்டாம்” வரியின் அழகும் “இடது தோள்பட்டையில் உன் நகம் பதிந்த தடம் அப்படியே இருக்கட்டும்” வரியின் அழகும் ஒட்டுமொத்தக் கதையில் இல்லை.

“முக்காலி” கதை பாங்காக்கில் நடக்கும் சா·ப்ட்வேர் ஆர்டர் பிடிக்கும் ஒருவனின் கதை. “மூன்று விரல்” நாவலில் வரும் ஒரு அத்தியாத்தைத் தனியே எடுத்து வைத்தது போன்று இருக்கிறது. ” ஓ.கே. ஓ.கே. அப்ப பையன் வேணுமா?” என்கிற வரி மறக்கமுடியாத வரி. “மூன்றுவிரல்” நாவலை மறந்துவிட்டுப் பார்த்தால் இந்தச் சிறுகதை

நல்ல ஒன்றே. சா·ப்ட்வேர் நிபுணன் அடிக்கவேண்டியிருக்கும் ஜல்லியை நகைச்சுவைத் தெறிப்புகளூடே கண்முன் கொண்டு வருகிறது.

“ஒண்டுக் குடித்தனம்” – பேய் விடாமல் மனிதனைத் துரத்தும் மிகுபுனைவு. சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் மிக சுமாரான கதையாக இதைத்தான் சுட்டவேண்டும்.எந்தவொரு விரிவும் ஆழமும் இல்லாமல் வெறுமனே சொல்லப்பட்டிருக்கிறது. மற்றக் கதைகளில் தெறிக்கும் நகைச்சுவையும் இதில் இல்லை.

“பாருக்குட்டி” . சிறுவயதில் குலசேகர பாண்டியனும் கதை சொல்லியும் மலையாளம் படித்த பாருக்குட்டியின் ப்ரெஸ்ட் கேன்சருக்கான ஆபரேஷனில் …. நீக்கப்பட்டதோடு கதை முடிகிறது. ….. என்றுதான் ஆசிரியரும் சொல்கிறார்! கதையில் அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவை இரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக “தான் அல்பமாகப் பன்னிரண்டு ரூபாய் அறுபது பைசா கடன் வாங்கிய வரலாற்றை” எழுதச் சொன்னதையும்

“கடலின் அக்கர கோனாரே”வையும் சொல்லவேண்டும்.

“ஸ்டவ்” ஜோசியம் சொல்கிறது. மடத்தனத்தை எள்ளலோடு சொல்லும் கதை என்றாலும் கதையில் நம்பகத்தன்மை கொஞ்சம்கூட இல்லாததால் அதிகம் இரசிக்கமுடியவில்லை.

“தரிசனக்கதை”யில் தெய்வத்தின் அலுப்பு நல்ல சுவாரஸ்யம். “மெக்கானிக் வர்ற வரைக்கும் கொட்டு கொட்டுன்னு முழிச்சிக்கிட்டு” இருப்பதும் “நான் எப்ப சொன்னேன்?”ம் அசத்தல் வரிகள். பூசாரி குறிசொல்லியதற்கெல்லாம் தெய்வத்தைச் சுட்டுவது பற்றிய மிக நுட்பமான அழகான விவரிப்புகள். நல்ல சிறுகதை. “ஸ்டவ்” போலவே இதுவும் ஒரு

நம்பகமில்லாத ஒன்றை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் கதையின் நடையும் தெய்வத்தின் புலம்பலைச் சொல்லும்விதமும் “தெய்வம் பேசியது” என்று இன்னும் பலர் சொல்வதைக் கேட்கமுடிவதாலும் கதையில் ஒன்றிவிடமுடிகிறது.

“சாயம்”மும் “தரிசனக்கதை”யும் சிறுகதைத் தொகுப்பைப் படித்த பின் மனதில் தங்குகின்றன. “ஸ்டவ்”வும் “ஒண்டுக்குடித்தனம்”மும் சுத்தமாக விலகி நிற்கின்றன.

“வாயு” குறுநாவல் முகம்சுழிக்க வைக்கும் பல பிரயோகங்களைக் கொண்டிருந்தாலும் இரசிக்கும்படியாகவே இருக்கிறது. குளோரியா அம்மாளின் வறுமை கதையினூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களைக் கூர்மையாக உள்வாங்கிக்கொள்ளும் திறன் கதையில் தெரிகிறது. “கழிவறை உபயோகித்தவர்கள், சுத்தம் செய்து காகிதத்தில் துடைத்துப்போட்டு வெளியேறும்போது ஈர மினுமினுப்போடு தெரியும் கைகளை குளோரியா அம்மாள் அறிவாள்” அதில் ஒன்று. (ஆண்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மற்ற நாடுகளில் பெண்களை அனுமதிக்கிறார்களா?)

கதைகள் முழுவதிலும் உள்ள ஒரு பொதுத்தன்மை நகைச்சுவை. இதுவே இரா.முருகனைத் தனித்தும் காட்டுகிறது. எல்லாக் கதைகளிலும் தெறித்துவிழும் ஒற்றை வரிகள், சம்பாஷணைகள் மெல்லிய நகைச்சுவையை வரவழைத்துவிடுகின்றன. அதேபோல் கதைகளில் வரும் சம்பவ விவரிப்புகளும் கதாபாத்திர விவரிப்புகளும் கூடுதலும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் தேவையான அளவு சொல்லப்பட்டிருக்கிறது. கதைகளின் வேகமும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய இன்னொரு விஷயம். வேகம் என்று சொல்லும்போது ஒரு வார்த்தையில் ஒட்டுமொத்த சூழலைக் கண்முன் கொண்டு வரும் உத்தி அலுப்பை ஏற்படுத்துவதையும் சொல்லவேண்டும். வெளிநாடுகளில் வாழ்ந்த அனுபவம் சில கதைகளில் உதவியிருக்கிறது. கதையின் களத்தை “ஸ்டவ்” மாதிரியோ “ஒண்டுக்குடித்தனம்” மாதிரியோ இல்லாமல் யதார்த்தச் சூழ்நிலையிலோ அல்லது கொஞ்சம் அதிகமான நம்பகத்தன்மையுடனோ தேர்ந்தெடுத்தால் இதைவிட சிறப்பான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இரா.முருகனிடமிருந்து நிச்சயம் வரும் என்று சொல்லலாம்.

Share

Comments Closed