காதல் – திரைப்படம்

காதல் (திரைப்படம்) – இயக்கம்: பாலாஜி சக்திவேல், இசை: ஸ்ரீதர் ஜோஷ்வா, ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

நிறையத் தடவை தமிழ்த்திரைப்படங்கள் பல்வேறு வடிவங்களில் பார்த்துவிட்ட கதையை யதார்த்தத்துடனும் கலைநேர்த்தியுடனும் தரத்துடனும் தந்திருக்கிறார் இயக்குநர். மெக்கானிக்கும் பணக்கார வீட்டுப்பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் அதைத் தொடர்ந்த விளைவுமே கதை. ஒளிப்பதிவின் உயர்ந்த தரமும் யதார்த்தமும் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் எனலாம். படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளும் க்ளோஸ்-அப் காட்சிகளே. நடிகர்களில் பலர் அறிமுகங்கள்; அவர்கள் மிகவும் இயல்பாக நடிக்கிறார்கள் என்பதால் படத்துடன் எளிதில் ஒன்ற முடிகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் மதுரையிலும் இரண்டாம் பாதி முழுவதும் சென்னையிலும் சுழல்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் மதுரைத்தமிழ், அதிலும் குறிப்பாக கதாநாயகன் பரத் பேசும் மதுரைத்தமிழ் வெகு கச்சிதம். பரத்தின் நடிப்பு கொஞ்சம் கூட எல்லை மீறாமல் ஒரு டூ வீலர் மெக்கானிக்கை அப்படியே கண் முன் கொண்டுவருகிறது. ரிப்பேருக்கு வரும் வண்டியை ஒரு மெக்கானிக் எப்படி ஓட்டுவாரோ அப்படியே ஓட்டுகிறார். மெக்கானிக்கை ஒரு பணக்காரப் பெண் காதலித்தால் வரும் உணர்வுகளை அப்படியே சித்தரிக்கிறார். கதாநாயகி சந்த்யா அறிமுகம் என்கிற சுவடேயில்லை. யதார்த்தமான காட்சிகளில் வெகு இயல்பாகவும் உச்சகட்ட காட்சிகளில் வெகு அழுத்தமாகவும் நடித்து வியப்பில் ஆழ்த்துகிறார். பள்ளி சீருடையில் சிறுமியாகவும் சுடிதார் வகையறாக்களில் பெண்ணாகவும் தெரிகிறார். படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அவற்றின் தன்மையையும் தேவையையும் உணர்ந்து நடித்திருக்கின்றன. அனைவரும் புதுமுகங்கள் என்பது ஆச்சரியமான விஷயம். பரத்தின் எடுபிடியாக வரும் சின்னப்பயல் அடிக்கும் கமெண்ட்டுகள் அழகு.

இப்படி யதார்த்தத்தைத் தோளில் சுமந்து செல்லும் படம் இடைவேளைக்குப் பிறகு இலேசாகத் தடம் புரள்கிறது. சென்னையில் வரும் மேன்சன் காட்சிகளில் படம் தொய்வடைகிறது. மேன்சன் காட்சிகள் இயல்பாக நடக்கக்கூடியவைதான் என்றாலும் அவை படத்தின் தேவையை விட அதிகமாக இடம் பெற்றிருப்பதால் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. ஸ்டீபனாக நடிக்கும் நடிகர் யாரெனத் தெரியவில்லை. அப்படியே வடிவேல் போலவே இருக்கிறார். அவரின் ப்ளாஷ்பேக் காட்சி நகைச்சுவையாக இருந்தாலும் அவசியமற்றது; நாடக ரீதியானது. அதேபோல் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அவர் திருமணம் செய்து வைக்க, அதைப் பார்க்கும் மேன்சன் நண்பர் மிக உணர்ச்சிவசப்பட்டு கதாநாயகனையும் நாயகியையும் மேன்சனுக்குக் கூட்டி வந்து, தேவையானதை எல்லாம் செய்து, எல்லோரும் சேர்ந்து ஒரு ஆட்டம் போட்டு, அதில் மேன்சனின் பெருமைகளைப் பட்டியற்படுத்தி….. விக்ரமன் வாசனை. போதாக்குறைக்கு கதாநாயகன் தானும் ஒரு ஆட்டம் போட, அதைப் பார்த்த கதாநாயகி அவரும் ஒரு ஆட்டம் போட்டு, பின் வெட்கப்பட்டு உட்கார்ந்து கொள்கிறார். இரண்டே நிமிடங்கள் வரும் காட்சிதான் என்றாலும் பல படங்களில் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன, செயற்கையான காட்சியினை, அதுவரை மிக யதார்த்தமாக படத்தை நகர்த்திக்கொண்டிருந்த இயக்குநர் எப்படி அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது.

உச்சகட்ட காட்சிகளில் நிகழும் சம்பவங்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் காணும் சம்பவங்களே. “சிங்கம்லே” என்று தன் வண்டியில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாராய வியாபாரியின் மகளை, ஒரு மெக்கானிக் காதலித்தால் என்ன நடக்குமோ அது நடக்கிறது. அந்தக் காட்சியில் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கூட நடித்திருக்கின்றன. “சில வருடங்களுக்குப் பிறகு” திண்டுக்கல்லில் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தோடு படத்தை முடித்திருந்தால் அது இன்னும் இயல்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். அதற்குப் பின்னும் ஐந்து நிமிடம் படம் நகர்கிறது. மனிதாபிமானம் மிகுந்த ஒரு மனிதரின் பெருந்தன்மையோடு படம் நிறைவடைகிறது. உண்மைக் கதையை ஆதாரமாகக் கொண்ட கதை என்று இயக்குநர் முதலிலேயே சொல்லிவிடுகிறார். படத்தின் நிறைவுக்காட்சியில் அதே சம்பவத்தை வைத்தே நிறைவு செய்திருக்கிறார்.

படத்தில் எழுத்துப் போடும் காட்சிகளில் ஒவ்வொரு சட்டமாக மதுரையில் இயல்பு வாழ்க்கையைக் காட்டும்போது பரவும் மதுரை வாசம் இறுதிவரை கூடவே வருகிறது. அதிலும் கதாநாயகியின் சடங்குக் கொண்டாட்டங்களில் வரும் மனிதர்களில்தான் எவ்வளவு நிஜம்! இப்படி ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓடிப்போவதை மட்டுமே, அதுவும் செயற்கையாக நாடக ரீதியில் சொல்லிப் பழகிவிட்ட தமிழ்த்திரைப்படச்சூழலுக்கு மத்தியில், இப்படி ஒரு படத்தின் மூலம் ஓடிப்போவதைத் தாண்டியும் பேசியிருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இத்திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்குக்கான திரைப்படம் என்கிற வட்டத்தையும் மீறி சமூக சிந்தனையுள்ள ஒரு திரைப்படம் என்றும் வகைப்படுத்தலாம்.

மிக சில காட்சிகளில் இயக்குநர் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். பல இடங்களில் கதாபாத்திரங்கள் ஒன்றுமே வாயசைக்காமல் இருக்கும்போது பின்னணியில் வசனம் பேசப்படுகிறது. இன்னும் சில காட்சிகளில் கதாபாத்திரங்கள் ஒன்றைப் பேச, வசனமோ இன்னொன்றாக இருக்கிறது. கதாநாயகி பூப்படையும் காட்சியில் வேண்டுமென்றே தண்ணீர் வரும் டேப்பைத் திறப்பதுபோல இருக்கிறது!

இசை (ஸ்ரீதர் ஜோஷ்வா-அறிமுகம்) மோசமில்லை. பாடல்கள் நா.முத்துகுமார். நிறைய வரிகளில் பளிச்சிடுகிறார்.

தரமான திரைப்படம்.

Share

Comments Closed