மூன்றாம் கட்டத்திலிருந்து துவங்கும் ஆட்டம் – கவிதை

வெகு நேர மோதலுக்குப் பின்
எனக்குத் தீக்குச்சியும்
உனக்குக் கல்லுமென முடிவானது,
யதேச்சையாய் என்றாலும் வெகு கச்சிதமாய்.

சோழிகள் உருட்டப்பட்ட தருணங்களிலெல்லாம்
உன் கண்களில் தொடங்கி அடங்கியது ஜ்வாலை
எனது ஜ்வாலையை விழுங்கி விட்டிருந்தன
என்னிரு கண்கள்

வெகு முன்பு நானும் நீயும் ஆடிய
தொடக்க கால ஆட்டங்களிலிருந்த
பரஸ்பர புரிந்துணர்வும் வாஞ்சையும்
இப்போதும் இருப்பதாகச் சொல்லிக்கொள்வோம்
சொல்லி வைத்த மாதிரி

ஒரு தாயம் விழும் தருணம்
எரிமலை

உனது கைக்குள் அடங்காமல் தெறித்துவிழும்
சோழியைப் பற்றி எடுக்கிறேன்
உன் கையின் தகிப்பு சோழிக்குள்

கடைசியாய் எனக்கு ஒரு தாயம் விழுகிறது.
தீக்குச்சி பற்றி எரிய
மூன்றாம் கட்டத்திலிருந்து ஆட்டத்தைத் துவக்குகிறேன்
முதலிரண்டு கட்டங்களைப் பற்றிய உணர்வே உனக்கில்லை.
நாம் சோழியை மட்டும் உருட்டிக்கொண்டிருக்கிறோம்.

Share

Comments Closed