இரண்டு கவிதைகள்

உடலின் மீது நகரும் உயிர்

வெளிச்சத்தின் மீது அலையும் இரவைப்போல
அங்குமிங்கும் அலைந்தது
உடலின் மீது உயிர்
காலிலிருந்து தலைக்குத் தாவி
வயிற்றில் நிலைகொண்டு
நெஞ்சில் நின்றபோது
திரையில் ஓடின
திக்கற்ற படங்கள்
கட்டவிழுந்து போன ஞாபகங்கள்
ஒரு திசையில் மனம் குவிக்க எண்ணி
சதா முயலும் கண்களில்
குத்திட்டு நின்றது
அறையின் ஒட்டுமொத்த வெளிச்சம்
தன்னிச்சையாய்
விரிந்து மூடும் கைகளில்
இளங்காலத்து மார்பின் மென்மை
நாசியெங்கும் பால் வாசம்
தொடர்ச்சி அறுந்து
சில்லிட்ட நொடியில்
வியாபித்தது காலம்


கேள்வி பதில்களற்ற உலகம்

பதில்களற்ற கேள்விகளாய் எடுத்து கோர்க்க
நீண்டு கொண்டே சென்றது மாலை
ஆதியில் ஒரே ஒரு கேள்வியில்தான் தொடங்கியது அம்மாலை
முடிவற்றுத் திரியும் கேள்விகளுக்குள்ளே
விரவிக் கிடந்த பதில்களைத் தேடியபோது
திறந்துகொண்டது பதில்களாலான உலகம்
ஆதியில் அங்கேயும் ஒரே ஒரு பதிலே இருந்தது
கேள்வியும் பதிலும்
தொடர்ச்சியாக
ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டபோது
ஒலி இழந்தன வார்த்தைகள்
வெறும் திட்டுத் திட்டாய்
தெறித்துவிழும் மௌனத்தில்
ததும்பும் சங்கேதங்களில்
முற்றுப்பெறுகிறது இவ்வுலகு

Share

Facebook comments:


One comment

 1. மதுமிதா says:

  ஒரு கேள்விக்கான
  பதில் முற்றுப்பெறுவதற்குள்
  அறையெங்கும் நிறைகிறது
  அறையும் கேள்விகள்

  நம்பிக்கையின்மையின்
  வேகம் தெறிக்க தெறிக்க
  பதில்களுக்கான தேவையின்றி
  மௌனத்தில் மூழ்குகிறது அறை
  கேள்விகளின் அலைகளில் நீந்தவியலாது

  தொடர்ந்து
  இயங்குகிறது
  இவ்வுலகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*