சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம். தங்கராமு ஐயா என்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். இவரை தமிழ் வாத்தியாராக, கணக்கு வாத்தியாராக அல்லது ஆங்கில வாத்தியாராக, எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம். ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஐயாவிற்குத் திடீரென்று தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சட்டம் அமலில் இருந்துவந்தாலும் அது உபயோகப்படாததால், புதுச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துவிட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவராவது பேசவேண்டும் என்று. அதற்கு அந்த அந்த வகுப்பாசிரியர்களே பொறுப்பு. பையன்களின் பேச்சாற்றலை வளர்ப்பதைவிட தமது மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற வேகம் பெருகிப்போந்த நிலையில், தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.

அவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, ‘ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, ‘இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா’ என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். ‘நாராயணா, இவன் சொல்றதக் கேளு’ என்று சொல்லி, என்னைப் பார்த்து, ‘சொல்லுடா!’ என்றார். நான், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.’ அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், ‘தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.

ஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, ‘என்ன எடையில பல்லக் காமிக்கிறவன்? ஒழுங்கா பேசமுடியாதா? சுதந்திரம்னா நக்கலா ஒனக்கு?’ என்றார்.

நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, ‘நல்லா பேசறியேப்பா… இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ?’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்’ என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) ‘வெச்சிக்கோ’ என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.

வகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, ‘சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற? அதச் சொல்லு மொதல்ல’ என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, ‘சரி போ போ’ என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், ‘இதெல்லாம் தேவையா ஒனக்கு’ என்றான்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]

சில தினங்களுக்கு முன்பு சடகோபனின் ‘சிறை அனுபவம்’ என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.

சிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும்? நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்கும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

.

Share

Facebook comments:


11 comments

 1. Tharuthalai says:

  அய்யன்மீர்,
  சுக்கும் மிளகும் சும்மா இருந்தால் வராது. அதற்கும் உழைக்க வேண்டும். அப்படி உழைக்கும் மக்களுக்கு விடுதலையும் மரியாதையும் கிடைக்கவில்லை என்பது தலைப்பில் கேவலப்படுத்துவதிலேயே தெரிகிறது.

  -தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-’07)
  என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

 2. ஹரன்பிரசன்னா says:

  தருதலை, சுக்குக்கும் மிளகிற்கும் உழைக்கும் அளவு மட்டும் உழைத்தால் சுதந்திரத்திற்குப் போதாது. அதைத்தான் அந்த வரி சொல்கிறது. 🙂

 3. PKS says:

  Sukka Milakaa Suthanthiram Kiliye. I think this is the correct line. I think its Bharathidasan’s. My memory may be wrong. If I am wrong, others will correct me. – PK Sivakumar

 4. Tharuthalai says:

  எந்த உழைப்பும் எதைவிடவும் உசத்தியும் இல்லை. தாழ்ச்சியும் இல்லை.

  விடுதலைக்கான உழைப்பு உங்களுக்குப் பெரிதென்றால், ஒரு துளி நீருக்காக வியர்வை சிந்துவதும் எவ்விதத்திலும் குறைவில்லை.

  -தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-’07)
  என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

 5. ஹரன்பிரசன்னா says:

  பி.கே.சிவகுமார், பாரதியோ பாரதிதாசனோ எழுதிய வரி என நினைத்திருந்தேன். சரியாகத் தெரியாததால் கோட் செய்யவில்லை. பாரதிதாசனாக இருக்கலாம். நன்றி.

  தறுதலை, நான் உயர்வு தாழ்வு பற்றிப் பேசவில்லை. அதிகம் குறைவு பற்றி மட்டுமே சொன்னேன். அதனால்தான் அளவு என்று சொன்னேன். சரி, இதற்கு ஒரு விவாதமா? 🙂 நன்றி.

 6. Anonymous says:

  //ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். /// இதைவிடமோசமாய் அவரை கேவலப்படுத்த முடியாது…

  //’ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, //// நல்ல நகைச்சுவை…
  நல்ல நகைசுவை பொருந்திய கட்டுரை. ஜெயாக்குமார்

 7. ஹரன்பிரசன்னா says:

  இதில் கேவலப்படுத்த ஒன்றும் இல்லை. அவர் பாடம் எடுத்த விதத்தை அப்படியே சொல்லியிருக்கிறேன். என வாழ்க்கையில் அமைந்த மோசமான ஆசிரியர்களில் அவரும் ஒருவர். தீவிரமான ஜாதி வேறுபாட்டைக் கடைப்பிடித்தவர். சிறுமிகளிடையேயும் இரட்டை அர்த்தமுள்ளவற்றைப் பேசி வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவர். உண்மையை மறைத்து ஒருவரை ஏன் புகழவேண்டும்?

 8. பரத் says:

  நல்ல கட்டுரை
  வாழ்த்துகள்

 9. Prakash says:

  Hari,
  Thangaraamu Iyya patri unnudaiya karuthukal perumbaalum unmai than.
  Aanaal avar Kanaku nanraaga eduppar enru ninaikiraen.

  avarathu NEEEnda Kaiyoppam innum en kangalileye nitkirathu.

  Vahuppil,Ayyavanga, or Akkanga varum pothu “Thayaar… Vanakkam enru matra vahuppuhalil sollikondu irukaiyil, Thangaramu iyya vahuppil mattum “Ohm Namo Naaraayanaa” enru elloraiyum kangalai moodi sollavaithavar.

  Mathiyana Vaaipaadu naerathil, sariyaaga vaayai thiranthu sollaatha kaaranathitkaga en mudhugil vilundhu adiyai naan eppothum maraka mudiyaathu.

  Innum Oru Vishayam…
  Thangaramu Iyyavin Magan T.Rajakumar en kuda padithathaal, enaku avarathu nalla pakkangale arimuga padutha pattu irukinrana..
  -Prakash

 10. ஹரன்பிரசன்னா says:

  பரத், பிரகாஷ் உங்கள் கருத்துக்கு நன்றி.

  பிரகாஷ், தங்கராமு ஐயா பற்றி இன்னும் நான் எழுதினால் அது அவருக்கு பெரும் களங்கத்தையே தரும். இன்று காலை காந்தி நிகேதன் நினைவுகள் என்று ஒரு பதிவு போடலாமா எனக்கூட நினைத்தேன். அந்தப் பள்ளியில் நான் படித்ததற்கு சந்தோஷம் தரும் நினைவுகளாக ஒன்றிரண்டே மிஞ்சியது. மற்றெல்லாமே எனக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகளாகவே இருந்தது. அதனால் அப்படி ஒரு பதிவு போடவில்லை. நன்றி.

 11. சுப்ரமணியசாமி says:

  // தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.//

  ஏன் தேடிக் கொண்டிருந்தாரா யாராவது மாணவன் அகப்பட மாட்டானா என்று???

  //இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.//

  =;)

  //இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.//

  உண்மை. நல்ல கதை போன்ற கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*