களியாட்டம் – மலையாளத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 04)

கேரளாவின் வடக்குப் பகுதியில் மரபாக வரும் களியாட்டம் என்பது தெய்வத்தின் ஆட்டம் (தெய்யம் அல்லது தெய்யாட்டம்) என்று நம்பப்படுகிறது. கண்ணகி போன்ற, உயிருடன் வாழ்ந்த மனிதர்களை தெய்யங்களாக வரித்து ஆடும் ஆட்டம் இது. சமூகத்தையும் தாங்கள் வாழும் கூட்டத்தையும் இந்தக் களியாட்டம் காக்கும் என்று நம்பினார்கள் இதை ஆடுபவர்கள். வேலன், மலையன், பெருவண்ணன் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களே களியாட்டத்தின் தெய்யங்களாக ஆடுகிறார்கள். இந்த மூன்று சாதிகளுமே ஒரே சாதியின் பல்வேறு பிரிவுகள்தான் என்று சொல்கிறார்கள். தெய்யத்தின் ஒரு பிரிவாகச் சொல்லப்படும் களியாட்டமே பின்னாளில் கதகளியாக மாறியது. இந்த வேர்களை நாம் தமிழில் காணலாம் என்றும் வேலன் வெறியாடலே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு வருடங்களில் களியாட்டமாக உருமாறியது என்றும் சொல்கிறார்கள். பெருங்களியாட்டம் என்பது பல்வேறு தெய்யங்களின் வேடத்தையும் புனைந்து ஒருவரே ஆடும் ஆட்டம். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.

ஜெயராஜ் இயக்கி சுரேஷ்கோபி, மஞ்சு வாரியர், பிஜூ மேனோன், லால் நடிப்பில் 1997ல் வெளியானது களியாட்டம் திரைப்படம். சேக்ஸ்பியரின் ஒதெல்லோவைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம். தமிழ்ப்படங்களைப் போல் மறைக்காமல் இதை படத்தின் ஆரம்பித்திலேயே காண்பித்துவிடுகிறார்கள். தெய்ய ஆட்டக்காரனான கண்ணன் பெருமலையன் தாமரையின் மீது காதல் கொண்டு அவளை மணக்கிறான். உயர்ந்த சாதியைச் சேர்ந்த தாமரை தன் சாதியையும் தன் தந்தையையும் மறுத்துவிட்டு கண்ணன் பெருமலையனை மணம் செய்துகொள்கிறாள். அப்போது தாமரையின் தந்தை சபையில் எல்லார் முன்னிலும் தன்னை வஞ்சித்ததுபோலவே ஒருநாள் தன் கணவனையும் தன் பெண் வஞ்சிக்கமாட்டாள் என்பது நிச்சயமில்லை என்று சொல்லி, சந்தேகத்தின் விதையை விதைத்து வைக்கிறான். பனியன் தெய்யங்களில் நகைச்சுவை வேடமேற்பவன். கண்ணன் பெருமலையன் மீது இருக்கும் பொறாமையாலும் தெய்யத்தின் முக்கிய ஆட்டக்காரனாக மாறி, கண்ணன் பெருமலையனின் இடத்தைப் பிடிக்கும் எண்ணத்திலும், மலையன் மனைவிக்கும் காந்தனுக்கும் தவறான உறவிருப்பதாக மலையனிடம் சொல்கிறான். சந்தர்ப்பங்கள் இதை உறுதிப்படுத்த, அதை நம்பி தன் மனைவி தாமரையை, பெருங்களியாட்டம் நடக்கும் அன்று கொல்கிறான் கண்ணன் பெருமலையன். அவள் இறந்தபின்பே தன் மனைவி குற்றமற்றவள் என்றும் பனியனின் சதி இது என்றும் தெரிகிறது. பனியனின் கையையும் காலையும் முறித்துவிட்டு, தனக்கு அடுத்த தலைமை தெய்ய ஆட்டக்காரனாக காந்தனை நியமித்துவிட்டு, பெருங்களியாட்டத்தில் தெய்யமாகவே அவன் எரியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கிறான்.

ஒதெல்லோ போன்ற கதைகளை நம் சூழலுக்குப் படம் எடுக்கும்போது எப்படி அதை மாற்றவேண்டும் என்பதற்கு இப்படத்தை ஒரு மாதிரியாக வைக்கலாம் என்கிற அளவிற்கு மிகச் சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெய்ய ஆட்டக்காரர்கள் தங்கள் உடலெங்கும் வண்ணத்தை வரைந்துகொண்டு, அலங்காரமாக ஆழ்நிற வண்ணங்களுடன் அமைக்கப்பட்ட கிரீடங்களையும் கவசங்களையும் அணிந்துகொண்டு, கண்களைச் சுழற்றும் அழகும் புருவங்களை உயர்த்தும் அழகும் சிறப்பாக இருக்கும். இந்த அலங்காரங்களைச் செய்யவே கிட்டத்தட்ட பத்து மணிநேரம் வரை ஆகும் என்கிறார்கள். இரவில் தீப்பந்தங்களைக் கையில் கொண்டு தெய்யங்கள் ஆடும் காட்சியில் வண்ணங்களும் தீயின் பல்வேறு நிறங்களும் தங்கள் ஆளுமையை தீவிரமாகப் பறை சாற்றுபவை. இவற்றை எந்தவிதக் குறையுமில்லாமல் அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். படமெங்கும் இழையும் வண்ணங்கள் படத்திற்கு ஒரு தொடர்ச்சியைத் தருகின்றன. கண்ணன் பெருமலையனும் தாமரையும் வண்ணங்களோடு உடலுறவு கொள்கிறார்கள். தரையில் குங்குமம் மஞ்சளும் தங்கள் தீவிர நிறத்துடன் கலந்து சிந்துகின்றன. வண்ணமயமான பட்டின் மேல் உறவுகொள்கிறார்கள். பின்னர் அந்தப்பட்டே உறவுக்கான முன்னறிவிப்பாகிறது. கண்ணன் பெருமலையன் தாமரை காந்தனுடன் உறவுகொள்வதாக நினைக்கும் காட்சிகளைக்கூட அதே நிறங்களுடன் காண்கிறான். படமெங்கும் வண்ணம் பிரிக்கமுடியாமல் அழகாகக் கலந்துகிடக்கிறது.


அதேபோல் படமெங்கும் வரும் கேரளத்தின் மரபிசை. செண்டையும் தாளமும் படத்தில் எல்லாக் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில சாதாரண காட்சிகளில்கூட இந்த மரபிசை தேவையற்றுப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் உக்கிரம் கொள்ளும் காட்சிகளில் அதே உக்கிரத்தை இசையும் கொள்கிறது. இசையமைப்பாளர் கைதப்பரம் விஸ்வநாதன் பாடல்களையும் இதே மரபின் தன்மையோடு இசையமைத்துள்ளார். கண்ணாடிப் புழையொடு தீரத்து பாடலும் கதிவனூரு வீரனே பாடலும் இந்த வகையைச் சேர்ந்தவை. அதிகம் அறியப்பட்ட சிறப்பான பாடல் ‘என்னோடெந்தினா பிணக்கம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடைசி காட்சியில் தெய்ய ஒப்பனையோடு பெருமலையன் தாமரையைக் கொல்லும் காட்சியின் பின்னணி இசை உக்கிரம் கொள்ளவும் நெகிழ வைக்கவும் செய்கிறது.

மஞ்சு வாரியர் தாமரையாக நடித்திருக்கிறார். படத்தில் இவரது நடிப்பு வெகு இயல்பாகவும் ஆர்பாட்டம் இல்லாததாகவும் அமைதியானதாகவும் இருக்கிறது. அழகும் அமைதியும் கூடி விளங்கும் தாமரையைக் காணும்போது, தன் லட்சணமற்ற முகம் இவளுக்குத் தகுதியானதல்ல என்கிற எண்ணம் கண்ணன் பெருமலையனுக்கு ஏற்படுவது இயல்பே என்று பார்வையாளர்களே நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அழவேண்டிய காட்சிகளில் சட்டெனக் கண்ணீர் விடுவதும், தன்னைக் கொல்ல கணவன் நெருங்கும் நேரத்தில் பயத்தில் மிரள்வதும் அவனையே கட்டிக்கொண்டு கெஞ்சுவதுமென மஞ்சு வாரியர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘ஏடா புல்லே’ புகழ் மாஸ் ஹீரோவான சுரேஷ் கோபி கண்ணன் பெருமலையனாக நடித்திருக்கிறார். முதலில் ஒரு மாஸ் ஹீரோவுக்குள் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பற்றிய தேடல் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். இப்படத்தை தயாரித்ததும் சுரேஷ் கோபி என்னும்போது ஏற்படும் ஆச்சரியம் பலமடங்காகிறது. த்வீபா என்னும் கன்னடப்படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா என்ற போது இதே ஆச்சரியத்தை நான் அடைந்தேன். கண்ணன் பெருமலையனாக சுரேஷ்கோபி சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் மிக மெதுவாகவும் ஆர்பாட்டமில்லாமலும் வரும் அவரது கதாபாத்திரம், தன் மனைவியின் மீதான சந்தேகம் வலுக்கொள்ள கொள்ள கடும் சீற்றம் கொண்டதாகவும் குழப்பம் கொண்டதாகவும் மாறுகிறது. அத்தனையையும் தன் முகபாவத்திலேயே வெளிப்படுத்துகிறார். பனியன் பெருமலையனிடம், பொது இடத்தில் காந்தன் எப்படியெல்லாம் தாமரையை தான் அனுபவித்ததைப் பற்றிச் சொன்னான் என்று சொல்லும்போது, சுரேஷ்கோபி வெளிப்படுத்தும் ஆத்திரம், அச்சம், அசிங்கம் என எல்லா பாவங்களும் அருமையாக இருக்கின்றன. அதன் வேகத்திலேயே அவருக்கு வலிப்பு வருகிறது. வலிப்பு வருபவனின் மூளை அடையும் சலனத்தை அவரது முகத்திலேயே நாம் பார்த்துவிடமுடிகிறது. அத்தனை கோபமும் சந்தேகமும் தாமரையைப் பார்த்ததும் அவருக்கு அடங்கிப் போகிறது. தன் மனைவி குற்றமற்றவளாகவே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் தலைதூக்க பெரும் குழப்பத்திலும் அமைதியிலும் அவர் ஆழ்வது சரியான இயக்கம். கடைசியில் தன் மனைவியைக் கொல்ல, பெருங்களியாட்டத் தெய்யத்தின் ஒப்பனையோடு அவர் வந்து கவிதைத்துவமாகப் பேசும் காட்சியும், தாமரை தான் குற்றமற்றவள் என்று கதறி அழுது அவனைக் கட்டிக்கொள்ளும்போது ஒரு கணம் கனிவு பொங்க மறுகணம் ருத்ரம் கொண்டு கொல்லும் காட்சியும் சுரேஷ்கோபியின் நடிப்பின் உச்சம் என்று சொல்லவேண்டும்.

படத்தில் வண்ணங்களையும் ஒப்பனையையும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஒப்பனை கலைத்தபின்பும்கூட சுரேஷ் கோபியின் கண்களில் தெரியும் கருவளையமும் கரும்பொட்டும் வெகு அழகு. அதேபோல் குழப்பத்தின் உச்சியில் மலையுச்சி நோக்கி ஓடி கதறும் பெருமலையன் முன்பு அவனது மூதாதையர்கள் மானசீகமாகத் தோன்றுவதும், அவன் நிகழுலகிற்குள் வரும்போது அங்கு பணியன் நிற்பதும் சிறப்பான காட்சிப்படுத்தல். பணியனாக வரும் லாலும் காந்தனாக வரும் பிஜூ மேனோனும் பணியனின் மனைவியாக வரும் பிந்து பணிக்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தானும் மலையன் கூட்டத்தில் ஒருவனென்றாலும் தனக்கு தெய்யம் கட்ட முடியவில்லை என்னும் கோபத்தை ஒரு சாதாராண மனிதனுக்குரிய வகையில் லால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் வண்ணங்களைப் போலவே தீயும் அதன் நாவுகளும் தீப்பொறிகளும் தொடர்ச்சியான ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. பெருமலையன் முதலில் தாமரையைச் சந்த்திப்பது தீமிதிக்கும்போது ஏற்பட்ட காயத்துக்கு பின். தெய்ய ஆட்டத்தில் ஒப்பனையுடன் தீ மிதிக்கும் காட்சிகள் முக்கியமானவை. தீப்பொறிகள் சிதறி விழுவதை ஒளிப்பதிவு செய்திருக்கும் விதமும் எரியும் பெருந்தீயின் செந்நிறத்தில் தென்படும் எல்லா கதாபாத்திரங்களும் செம்மை கொள்வதை படத்தில் கொண்டு வந்திருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. தாமரையை பெருமலையன் கொல்லும் காட்சிகளில் வீடெங்கும் ஒளிரும் விளக்குகள். நெருப்பில் தொடங்கும் படம், கண்ணன் பெருமலையன் தன் தவறை உணர்ந்து இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்கிற எண்ணத்தில் நெருப்பில் அமிழ, நெருப்பின் கோரப் பசி அவனை விழுங்கி மேலும் கொளுந்துவிட்டு எரிய, நெருப்பிலேயே முடிகிறது. ஜெயராஜின் வண்ணங்களின் மீதான மோகத்தை கண்ணகி திரைப்படத்திலும் பார்க்கமுடியும். அப்படத்தில் வரும் சேவலின் நிறமும் அதன் உக்கிரமும் கடைசியில் லாலுக்கும் நந்திதா போஸ¤க்கும் மாற்றப்படும்.

இப்படத்தில் கதிவனூரு வீரன் என்கிற தெய்யத்தின் ஆட்டத்தையே கண்ணன் பெருமலையன் ஏற்கிறான். கதிவனூரு வீரன் பற்றிய கதை எங்கும் கிடைத்தால் எனக்கு அறியத் தரவும். நிச்சயம் மரபில் வந்த கதை ஒன்றிருக்கும். அதை அறிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் திரைப்படத்தை maebag.com என்கிற வலைத்தளத்தில் இருந்து வாங்கினேன். விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளவும். முக்கியமான விஷயம், எனக்கு இந்நிறுவனத்தைப் பற்றித் தெரியாது. கூகிளில் தேடி, நான் ஆர்டர் செய்தேன், எனக்கு சரியாக படத்தை அனுப்பிவிட்டார்கள். அதனால் இதை ஒரு தகவல் என்கிற அளவில் மட்டும் எடுத்துக்கொள்ளவும்

.

Share

Comments Closed