மூன்று கவிதைகள்

அன்பு

வீடெங்கும் அன்பு சூழ
அன்பே பிரதானம்,
அப்படியே ஆகுக.
அன்பைப் பற்றியே
எழுதத் தொடங்கினேன்
அடித்தல் திருத்தல்களில்
கிழித்தெறியப்பட்ட
காகிதப் பந்தில்
பயந்து கலைகிறது
தடித்த பல்லி
வாயில் கௌவிய
ஒரு பூரானோடு.


நாம்

நான் அழகனாக இருந்தேன்
மெல்ல வால் வளர்ந்தென
அதிர்ந்த நேரத்தில்
கொம்பும் முளைத்திருந்தது
மேலெங்கும் ரோமங்கள் முளைக்க
பற்களை மறைக்க
பிரயத்தனப்பட்ட நேரத்தில்
ஒரு பெண்ணை எதிர்கொண்டேன்
அவள் அழகாக இருந்தாள்…


கதை நேரம்

தாழ்வாரத்தின் சரிவிலிருந்து
கொட்டிக்கொண்டிருக்கிறது மழைநீர்
கதைக்குள் அமிழ்ந்துவிட்ட வண்ணத்துப்பூச்சி
அதன் பக்கங்களுக்குள் பரவி மேய
உயிர்ப்போடு விளங்கியது புத்தகம்
பக்கங்களுக்குள் சிக்கிக்கொண்ட
வண்ணத்துப் பூச்சி இறந்துவிட்டபோதிலும்
ஆவியுடன் காத்துக்கொண்டிருக்கும்
ஒரு கோப்பை தேநீர்
மேற்பரப்பில் தேடிக்கொண்டிருக்கிறது
என் முகத்தை
தூரத்திலிருந்து பரவும்
இனம்புரியாத மணம்
எல்லாவற்றின் மீதும் கவிய
தன் இருப்பின் கர்வத்தோடு
புரள்கின்றன பக்கங்கள்

மேலே உள்ள மூன்று கவிதைகளும் வார்த்தை ஏப்ரல் 2008 இதழில் வெளியானவை.

Share

Facebook comments:


5 comments

 1. Iniyal says:

  Kadaisi kavithai enakku pidithirukkirathu prasanna.

  natpirku Iniyal.

 2. சந்திரமௌளீஸ்வரன் says:

  Good Work Haran Prasanna
  Keep writing more

 3. கிருத்திகா says:

  ம்ம் எல்லா கவிதையும் நல்லா இருக்கு.. பெண்ணை எதிர்கொண்டதால் மாற்றமா.. இல்லை மாற்றத்தை உறுமாற்ற பெண்ணா????

 4. ராஜா says:

  பிரசன்னா,

  உங்கள் கவிதைகள் நிறைய பிடித்திருக்கின்றன. சில புரியாமலும் இருப்பது எனது பயிற்சியின்மையைக் காட்டுகிறது. இரண்டாம் கவிதை ஒரு உதாரணம். கவிஞனையே விளக்கம் கேட்பது நாகரிகம் அல்ல. மற்றவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால் ஏதுவாயிருக்கும்.

  இன்னும் கொஞ்சம் அதிக கவிதைகளை குறைந்த கால இடைவெளியில் எதிர்பார்க்கிறேன்.

  ராஜா

 5. சுப்ரமணியசாமி says:

  அன்பு நண்பரே.. உங்கள் கவிதைகளை எல்லோரும் பாராட்டும்போது நானும் பாராட்டுவதுதான் முறை.. எனவே வாழ்த்துக்கள் ஆனால் என்ன சொல்கிறது கவிதைகள்???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*