குசேலன் – பெண்களின் கிருஷ்ணன்?

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலெல்லாம் நெளிய ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல் போல ஆளாளுக்கு பேசும் வசனங்கள். ஒரு நல்ல கதையை கமர்ஷியலாக்குகிறேன் என்று அதீத தன்னம்பிக்கையில் (அகம்பாவத்தில்) கதையைக் கூறு போட்டு, ‘ஒரு சீன் பசுபதி சார், அடுத்த சீன் வடிவேலு சார்’ என்று யோசித்துவிட்டார் பி.வாசு. வடிவேலு வரும் காட்சிகள் மருந்துக்கும் சிரிப்பைத் தருவதில்லை. பசுபதியிடம் ‘சீரியஸ் கேரக்டர்’ என்று வாசு மிரட்டியிருப்பார் என நினைக்கிறேன். எப்போதும் ஒரு சோகத்தை வலிய வைத்துக்கொண்டு உயிரை எடுக்கிறார். ரஜினியின் என்ட்ரியின் போது 75 ஆண்டுகால சினிமாவிற்கு இப்பாடல் சமர்ப்பணம் என்று ஒரு வரியைப் போட்டு ஒரு பாட்டையும் போடுகிறார்கள். 75 ஆண்டுகால சினிமாவின் மீது வாசுவுக்கு என்ன கோபமோ, பழிதீர்த்துவிட்டார். இசை ‘சின்னப்பையன்’ என்பதை நிரூபித்துவிட்டார்.

வடிவேலு காட்சிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, ஒரு சின்ன கதையை அடிப்படையாக வைத்து, நேர்க்கோட்டுப் படமாக, உருப்படியாக எடுத்திருக்கலாம். அதற்குத் திறமை வேண்டும். வாசுவின் திறமை நாம் அறிந்ததே. திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாது என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்து, பணக்காரன், உழைப்பாளி, சாது, தாலாட்டு கேட்குதம்மா, கட்டுமரக்காரன் எனப் பல படங்களில் நிரூபித்தவர்தான் அவர். அதை மீண்டும் இன்னொருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கிறார். படத்தில் அழுத்தமான காட்சியோ, அழுத்தமான வசனமோ, மனதைக் கொள்ளை கொள்ளும் நல்ல நடிப்போ எதுவும் கிடையாது. பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி முகங்களைக் காட்டிக்கொண்டு, ஆளாளுக்கு உளறித் திரிகிறார்கள். இதில் நரிக்குறவர் இனத்தைப் பெருமைப் படுத்துகிறேன் என்று படுத்தித் தள்ளிவிட்டார். ஆனால் ரஜினிக்கு ‘இதெல்லாம் போணிக்காகாது’ என்பது கூடவா தெரியாது?

அண்ணாமலை வெளிவரும் முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ரஜினி, ‘அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமையும். நஷ்டமானால், தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருகிறேன்’ என்று சொன்னார். அவர் சொன்னது போலவே அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமைந்தது. குசேலன் படத்தின் வெளியீட்டுவிழாவில் இப்படம் 25 வாரங்கள் ஓடும் என்றார் ரஜினி. 25 வாரங்கள் ஓடுவதற்கு இந்தப் படத்தில் என்ன இருக்கிறது? திடீர் திடீரென்று பாடல்களும், சம்பந்தமில்லாத காட்சிகளும் என கத்தரித்துச் சேர்த்த பிட்டு படம் போலவே ஓடுகிறது குசேலன். மூன்று குழந்தைகள் மட்டுமே அமைதியாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நன்றாக நடித்துவிடுவார்களோ என்கிற சந்தேகம் வந்ததோ என்னவோ இயக்குநருக்கு, அவர்கள் வரும் காட்சிகளை ஒரேடியாகக் குறைத்துவிட்டார்.

படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இரண்டே இரண்டு. ஒன்று, ஆர். சுந்தரராஜன் ரஜினியைக் கேள்வி மேல் கேள்வி கேட்கும் வசனம். அடுத்து வடிவேலு ரஜினியைப் பார்த்தவுடன், ‘பார்த்துட்டேன்’ என உடலை வளைத்து ஹைபிட்ச்சில் அலறும் காட்சி. வேறெந்தக் காட்சிகளும் மனதில் கொஞ்சம் கூட ஒட்டுவதில்லை. பெரும் எரிச்சல் தரும் பாடல்களும், மட்டமான பின்னணி இசையும், சந்திரமுகி, அண்ணாமலை பார்ட் 2 என்று சொல்லி வாசு அடிக்கும் கொட்டங்களும் தாங்கமுடியாதவை. இதில் ‘தலைவா நயந்தாராவையே பார்க்கிறியே எங்களைப் பார்க்கமாட்டேன்கிறியே’ போன்ற வசனங்கள் எல்லாம் கண்ணில்படாமல் போகின்றன.

கடைசி 15 நிமிடங்கள் படம் செண்ட்டிமெண்டாக அமைந்து, படத்துக்கு வந்த எல்லாப் பெண்களையும் ஈர்த்துவிடுகிறது. தன் ஆரம்பகால படங்களில் நாம் பார்த்திருக்கும் ரஜினியின் எதார்த்தமான நடிப்பை இந்த 15 நிமிடங்களில் பார்க்கமுடியும். அசர வைக்கிறார். சின்ன இடத்தில்கூட எல்லை தாண்டாமல், சறுக்காமல், அவர் மேடையில் பேசும் விதமும், கண் கலங்கி கண்ணீர் விடும் இடமும் எல்லாரையுமே கவர்கிறது. கடைசி 15 நிமிடங்களால் மட்டும் வெள்ளிவிழா சாதனை புரிந்த ‘காதலுக்கு மரியாதை’, ‘பாரதி கண்ணம்மா’, ‘லவ் டுடே’, ‘சந்திரமுகி’ வரிசையில் இந்தப் படமும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடகம் போன்ற ஒரு படம், க்ளைமாக்ஸில் பெண்களை ஈர்க்கும் படமாகிவிடுகிறது. இதில் அசந்துதான் ரஜினியும் 25 வாரங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும். பி.வாசுவின் திறமையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கும் இப்படம், 25 வாரம் ஓடிவிட்டால், தமிழ்நாடு என்னாகும்? அதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதுதான் சோகம் தரும் விஷயம்!

மதிப்பெண்கள்: 39/100

Share

Comments Closed