கடல்புரத்தில் – புத்தகப் பார்வை

கடல்புரத்தில், கிழக்கு பதிப்பகம், ரூபாய் 75.
ஆன்லைனில் வாங்க: காம்தேனு.காம்.

தமிழில் கடல்புரத்தைச் சார்ந்த நாவல்கள் எல்லாமே பெரிதாகப் பேசப்பட்டவை. ஒரு கடலோர கிராமத்தின் கதை (தோப்பில் முஹம்மது மீரான்), புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம்), ஆழிசூழ் உலகு (ஜே.டி. குரூஸ்). வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலும் சிறப்பான ஒன்றே.

கடல்புரத்தில் வாழும் ஒரு மீனவ கிறித்துவக் குடும்பத்தின் கதை. பிலோமியின் நிறைவேறாத காதலின் வழியே, குருஸுவின் உலகத்திற்கும் அவரது மகன் செபஸ்தியின் உலகத்திற்கும் இடையேயான தலைமுறை இடைவெளியின் வழியே, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் போராட்டம், வன்மம், உறவு, துரோகம் என பல உணர்வுகளை மையமாக வைத்துச் சுழலும் நாவல்.

குருஸு தன் பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு நகரத்திற்குச் செல்ல விருப்பப்படாதவர். மகன் செபஸ்தி எல்லாச் சொத்தையும் விற்றுவிட்டு நகரத்தில் ஆசிரியராக வாழும் வாழ்க்கையைத் தொடர விரும்புபவன். குருஸுவின் மனைவி ஒரு வாத்தியாரோடு தொடர்பு வைத்திருப்பவள். குருஸுவின் மகள் பிலோமி, சாமிதாஸோடு ஏற்பட்ட காதலில் தன்னை இழந்தவள். செபஸ்தியும் ரஞ்சியுடனான காதலில் தோல்வி அடைந்தவனே. குருஸு படகில் மீன்பிடிப்பவர். அங்கே லாஞ்சில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கும் படகில் சென்று மீன்பிடிப்பவர்களுக்கும் எழும் பிரச்சினையில் ஒரு உயிர்ப்பலி நேர்கிறது. குருஸுவின் மனைவி அதிகம் குடித்து, கீழே விழுந்து அடிபட்டு இறக்கிறாள். இனியும் கடல்புரத்திலேயே மீன் பிடித்து வாழ்க்கையைக் கழிக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளும் குருஸு, வேறு வழியின்றி, தன் சொத்தை விற்றுவிட்டு நகரத்திற்குச் செல்லமுடிவெடுக்கிறார். முடிவெடுத்துவிட்டாலும், தன் ஊரை, தன் மண்ணை விட்டுப் பிரியும் சோகம் அதிகமாக, அவர் புத்தி பிறழ்கிறது. குருஸுவின் மனைவியோடு தொடர்பு வைத்திருந்த வாத்தியார், பிலோமிக்கு உதவத் தொடங்க, தன் நினைவுகளோடு, அங்கேயே வாழ்க்கையைத் தொடருகிறாள் பிலோமி.

கதை என்பது தனியாக இல்லை என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். கடல்புரத்தில் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளும், யாரும் எப்போதும் கடல்புரத்தில் கண்டுவிடக்கூடிய மக்களின் முகமுமே நாவல் எங்கும் காட்டப்படுகின்றன. அதில் கதை தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. பிலோமி தன் காதல் நிறைவேறாது என்பதை மிக எளிதாக ஏற்றுக்கொள்கிறாள். தன் அண்ணன் ரஞ்சியுடன் கொண்டிருந்த காதலும் இப்படி நிறைவேறாமல் போனதே என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால் தன் காதலும் நிறைவேறாமல் போவதில் அவளுக்குப் பெரிய அதிர்ச்சியில்லை. எதிர்பாராமல் அவளுக்கும் சாமிதாஸுக்கும் இடையே ஏற்படும் உடலுறவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

குருஸுவின் மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு சொல்லப்பட்டிருக்கும் விதம் அழகானது. மரியம்மையின் மரணத்தின்போது வாத்தி அடையும் கலக்கங்களும் ஒன்றிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுவிடுகின்றன. வாத்திக்கும் பிலோமிக்கும் இடையே உருவாகும் அன்பும், உறவும் புதிர்த்தன்மை கொண்டதாக இருக்கிறது. வாத்தி பிலோமியிடம் மரியம்மையையே பார்க்கிறார். ஊரிலும் பலவாறாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் கதையில் எந்த ஒரு இடத்திலும் பிலோமியோ, வாத்தியோ அதை மறுப்பதுமில்லை; ஏற்பதுமில்லை.

எல்லா கதாபாத்திரங்களும் தன்னளவில் நிறைவுபெற்று விளங்குகின்றன. அதிலும் பிலோமியின் பாத்திரம் நாவலில் பெரும் எழுச்சி கொள்கிறது. மிகச்சாதாரணமாக, தன் காதலனைக் காண்பதையே இன்பமாகக் கருதும் ஒரு சிறிய பெண்ணாக அறிமுகமாகும் பிலோமி, வாத்தியின் புதிரான அன்பை ஏற்றுக்கொள்வதும், ரஞ்சியின் அன்பைப் பற்றி நினைத்து அடையும் மகிழ்ச்சியும் என வேறு ஒரு பரிமாணம் கொண்ட பெண்ணாக, வாழ்க்கையில் எல்லாவற்றையும் கண்டு அனுபவித்து அதன் பின் கிடைக்கும் அனுபவத்தைக் கைவரப்பெற்றவளாக முதிர்ச்சி பெறுகிறாள். இந்த முதிர்ச்சிக்குக் காரணம் என்று பார்த்தால், அவள் சாமிதாஸுடன் கொள்ளும் உறவு. அந்த உறவுக்குப் பெண் அவளது சிறுமித்தன்மை காணாமல் போகிறது. சாமிதாஸுடன் தனக்குத் திருமணம் நடக்காது என்பது தெரிந்தவுடன், அவள் இவ்வுலகத்தில் எல்லா அனுபவங்களையும் கண்டு தெளிந்துவிட்ட பெண்ணாகிவிடுகிறாள். அவளால் வாத்தியுடன் உறவு வைத்துக்கொண்டிருந்த தன் மரியம்மையை நேசிக்கமுடிகிறது. வாத்தியைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவளது உலகம் எல்லாரையும் நேசிக்கும் உலகமாகிவிடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் விவரணைகளே கடல்புரத்தையும் அது சார்ந்த மக்களின் செயல்பாடுகளையும் கண்முன் நிறுத்துகின்றன. இந்த எளிமையான, பலமான விவரணைகள் வழியாகவே கதாபாத்திரங்கள் உயிருள்ளவர்களாக மாறுகிறார்கள். கதையை படித்துமுடித்ததும், கடல்புரத்து மனிதர்களோடு வாழ்ந்துவிட்ட உணர்வைத் தருபவை இந்த விவரணைகளே. இந்த விவரணைகள் தனியே தெரியாமல், மிக நேர்த்தியாக கதையோடு பின்னிக் கிடக்கின்றன என்பதால், அவை நம்மை கடலுக்குள்ளும், அதைச் சுற்றிய ஊருக்குள்ளும் எளிதில் இழுத்துச் செல்கின்றன.

நாவலின் இன்னொரு முக்கியத்துவம் அதன் வட்டார மொழி. கடல்புரத்து கிறித்துவ மக்களின் வட்டார மொழியை அவ்வளவு சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் வண்ணநிலவன். வண்ணநிலவன் சில மாதங்கள் கிறித்துவராக மதம் மாறி வாழ்ந்திருந்தார் எனக் கேள்விபட்டேன். இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறப்பான நாவலைக் கொண்டுவர, அக்காலகட்டம் உதவியிருக்குமானால், அதற்காக மகிழலாம். இந்நாவலை வண்ணநிலவன் எழுதும்போது 29 வயது. என்னளவில் இது ஓர் ஆச்சரியம்; அதிசயம்.

Share

Facebook comments:


6 comments

 1. Krishnan says:

  Thanks for a nice review. I admire Vannanilavan’s works very much. Blogger Lekha eloquently writes about her favorite authors Vannanilavan and Vannadasan in her blog http://yalisai.blogspot.com/. Is Kadalpurathil book available easily ?

 2. ஹரன்பிரசன்னா says:

  Yes, kadapuraththil is available. You can order it thru the following link.

  http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&itemid=882

 3. Krishnan says:

  Thanks Harenprasanna (have I spelled it right ? ). I got the book yesterday at New BookLands.

 4. ஹரன்பிரசன்னா says:

  Good. Pl read and share your comments.

  And my name’s correct spelling is Haranprasanna.

 5. அனுஜன்யா says:

  ஹரன்,

  ஆச்சரியம். மிகச் சமீபத்தில் தான் (ஜ்யோவ்ராம் பரிந்துரையில்) ‘கடல்புரத்தில்’ படித்தேன். வட்டார நடை முதலில் சிரமாக இருந்தாலும், புது ஊர் மெல்ல மெல்ல பழகுவதுபோல் கதாபாத்திரங்களும், அவர்தம் மொழியும் இலகுவாகிவிட்டது. ஒரு கதை படித்த உணர்வாக இல்லாமல், ஒரு கடலோர கிராமத்தில் இருந்து வந்த உணர்வே ஏற்பட்டது.

  பிலோமி தன் முதல் கலவி அனுபவத்தை அவ்வளவு இலகுவாக (எதோ ரகசியமாக சினிமா சென்று வந்தது போல்) கையாண்ட ஒன்று மட்டுமே சற்று நெருடலாக இருந்தது. என் பார்வை தவறாக இருக்கலாம்.

  மரியம்மை-வாத்தி உறவு ‘தொடர்பா’ என்பதே விவாதத்திற்கு உரியது. ஒரு சமயம் ஆசிரியர் ‘அவள் ஒருபோதும் குருசுக்கு துரோகம் நினைத்ததில்லை’ என்றும் சொல்லியிருப்பார்.

  //நாவலின் இன்னொரு முக்கியத்துவம் அதன் வட்டார மொழி. கடல்புரத்து கிறித்துவ மக்களின் வட்டார மொழியை அவ்வளவு சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் வண்ணநிலவன். வண்ணநிலவன் சில மாதங்கள் கிறித்துவராக மதம் மாறி வாழ்ந்திருந்தார் எனக் கேள்விபட்டேன். இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறப்பான நாவலைக் கொண்டுவர, அக்காலகட்டம் உதவியிருக்குமானால், அதற்காக மகிழலாம்//

  நானும் யோசித்தேன், எப்படி இவ்வளவு துல்லியமாக இவரால் எழுத முடிகிறதென்று!

  //இந்நாவலை வண்ணநிலவன் எழுதும்போது 29 வயது. என்னளவில் இது ஓர் ஆச்சரியம்; அதிசயம்//

  முற்றிலும் ஒத்துப்போகிறேன். எஸ்ரா அவரது (உயிர்மை) பத்தியில் வண்ணநிலவன் சிலகாலம் ‘துர்வாசர்’ என்ற பெயரில் துக்ளக் இதழில் எழுதி வந்தார் என்று படித்த ஞாபகம். அது சரியா?

  ஒரு தரமான அறிமுகம்/விமர்சனத்துக்கு நன்றி.

  அனுஜன்யா

 6. ஹரன்பிரசன்னா says:

  அனுஜன்யா,

  உடலுறவுக்கு ஒருவாறு பிலோமி தயாராகிறாள் என்பதை முதல் அத்தியாயங்களிலேயே காணலாம்.

  மரியம்மை குருஸுக்கு துரோகம் நினைத்தவளில்லை என்று வண்ணநிலவன் சொல்வது, இந்த உடல் சார்ந்த விஷயங்களை உள்வைத்து அல்ல என்பது என் புரிதல்.

  துர்வாசர் என்ற பெயரில் பலர் எழுதியதாகவும் அதில் ஒரு சமயத்தில் வண்ண நிலவன் எழுதியதாகவும் அறிந்தேன். தற்போது துவாசர் என்ற பெயரில் எழுதிவருவது வண்ணநிலவனா என்பது தெரியாது.

  எஸ்ராவின் அவர் அப்படித்தான் (உயிர்மை) படித்தேன். மிகச்சிறப்பாக வந்திருந்தது. எழுத்தாளர்கள் தாங்கள் கொண்டாடும் எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது நல்ல விஷயம். ஜெயமோகனும் சுராவும் இதை விமர்சன ரீதியிலும், முருகேச பாண்டியன் (உயிர்மை வெளியீடு) தனிப்பட்ட நட்பு சார்ந்தும் அணுகியிருக்கிறார்கள். எஸ்ரா அதையே எழுத்தாளர்களுடனான அனுபவம் என்பதை ஒருவித கொண்டாட்டமாக அணுகுகிறார். அவரது அனுபவம் அதிகம் என்கிற நிலையில் இன்னும் சிறப்பான கட்டுரைகள் வருமென்றே நினைக்கிறேன். குறிப்பாக, க.நா.சு. பற்றி அவர் எழுதப்போவது, முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*