கரம் ஹவா – கற்பிதங்களும் யதார்த்தமும்

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவிலேயே தங்கும் ஒரு இஸ்லாமியக் குடும்பம் நேர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய திரைப்படம். 1973ல் இயக்கப்பட்ட இத்திரைப்படம் இந்திய மாற்றுத் திரைப்படங்களின் முன்னோடிகளுள் ஒன்று. சிறந்த இசை, சிறந்த நடிப்பு இவற்றோடு மிக முக்கியமான பிரச்சினையை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து பொருட்படுத்தத்தக்க வகையில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமும் இதுதான் எனத் தெரிகிறது.

சலீம் மிர்ஸா என்னும் காலணி உற்பத்தியாளரின் வாழ்க்கையை மையமாக வைத்து நகர்கிறது. கதை. பிரிவினைக்குப் பின் சலீம் மிர்ஸாவின் உறவினர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட, சலீம் மிர்ஸா இந்தியாவிலேயே தங்குகிறார். எந்த முஸ்லிமும் எப்போதுவேண்டுமானாலும் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்கிற எண்ணம் நிலவுவதால், யாரும் சலீம் மிர்ஸாவிற்கு கடன் தர மறுக்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கும் பல முஸ்லிம்கள் கடனை அடைக்காமல் பாகிஸ்தான் சென்றுவிடுவதால் வங்கிகளும் சலீம் மிர்ஸாவிற்குக் கடன் தர மறுக்கின்றன.

சலீம் மிர்ஸாவின் தம்பி பாகிஸ்தானுக்குச் சென்றுவிடுவது ஊரில் தெரிந்துவிடுவதால், சலீம் மிர்ஸா தங்கியிருக்கும் அவரது தம்பியின் வீட்டிற்கும் பிரச்சினை வருகிறது. வேறு வழியின்றி வாடகை வீட்டிற்கு இடம்பெயர்கிறார்கள்.

சலீம் மிர்ஸாவின் மகளின் காதலன் குடும்பமும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்கிறது. அவன் வந்து அவளை மணம் முடிப்பது இயலாமல் போகும் நிலையில், அவள் தன் அத்தை மகனையே காதலிக்கிறாள். அவனும் பாகிஸ்தான் சென்றுவிடுகிறான். அவனுக்கு அங்கேயே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஏற்கெனவே அவனோடு உடலுறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், அவனை மறக்கமுடியாமல், தற்கொலை செய்துகொள்கிறாள் அமினா.

சலீம் மிர்ஸாவின் மூத்த மகன் இனியும் இந்தியாவில் இருந்தால் வேலைக்காகாது என்று பாகிஸ்தான் செல்கிறான். தனது தம்பியையும் அங்கு வருமாறு வற்புறுத்துகிறான்.

சலீம் மிர்ஸாவின் இரண்டாவது மகன் நன்கு படித்தும் வேலை கிடைக்காமல் அலைகிறான். அவனும் அவனையொத்த நண்பர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் சாய்கிறார்கள்.

சலீம் மிர்ஸா தன் தம்பியிடமிருந்து வீட்டை வாங்க, தன் வீட்டின் நகலை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார். அது பிரச்சினையாகி அவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்க்கிறார் என்று கைது செய்யப்படுகிறார். அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் அவரை பாகிஸ்தான் உளவாளியாகப் பார்க்கிறார்கள். (இந்த ஒரு காட்சி மட்டுமே கொஞ்சம் நாடகத்தன்மையுடன் அமைக்கப்பட்டுவிட்டது. அவர் நடந்து வரும்போது, தெருவில் நிற்பவர்கள் எல்லாம் அவரைப் பார்த்து ‘பாகிஸ்தான் உளவாளி பாகிஸ்தான் உளவாளி’ என்று சொல்கிறார்கள்!)

சலீம் மிர்ஸா வரும் குதிரைவண்டி தெரியாமல் ஹிந்துக்கள் குடியிருப்பில் இருக்கும் ஹிந்துகள் மீது மோதிவிட, பிரச்சினை வெடித்து மதக்கலவரம் ஆகிறது. சலீம் மிர்ஸாவின் காலணி உற்பத்திக்கூடம் தீ வைக்கப்படுகிறது.

மனம் வெறுக்கும் சலீம் மிர்ஸா தன் மனைவி மகனோடு பாகிஸ்தான் செல்ல முடிவெடுக்கிறார். வீட்டைக் காலி செய்துகொண்டு வரும் வழியில் பெரும் ஊர்வலம் போகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து செல்லும் ஊர்வலம் அது. அனைவருக்கும் வேலை கேட்டு நடக்கும் ஊர்வலம். மகன் அந்த ஊர்வலத்தில் பங்குகொள்ள அனுமதி கேட்டு தந்தையைப் பார்க்கிறான். தன் மகனின் உலகம் இந்த ஊர்வலத்தில், இந்தப் போராட்டத்தில் இங்கேதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் சலீம் மிர்ஸா, அவனைத் தடுப்பதில்லை. அதுமட்டுமன்றி, தனது உலகமும் இங்கேதான் இருக்கிறது என்று புரிந்துகொண்டு, பாகிஸ்தான் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு அப்போராட்டத்தில் இணைகிறார்.

1973ல் எடுக்கப்பட்ட திரைப்படம் மிக யதார்த்தமாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. சலீம் மிர்ஸாவாக வரும் நடிகர் Balraj Sahni இன் நடிப்பு மிக உணர்வுபூர்வமானது. தனது மனதின் சலனங்களை முகத்திலேயே காண்பித்துவிடுகிறார். Ismat Chughtai இன் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை இது. மூலக் கதையில் பிரிவினைக்குப் பின் கைவிடப்படும் ஸ்டேஷன் மாஸ்டர், திரைக்கதையில் காலணி தயாரிப்பவராக மாற்றப்பட்டிருக்கிறார். முதலில் இத்திரைப்படத்தை இயக்க ஒத்துக்கொள்ளும் ஒரு தயாரிப்பாளர், இப்படம் வெளிவருவதில் சிக்கல்கள் வரலாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார். என் எஃப் டி சி (அப்போது எஃ எஃ சி) உதவியுடன் இத்திரைப்படம் எடுக்கப்படுகிறது. இத்திரைப்படம் எடுக்க சில பிரச்சினைகள் வந்தபோது, சில இடங்களில் இத்திரைப்படம் எடுக்கப்படுவதுபோல செட் அப் செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத இடங்களில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தங்கும் ஒரு முஸ்லிம் குடும்பம் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. தான் காதலிக்கும் காதலன் காஸிமை பிரியவேண்டி நேர்கிறது அமினாவிற்கு. (சலீம் மிர்ஸாவின் மகள்.) அவன் அவளைத் தேடி பாகிஸ்தானிலிருந்து ஓடி வருகிறான். ஆனால் போலிஸால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்திய எல்லைக்குக் கடத்தப்படுகிறான். அவன் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்ததும், மாடிப்படிகளில் எதிரெதிரே அவனும் அவளும் சந்தித்துக்கொள்ளும் காட்சியை ஒரு கவிதை எனலாம். இக்காதல் நிறைவேறாது என்பதைப் புரிந்துகொள்ளும் அமினா, தன்னையே சுற்றி வரும் தன் அத்தை மகனின் காதலை ஏற்கிறாள். பதேபூர் சிக்ரி, தாஜ்மகால் என சுற்றுகிறார்கள். முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். உடலுறவு ஏற்படுகிறது. அவனும் பாகிஸ்தான் செல்கிறான். இக்காதலும் தோல்வி அடைவதைத் தாங்கமுடியாத அமினா தற்கொலை செய்துகொள்கிறாள். அமினாவின் இரண்டாவது காதல் தொடங்கும் இடமும் கவிதை என்றே சொல்லவேண்டும். பதேபூர் சிக்ரியில் அவர்களுக்கு இடையில் உருவாகும் காதல் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஒலிக்கும் பாடல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அமினா தன் பழைய காதலின் கடிதத்தைக் கிழிக்கவும் அப்பாடல் நிற்கவும் என, மிக நேர்த்தியான காட்சிகளை இயக்கியிருக்கிறார் இயக்குநர். (M. S. Sathyu.) அமினா இரண்டாவது காதல் கொண்டதும், தன் பழைய காதலினின் கடிதங்களைக் கிழிப்பதற்கு முன்பு அதைப் படிக்கிறாள். அப்போது அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகள் அசாதாரணமானவை. தன்னை விட்டுவிட்டு, பாகிஸ்தானில் ஒரு அமைச்சரின் மகளைத் திருமணம் செய்துகொண்டுவிட்ட காதலனின் மறக்கமுடியாத முகமும், அவனது ஆசை மொழிகளும், அவன் மீதான வன்மமும் என பல உணர்வுகளை ஒருங்கே வெளிப்படுத்துகிறது அமினாவின் முகம்.

படத்தின் தொடக்கக் காட்சிகள் மிக முக்கியமானவை. தன் உறவினர் ஒருவரை பாகிஸ்தானுக்கு வழியனுப்பிவிட்டு வருகிறார் சலீம் மிர்ஸா. வண்டியில் திரும்பிச் செல்லும்போது வண்டி ஓட்டுபவன் சொல்கிறான், ‘இந்நாட்டில் நாய் கூட வாழாது’ என்று. அவனுக்குள் பாகிஸ்தான் பற்றிய கனவு முட்டிக் கிடக்கிறது. இப்படத்தில் பாகிஸ்தான் ஒரு கனவு தேசமாகவே காட்டப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்குச் செல்லும் யாரும் அங்கே தோல்வியடைவதில்லை. அங்கிருந்து பாகிஸ்தானின் வளங்களைப் பட்டியலிட்டு கடிதம் அனுப்புகிறார்கள். அங்கே செல்லும் அரசியல்வாதியும் செல்லுபடியாகிறார். இதைக் காணும் கேட்கும் இந்தியாவில் தங்கிவிட்ட முஸ்லிம்களுக்குள் பாகிஸ்தான் என்னும் கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. இதனை மிக அழகாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர். இவற்றை வைத்தே அத்தலைமுறையின் இந்தியாவில் தங்கும் முஸ்லிம்களின் மனநிலையைப் படம் பிடிக்கிறார். அடுத்த தலைமுறையைக் கொண்டு அவர் உருவாக்கிய கனவு தேசம் பற்றிய கற்பிதங்களை உடைக்கிறார். சலீம் மிர்ஸாவின் மகன் இந்தியாவே தன் தேசம் என்பதைக் கண்டடைகிறான். எங்கேயும் எப்போதும் எதற்கும் சவால்களும் பிரச்சினைகளும் உண்டு என்றும் அதை எதிர்ப்பதும் வெல்வதுமே வாழ்க்கை என்பதை உணருகிறான். அதற்கான விடை நாடுவிட்டுப் போவதில் இல்லை என்பதில் முடிவாக இருக்கிறான். இதே எண்ணம் சலீம் மிர்ஸாவிற்குள் ஆரம்பித்தில் இருந்தே இருந்தாலும், கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் அவரை சலனப்பட வைக்கின்றன. அவர் மயங்குகிறார். பாகிஸ்தான் என்பது எல்லா முஸ்லிம்களுக்கான தேசம் என்றும் அது எப்போதும் எல்லா முஸ்லிம்களையும் அரவணைக்கக் காத்திருக்கிறது என்பதுமான அபத்தமான கற்பனைகளை தன் மகனைக் கொண்டு கடக்கிறார் சலீம் மிர்ஸா.

இன்னொரு முக்கியமான திரைமாந்தர் காஸிம்மின் அப்பா. அவர் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதி. முகமது அலி ஜின்னா உள்ளிட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்திய முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரே தலைவர் தான் மட்டுமே என்கிற எண்ணம் அவருக்குத் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைமைக்காகப் போராடும் ஒரே தலைவர் தாந்தான் என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறார். இந்தியாவில் இருக்கும் அத்தனை முஸ்லிமும் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாலும், இங்கே ஒரேயொரு முஸ்லிமின் மூச்சு மட்டும் கடைசி வரை இருக்கும், அது தனது மூச்சுதான் என்கிறார். ஏனென்றால் இந்தியாவே தனது நாடு என்று முழங்குகிறார். அடுத்த நாளே பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். அங்கிருந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியா வரும் ஹிந்து, முஸ்லிம்களின் நிலபுலன்கள், தொழிற்சாலைகளைப் பயன்படுத்தி பணக்காரராகிவிடலாம் என்று பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். இவரது சந்தர்ப்பவாதமே காஸிம்மின் அமினாவுடனான காதலையும் உடைக்கிறது.

இன்னொரு முக்கியமான பாத்திரம் சலீம் மிர்ஸாவின் தாய். ஏன் தனது பிறந்த வீட்டை தான் காலி செய்யவேண்டும் என்று புரியாமல் தவிக்கிறாள். வீட்டைக் காலி செய்ய மறுத்து அவள் யாருக்கும் தெரியாமல் ஓரிடத்தில் ஒளிந்துகொள்கிறாள். அவளை வம்படியாகத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. தான் சாகுமபோது தான் வாழ்ந்த வீட்டிலேயே சாக ஆசைப்படுகிறாள். அவளது மரணம் அவள் நினைத்த மாதிரியே அவள் வாழ்ந்த, திருமணம் ஆகிவந்த அவளது பழைய வீட்டிலேயே நேர்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையையோ, இந்து முஸ்லிம் பிரச்சினையையோ அவளால் கடைசிவரை புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

கடைசியில் சலீம் மிர்ஸா போராட்டத்தில் அமைதியாகக் கலந்துகொண்டு செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பிரச்சினைகளின் இன்னொரு காரணம், அவர் இந்திய நீரோட்டத்தில் கலக்காமல் இருந்ததே என்கிற ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்படும் வண்ணம், அவர் மெல்ல அமைதியாக போராட்டத்தில் கலந்துகொண்டு நடந்து செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பாகிஸ்தான் செல்வது பற்றிய மனமயக்கங்கள் தீர்கின்றன. எங்கும் எல்லா இடத்தில் போராட்டம் நிச்சயம் என்பதை அவருக்குப் புரிய வைக்கிறான் அவரது மகன். மகனுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த ஒரு நாட்டையும் தாய் நாடாக நினைக்கமுடிவதில்லை. அவனது நண்பர்கள் அவனிடம் சொல்கிறார்கள், ‘உனக்கு இந்தியாவில வேலை கிடைக்கலைன்னா பாகிஸ்தான்ல வேலை தேடலாம். நாங்க எங்கே போவோம்’ என்று. அவன் வேலை கேட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் அவன் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறான். அத்தனையையும் மீறி, அவன் தன் வாழ்க்கையை இந்தியாவிலேயே கண்டடைகிறான்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னான இந்திய முஸ்லிம்களின் மனநிலையையும், பாகிஸ்தான் பற்றிய கற்பிதங்களையும், அதை உடைக்கும் அடுத்த தலைமுறையினரையும் பற்றிய முக்கியமான திரைப்படம்.

Share

Comments Closed