கொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் – நாள் 1)

வோல்ட்டேரின் கேண்டீட் நாவலை மாலன் வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். சூஃபி வழி நூலை மாலன் வெளியிட ஜே.எஸ்.ராகவன் பெற்றுக்கொண்டார்.

மாலன் கேண்டீட் நாவலைப் பற்றிப் பேசினார். வோல்ட்டேரின் அறிமுகத்தோடு தொடங்கிய மாலன், கேண்டீட் நாவல் எழுதப்பட்டதன் நோக்கத்தை விவரித்தார். பின்பு பத்ரியின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பாராட்டிய மாலன், மொழிபெயர்ப்பின் எல்லையையும் மொழியின் போதாமையையும் பற்றிக் குறிப்பிட்டு, நாவலிலுள்ள சில பிழைகளைச் சுட்டிக்காட்டினார். நாவலின் ஓரிடத்தில் இப்படி வரும். ‘—–ஐக் கொட்டினாள்’ என்று. நான் கேண்டீட் நாவலைப் படித்தபோதே இதைப் பற்றி பத்ரியிடம் கேட்டேன். நாவலின் மூலப் பிரதியிலும் இப்படித்தான் இருக்கிறது என்று பத்ரி சொன்னார். மாலன் வேறொரு மூலத்தில், அவள் தண்ணீரைக் கொட்டினாள் என்றுதான் இருக்கிறது என்றார். ஆனால் பத்ரி மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டது வேறொரு ஆங்கில மூலத்தை. அதேபோல் கொலைகள் பற்றிய விவரணைகளை தவிர்த்துவிட்டு, பொதுவாக, ’படுகொலை செய்யப்பட்டார்’ என்று பத்ரி எழுதியிருக்கிறார், இது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரம் என்றார் மாலன். இன்னொரு இடத்தில் ‘நயா பைசா’ என்று வருவதைச் சுட்டிக்காட்டிய மாலன், அக்காலத்தில் நயா பைசா என்று கிடையாது என்றார். (பின்பு சூஃபி வழி நூலை வெளியிட்டு பா.ராகவன் பேசினார். பத்ரியும் நாகூர் ரூமியும் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்.) பின்பு பதிலளித்தபோது பத்ரி சில கருத்துகளைச் சொன்னார். சில இடங்களில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே தான் மொழிபெயர்த்துவிட்டதாகச் சொன்னார். பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பாதிரிகளைத் தனித்தனியாக குறிப்பிடாமல் ஒரே வார்த்தையாக பாதிரி எனக் குறிப்பிட்டது, பல்வேறி படிகளைக் கொண்ட ஜமீந்தார் முறைகளைத் தனிதனியாகச் சொல்லாமல் ஒரே வார்த்தையாக ஜமீந்தார் எனப் பயன்படுத்தியது என்பது போன்ற விஷயங்களை விளக்கினார். நாகூர் ரூமி ‘நயா பைசா’ என்பது சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இரா.முருகன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, டிரான்ஸ்லேஷனுக்கும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கும் டிரான்ஸ்கிரியேஷனுக்கும் (மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் எனக் கொள்ளலாம்) வித்தியாசங்கள் உண்டென்றும், மொழித் தழுவல் என்பது வெகு காலமாக நம்மிடையே உள்ளதுதான் என்றும் கருத்துச் சொன்னார். ஆனால் பத்ரி செய்தது மொழிபெயர்ப்புதான். அதனால் நயா பைசா என்பதை மாலன் சுட்டிக்காட்டியது சரியான குறையே என்பது என் எண்ணம். அதை அடுத்த பதிப்பில் சரி செய்யலாம். இந்த நாவலை மொழிபெயர்க்க ஏன் தேர்தெடுத்தீர்கள் என்று பத்ரியிடம் கேட்டபோது, தன்னாலும் மொழிபெயர்க்க முடியும் என்று தனக்கே நிரூபித்துக்கொள்ளவும், அதன் மூலம் நல்ல மொழிபெயர்ப்புகளை ஊக்கப்படுத்தவும் முடியும் என்பதாலும் என்றார். முதல் மொழிபெயர்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கும் நல்ல பெயரின் எக்ஸைட்மெண்ட் அடுத்தடுத்த மொழிபெயர்ப்புகளை நிச்சயம் கொண்டுவரும் என்று நினைக்கிறேன்.

சூஃபி வழி புத்தகத்தை வெளியிட்டு பாரா பேசினார். பேசத் தெரியாது என்றும் மைக் பிடித்து அதிகம் பழக்கமில்லை என்றும் நல்ல நகைச்சுவையோடு ஆரம்பித்த பாரா கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குப் பேசினார். தான் சிறு வயதில் கண்ட சாமியார்களிடத்திலும் சூஃபித்தன்மையைப் பார்ப்பதாக தற்போது உணர்வதாகச் சொன்னார் பாரா. சிறந்த புத்தகம் ஒன்றைப் படித்த திருப்தியைப் பற்றிக் குறிப்பிட்ட பாரா, ஒரே இரவில் எப்படி இப்புத்தகம் அவரை உள்ளிழுத்துக்கொண்டது என்பதையும் குறிப்பிட்டார். ஆண்டாள், ராமகிருஷ்ணர் என யாரையும் பாரா விட்டுவைக்கவில்லை. எல்லாரிடத்திலும் சூஃபித் தன்மை உள்ளது என்றார். ராமானுஜரிடத்திலும் சூஃபித் தன்மையைக் கண்டார் பாரா. சென் பௌத்தம், இஸ்லாம், ஹிந்துமதம் என எந்த மதத்திற்கும் சூஃபித்தன்மைக்கும் தொடர்பே இல்லை என்றார். அதனாலேயே சூஃபி வழி என்கிற பெயரைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும், மதத்துக்கும் சூஃபிக்கும் தொடர்பில்லை என்று நம்பும் எந்தவொரு மனிதனையும் இப்புத்தகம் பாதிக்கும் என்றும் விளக்கினார் பாரா. சூஃபிகளின் சில வரிகளைப் பார்க்கும்போது, ரிக் வேதத்தோடு தன்னால் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது என்பதையும் விளக்கினார் பாரா. புத்தகம் மிகக் கடுமையாகவே அவரைப் பாதித்திருக்கிறது என்கிற உண்மையை உணரமுடிந்தது. அதற்குப் பின்பு சில கேள்விகளுக்கு நாகூர் ரூமி பதிலளித்தார். அரங்கம் எல்லாவித இறுக்கங்களையும் இழந்து, கலந்துரையாடலுக்கான ஒரு மன நிலையைப் பெற்றது நாகூர் ரூமி கேள்விகளுக்கு பதிலளித்தபோதே.

இஸ்லாமுக்கும் சூஃபியிசத்துக்கும் தொடர்பில்லை என்றார் நாகூர் ரூமி. இஸ்லாமியர்கள் இக்காலத்தில் சூஃபியிஸத்தை ஏற்கிறார்களா (கேட்டவர் நேசமுடன் ஆர். வெங்கடேஷ்) என்று கேட்டபோது, எக்காலத்திலும் இஸ்லாம் சூஃபியிஸத்தை ஏற்றுக்கொண்டதில்லை என்றார் ரூமி. அவனே உண்மை எனச் சொல்லவேண்டிய ஒரு சூஃபி, நானே உண்மை எனச் சொன்னதாகவும் (இதற்கான அராபியச் சொற்கள் மறந்துவிட்டன. ஒரு மோன நிலையில் சூஃபி இப்படி மாற்றிச் சொல்கிறார்), அவர் அதையே மீண்டும் மீண்டும் சொன்னதால் அவர் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் எறியப்பட்டார் என்றும் சொன்னார் நாகூர் ரூமி. இஸ்லாத்தின் கட்டுக்களிலிருந்து வெளிவர விரும்பும் ஒருவர் இஸ்லாமியராகத் தொடர நினைக்கும்போது உருவாகும் வெளியை சூஃபியிஸம் எனலாமா எனக் கேட்டேன். நாகூர் ரூமி சொன்ன பதில் சரியாக நினைவில்லை. சூஃபியிஸம் என்பதை எம்மதத்தோடும் தொடர்புபடுத்தவேண்டியதில்லை என்றார். ஹிந்து மதத்திலும் சூஃபித்தன்மையைக் காணலாம் என்றார். கபீர்தாஸ் ஒரு சூஃபி என்றார். ராமகிருஷ்ண பரமஹம்சரிசம் சூஃபித் தன்மையைக் காணலாம் என்றார். சூஃபிகள் சிலை வழிபாட்டை ஏற்கிறார்களா என்று கேட்டேன். கண்டிப்பாக ஏற்கவில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்றார். அவரிடத்திலும் ஒரு சூஃபித்தன்மை குடிபுகுந்துவிட்டதை நான் அந்நிமிடத்தில் கண்டேன். 🙂 வெங்கடேஷ் மற்றொரு கேள்வி கேட்டபோது மாலன் ‘பாரதியார் நானே கடவுள் என்றெழுதிய சமயத்தில் அவருக்குள் ஒரு சூஃபித்தன்மை இருந்ததை உணர்வதாக’ச் சொன்னார். ஹிந்துமத்தில் சூஃபியிஸத்தின் தேவை என்ன என்று நான் கேட்டேன். மீண்டும் வழக்கம்போல மதத்துக்கும் சூஃபியிஸத்துக்கும் தொடர்பு தேவையில்லை என்கிற கருத்தே முன்வைக்கப்பட்டது. மீண்டும் சூஃபியிஸம் பற்றிய கேள்விகளுக்கு, சூஃபியிஸத்தை சரியாக விளக்கமுடியாது, அது அனுபவம் என்றார் ரூமி. அப்படியானால் அது பின்நவீனத்துவமாக மட்டுமே இருக்கமுடியும் என்றேன் நான்.

சூஃபிஸத்திற்கும் மதத்திற்கும் தொடர்பே இல்லை என்கிற கருத்தையே நான் முற்றிலுமாக மறுதலிக்கிறேன். நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு. இஸ்லாத் சட்டங்களின் அடிப்படையான மதம். சட்டப்படி சரி, தவறு என்கிற இரண்டு பார்வைகளே உண்டு.

பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும். அறிவார்ந்த முட்டாள்கள் தங்கள் முட்டாள்தன்மையை கைவிட்டால், அவர்கள் சட்டத்தை மீறவேண்டியிருக்கும். அங்கே தார்மீகம் முன்னுக்கு வரும். அறிவார்ந்த முட்டாள்கள் அப்படியே தொடர்ந்தால் அவர்கள் சட்டத்திற்குள்ளே வாழமுடியும். இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே.

இஸ்லாத்தில் ஒருவன் இஸ்லாமியனாக இருக்கமுடியும் அல்லது இஸ்லாமியனாக இருக்கமுடியாது என்கிற இரண்டு எல்லைகள் மட்டுமே சாத்தியம். கருப்பு வெள்ளைகளுக்கு நடுவே உள்ள பல்வேறு நிறங்களில் வாழ்வது சாத்தியமல்ல. இங்கேதான் சூஃபியிஸத்தின் தேவை இருக்கிறது. கட்டுக்களின் மீது கேள்வியும் எதார்த்தத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒருவர் ஒரு சூஃபியாகவே இருக்கமுடியும். இதனால் இது இஸ்லாத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகிறது. ஹிந்து மதத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. கடவுளை எதிர்த்துக்கொண்டே ஒரு ஹிந்து ஹிந்துவாகத் தொடர்ந்துவிடமுடியும். ஹிந்துவாக இருப்பதற்கான எந்தவொரு வழிமுறையும் கோரப்படவில்லை. ஹிந்துக்களின் புனித நூலாகச் சொல்லப்படும் பகவத்கீதையை மறுதலித்துவிட்டவனும் ஹிந்துவாகத் தொடரமுடியும். இதனால் ஒரு ஹிந்து கட்டுக்களிலிருந்து வெளிவரவேண்டிய தேவை இல்லை. உள்ளிருந்தே அவன் கேள்விகளை எழுப்பமுடியும் என்பதால் அங்கே சூஃபியிஸம் தேவையில்லை. தீர்ப்பு நாளில் நீங்கள் கடவுளை அடைவீர்கள் என்று இஸ்லாமும், மனிதனாக இருக்கும்போதே கடவுளை அடையும் என்று சூஃபியிஸமும் சொல்கின்றன. இதை இஸ்லாமியர்கள் ஏற்க வாய்ப்பில்லை. ஆனால் ஹிந்துக்கள் இதை எளிதாக ஏற்பார்கள். நாடெங்கும் நிலவும் குலதெய்வ (சிறுதெய்வ) வழிபாட்டின் அடிப்படை இதுவே. அதன் தொடர்ச்சியே தர்கா. இஸ்லாம் வெளிநாடுகளில் பரவும்போது, அங்கிருக்கும் கலாசாரத்தோடும், மதங்களோடும் நெருங்கிவரும்போது அங்கே நிச்சயம் சூஃபியிஸத்தின் தேவை இருக்கும். அதன்வழியேதான் சிலை வழிபாட்டை சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஒரு இந்திய இஸ்லாம் வீட்டுக் கல்யாணத்தில் இடம்பெறும் பூவும் பழமும் கூட சூஃபிஸத்தின் ஒரு கூறுதான் என்று ஓங்கிச் சொல்லிவிடமுடியும். ஏனென்றால் யாரும் சூஃபியிஸத்தை அறுதியிட்டு விளக்கமுடியாதே! 🙂

ராமானுஜரிடத்திலும் ஆண்டாளிடத்திலும் பரமஹம்சரிடத்திலும் பாரதியாரிடத்திலும் ஒருவர் சூஃபித் தன்மையைக் காண்பது ரசனையின் அடிப்படையில், அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல. விமர்சனத்தின் ஒரு புள்ளி அது. ரசனையின் மேம்பட்ட புள்ளி அது. அது உண்மையாக இருக்கவேண்டியதில்லை. அது உண்மையென்றால், தி.ராசகோபாலன் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள், சங்ககாலங்களில் காதலன் காதலியோடு பேசும்போது நேரம் விரைவாகச் சென்றது; காதலன் காதலியைப் பிரிந்து இருந்தபோது நேரம் மெதுவாகச் சென்றது என்பது சார்பியல் என்பதன் வெளிப்பாடே; அதனால் அவர்களுக்கு அறிவியல் தெரிந்திருந்தது என்கிற கொடுமையையெல்லாம் ஏற்கவேண்டியிருக்கும். கடல் நீர் ஆவியாகி, மேகமாகி, மழை பெய்வதை பாசுரத்தில் காணலாம் என்பதை சுஜாதா சிலாகித்தார். அது அப்படியே ரசனையோடு நின்றது. அறிவியல் புனைகதைகளின் கூறுகளைப் பட்டியலிட்ட சுஜாதா, அதன் சில கூறுகளை நாம் ராமாயணத்திலேயே, விக்கிரமாத்தித்தன் கதையிலேயே காணலாம் என்றார். அதுவும் ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்ததே. மாறாக, அதுவே சயின்ஸ் பிக்க்ஷனின் முதல் பிரதி என்று நாம் பிரஸ்தாபிக்கமுடியாது. இதுவே சூஃபித்தன்மைக்கும். சூஃபித்தன்மையை நாம் யாரிலெல்லாம் பார்க்கமுடிகிறது என்று யோசிப்பது ஒரு ரசனையின் அடிப்படை. அதை கபீர் தாஸுக்குப் பொருத்துவது, இரண்டு எதிரெதிர் மதங்களுக்குள்ளான ஆன்மிகத்தன்மையின் ஒற்றுமைப்புள்ளியைக் கண்டடைவது. பாராவிற்கு நிகழ்வதும் இதுவே. அதற்காக பரமஹம்சரும், கபீரும் சூஃபி என்பதெல்லாம் ஏற்கமுடியாதது. சூஃபியிஸத்தையும் இஸ்லாத்தையும் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. மென் இஸ்லாமியர்களின் துவக்கப்புள்ளியாக சூஃபியிஸத்தை வைத்துக்கொள்ளலாம். இந்தக் காரணத்துக்காகவே தீவிர இஸ்லாமியர்கள் இதை ஏற்கவில்லை என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகிறது. அதனால், சூஃபி வழி – இஸ்லாமியர்களின் இதயம் என்று ரூமி வைக்க இருந்த தலைப்பு மிகவும் நேர்மையானதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

எனது கருத்தையெல்லாம் நான் சூஃபி வழி புத்தகத்தைப் படிக்காமல் எழுதியிருக்கிறேன். புத்தகத்தைப் படித்தபின்பு, ‘இஸ்லாத்திற்கும் சூஃபியிஸத்திற்கும் தொடர்பே இல்லை’ என்று நானே சொல்லக்கூடும். அப்போது – நாகூர் ரூமி பேசும்போது இடையில், ‘உங்களுக்குத் தெரியாத நாகூர் ரூமி ஒருத்தன் இருக்கான். அவன் எழுதின புத்தகம் இது’ என்றார். அந்நியன் படம் பார்த்தமாதிரி இருந்தது. கொஞ்சம் திகிலாக உணர்ந்தேன் – நீங்களும் இதேபோல் திகிலடையக்கூடும். அந்த நிமிடத்தில், ’பெரியாரும் ஒரு சூஃபியே’ எனச் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

(பி.கு.: நேற்று காராசேவு கொடுத்தார்கள். எந்த சூஃபி தயாரித்தார் எனத் தெரியவில்லை. மிக நன்றாக இருந்தது.)

Share

Comments Closed