குதலைக் குறிப்புகள் – 3

‘தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என்கிற கையறு நிலை வாக்கியத்தைத் தொடர்ந்து, சீமான் இன்னொரு கையறு நிலை வாக்கியத்தைப் பிரபலப்படுத்தியுள்ளார். ‘வேசி மக்கள்.’ சீமான் வீறுகொண்டு எழுந்து சிறைக்குச் செல்வதும், இனி இதுபோல் பேசமாட்டேன் என்று கடிதம் எழுதிவிட்டு வீடு திரும்புவதும், மீண்டும் அப்படியே பேசுவதும் (வே)வாடிக்கையாகிவிட்டது. சீமானின் வீறுகொண்ட குரல் வெறும் அலட்டல் குரலாகவும், மேடை நாடகமாகவுமே தோற்றமளிக்கிறது. ஏதேனும் ஒரு கட்சியில் நாளை எம்.எல்.ஏ சீட் பெற அவர் முயல்கிறார் என்கிற எண்ணமே வலுக்கிறது. இவரைக் கைது செய்யும் அரசு, சரியான குற்றச்சாட்டுகளோடு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தாலும் பரவாயில்லை. மக்கள் அமைதியாகும்வரை சிறையில் வைப்பது, பின்பு வெளிவிடுவது என்கிற திட்டத்தோடு மட்டுமே சீமான் போன்றவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். இதனால் இவர்கள் வெளியில் வரும்போது ‘தியாகி’ பட்டத்தோடு வெளியில் வருகிறார்கள். இன்னும் தமிழ்நாட்டில் வேசி மக்களோடு வசிக்காமல், இலங்கை சென்று போராடி வெற்றியடைய சீமான் முயலவேண்டும். இன்று தினமலர் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. புதுவை அரசு இவரைக் கைது செய்ய வந்ததாகவும், இவர் பயந்து வீட்டைப் பூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது தினமலர். தினமலரை நம்பமுடியாது. சீமான் சாதாரணமாக வெளியில் சென்றிருந்தாலும் இப்படி எழுதிவிடும். ஆனால் தன்னைக் கைது செய்ய காவலர்கள் வந்தார்கள் என்று தெரிந்துகொள்ளும் சீமான், உடனடியாக புதுவையில் சரணடைந்து தினமலரின் மூக்கை அறுக்கவேண்டும். யார் மூக்கை யார் அறுக்கிறார்கள் என்று பார்க்கலாம். எப்படியோ இன்னொரு ’சிறை சென்ற தியாகி’ பட்டம் சீமானுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது.

-oOo-

’நான் கடவுள்’ படத்தின் ஓம் சிவோகம் பாடலைப் பற்றி இன்னொரு முறை குறிப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது. படம் பார்ப்பதற்கு முன்பு சாதாரணமாகத் தோன்றிய இப்பாடல், படத்தோடு பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. தொடர்ந்து இருபது முறை இதே பாடலைக் கேட்டபோது, இப்பாடல் அப்படியே வேறு ஏதோ ஒரு தளத்திற்குச் சென்றுவிட்டது போலத் தோன்றுகிறது. இண்டர்லூடாக வரும் இசையெல்லாம் உடல் நரம்பை அதிர வைக்கிறது. ஹே ராம் படத்தில் வரும் ‘இசையில் தொடங்குதம்மா…’ பாடலுக்குப் பிறகு, இவ்வளவு பரவசத்தோடு நான் கேட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். ‘ஓம் சிவோகம்’ பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பை யாராவது இணையத்தில் இட்டால் நல்லது.

-oOo-

காவல்கோட்டம் நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. கோபம் கொண்டு எஸ்ரா கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்ட விமர்சனத்தைப் படித்தேன். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருந்தது. காரணம், எஸ்ரா இத்தொனியில் எழுதி நான் வாசித்ததில்லை என்பதாக இருக்கலாம். நாவல் தனக்கு ஏன் பிடிக்கவில்லை என்கிற காரணங்களைப் பட்டியலிட்டிருக்கும் எஸ்ரா, அதற்கு முன்னதாக எழுதியிருக்கும் வரிகள் எல்லாம், ஒரு தேர்ந்த எழுத்தாளரதல்ல. நினைத்ததை எழுதும் ஒரு வலைப்பதிவு எழுத்தாளருடையது. இதை எப்படி எஸ்ரா தேர்ந்தெடுத்தார் என்பதுதான் என் ஆச்சரியத்துக்குக் காரணம். ஆயிரம் பக்கம் தந்த வலிதான் காரணம் என்றாலும், எஸ்ரா நாவலின் விமர்சனத்தை அதற்கான காரணங்களோடு மட்டும் நிறுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும், கடைசி வரியின் அங்கதத்தை ரசித்தேன். அதே சமயம் ‘ஆயிரம் பக்க அபத்தம்’ என்னும் தலைப்பு உணர்த்துவது என்ன என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

-oOo-

விஜயபாரதம் இதழில் தஸ்லிமா நஸ்ரினின் நேர்காணல் வாசித்தேன். வேறோர் ஆங்கில இதழில் வந்திருந்த நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம். தனது நாவலை வெளியிட எந்தஒரு பதிப்பகமும் முன்வர மறுக்கிறது என்ற தன் குமுறலை வெளியிட்டிருந்தார். கொல்கத்தாவை தன் தாய்நாடாகக் கருதும் தஸ்லிமா, தான் இந்தியாவை எவ்வளவு நேசிக்கிறேன் என்றெல்லாம் சொல்லியிருந்தார். மார்க்ஸிஸ்ட்டுகளே தனது இன்றைய நிலைக்குக் காரணம் என்று சொல்லும் தஸ்லிமாவின் பேச்சில், கோபத்தைவிட, எப்படியாவது மார்க்ஸிஸ்டுகள் தன்னை கொல்கத்தாவில் வாழ அனுமதி அளித்துவிடமாட்டார்களா என்கிற ஏக்கமே தெரிந்தது.

அதிலிருந்து இரண்டு கேள்வி பதில்கள்.

நீங்கள் தற்போது காதல் வயப்பட்டிருக்கிறீர்களா? திருமணம் சமீபத்தில் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளனவா? ஒரு தாயாகும் எண்ணமிருக்கிறதா?

காதல் வயப்பட்டால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் உங்கள் மூன்று கேள்விகளுக்கும் பதில் இல்லை… இல்லை… இல்லை… தான்.

உங்கள் பூனை எப்படி இருக்கிறது? நீங்கள் அதனை ரொம்பவும் இழந்துவிட்டதாக உணருகிறீர்களா?

கல்கத்தாவை விட்டு நான் வெளியேற வேண்டி வந்தபோது என் நண்பர்கள் அதனைப் பார்த்துக்கொள்ள முன்வந்தார்கள். என் ‘மினு’வை நான் ரொம்பவும் இழந்துவிட்டேன். ஆனால் என்ன செய்வது? இந்தியாவில் யாரும் அவளைப் பார்த்துக்கொள்ளவில்லை. என் சகோதரனுடன் டாக்காவிற்கு அனுப்பப்பட்டுவிட்டாள். அவள் (பூனை) ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனை. ஆனால் இப்போது விளையாடுவதில்லை. சாப்பிடுவதில்லை. கல்கத்தாவை நினைத்து ஏங்குகிறாள். என் அருகாமை அவளுக்கு இல்லை.

கல்கத்தாவில் தஸ்லிமா நஸ்ரினுக்கும் இடமில்லை. ஒரு பூனைக்கும் இடமில்லை. விஜயபாரதம் எந்த ஆங்கில இதழில் இப்பேட்டி வெளியாகியிருந்தது என்பதனையும் குறிப்பிட்டிருக்கலாம்.

-oOo-

இலங்கையைச் சேர்ந்த, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் இந்தியா வந்திருப்பதாகவும், சில தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அவர்கள் கருணா ஆதரவாளர்கள் என்றும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களின்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார். (சுட்டி: http://www.hindu.com/2009/02/15/stories/2009021560791000.htm) தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொன்ன அறிவாளிகளை நினைத்துக்கொள்கிறேன்.

-oOo-

அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் காலபைரவனின் ஒரு சிறுகதை வெளியாகியுள்ளது. காலபைரவனின் மற்ற சிறுகதைகளைப் போலல்லாமல், ஒருமுறை வாசித்தாலே புரிந்துவிடும் தன்மையோடு இக்கதை எழுதப்பட்டுள்ளது. ‘ஒருநாளும் நாம் திரும்பப்போவதில்லை’ என்ற அக்கதையில், அவர் உயிர்மை பதிப்பகத்தைப் பகடி செய்கிறார். சாரு நிவேதிதாவையோ எஸ்ராவையோ பகடி செய்கிறார். இவ்வளவு சொன்னால் போதாதா? இனி எல்லாரும் இக்கதையைப் படித்துவிடமாட்டீர்களா? கதையைவிட கதைக்குள்ளிருக்கும் கதை தரும் இன்பத்தை எது தந்துவிடமுடியும்? இதை நான் உணர்ந்தே சொல்கிறேன்!

இதே இதழில் ‘விளக்கு விருது’ அம்பைக்குத் தரப்பட்ட விழாவைப் பற்றி அழகிய சிருங்கர் எழுதியுள்ளார். விழா இன்னும் சிறப்பாக நடத்தப்படவேண்டும் என்கிற குமுறலை நான்கு வருடங்களுக்கு முன்பே அழகிய சிருங்கர் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தமுறை அழகிய ‘கொம்பர்’ சொல்வதோடு நிறுத்தாமல் ஒரு முட்டு முட்டியும்விட்டார். அதில் சில வரிகளை இங்கே வாசிக்கலாம்.

Share

Facebook comments:


9 comments

 1. Valaipookkal says:

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

 2. மண்குதிரை says:

  உங்கள் குதலை குறிப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  எஸ்ராவின் காவல் கோட்டம் விமர்சனம் என்னையும் வியப்பில் ஆழ்த்தியது. எஸ்ராவின் நடைதானா நம்பமுடியவில்லை ஆனால் சரியான விளக்கத்தொடுதான் விமர்சனம் செய்திருந்தார். 2 1/2 மணி நெர படத்துக்கே எவ்வளவு விமர்சனம் 1000 பக்கம் அல்லவா?

  தினமலர் நீங்கள் சொல்வது போல்தான் அப்போது அவர் பாளயங்கோட்டை பொதுக்கூட்டத்தில் இருந்தாராம். ஆனால் சீமான், அமீர் போன்றவர்களின் பேச்சு உண்மையிலே தீர்வுக்குப் பதிலாக மேலும் குழப்பத்தையே அளிக்கிறது. தேவை போர் நிறுத்தம்தான்.

  காலபைரவனின் சிறுகதை படிக்க ஆவலகாக இருக்கிறேன். முடிந்தால் லிங்க் கொடுங்கள்.

 3. ஹரன்பிரசன்னா says:

  //2 1/2 மணி நெர படத்துக்கே எவ்வளவு விமர்சனம் 1000 பக்கம் அல்லவா?//

  🙂

 4. மண்குதிரை says:

  அழகிய சிருங்கர் கருத்து சரிதான்.

  வைத்தீஸ்வரன் போன்ற நம் மூத்த இலக்கியவாதிக்கு செய்யும் மரியாதையை அழகிய சிருங்கர் சொல்வதுபோல் உரிய விதத்தில் கெளரவித்திருக்கலாம்.

  இப்போதெல்லாம் இலக்கிய கூட்டங்கள் சினிமா விழா போல் நடக்கின்றன பார்க்கிறோமே..

 5. நட்புடன் ஜமால் says:

  \\இப்போதெல்லாம் இலக்கிய கூட்டங்கள் சினிமா விழா போல் நடக்கின்றன பார்க்கிறோமே..\\

  நானும் கூவிக்கிறேன் …

 6. மணிகண்டன் says:

  பாவம் அந்த வெங்கடேசன் ! இவரு கிட்ட யாரு இந்த புக் கொடுத்தாங்கன்னு தேடி கண்டுபுடிச்சிகிட்டு இருப்பாரு !

  குதலைன்னா என்ன ?

 7. ஹரன்பிரசன்னா says:

  மணிகண்டன், குதலைன்னா என்னான்னு இந்த லிங்க்ல இருக்கு.

  http://nizhalkal.blogspot.com/2009/01/1.html

 8. நையாண்டி நைனா says:

  இங்கபார்ரா … பதில்லாம் போடுறாரு நம்ம ஹரன் பிரசன்னா… எப்பத்திலே இருந்து இந்த ஞானம்.

 9. […] மொழியா இது என செல்வேந்திரன், ஹரன் ப்ரசன்னா, யாழிசை லேகா உள்ளிட்ட சில […]

Leave a Reply to மண்குதிரை Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*