பந்த் என்னும் ஒருநாள் நாடகம்

கருணாநிதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தமிழினத் தலைவராக அவரை எப்போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். இதுவரை அவரே முத்தமிழ் அறிஞர் என்று புகழ்பாடிக்கொண்டிருந்தவர்கள், இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து அவரைத் தமிழினத் துரோகி ஆக்கியிருக்கிறார்கள். வலைப்பதிவுகளில் தொடர்ந்து அவரது முகமூடியைப் பதிவர்கள் கிழித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஜராசந்தனின் பிளக்கப்பட்ட தொடைகள் மீண்டும் மீண்டும் ஒட்டுவதுபோல, அவரும் ஏதேனும் ஒரு முகமூடியுடன் வந்துகொண்டே இருக்கிறார். ஒருமுறை பிரபாகரன் இஸ் மை பிரண்டாக. இன்னொருதடவை பிரபாகரன் தீவிரவாதி அல்ல, அவரது இயக்கத்தில் சில தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என. முகமூடிளையெல்லாம் யாரோ கிழித்துவிடுவதாலும், தானே கிழித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுவதாலும், எக்காலத்துக்கும் பொருத்தமான, கிழியாத, தேர்ந்த முகமூடி ஒன்றையும் தேடிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த பந்த் என்னும் முகமூடி. ஒருநாள் தொடருக்கான வேடம். சென்ற முறை யோசிக்காமல், பந்த் என்று அறிவித்துவிட்டு, கோட்டைக்கு ஓடோடிச் சென்று கையெழுத்துப் போட்டது போலில்லாமல், கொஞ்சம் யோசனை செய்த பின் அறிவித்திருக்கிறார். இஷ்டப்பட்டவங்க வேலைக்கு வாங்கடே என்னும் ரீதியான அறிவிப்பு. சென்றமுறை பந்த் அறிவிப்பை அரசே வெளியிட்டது, பேருந்துகள் ஓடாது என்றெல்லாம் செய்திகள் நாளிதழ்களில் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் எப்படியோ நீதிமன்றத்தில் மாற்றிப் பேசி தப்பித்துவிட்டார்கள். கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததா எனத் தெரியவில்லை. இந்தமுறையும் நீதிமன்றம் அப்படிச் செயல்படுமா எனத் தெரியாது என்பதனால், கருணாநிதியே கொஞ்சம் கவனம் எடுத்துக்கொண்டுவிட்டார்.

பேருந்துகள் ஓடாது என்கிற அறிவிப்பெல்லாம் இல்லை. ஆனால் இன்று சென்னையில் (மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை) எந்தப் பேருந்தும் ஓடவில்லை. சன் தொலைக்காட்சியிலும், கலைஞர் தொலைக்காட்சியிலும், மக்கள் யாரும் பயணத்துக்கு வராததால், பேருந்து ஓடவில்லை என்று செய்தி ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது ஓர் அரசு நினைத்தால், ஓர் அரசியல் கட்சி நினைத்தால், நீதி என்பது அதன் கையிலிருக்கும் சப்பாத்தி மாவு மட்டுமே. அதை எப்படியும் பிணைந்துவிடலாம். பேருந்துக்கு மக்கள் வரவில்லை என்கிற செய்தியை ஒளிபரப்பும் படித்தவனெல்லாம் ‘ஐயோ ஐயோ என்று போவானா’ எனத் தெரியவில்லை. மற்ற கட்சியினர் சென்னையில் திமுகவினர் மட்டுமே உண்டு என்கிற உண்மையைக் கண்டுகொண்டிருப்பார்கள்.

ஓர் ஆளும்கட்சி எக்காரணம் கொண்டும் பந்த் அறிவிக்கக்கூடாது என்று தெளிவான சட்டத்தை அரசு இயற்றவேண்டும். ஒரு தனிப்பட்ட கட்சித் தலைவராக பந்தை ஆதரிப்பேன் என்றெல்லாம் ஓர் ஆளும் கட்சித் தலைவர் ஜல்லி அடிக்கக்கூடாது. பொது மக்கள் எவ்வித சிக்கலுமின்றி பயணம் செய்வதை உறுதிப்படுத்துவது ஆளும்கட்சியின் கடமை என்பதை ஆளும் கட்சி உணரவேண்டும். எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த உரிமை உண்டு. ஆனால் ஆளும்கட்சி அந்த பந்த்தைத் தோற்கடிப்பதையே தனது முதல் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

ஒரு பந்தினால் மக்கள் அடையும் இன்னலுக்கு யார் பதில் சொல்வார்கள்? பந்த் அறிவித்த தினம் ஒரு முகூர்த்த தினமாக இருந்து, அன்று திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இருந்திருந்தால், அந்தக் குடும்பங்கள் அதை எப்படி சமாளிக்கும்? திடீரென்று ஒரு நாள் முன்பு பந்த் அறிவித்தால், அலுவலகங்கள் அதை எப்படி எதிர்கொள்ளமுடியும் என்கிற அடிப்படை அறிவுகூட ஓர் அரசுக்கு இருக்காதா? குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது அரசியல்வாதிகளின் வேலை. கருணாநிதி தான் குழம்பிப் போய் எதையாவது பிடிக்கவேண்டுமே என்று அலைந்துகொண்டிருக்கிறார்.

இதே வேலை நிறுத்தம் ஒரு மாதத்துக்கு முன்பு வந்திருந்தால் வைகோவும் ராமதாஸும் பச்சை விளக்கு காண்பித்திருப்பார்கள். இன்று எல்லா எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக கருணாநிதியின் பந்த் அறிவிப்பைப் புறக்கணித்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியலே அன்றி, ஈழத் தமிழர் பிரச்சினையின் மீதான உண்மையான அக்கறை அல்ல. ஜெயலலிதா போராளி என்கிறார். பிரபாகரனுக்கே நெஞ்சு வலி வந்திருக்கும். பாரதம் என்றும், இந்தியத்துவம் என்றும் இறையாண்மை என்றும் பேசி வந்த பிஜேபி, தமிழர்கள் ஹிந்துக்கள் என்கிற அதிபயங்கர உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது. இனிமேல் என்ன என்ன ஜாதி எனக் கண்டுபிடிப்பார்களா எனத் தெரியவில்லை. வைகோவும் ராமதாஸும் கூட்டணி என்றால் கொள்கை வேறுபாடு இருப்பது இயல்பு என்கிற, இதுவரை வேறு யாரும் முன்வைக்காத புதிய சிந்தாத்தத்தை விளக்கிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸுக்கு தான் ஏன் கருணாநிதிக்கு ஓட்டு கேட்கிறோம் என்று இன்னும் புரிபடவில்லை. கூட்டத்தில் பக்கத்தில் ஆடும் குழந்தையைப் பார்த்து, கையையும் காலையும் தானே ஆட்டும் குழந்தை போல, கூட்டத்தோடு ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல அலசு அலசென்று அலசியவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஓர் ஈழத் தமிழன் நினைக்கக்கூடும், இவங்க கூத்துக்கு சாகறதே மேல் என்று. அவருக்கு என் அனுதாபங்கள்.

Share

Comments Closed