குதலைக் குறிப்புகள் – 8 (குழந்தைப் பேறின்மை என்னும் பெரும்பூதம்)

‘அவன் அரண்டு போய் உட்கார்ந்திருந்தான். அவனது நடுமண்டையில் யாரோ நச்சென்று கத்தியால் குத்தியதைப் போன்றிருந்தது. அனிச்சையாகத் தலையைத் தடவிக்கொண்டான். எனக்கு ஏன் இப்படி? இதற்கு வாய்ப்பே இல்லையே. என் குடும்பத்தில் யாருக்கும் இப்படி இல்லையே’ – கிழக்கு ஸ்டைலில் இப்படி ஆரம்பிக்கலாம். இரண்டு மூன்று வரிகளில் அத்தனையும் புலப்பட்டுவிடும். ஒவ்வொரு குடும்பத்திலும் துரத்திக்கொண்டிருக்கும் குழந்தைப் பேறின்மையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

பெரும்பாலான குடும்பங்களில் இந்தப் பேச்சை நாம் கேட்டிருப்போம். ‘ஒரு மாசம்தான் தள்ளிப் போச்சு. முதல் மாசமே உண்டாயிட்டா.’ இப்படி நிகழாத வீட்டில் நிச்சயம் ‘நம்ப குடும்பத்துல இப்படி இல்லியே. புள்ளைகளுக்கா பஞ்சம்’ என்று அடுக்குவதைக் கேட்டிருக்கலாம். ஒருவகையில் கல்யாணம் ஆன முதல் மாதத்தில் கருத்தரித்துவிடுவது வீரமாக இங்கே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ’ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்த்தென்ன’ என்பதெல்லாம் இப்படி உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் பொதுப்புத்தியை உருவாக்கும் திரைப்படங்களில் இக்கருத்துருவாக்கம் இருப்பதை இன்றும் பார்க்கலாம். தனியறை கொடுத்து, பழம் கொடுத்து, பால் கொடுத்து, நறுமணம் கொடுத்து நடக்கும் ‘இரவு’களுக்குப் பின்னரும் கருத்தரிக்காது. ஆனால் ஓடும் ரயிலில் ஒரு வில்லன் ஒரு பெண்ணைக் கற்பழிப்பான். அவள் கருத்தரித்துவிடுவாள். இத்தனைக்கும் கடுமையாகக் கத்தி ஆர்பாட்டம் செய்திருப்பாள் ஹீரோயின். இப்படி ஒரு தொடுதலில் கருத்தரிப்பதை ஒரு பெருமையாகவும் வீரமாகவும் ஆக்கி வைத்திருக்கிறது நம் சமூகம். யதார்த்தத்தில் இதில் ஒரு எருமையும் கிடையாது என்பதே உண்மை.

இப்படி உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்தில் பந்தாடப்படுபவர்கள் யார்? உயிரோசையில் எழுதிய கட்டுரையில் வாஸந்தி கேட்கிறார், ‘உடலுறவு என்பது குழந்தைப் பேறு என்னும் புனிதத்தை முன்னிறுத்தி என்றால் குழந்தைப் பேறில்லாத கணவனும் மனைவியும் உறவு கொள்வது புனிதமற்ற செயலா?’ என. (நினைவிலிருந்து சொல்கிறேன்.) வாஸந்தி எழுதிய கட்டுரை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவானது. இதன் பின்னணியில் குழந்தைப் பேற்றின் புனிதத்தன்மை என்னும் ஒரு பிரதியையும் நாம் வாசிக்கலாம். நம் சமூகம் குழந்தைப் பேறுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த முக்கியத்துவம் தவறு என்பதல்ல. ஆனால் அந்த முக்கியத்துவத்துக்கு எதிராக எழும் மனோபாவம் உண்டாக்கும் பதற்றமும், முத்திரையும் அதிக விலையைக் கேட்டுவிடுகின்றன.

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் (குழந்தைகளைப் பற்றிப் பேசிவிட்டு இக்கு’ர’லைச் சொல்லாவிட்டால் எவன் மதிப்பான்?); அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அழாவிய கூழ் – இரண்டிலும் வள்ளுவேறு சும்மா இருக்காமல் அதிகம் தம்மடித்துவிட்டார். பிடித்துக்கொண்டார்கள் கலாசார உருவாக்கிகள். தம் மக்கள் என்பது சும்மாவா. ஒரு அறிஞர் தம் மக்கள் என்பது பெற்ற மக்களை மட்டும் அல்ல, வளர்த்த மக்களையும் சேர்த்தே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். யாரும் காதுகொடுக்கவில்லை. தம் மக்கள், தம் மக்களேதான் என்று தம்மை அழுத்திவிட்டார்கள் நம்-தம் மக்கள்.

குழந்தைப் பேறுக்கும் ஆண்மைக்கும் (இதில் பெண்களின் நிலையும் கொடுமையானதே. ஆனால் நான் ஆண்களைப் பற்றி மட்டுமே பேசப்போகிறேன்!) நம் சமூகம் கொடுத்திருக்கும் மதிப்பு கொஞ்சம் அதீதமானது. ஆண்மையும் வீரமும் ஒன்றல்ல. இங்கே வீரம் எப்போதும் ஆண்மையுடன் சம்பந்தப்படுத்தியே பார்க்கப்பட்டுள்ளது. ஒருவகையில் இது உலகம் முழுக்கவும் இப்படித்தான் இருக்கிறது.

நான் பதினேழு வயதாகும்போது குழந்தைப் பேறு பற்றிய பல்வேறு குழப்பத்திலும் பயத்திலும் இருந்தேன். நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கொண்டிருக்கும்போது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சீனியர் நண்பர் இன்னொரு நண்பரைப் பார்த்து ‘காச அமுக்காதல, சிவன் சொத்து குல நாசம் அப்புறம் புள்ள பொறக்காது’ என்றார். அதற்கு அந்த நண்பர் ‘திருடாட்டியும் குழந்தைப் பொறக்கும்னு எனக்கு நம்பிக்கையில்லை’ என்றார். என்னைப் போலவே இப்பயம் எல்லாருக்குமே இருக்கிறது என்பதை நினைத்துக்கொண்டேன். இப்பயம் எனக்கு வந்த வயது பதினேழு. குழந்தை பெறாவிட்டால் எழும் ஒருவித பயத்தை எனது பதினேழு வயதில் நான் மனத்துக்குள் வைத்திருந்தேன்!

இதில் கல்யாணம் ஆன ஒன்றிரண்டு மாதங்கள் காமத்தின் பிடியில் காலம் கழிந்துவிடும்போது எல்லாமே இன்பமயம்தான். இரண்டு மாதங்கள் கழியும் நிலையில் ஒவ்வொரு வீட்டிலிருந்து கேள்விகள் வரத்தொடங்கும், என்ன விசேஷமா என்று. இந்த ‘என்ன விசேஷமா, சும்மாதான் இருக்காளா’ என்கிற கேள்விகள் எழுப்பும் விநோதமான எண்ணங்களைச் சொல்லில் வடிக்கமுடியாது. இப்படியே இன்னும் நான்கைந்து மாதங்கள் சென்றால், ஒருவிதமான உளப்பிரச்சினையும் உள்ளூர அரிக்கத் தொடங்கும்.

நமக்குப் பின்பு கல்யாணம் ஆன யாரேனும் ஒருவருக்கு ஒரு மாதத்திலெல்லாம் கருத்தரிப்பு நிகழ்ந்துவிட்டால், இந்த மனம் அடையும் உணர்வைச் சொல்லமுடியாது. அது சந்தோஷமா, கையாலாகாதத்தனமா, கோபமா, பொறாமையா – எதுவென்றே சொல்லமுடியாது. அதுவும் ஒரே வீட்டில் இது நடந்துவிட்டால் வரும் நெருக்கடி இன்னும் அதிகமானது. நெருக்கடி நெருக்கி அடி என்ற பஜனையெல்லாம் சுத்தமாக எடுபடாது.

இதைத் தவிர்க்க ஒருவகையில் நாம்தான் தயாராக இருக்கவேண்டும். குழந்தை என்பது நிச்சயம் தேவையான ஒன்றே. குழந்தையின் மூலம் நாம் அடையும் சந்தோஷமும் பெருமையும் சந்தேகமேயில்லாமல் மேன்மையானதே. ஆனால், நாம் நம் மனதை கொஞ்சம் பக்குவப்படுத்தவும் பழகிக்கொள்ளவேண்டும். என் கல்யாணத்துக்கு முன்பே, நமக்குக் குழந்தை இல்லையென்றால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். (ஒரு குழந்தை பிறந்தாலும் இன்னொரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். இதில் நிகழ்ந்த பிரச்சினைகள் பெரிய கதை!) இதனை எல்லாருமே ஒரு முடிவாகக் கொள்ளலாம். என் நெருங்கிய சொந்தக்காரருக்கு குழந்தை இல்லை. எத்தனையோ பேசிப் பார்த்தும் அவரை ஒரு குழந்தையை தத்தெடுக்க சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. கேட்டால் விதவிதமான காரணங்கள் சொல்லுவார். ‘நம்மால ஒழுங்கா வளர்க்க முடியலைன்னா’ என்பார். உங்களுக்கே ஒரு குழந்தை பிறந்தால் எப்படி வளர்ப்பீர்க்ள் என்றால், அது நம்ம குழந்தைல என்பார். இன்னொரு சமயம் ‘நீங்கள்லாம் பின்னாடி அந்தக்க் குழந்தையை ஒதுக்கிட்டீங்கன்னா’ என்று பிரச்சினையை நம் பக்கம் திருப்புவார். கடைசியில் அவருக்கு கிட்டத்தட்ட 50 வயது ஆகியும்விட்டது. இப்போது குழந்தையைத் தத்து எடுத்தாலும் சரியாக வளர்க்கமுடியாது என்று பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.

இன்னும் சிலர் சொல்வார்கள், ‘எனக்குத் தெரிஞ்ச ஒருத்திக்கு 12 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு’ என்று. இதன் சதவீதம் எவ்வளவு என்று யோசிக்க மறுப்பார்கள். இன்னும் சிலர் குழந்தைக்காக லட்சம் லட்சமாகச் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு குழந்தையைத் தத்து எடுப்பதைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். இது வெறும் சாத்தான் வேதும் ஓதமல்ல. நான் இரண்டாவது குழந்தையைத் தத்து எடுக்கலாம் எனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் வீட்டில் இதற்கு சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் தோல்விதான். வீட்டில் என்றால், என் மனைவியல்ல. அவளுக்கு நான் சொல்லும் எதுவும் சம்மதமே. ஆனால் என் அம்மாவை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. அப்படி செஞ்சா நான் வீட்ல இருக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நேற்று பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் திடீரென்று சொன்னார், அவரது மகன் தத்துப் பையன் என்று. ஆச்சரியமாக இருந்தது. அவருக்குப் பிறந்த ஒரு பெண் உண்டு. இரண்டாவதாக ஒரு பையனைத் தத்தெடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு. இப்போது என் வீட்டில் நிகழந்தது போலவே அங்கேயும் பிரச்சினை. ஆனால் நண்பர் உறுதியாக இருந்துவிட்டார். குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரும்போது, மிகவும் ஆர்தடக்ஸான பாட்டி சொன்னதாம், ‘படியைத் தாண்டி ஆத்துக்கு வந்துடுச்சோன்னா இனிமே நம்ம கோந்தடா’ என்று. ஒரு சிறுகதையின் உன்னதமான உச்சகட்டத்தை வாசித்ததுபோலக் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘என் பொண்ணையும் இப்படி செஞ்சிருக்கலாம்’ என்று ஜெயகாந்தனின் அம்மா கதாபாத்திரம் சொல்வதுபோல, ‘என் அம்மாவும் இப்படி ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்’ என்று தோன்றாமல் இல்லை.

குழந்தையை இப்படித் தத்து எடுப்பது என்பது மோசமானதோ, ஒத்துவராததோ அல்ல. ஒரு குழந்தையின் கள்ளமற்ற சிரிப்பு உண்மையான மனத்தை எளிதில் கரைத்துவிடக்கூடியதுதான் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் இதனை எப்படி என் உறவினர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் தெரியவில்லை. எனக்காவது முழங்காலில் பசி. என் நண்பன் ஒருவன் வீட்டில் மூன்று அண்ணன் தம்பிகள். அவர்களுக்கு சித்தி பையன்கள் மூன்று பேர். மொத்தம் ஆறு அண்ணன் தம்பிகள் எனச் சொல்லலாம். ஆறு பேருக்கும் பிள்ளையில்லை. ஆறு பேரும் இதுவரை ஒரு குழந்தையைத் தத்து எடுப்பது பற்றி யோசிக்கவில்லை. தத்து எடுப்பது மட்டுமல்ல, முன்னேறிய அறிவியல் உலகத்தில் இருக்கும் எந்த வித பயனையும் அவர்கள் விரும்பவில்லை. இயற்கையான கருத்தரிப்பு மூலம் பிறக்கும் பிள்ளை ஒன்றே நம் பிள்ளை என்கிற மனோபாவம் அவர்கள் குடும்பம் முழுதும் பரவிக் கிடக்கிறது. மிக நெருங்கிய நண்பர்களிடத்தில் சொல்லிப் பார்க்கலாம். மிக நெருங்கிய உறவினரிடத்தில் சொல்லிப் பார்க்கலாம். மற்றவர்களிடம் இதைச் சொல்லமுடியாது. எனக்குள்ளே பேசிக்கொள்ளவேண்டியதுதான் – இப்படி.

சில ப்ரிஸ்கிரிப்ஷன்கள்:

01. கல்யாணம் ஆன தம்பதிகள் யாரையேனும் பார்க்க நேர்ந்தால், அவர்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதங்களுக்கு மேல் இருந்தால், ஏதாவது விசேஷமா, ப்ளானிங்கா என்று கேட்காமல் இருக்கவேண்டும்.

02. இதே விஷயத்தை நம் வீட்டில் இறைவன் படைத்து உலவவிட்டிருக்கும் கிழவிகளுக்கும் அத்தைகளுக்கும் சொல்லி வைக்கவேண்டும்.

03. நல்ல டாக்டரைப் பார்க்கலாமே என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பேசாமல் இருக்கவேண்டும். நிச்சயம் நல்ல டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று அவர்களுக்கே தெரிந்திருக்கும்.

04. நீங்க ஏன் தத்தெடுக்கக்கூடாது என்கிற அட்வைஸெல்லாம் தேவையில்லை. தத்து எடுத்து வளர்ப்பது என்பது கடையில் காய்கறி வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு வருவது போன்றதல்ல. நிறைய உள்ளங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

05. குழந்தைப் பேறின்மை என்பது ஒரு பெரிய விஷயமல்ல என்கிற ஒரு பொதுவிவாதத்தைத் தொடர்ந்து நிகழ்த்தலாம். பெரிய பதற்றத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு இது இருக்க உதவும்.

06. ஸ்பெர்ம் டெஸ்ட் பண்ணியா, கஷ்டம்ல, எத்தனை கவுண்ட் இருக்கு என்றெல்லாம் படம் போடாமல் இருக்கவேண்டும்.

Share

Facebook comments:


6 comments

 1. nchokkan says:

  ஹரன் பிரசன்னா,

  ரொம்பவும் ரசித்துப் படித்த பதிவு – ஒவ்வொரு வரியும் கச்சிதமாக விழுந்திருக்கிறது, நக்கல் அனைத்தும் (’கிழக்கு’, வள்ளுவரின் ‘தம்’ உள்பட) பிரமாதம் – நன்றி & வாழ்த்துகள் 🙂

  //நான் பதினேழு வயதாகும்போது குழந்தைப் பேறு பற்றிய பல்வேறு குழப்பத்திலும் பயத்திலும் இருந்தேன்//

  கிட்டத்தட்ட அதே வயதில் எனக்கு வேறொரு குழப்பம் / பயம் ஊட்டப்பட்டது – உலக அளவில், ஒரு குறிப்பிட்ட வருடத்துக்குப்பிறகு பிறந்த ஆண்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வியாதி வந்துவிட்டது, அவர்களுக்கெல்லாம் வருங்காலத்தில் குழந்தையே பிறக்காது என்றார்கள்.

  அந்த வதந்திபற்றிய முழுத் தகவல்கள்(என்ன ஓர் அபத்தமான வாசகம்!) இப்போது நினைவில்லை, ஆனால் அப்போதைய மனோநிலையில் அதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. ஆகவே, எனக்குப்பின் பிறந்த யாராவது திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்கிறார்களா என்று பல வருடங்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

  நல்லவேளை, நான் அதிகக் காலம் காத்திருக்க நேரவில்லை, என்னோடு படித்துப் பாதியில் 'school dropout' ஆன ஒருவன் 19 வயதில் திருமணம் செய்துகொண்டு உடனடிக் குழந்தை ஒன்றைப் பெற்று அந்த வதந்தியைப் பொய்யாக்கினான்!

  இப்போது யோசித்தால் அசட்டுத்தனமாக இருக்கிறது. ஆனால் சமூகத்தின் அபத்த க்ளிஷேக்களில் முதலில் சிக்குவது விடலைப் பையன்கள்தானே?

  //நான் இரண்டாவது குழந்தையைத் தத்து எடுக்கலாம் எனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் வீட்டில் இதற்கு சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் தோல்விதான்//

  இங்கேயும் அதே கதைதான். ஆனால் விடுவதாக இல்லை, நாலு வருஷம் இடைவெளி விட்டு இன்னொரு ’தத்து’ முயற்சி செய்யப்போகிறேன் 😉

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

 2. குப்பன்_யாஹூ says:

  நல்ல பதிவு.

  மேலாண்மையில் பீட்டர் ட்ரக்கர் ஒரு கோட்பாடு சொல்வார். ஒரு சிறந்த மேலாளர், நிர்வாகி, மனிதன் மற்றவர்களிடம் உள்ள நிறைகளை தான் முதலில் பார்க்க வேண்டும், அந்த நிறைகளை எப்படி பயன் படுத்துவது என்று சிந்திக்க வேண்டும், அதை விடுத்து ஒருவரிடம் உள்ள குறைகளை மட்டும் பார்ப்பவன் ஒரு சிறந்த மனிதன் இல்லை என்று.

  அது போலத் தான் இங்கு., நம் சமூகத்தில் ஒரு தம்பதியினரை பார்க்கும் பொது அவர்கள் பார்க்கும் வேலை, வீடு, கார், புத்தகங்கள் ,போன்றவை பற்றி பாராட்டாமல் இல்லாத ஒன்றான குழந்தை பற்றி தான் விசாரிப்பார்.

  இதில் படிக்காத கிராமத்து மக்கள் என்று இல்லை, படித்த நகர்த்து மக்களும் குழந்தை இல்லாத தம்பதியினரிடம் இந்த கேள்வியை கேட்டு அவர்களை புண் படுத்தி பார்ப்பதில் மகிழ்கின்றனர்.

  இப்படி கேட்கும் நபர்கள், அந்த தம்பதியினர்க்கு குழந்தை பிறந்த உடன் அதை பற்றி ஒன்றுமே விசாரிக்க மாட்டார்கள், அடுத்து விசாரிப்பது உன் பய்யன் ஏன் அபகஸ் போக வில்லை, அவன் ஏன் முதல் ராங் எடுக்க வில்லை என்பது.

  இங்கு கவலைகளும் ஓய்வதில்லை, கேள்விகளும் ஓய்வதில்லை, போட்டிகளும் ஓய்
  வதில்லை, பொறாமைகளும் ஓய்வதில்லை.

 3. ramesh says:

  ரசிக்கதக்க அருமையான பதிவு…நீங்களாவது பரவில்லை…..அதே 17 வயதில் நான் பரம்பரையாய் மருத்துவம் செய்யும் போலி மருத்துவனிடம் மாட்டிக்கொண்டேன் ….பின் மீண்டு வந்தது தனிக் கதை…திருமணதிற்கு பின்பு ஒரு குழந்தையை தத்தெடுப்பது என்று என்னுடைய 20 வயத்னிலே தீர்மானித்துவிட்டேன்….

 4. ரா.கிரிதரன் says:

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு நல்லதொரு பதிவு பிரசன்னா!

  என் பனிரெண்டாம் வயதில் தொப்புள் வழி குழந்தை பிறக்குமென யாரோ சொல்ல, பனியனை கழட்டும்போதெல்லாம் தொப்புளிலிருந்து வரும் நூலை பயத்துடனே நீக்கியிருக்கேன்..ரொம்ப காலமாச்சு அது புரிந்து, மற்றதெல்லாம் தெளிய!!

 5. மதன் says:

  மிகவும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்!

 6. ஜடாயு says:

  நல்ல பதிவு, பிரசன்னா.

  // குழந்தைப் பேறின்மை என்பது ஒரு பெரிய விஷயமல்ல என்கிற ஒரு பொதுவிவாதத்தைத் தொடர்ந்து நிகழ்த்தலாம். //

  கர்மவினை, மறுபிறவி, புண்ணியம் பாவம் போன்ற கருத்தாக்கங்கள் தத்துவ அளவில் முழுதாகப் புரிந்துகொள்ளப் படாமல் நடைமுறையில் பலவிதமான அச்சங்களுக்கும், அவதூறுகளுக்கும் ஆட்படுத்தப் பட்டிருக்கும் சமூகம் நம்முடையது.

  பொதுத் தளத்தில் இந்த விஷயம் பரவலாகப் பேசப் படவேண்டும். குழந்தைப் பேறு இயல்பானது போலவே குழந்தைப் பேறின்மை என்பதும் இயல்பானதே என்பது புரியவைக்கப் படவேண்டும்..

  நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி – என்ற கண்ணதாசன் கவிதை வரிகளின் அழகு புரியவேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*