அங்காடித் தெரு – நாம் வாழும் தெரு

வெகு சிலமுறை நான் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன். எல்லாம் நம்ம ஊருப் பசங்க என்பதைக் கேட்டு, பெருமையுடன் காணச் சென்ற எனக்கு அங்கே முதலில் தோன்றியது குழந்தைத் தொழிலாளர் சட்டம் இருக்கிறதா என்பதுதான். பின்னர் அதுவே பழகிவிட்டது. ஒருதடவை ஒரு பையனிடம் என்னப்பா வயசு என்ற கேட்டபோது பதினாறு என்று சொல்லிவிட்டு, உடனே சட்டென்று மாற்றி பதினேழு என்று சொன்னான். ஆனால் அவன் வயது உண்மையில் 14வது இருக்குமா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பதினாறுன்னு சொன்னாலும் பதினேழுன்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதான் என்றேன். அந்தப் பையன்களை நினைக்கும்போது பாவமாக இருக்கும். எனக்குத் தோன்றும் பாவம் வெறும் ஒரு வரிப் பாவம். ஆனால் வசந்தபாலன் இவர்களுக்குப் பின்னே இருக்கும் உலகத்தையே காட்டிவிட்டார். சென்னையில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் இந்தப் படம் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பாதிக்கும். அடுத்த முறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்துக்குச் செல்பவர்களது எண்ணம், பார்வையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்கும். இந்தப் பசங்களோட கஸ்டமர் சர்வீஸ் மோசம் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா எனக்கூடத் தெரியவில்லை.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் களமும் ரெங்கநாதன் தெருவும் ஒரு மிகப்பெரிய வில்லனைப் போலத் தோற்றம் அளிக்க வைக்கும் முயற்சியில் வசந்தபாலன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் சிரிப்பில் தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் செந்தில் முருகன் ஸ்டோர்ஸால் விழுங்கப் படுகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், காமம், கும்மாளம் என எல்லாவற்றையும் இத்திரைப்படம் சிறப்பாக முன்வைக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தில் நமக்குத் தெரியாத பலவற்றை நாம் பார்த்ததுபோல, இத்திரைப் படத்தில் இது போன்ற இளைஞர்களுக்கு நடக்கும் நமக்குத் தெரியாத பல்வேறு காட்சிகள் நம் கண்முன் விரிந்து நம்மைப் பதற வைக்கின்றன.

ஒவ்வொரு சிறிய காட்சியையும் முக்கியக் கதையோடு இணைப்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் ஆர்வம் பழைய உத்தி. சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தன்னம்பிக்கையைக் காட்டுவதற்கோ, அல்லது பின்னர் கதாநாயகன் நாயகிக்கு உதவுவதற்கோ சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைகள் நிறையவே இருக்கின்றன. படத்தின் பின்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம். தேவையற்ற, செயற்கைத்தனம் கூடிய வசனங்கள் உண்டு. படம் முடிந்த பின்பு மீண்டும் இழுக்கப்படும் திரைப்பட உச்சக்கட்டக் காட்சி உண்டு. உச்சக்காட்சி என்ற ஒன்றில்லாமல் தமிழர்களுக்கு முழுத்திரைப்படம் பார்த்த உணர்வு வராது என்பதாலோ என்னவோ வசந்தபாலன் இப்படி செய்திருக்கவேண்டும். அதிலும் நல்ல ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். படத்தோடு தொடர்பே இல்லாத ஒரு கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டு, உச்சக்காட்சிக்கு முன்னரே வந்துவிடும் உச்சக்காட்சி மனோபாவத்தைக் குறைத்துவிட்டார்.

கதாநாயகியின் தங்கை பெரியவளாகும் கதையெல்லாம் சுற்றி அடிக்கிறது. இக்காட்சி இல்லாமலேயே, கதாநாயகி கதாநயாகனை மீண்டும் எற்பதற்கான சரியான முகாந்திரங்கள் உள்ளன. ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் அசத்துகின்றன. கதாநாயகன் கதாநாயகியிடன் மிகக் கோபமாகப் பேசும் வசனமே போதுமானது கதாநாயகி மனம் மாறுவதற்கு. கதாநாயகியின் தங்கை வரும் காட்சிகளெல்லாம் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதிலும் அந்தப் பெண் இருக்கும் வீடு – தமிழ்த் திரையுலகில் அது யார் வீடாக இருக்கமுடியும்? அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். நாய் கட்டிப்போட்டிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் தட்டுமுட்டுச் சாமான்களோடு அவள் கிடக்கிறாள். ஆமாம், அது பிராமண வீடு.

பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் கர்ண கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்றால் நம்பிக்கைத் துரோகம் என்று சொல்லலாம். இத்தனை ஆழமான, உணர்வு ரீதியான படத்துக்கு பின்னணி இசை செய்யும் மாபாதகத்தை மன்னிக்கவே முடியாது. ஒரு காட்சி தரவேண்டிய சோகத்தை, பதற்றத்தை இசை வழியாகத் தந்துவிட நினைத்து இசையமைப்பாளர்(கள்) செய்யும் குரங்குச் சேட்டைகளை என்னவென்று சொல்ல. தலையெழுத்து. இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் புருவத்தை இப்படி நெறிக்கவேண்டியதில்லை. கதாநாயகி – அசத்தல். இவர் கற்றது தமிழ் படத்தில் நடித்தவர் என நினைக்கிறேன். அந்தப் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசுரப் பாய்ச்சல். சிரிப்பு, வெட்கம், கோபம் எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் முகத்தில் கொண்டு வருகிறார். இதுவே படத்தின் பலம். என்னைக் கவர்ந்த விடுகதை நீனா, மின்சாரக் கனவு கஜோல், சிதம்பரத்தில் அப்பாசாமி நவ்யா நாயர் வரிசையில் அங்காடித் தெரு அஞ்சலியும் சேர்ந்துகொள்கிறார்.

நடிகர்களைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும் குணச்சித்திர தொழில்முறை நடிகர்களே அசரும் வண்ணம் நடிக்கிறார்கள். அவள் பெயர் தமிழரசி படத்தில் தியடோர் பாஸ்கரனும் வீரச்சந்தானும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தமுறை பழ. கருப்பையா. இப்படத்தில் அண்ணாச்சியாக வந்து அட போட வைக்கிறார்.

இன்னொரு பலம் ஜெயமோகன். பல வசனங்கள் மிகக்கூர்மையாக உள்ளே இறங்குகின்றன – காட்சியோடு. காட்சியோடு இறங்கும் வசனம் என்பதுதான் முக்கியம். காட்சி உக்கிரமாக இல்லாமல் வசனம் மட்டும் முழித்துக்கொண்டு நிற்கும் படங்கள் பாலசந்தர்த்தனப் படங்களாக எஞ்சிவிடும். அந்த அபாயம் இப்படத்துக்கு நேரவில்லை. எத்தனை ஆழமாக எழுதினாலும் எப்போதும் ஜெயமோகனுக்குள்ளே விழித்திருக்கும் பெரும் நகைச்சுவையாளர் ஒட்டுமொத்த படத்தையே ஹைஜாக் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டுன். நான் கடவுள் படத்தில் எப்படி இதே நகைச்சுவையாளர் படத்தை வேறு தளத்துக்கு மாற்றினாரோ அப்படி இங்கேயும் மாற்றுகிறார். ஜெயமோகன் கதை வசனம் எழுதும் படத்தில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். ஒன்றிரண்டு இடங்களில் வரும் தேவையற்ற வசனங்கள், இயக்குநரால் மக்களின் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் நல்ல படம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் வெட்டித் தள்ளியிருந்தால் மிக நல்ல படமாக இருந்திருக்கும். விருதுத் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களைப் போலவே, இது போன்ற நல்ல திரைப்படங்களும் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் முக்கிய இடத்தைப் பெறும். சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரு முதலைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் என்ன உணர்வு அடைவார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இப்படம் இன்னும் பிடிக்கத் தொடங்குகிறது.

(இந்த விமர்சனத்தை இட்லிவடைக்கு அனுப்பியிருந்தேன். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாலும், இதை இதுவரை வெளியிடாததாலும் நானே வெளியிடுகிறேன். வழக்கம்போல இட்லிவடைக்கு நன்றி!)

Share

Comments Closed