நாதஸ்வரம் – மெகா தொடர்

தேர்தலில் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த மெகா தொடர் பற்றி எழுதுவது ஒருவித சந்தோஷத்தைத் தருகிறது.

சன் டிவியில் வரும் ஒரு உருப்படியான நாடகங்களுள் ஒன்று நாதஸ்வரம். இந்த ஒரு வரி போதும் இந்தப் பதிவில் இதனைப் பாராட்ட. இந்தப் பதிவில் எழுதப் போவது நாதஸ்வரம் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பற்றி.

திடீரென ஒரு நாள் அறிவிப்பார்கள், விளம்பர இடைவெளியில்லாமல் நாதஸ்வரம் என்று. வீட்டின் அத்தனை பெண்களும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது? இந்த எழவை விளம்பரத்தோடேயே போட்டுவிட்டுப் போய்விடலாமே!

இப்படிச் செய்து எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த நாதஸ்வரம் நேற்று திடீரென்று உக்கிரம் கொண்டுவிட்டது. வசனமே இல்லாமல் இசையில் மட்டுமே நாடகம் என்றார்கள். அப்போதே எனக்குக் கொஞ்சம் ஜெர்க் அடித்தது. நாதஸ்வரத்தில் மிக முக்கியமான பங்களிப்பே பாஸ்கர் சக்தியுடனதுதான். அது இல்லாமல் ஒரு நாள் நாடகமா என நினைத்தேன். நேற்று வந்தது.

தன் உடலின் எல்லாப் பாகங்களையும் நடிக்க வைத்தே தீரவேண்டும் என்ற பதைபதைப்பில் நடித்துக்கொண்டிக்கும் பூவிலங்கு மோகன் இன்னும் அதிகமாக நடித்தார். அதிலும் மௌலி இசையின் பின்னணியில் கடவுள் முன் கோபம் கொள்ளும் காட்சி அசல் கொடுமை. ஒட்டுமொத்த குடும்பமும் மாறி மாறி ஒப்பாரி வைக்க, அவர்களை மிஞ்சி இசை ஒப்பாரி வைத்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், முழுக்க முழுக்க அழுது தீர்க்கும் நாடக வரிசையில் இந்த நாடகமும் போய்ச் சேர்ந்துவிடும்.

இசை மட்டுமே என்று சொல்லிவிட்டதால் பின்னணி இசையமைப்பாளர் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். நாதஸ்வரம் என்ற பெயர் வேறு நாடகத்துக்கு. கேட்கவேண்டுமா, ஊதித் தள்ளிவிட்டார். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. வீணை தப்பித்தது என நினைக்கிறேன். ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்கும்.

திருமுருகனும் மலர் என்ற வேடத்தில் வரும் பெண்ணுக்கும் காதல் காட்சியில் ஒரு பாடல் ஒன்று வந்தது. அவ்வளவு மொக்கையான பாடல், மொக்கையான காட்சி அமைப்புகள். சேரனுக்குப் போட்டியாக முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கும் திருமுருகனுக்குக் காதல் காட்சி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் டியூனை இசையமைப்பாளர் திடீரென்று பின்னணிக் காட்சிகளில் கோத்து விடும்போது பகீர் என்றிருக்கிறது. நேற்று முழுவதும் அந்தப் பாடலின் இசையைப் போட்டு போட்டு நடுங்க வைத்துவிட்டார். தேவையா இந்தக் கொடுமை எல்லாம்?

ஒரு மெகா தொடருக்கு ஏன் இத்தனை மெனக்கெட்டு எழுதவேண்டும்?

இது ஓர் உருப்படியான நாடகம். கொஞ்சமாவது யதார்த்தம் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் நாடகம். (இதன் அர்த்தம் இந்த நாடகம் முழுக்க முழுக்க யதார்த்தமானது என்பதல்ல!) நடிகர்கள் தேர்வு உட்பட பலவற்றில் புதுமை. இதையெல்லாம் இந்த நாதஸ்வரம் டீம் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன்.

இனியும் இந்தக் கொடுமை தொடர்ந்தால் டாட்டா பைபை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

Share

Comments Closed