இடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள்

இன்று முதல் புதிய வலைத்தளத்தில். இதனை சாத்தியமாக்கிய பா.ராகவன், கணேஷ் சந்திராவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

புவியிலோரிடம் நாவலை படித்தேன். நீண்ட நாள்களாகவே நண்பர்கள் இதனைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாவலில் தொடப்பட்டிருக்கும் கருவைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான நாவல்தான். பாராவின் வாழ்நாள் பெஸ்ட் இந்த நாவல் என்பதே என் கருத்து. பிராமணர்களில் மிக மோசமாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, பிற ஜாதிகளுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டைச் சார்ந்து இந்நாவல் பேசுகிறது. அதிலும் நன்றாகப் படிப்பு வராத பிராமணர்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை இந்த நாவல் முக்கிய பேசுபொருளாக வைக்கிறது.

இனி நாவலை விட்டுவிடலாம். 🙂

இடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு உள்ள சில கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன். இடஒதுக்கீடு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் நிச்சயம் அவசியமானதே. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில்தான் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன.

இடஒதுக்கீடு சமூகநீதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது – என்கிறார்கள். இங்கே சமூக நீதி என்பதை நம் எளிமைக்காக ஜாதி என்று எடுத்துக்கொள்வோம். ஜாதியை ஒட்டியே இடஒதுக்கீடு அமைந்துள்ளது. ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிறக்கும் ஒருவர் அவர் பெறவேண்டிய சமூக நீதிக்காகவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. கச்சிதம். அதில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதில் எனக்குள்ள தார்மிகக் கேள்விகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நான் இதையும் ஏற்கிறேன். ஆண்டாண்டுகாலமாக அமுக்கப்பட்ட, அநீதி செய்யப்பட்ட ஒரு சமூகம் முன்னேறவேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு ஜாதியினருக்கும் (பிறப்பால் என்றே கொள்ளவும்) பொறுப்பு உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இதைச் செயல்படுத்தும்போது ஏன் பிராமணர்களில் (எனவே மேற்படுத்தப்பட்ட சாதிகளில்) உள்ள படிப்பறிவற்ற, அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைப் பலிகொடுக்கவேண்டும்? இதைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசாமலேயே இருக்கிறார்கள். பார்ப்பனீய முத்திரை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.

நான் இங்கே பிராமணர் என்று மட்டும் சொல்வது ஒரு வசதி கருதி மட்டுமே. இதனை ஒட்டுமொத்தமாக மேற்படுத்தப்பட்ட சாதி (ஃபார்வேர்ட் கிளாஸ்) என்றே கொள்ளலாம். எல்லா மேற்படுத்தப்பட்ட சாதிகளும், தங்கள் ஜாதி அடையாளத்தைக் கூடவே வைத்துக்கொண்டு, எப்படியோ ஒருவகையில் இடஒதுக்கீட்டை அனுபவித்துவிடமுடியும் என்கிறார்கள். இது உண்மை என்றாலும், இதைப் பற்றியும் எனக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. என்னுடையே ஒரே கேள்வி, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெறமுடியாத மேற்படுத்தப்பட்ட ஜாதியினரில் உள்ள, (ஒப்பீட்டளவில்) மோசமான கல்வி அறிவும் மோசமான பொருளாதாரப் பின்னணியையும் கொண்டவர்கள் பற்றி மட்டுமே.

உண்மையில் இங்கே சமூக நீதியை அடியொற்றி இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே இடஒதுக்கீடு அடிப்படையாகக் கொண்டிருப்பது சமூக வெறுப்பை. அதனால்தான் பிராமணர்களில் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்களின் கடந்த காலம் தரும் எரிச்சல். கடந்த காலம் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் விட்டுத்தான் ஆகவேண்டும். அதனைக் காரணம் காட்டி இன்றைய நிலையில் பிராமணர்களைப் (அல்லது மேற்படுத்தப்பட்ட ஜாதியினரை) போட்டு வாங்கவேண்டும் என்று நினைத்தால், அது அந்தக் காலத்தில் பிராமணர்கள் செய்துகொண்டிருந்த கேவலமான உயர்ஜாதி மனோபாவத்துக்கு ஈடான ஒன்றேதான் அன்றி வேறில்லை.

யாரோ ஒரு அறிஞர் சொன்னாராம், ஒரு பிராமணர் உயர்ந்தால் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார். இப்படியே பிராமண இனமே முன்னேறிவிடும், எனவே அவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களே இருக்கமுடியாது என்று. நல்ல அறிஞராகத்தான் இருக்கவேண்டும். சிற்றிதழ்களில் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள அறிஞராகவும் அவர் இருக்கக்கூடும். இதனையே மற்ற மேற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு அவர் சொல்லமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். உண்மையில் ஒரு பிராமணர் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார் என்பதெல்லாம் கற்பனை. எத்தனையோ கஞ்சிக்கு இல்லாத, கல்வி அறிவும் இல்லாத பிராமணர்களை எனக்குத் தெரியும். இதே நிலையில் உள்ள பல மேற்படுத்தப்பட்ட சாதியினரையும் எனக்குத் தெரியும். எனவே இதெல்லாம் ஒரு எஸ்கேபிஸம் அன்றி வேறில்லை.

40% வாங்கியவர் டாக்டராவார், 90% வாங்கியவர் டீ ஆத்தணும் போன்ற வரிகளில், முதலில் உள்ளதைக் கூட விட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒரு இந்தியக் கடமை. பின்னது? அது எப்பேற்பட்ட அநியாயம்? உண்மையில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதையும், இதில் உண்மையிலேயே பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி மறுக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள கல்வியறிவால் பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சமூக அநீதி நிகழ்ந்துவிடும்?

இதனைப் பற்றி எந்த ஊடகமும் பேசாது. ஏனென்றால் பார்ப்பனீய முத்திரை என்பது பின் தொடரும் நிழலின் குரல் போன்றது. என்றும் உங்களை விடாது. உண்மையில் பிராமணர்கள் உள்ளிட்ட, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெற இயலாத ஜாதிகளில் உள்ள, கல்வி அறிவு குறைந்த பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். I am happy to be convinced.

நான் பிராமணன் என்பதால் இதனைப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. நான் என்னை பிராமணனாக நினைக்கவில்லை. நான் பிராமணனாக இருக்கவும் இல்லை. மேலும், நான் பிராமணனாக இல்லாமல் இருப்பதற்கும், பிராமணர்கள் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டியதில்லை என்றும் நம்புகிறேன்.

Share

Facebook comments:


17 comments

 1. ramachandran bkr says:

  பற்றா குறையை பங்கு வைக்கும் போது இது தான் நடக்கும். இந்த இழு பறி இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் குறைந்த மதிப்பெண்கள் வாங்கி எந்த வகுப்பினரும் இப்போது மருத்துவ கல்லூரிக்கு போவதில்லை. ஒரு வேளை இன்னும் பல தனியார் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டால், இப்போது பொறிஇயல் போல ஆகி விடுமோ என்னமோ ?

  இன்று உள்ள கால கட்டத்தில், தொண்ணூறு ஏழு சத மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு கூட விரும்பும் பள்ளியில்/ கல்லூரியில் விரும்பும் பாடம் கிடப்பது இல்லை. உங்களது நிலைப்பாடு மிக தவறு.

  ஓன்று செய்யலாம், இட ஒதுக்கீட்டை ஒருவர் குறிப்பிட முறை தான் பயன் பெற முடியும் என்ற வரை முறையும், இரண்டாவது, முன்றாவது தலைமுறைக்கு அதனை விட குறைத்தும் வைக்கலாம். அப்போது தான் அடித்தட்டு மக்களும் பயன் பெறுவார்கள்.

 2. எம் ஜ் ஆர் ஆட்சியின் போது டிசம்பர் 1979ல் ஓ பி சி வகுப்பினரில் ஆண்டு வருமானம் 9000 த்து கீழே வருவோருக்கு தான் இட ஒதுக்கீட்டுப் பலன்கள் என வருமானத்தை முன் நிறுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டது ; பின்னர் அது அரசியல் காரணங்களுக்காக வாபஸ் வாங்கப்பட்டது. ஒருவேளை அந்த திட்டம் தொடரப்படிருக்குமேயானால் … பதிலை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்

 3. சோழன் says:

  ஹரன்,

  அழ்ந்த கருத்துக்கள். ஆனால், இங்கு சமூக நீதி என்பது, எந்த சமுகத்தில் அதிக ஓட்டு உள்ளதோ அதை அடிப்படையாக வைத்தே இருக்கிறது. அதுவும் இன்றி, இவர்கள் சொல்லும் கல்வி முறை வந்தே 200 வருடங்கள் கூட இருக்காது. அப்படி இருக்கையில் எந்த முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன், 500 வருடம் முன்பு ஒரு வன்னியனையோ அல்லது ஒரு முதலியாரையோ பொறியியல் படிப்பதை தடுத்தார்?

  trible மக்களை schedule tribale ஆக்கியது யார்? காடுகளை அழித்து டீ எஸ்டேட்டாக மாற்றி TRIBAL வாழ்வாதாரங்களை அழித்தது யார்?

  எல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

  • கண்ணன் says:

   சரியான கேள்வி; ஆனால் எந்த அறிஞ்ஞரும் நேரடியாக பதில் சொல்ல மாட்டார்.

   • poovannan says:

    ஐயா இட ஒதுக்கீடு என்று இருப்பதால் தான் இந்தியா ,தமிழகம் என்று உள்ளது.இல்லையென்றால் எல்லாரும் யாதவர் நாடு,வன்னியர் வூடு ,தேவர் காடு ,குஜ்ஜர் பிரதேஷ் ,மதிகா தேசம் வேண்டும் என்று போராடி கொண்டிருப்பர்.சனநாயகம் அனைவருக்கும் ஒரு வோட்டு வழங்கி அனைவரையும் சமமாக்கி விட்டது.ஊடகங்கள் அனைவர் உள்ளத்திலும் ஆசைகள்,கனவுகளை விதைக்கின்றன.சாமி கண்ணை குத்தி விடும்,நாம படிச்சா தெய்வ குத்தம் ,காதுல ஈயத்தை காச்சி ஊத்திடிவாங்க போன்ற நம்பிக்கைகள் சிதைந்து விட்டன.அனைவருக்கும் வாய்ப்பு வழங்க குறுக்கு வழி தான் இட ஒதுக்கீடு.
    தெலேங்கான,கோர்க்ஹாலாந்து,குகிலாந்து வேண்டும் என்ற போராட்டங்கள் எதற்காக .அவர்கள் மட்டும் இருந்தால் அனைத்து வாய்புகள் அவர்களுக்கே கிடைக்கும் என்பதால் தானே
    உத்தர் பிரதேசத்தில் பல தலைவர்களை தந்த உத்தர்க்ஹாந்து(பந்த்,திவாரி போன்ற)ஆட்சி முலாயம்,மாயாவதிஇடம் அரசியல் நகர்ந்ததும் தனி மாநிலம் வேண்டும் என்று போராடி உடனே பெறவில்லையா .

 4. poovannan says:

  முதலில் இடஒதுக்கீடு எனபது ஏழை மறுவாழ்வு/முன்னேற்ற திட்டம் அல்ல .அது பிரதிநிதித்துவம்.
  மகளிருக்கு இட ஒதுக்கீடு,சட்டசபை,நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு என்பதை புரிந்து கொண்டால் இட ஒதுக்கீட்டை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.ஆங்கிலோ இந்தியர் ஜெயித்து வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் அவர்களுக்கு கூட சட்டசபை பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு உண்டு
  நாகாலாந்து மாநிலத்தில் கல்லேக்டராக,மருத்துவராக ,பொறியாளராக மிஸ்ரா,iyer போன்றோர் இருப்பார்கள் நாகா மக்கள் கிளாஸ் 4 ஊழியர்களாக தான் இருப்பார்கள் என்றால் அவர்கள் தனி நாடு கேட்பதில் என்ன தவறு.
  உலகின் உயர்ந்த முக்கிய பதவியான ஐநா சபை தலைவர் பதவி கூட ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்டத்தில் இருந்து கண்டம் தாவி கொண்டிருக்கிறது.இந்த முறை ஆசியாவின் முறை.அவரை விட லட்சக்கணக்கான தகுதியானவர்கள் மற்ற கண்டங்களில் இருந்தாலும் போட்டி கூட கண்டத்தின் உள்ளே இருக்கும் நாடுகளுக்கு உள்ளே தான்
  ராணுவ வீரர்களின்,வாரிசுகளுக்கு,மாற்று திறநாளிகளுக்கு,மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் பிறந்தவர்க்கு,மாநிலத்தில் பிறந்த்தவர்க்கு என்று பல்வேறு இடஒதுக்கீடுகள் உண்டு.அதில் மிகவும் அதிகமானது மாநிலத்தில் பிறந்த/படித்த இட ஒதுக்கீடு தான்.இது அனைவருக்கும் பொதுவானது.தமிழகத்தில் பிறந்ததால் /நான்கு வருடம் படித்ததால் இங்கு பிறந்த முற்பட்ட வகுப்பு மாணவருக்கு வாய்ப்புள்ள இடங்கள் மற்ற மாநிலங்களை விட அதிகம்.நம்மிடம் முப்பத்தி ஏழு மருத்துவ கல்லூரிகள்.மொத்த இடங்கள் 4565 .வங்காளம் நம்மை விட சனத்தொகை அதிகம் உள்ள மாநிலம் முற்பட்ட வகுப்பு மக்களும் நம் மாநிலத்தை போல இரண்டு அல்லது மூன்று மடங்கு.அங்கு உள்ள கல்லூரிகள் 11 .மொத்த இடங்கள் 1355 .ஆந்திரா மத்திய அரசு நுழைவு தேர்வு மூலம் சேருபவர்களுக்கு இடம் அளிக்க மறுத்து மொத்த இடங்களையும் அங்கே பிறந்த/படிக்கும் மாணவர்களுக்கே இட ஒதுக்கீடு செய்து உள்ளது.இங்கு governor ஆட்சி இருந்த போது அலெக்சாண்டர் தமிழகத்தில் மத்திய அரசு நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர அனுமதி அளித்தார்.அப்போது திராவிட கட்சிகள் ஆட்சி இருந்திருந்தா l இது நடந்திருக்காது
  மணிப்பூரில் முதலிடம் பெறுபவர் பீகாரில் முதல் ஆயிரம் இடங்களில் வர மாட்டார்.பீகாரில் முதலிடம் பெறுபவர் கேரளாவில் முதல் ஆயிரத்தில் வர மாட்டார் .அதனால் அவர்கள் எல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்று அனைத்து சீட்டுகளையும் கேரளா மாணவர்களுக்கு கொடுத்து விடலாமா .மாநிலங்களுக்கு பதில் சாதியை போட்டு பாருங்கள் .இட ஒதுக்கீடு புரியும்
  முற்பட்ட வகுப்பில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீட்டை பாஸ்வனோ ,கலைஞரோ ,ராமதாசோ ,திருமாவோ எதிர்க்கவில்லை.உச்ச நீதிமன்றம் 1993 மண்டல் வழக்கில் முற்பட்ட வகுப்பில் ஏழைகளுக்கு நரசிம்ஹா ராவ் அரசால் கொண்டு வரப்பட்ட சதவீதத்தை தள்ளுபடி செய்தது.இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீற கூடாது என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லாத ஒன்றை தங்கள் சாதி பற்றால் நுழைத்தது.
  கலைஞர் 1989 ஆண்டு பட்டதாரி இல்லா வீட்டில் படித்த மாணவர்களுக்கு 5 உபரி மதிப்பெண்கள் அளிக்கும் சட்டம் கொண்டு வந்தார்.இதனால் சாதிகளை கடந்து அனைவரும் பலன் பெற்றனர்.இதனால் பலன் பெற்ற பல முற்பட்ட வகுப்பினரும் உண்டு.இதையும் கெடுத்தது நீதிமன்றங்கள்.
  அதே போல் கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 15 % இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.இதை ஜெயலலிதா 25 % ஆக்கினார்.இதையும் கெடுத்தது நீதிமன்றங்கள்.
  முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கு ஒதுக்கீடு என்பதற்கு எதிராக இருப்பது நீதிமன்றங்கள் தான்

 5. poovannan says:

  அடுத்து முற்பட்ட வகுப்பு ஏழைகள் அவர்களை போல உள்ள ஒதுக்கீடு உள்ள ஏழைகளை விட வாய்ப்புகள் அதிகம் பெற்றவர்கள் என்பதற்கான ஆதாரங்கள்
  நன்கு படிக்கும் கோவில் ஐயரின் மகன் மருத்துவராகவோ ,வங்கி அதிகாரியாகவோ ஆகிறான். படிப்பு ஏறவில்லை என்றால் கோவில் ஐயர் ஆகிறான்.இந்த வாய்ப்பு மற்ற எந்த சமூகத்திற்கும் கிடையாது.இருக்க இடம் .மதிப்பான உத்தியோகம் அவனுக்கு படிப்பு ஏறவில்லை என்றாலும் காத்திருக்கிறது.வருமானம் குறைவு என்றாலும் அவருக்கு தொடர்புகள் அதிகம்.அவர் மகன்,மகளை படிக்க வைக்க உதவி செய்பவர்கள் அதிகம்.பெரிய கோவில்களில் மடப்பள்ளி யில் மட்டுமே பல்லாயிரம் வேலை வாய்ப்பு உள்ளது.
  ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் rallies போய் பாருங்கள்.எத்தனை முற்பட்ட வகுப்பு சேர்ந்தவர்கள் பங்கு கொள்கிறார்கள் என்று.மேஸ்திரி,பெயிண்ட் அடிப்பவர்,சித்தாள்,ரிகஷா ஓட்டுபவர், என்று எந்த தொழிலிலாவது விரல் விட்டு என்ன கூடிய அளவிலாவது பிராமணர்கள் இருக்கிறார்களா.
  எங்கள் ஊரில் இருந்து தான் திருப்பதி கோவில் மடப்பள்ளிக்கு தலைமுறை தலை முறையாக வேலைக்கு செல்கிறார்கள்.அதில் நன்கு படித்தவர்கள் நல்ல வேளைகளில் உள்ளார்கள்.இப்போது ஊர் கோவிலில் கூட ஒரு வயதானவர் தான் இருக்கிறார்.அடுத்து வேலை செய்ய ஆள் கிடையாது.
  மடங்களின் மூலம் திடீரென்று பம்பாயில் பெரிய பதவியில் இருக்கும் மனிதர்களுக்கு உதவியாளனாக செல்வது மற்ற அனைத்து சமூகத்தவர்களை விட முற்பட்ட வகுப்பினருக்கு அதிகம்.
  கர்நாடக இசை கலைஞர்களுக்கு துணையாக வாழ்கையை ஓட்டும் வாய்ப்பு எந்த சமூகத்திற்கு கிடைக்கிறது.
  மாற்று திறநாளிகளுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு பணிகளில் முக்கால் வாசி இடங்கள் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தான் கிடைக்கிறது.மாநிலத்தில் அதில் உள் ஒதுக்கீடு இருப்பதால் அனைத்து சமூகத்தினரையும் பார்க்கலாம். இதை நான் குறையாக சொல்லவில்லை.அவர்களுக்கு இப்படி வாய்ப்பு இருக்கிறது,என்ன பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.மற்றவர்களுக்கு அது கிடையாது
  தனியார் துறையை எடுத்து கொள்ளுங்கள் முற்பட்ட வகுப்பினரால் நடத்தப்படும் நிறுவனங்களில் அதிக இடங்களில் அவர்கள் இனத்தை சேர்ந்தவர் தான் உள்ளனர்.

  • sthishvasan says:

   “”பெரிய கோவில்களில் மடப்பள்ளி யில் மட்டுமே பல்லாயிரம் வேலை வாய்ப்பு உள்ளது.””
   எந்த கோவிலில் ஐயா ?

 6. poovannan says:

  சமத்துவபுரத்தில் வீடு கட்டி கொடுக்கபடுவதில் முற்பட்ட வகுப்பினருக்கும் வீடுகள் உண்டு.அரசாங்கத்தின் அணைத்து திட்டங்களிலும் முற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் பயன் பெறலாம்.படித்த பெண்களுக்கு திருமண உதவி,நன்கு படிக்கும் மாணவருக்கு உதவி தொகை,குடும்பத்தின் முதல் பட்டதாரி என்றால் கல்லூரி வரை அனைத்து கட்டணங்களையும் அரசாங்கமே ஏற்று கொள்வது,சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் கிடைக்கும் உதவி தொகை (மணப்பெண் அல்லது மணமகன் sc /st ஆக இருக்க வேண்டும் )போன்ற எல்லா திட்டங்களும் சாதிகளை கடந்தது.மருத்துவ காப்பீடு திட்டம்,இலவச அரிசி ,இலவசங்கள் அனைத்து சாதி ஏழைகளுக்கும் தான்.
  சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.அதில் அதில் oc -sc bc -sc mbc -sc ஐ விட சிறந்தது என்று சம்பத் என்ற உயர் நீதிமன்ற வக்கீல் தீர்ப்பு கூற முக்கால் வாசி இடங்கள் முதல் பிரிவினருக்கே சில ஆண்டுகளுக்கு கிடைத்தது.அதையும் உச்ச நீதிமன்றம் அடித்தது
  பல்லாயிரக்கணக்கான வேலைகள் ஏற்கனவே சாதியால் அவர்களுக்கு மட்டுமே உள்ளதே அதை விட அரசாங்கம் தரும் 3 இல்லை 3 .5 சதவீதம்(பிற்படுத்த பட்ட சாதி முஸ்லிம்களுக்கு இப்போது உள்ள சதவீதம்) என்ன சாதித்து விடும்.அதையும் தர எதிராக இருப்பது நீதிமன்றங்கள் தான்
  நாளை சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை சென்று அங்கு உள்ள நோயாளிகள் எந்த சாதிகளை சேர்ந்தவர் என்று பாருங்கள்.அதில் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஒரு சதவீதம் கூட இருக்க மாட்டார்.அதே தெருவில் உள்ள எந்த தனியார் மருத்துவ மனையிலும் நுழைந்து பாருங்கள்.அங்குள்ள நோயாளிகளில் அய்ம்பது சதவீதத்திற்கு மேல் முற்பட்ட வகுப்பை சார்ந்தவராக தான் இருப்பார்.இது தான் உண்மை.முற்பட்ட்வரில் ஏழை எனபது அய்ம்பது லட்சம் பேரில் ஒரு லட்சம் பேரை தொடுவதே அதிகம்.அவர்களுக்கு உதவ அந்த மீதி 49 லட்சத்தில் உறவினர்கள்,நண்பர்கள்,சாதி அபிமானிகள்,புரவலர்கள் உண்டு.மற்ற சமூகத்தினரை விட இவர்களின் கவலைகள்,ஏழ்மை களைய படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதே நிதர்சனம்

 7. msathia says:

  தாழ்ப்பட்ட பழங்குடியனருக்கே இங்கு முன்னேற்றமில்லையே. ஒரு விவாதம். மிக அழகாக பிற்படுத்தபட்டவர்களை குறிவைத்து ஓட்டுக்களுக்காக இயங்கும் திட்டமிது. http://microblog.ravidreams.net/2008/08/reservation/comment-page-1/

  • poovannan says:

   அந்த தொகுப்பில் ப்ருனோ உங்கள் வாதங்களை உடைப்பது தானே உள்ளது.இட ஒதுக்கீடு அனைவருக்கும் அவரவர் சதவீதத்தின் படி வழங்கப்பட்டால் அங்கே குழப்பங்கள் ஏன் ஏற்பட போகிறது.தமிழகத்திற்கு 39 எம்பி கேரளாவிற்கு 20 எம்பி உத்தர் பிரதேஷத்திர்க்கு 80 எம்பி என்று முடிவு செய்யப்பட்டது எந்த அடிப்படையில் அவர்கள் தகுதி மிக்கவர்கள் ,கேரளாவில் வசிப்பவர் தகுதி குறைந்தவர் என்பதாலா.சனநாயகம் அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் முறை.இது முடியாட்சி அல்ல அரசனுக்கு பிடித்த சாதி,மதத்தினர் எல்ல பதவிகளையும் கைப்பற்ற .எனக்கும் வேண்டும் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை.ஆனால் யாருக்கும் கொடுக்காதே என்று சொல்வது மிகவும் தவறு

   • msathia says:

    அதே பதில். வாதங்களை உடைப்பது தான் நோக்கு. வரிவரியாக பிரித்து தனக்கு ஏற்றார்போல் பதிலை வைத்து வாதத்தை உடைப்பதால் மாயை உண்டாக்கலாம். இதே அக்கப்போர் என்று விட்டுவிட்டேன். இங்கேயும் அதே அக்கப்போர் ஆரம்பமா. யாருக்கும் கொடுக்காதே என்று சொல்வது இங்கே எங்கே வந்தது? பிச்சைக்காரன் பிச்சைக்காரனாகவே இருக்கிறான்,ஐம்பது வருடம் இருக்கும் முறைசரியில்லை சரிபண்ணுங்கள் ஓட்டை இருக்கிறது, இதோ ஒரு ஓட்டை என்றால் அதெல்லாம் கிடையாது நீ சொல்லும் வாதத்தில்,exampleல், ஓட்டையில் சைஸ் சரியில்லை. அதனால் அது ஓட்டை இல்லை. இருக்கும் முறைதான் சரி என்று பதில். ஓகே சார். இருக்கும் முறைதாங்க சரி. எல்லா மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள். எந்தப் பிரச்சனையும் இல்லை. மிக்க வலுவான வாதங்கள். அருமையான கருத்துக்கள். இந்தியாவின் இடஒதுக்கீடமுறை மிகச்சரியானது.இதற்குமேல் அதில் முன்னேற்றத்தை கொண்டே வரவேமுடியாது. அதுவும் தமிழக முறைதான் AFAIK 100% perfectly created only system in the entire universe.

 8. msathia says:

  “முற்பட்ட்வரில் ஏழை எனபது அய்ம்பது லட்சம் பேரில் ஒரு லட்சம் பேரை தொடுவதே அதிகம்”

  இல்லை ஐயா. கடைசியாக எடுத்த statistics படி மொத்தம் 42 பேர்தான் இருக்காங்களாம். இதுக்கெல்லாம் புள்ளியியல் கேக்கூடாதில்லை.
  மேலும் அதே குப்பை அரசாங்க மருத்துவமனையில் இசுலாமியர் எத்தனை பேர் இருப்பாங்க. மலைசாதியினர் எத்தனை சதவீதம் இருப்பாங்கன்னும் கணக்கு போட்டு சொன்னா ஏத்துக்கோறாம் ஐயா. நீங்க சொன்னா சரிதான்.

  இந்தச் சளம்பலில் நான் இடும் கடைசி பின்னூட்டம் இதுதான்.

 9. poovannan says:

  ஆடு நனையுதே என்கிற மாதிரி கருத்து சொல்லி விட்டு என்னை நக்கல் செய்தால் நியாயமா
  BC ஒதுக்கீடு மத்திய அரசு பணிகளில் 1993 முதல் தான்.கல்வி நிலையங்களில் 2008 முதல் சிறிது சிறிதாக வழங்கப்பட்டு வருகிறது.நிலை இப்படி இருக்க நாரதர் மாதிரி இல்லாத ஒன்றை காட்டி சண்டை மூட்டி விட நினைக்கும் கருத்து ஏன்.
  மத்திய கல்வி நிறுவனங்களில் SC /ST க்கு 22 .5 % இருந்தாலும் பத்து சதவீதம் கூட நிரம்புவதில்லை.ஆனால் நம் மாநில கல்லூரி இடங்களில் unfilled சீட்ஸ் மிகவும் குறைவு.மத்திய அரசு பணிகளில் /கல்வி நிலையங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்ற மாநிலங்களை விட அதிக இடம் பிடிப்பது எதை காட்டுகிறது.
  http://nirmukta.net/Thread-Tamil-castes-their-History-current-Status-Distribution
  மேல குறிப்பிடப்பட்ட தமிழக சாதிகளில் சில சாதிகள் சில மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு,சிலவற்றில் பழங்குடியினர் ,நரி குறவர்,மீனவர் ,முடி திருத்துபவர்,வண்ணார் அனைவரும் பிற்பட்ட வகுப்பை சார்ந்த சாதிகள்.சில சாதிகள் பிற்பட்ட வகுப்பிலிருந்து மிகவும் பிற்பட்ட வகுப்பிற்கு போகும்,பழங்குடியினருக்கு போகும் .இதற்குள் இட ஒதுக்கீட்டை காட்டி சண்டை மூட்டுவதால் என்ன பயன்.
  குஜ்ஜர் இனத்தவர் ஹிமாச்சலில் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர்.முஸ்லிமாக மதம் மாறிய குஜ்ஜர்கள் கஷ்மீர் /உத்தர்க்ஹாந்து மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர்.ஆனால் ராஜஸ்தான்,உத்தர் பிரதேசம் ,டெல்லி மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளனர்.இது எல்லா மாநிலங்களிலும் இருக்கும் குழப்பம் .இந்த குழப்பங்களை தவிர்க்க ஆதாரங்களை சேகரித்து தர வேண்டிய சென்சுஸ் யாரால் இத்தனை வருடங்கள் தடுக்கப்பட்டது.
  மதம் மாறிய பிற்பட்ட வகுப்பினருக்கு சலுகைகள் உண்டு,பழங்குடியினருக்கு சலுகைகள் உண்டு.சாதியில்லா சீக்கிய /புத்த மதத்திற்கு மாறியவர்களுக்கும் சலுகைகள் உண்டு ஆனால் மற்ற மதங்களுக்கு மாறிய SC மக்களுக்கு மட்டும் சலுகைகள் கிடையாது.இதை தடுப்பவர் யார்.
  இட ஒதுக்கீடு ஒரு தவறான முறை என்று காட்டுவதற்காகவே நீதிபதிகள் முற்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கிறார்கள்.அரசாங்கம் முயற்சிக்கும் அத்தனை மாற்றங்களுக்கும் தடை போடுகிறார்கள்.
  இப்போது இருப்பதை விட நீங்களே ஒரு நல்ல வழி சொல்லுங்களேன்.

 10. களிமிகு கணபதி says:

  அது ஏன் இட ஒதுக்கீடு என்ற பதம் வந்தால், பிராமணர்கள் என்ற வார்த்தை இடம் பெற்றுவிடுகிறது?

  பிராமணர்கள் என்று பிரிட்டிஷாரால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, செட்டியார்களிலும் மற்ற சாதிகளிலும் ஐயர், ஐயங்காரைப் போலவே இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பிரிவுகள் இருக்கின்றன.

  ஐயர் சாதியில் ஒரு பிரிவு பிற்படுத்தப்பட்ட பிரிவாகக் கருதப்பட்டு அதற்குச் சலுகைகள் கிடைக்கின்றன.

  நம் பார்வை மாற வேண்டும். பார்ப்பனர்கள் – மற்றவர் என்ற பார்வையே மிகவும் தவறானது. ஆபத்தானது. கீழ்த்தரமானது.

  மேலும், இட ஒதுக்கீடு முழுக்க முழுக்கப் பொருளாதார அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்பதும் அபத்தமான வாதம். சாதீயம் நிலவும் சூழலில் சாதி அமைப்பை ஒதுக்கிவிட்டு முற்றிலும் பொருளாதார அடிப்படையில் ஒரு விஷயத்தைச் செய்வதால் ஹானியே விளையும்.

  என்னதான் தீர்வு ?

  என்னிடம் ஒரு தீர்வு இருக்கிறது. அந்தத் தீர்வு இந்தப் பிரச்சினைகளை முற்றிலும் அழித்துவிடும்.

  .

 11. poovannan says:

  ஐயா தீர்வை சொல்ல மறந்து விட்டீர்களே
  ஒரு நண்பர் கேட்டது போல் மடப்பள்ளி,கோவில் ஐயர் வேலைகள் மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் இல்லையா.மற்ற சாதிகளுக்கு இது போன்று முழு ஒதுக்கீட்டில் நீதிபதியை கூட இப்படி உட்கார்,போ போ என்று விரட்டும் வேலை உண்டா
  மற்ற சாதிகளின் சரியாக படிக்காத மாணவர்களுக்கு எல்லாம் அரசாங்கம் வழி கட்டி விட்டது போலவும் பிராமணர்களை மட்டும் நட்டாற்றில் விட்டது போல் ஒரு நாவல் பற்றிய குறிப்பு என்பதால் பிராமணர்கள் பற்றி பேசுவது தவிர்க்க இயலாததாகிறது .இட ஒதுக்கீட்டில் வருபவர் அந்த அந்த சாதிகளில் முதலிடங்களில் வருபவர்.சரியாக படிக்காதவர்கள் அல்ல.மூன்று லட்சம் ஆதிடராவிட மாணவர்களில் முதல் 500 ,ஆயிரம் இடங்களில் வருபவர்களுக்கு தான் இட ஒதுக்கீடும் கிடைக்கும்.பிற்பட்ட வகுப்பிற்கும் அதே நிலை தான்.

 12. தோளர் says:

  பா.ரா அது மறுபதிப்பாக வருவதில் ஏன் ஆர்வம் காட்டவில்லையென்று ஊகிக்க முடிகிறது.அதனால் வரும் சர்ச்சை பிற எழுத்துக்கள் மீதான கவனத்தை திசை திருப்பிவிடும் என்று நினைக்கிறாரோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*