வழக்கு எண் அறிவுமதி காமெடி

 

அறிவுமதி மனுஷ்யபுத்திரன் கடும் விவாதம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் மனுஷ்யபுத்திரன் மட்டுமே விவாதிக்கிறார். அறிவுமதி கெஞ்சுகிறார். பின்பு கோபப்படுகிறார். இந்தக் கெஞ்சலும் கோபமுமே  மனுஷ்யபுத்திரனின் கருத்துகளில் உள்ள உண்மைக்கு அச்சாரமாக அமைந்துவிடுகிறது.

ஒரு திரைப்படத்தை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அது மிகவும் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் அறிவுமதி சொல்வதென்ன? இந்த ஃபீல்டுக்குள்ள வந்துட்டீங்க, இங்க ரொம்ப கஷ்டப்படறோம், கொஞ்சம் பார்த்துப் போடுங்க என்பது போன்ற வாதங்களை. கறாரான விமர்சகர் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. அதிலும் மனுஷ்யபுத்திரன் குத்து படத்தையோ தூள் படத்தையோ விமர்சிக்கவில்லை. தமிழர்களால் உச்சி மோந்து கொண்டாடப்படும் ஒரு படத்தின் போலித் தன்மையைச் சுட்டிக் காட்டவேண்டியது அவசியம் என்ற அளவில் இதனைச் சொல்கிறார். இணைய விமர்சகர் மகாதேவன் செய்வதும் (சுரேஷ்கண்ணன் இப்ப அவுட் ஆஃப் பார்ம்) இதையே. ஆனால் அறிவுமதி சொல்வது என்ன? இப்போதுதான் படம் எடுக்கிறோம், இப்போதுதான் கதை எழுதுகிறோம், இனிமே சரியா வரும் என்பது போன்ற சப்பைக்கட்டுகளை.

இளையராஜாவும் பாரதிராஜாவும் இல்லையென்றால் நாங்கள் வந்திருக்கவே முடியாது என்கிறார் அறிவுமதி. இது சாதிய பின்புலத்திலும் சமூகப் பின்புலத்திலும் புரிந்துகொள்ளத் தக்கது. இதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு விமர்சனத்தை முன்வைக்கவேண்டுமானால், அது கலையை நீக்கிவிட்டு, அந்தக் கலையை யார் பயன்படுத்தினார்களோ அவர்களது சாதிக்காகவும் அவர்களது சமூக நிலைக்காகவும் தாராள மனப்பானமையுடன் பேசப்பட்டதாகிவிடும். அறிவுமதி விரும்புவதை அதைத்தான். அது அவரது கொள்கை நிலைப்பாடு. அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கவேண்டிய தேவை இல்லை.

ஆனால் மனுஷ்யபுத்திரனோ காலச்சுவடோ இப்படிச் செயல்படக்கூடாது. அழகர்சாமியின் குதிரையைக் கிழித்துவிட்டார்கள் என்கிறார் அறிவுமதி. அந்தக் குப்பையைக் கிழிக்கத்தான் முடியும். நல்ல முயற்சி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால் நல்லது என்று நினைப்பவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அதை மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றுவிடமுடியாது என்பதுதான் உண்மை. எடிட்டர் மோகன் தெளிவாகச் சொல்கிறார், விமர்சனம் கலெஷனைப் பாதிக்கக்கூடாது என்று. அறிவுமதியும் இதே வியாபாரத்தைத்தான் வேறு வேறு மொழிகளில் சொல்கிறார். எடிட்டர் மோகனின் நேர்மை முக்கியமானது. வியாபாரமே குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்வதில் சலனமில்லை. ஆனால் அறிவுமதி இலக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும் ஒரு நிலைக்கோட்டை வரையவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். எனவே தத்தளிக்கவும் செய்கிறார். எடிட்டர் மோகன் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுச் சொல்லுங்க என்கிறார். இது இன்னும் மோசமானது. ஒவ்வொரு இயக்குநரும் இப்படி தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுத் திட்டப்பட்டால் என்னாகும் என்பதை வியாபாரி எடிட்டர் மோகன் யோசிக்கவேண்டும். கொஞ்சம் கருணை காட்டுங்கள் மோகன். அறிவுமதியும் மனுஷ்யபுத்திரனைத் தனியே கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம் என்பதை சொல்லாமல் எடிட் செய்துவிட்டீர்களே மோகன்!

கமலை மனுஷ்யபுத்திரன் விற்றார் என்பதால் அவருக்கு விமர்சனம் செய்யத் சொல்லத் தகுதியில்லை என்றும் சொல்கிறார் அறிவுமதி. இதை காமெடி என்று தாண்டிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மனுஷ்யபுத்திரனை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் எதையாவது சொல்லவேண்டிய பதற்றத்தில் அறிவுமதி உளறிக்கொட்டியதாக மட்டுமே இதனைச் சொல்லமுடியும். எஸ்ராவின் விழாவில் ரஜினியை அழைத்தது நிச்சயம் வியாபாரமே. ஆனால் அவர் வியாபாரம் செய்கிறார் என்பதற்காகவே இலக்கிய ரீதியிலான முக்கியமான கருத்தை முன்வைக்கத் தகுதியில்லாமல் ஆகிறார் என்பது சரியல்ல. 

வழக்கு எண் போன்ற ஒரு சாதாரண படத்தை சாதாரண படம் என்று மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை விமர்சகர்களுக்கு உள்ளது. இதைப் பார்த்து வருத்தப்படுபவர்கள் படம் எடுக்காமல் இருக்கட்டும் அல்லது விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கட்டும். விமர்சகர்களே பொங்கி எழுங்கள். 🙂 தமிழின் விடிவுகாலமே வழக்கு எண் என்ற லொட்டை படம்தான் என்னும்போதும் விமர்சகர்கள் வாய்மூடிக்கொண்டிருக்க அது என்ன ரஜினி படமா? கூல்!

Share

Facebook comments:


10 comments

 1. ஜோ says:

  மனுஷ்யபுத்திரனின் வழக்கு எண் விமர்சனம் வாசிக்க கிடைக்கவில்லை .வழக்கு எண் லொட்டைப் படம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது .சமீபத்தில் தமிழில் வந்த ஒரு சில நல்ல படங்களில் அதுவும் ஒன்று .எனவே மனுஷ் (அவர் அதை மோசமான படம் என சொல்லியிருந்தால்) மற்றும் உங்கள் பார்வையிலிருந்து மாறுபடுகிறேன் . .ஆனால் அறிவுமதி – மனுஷ் விவாதத்தில் மனுஷின் கோணத்தை குறை சொல்ல முடியாது .. வழக்கு எண் பற்றிய பார்வை மாறுபாடு தாண்டி இந்த பதிவோடு ஒத்துப் போகிறேன் ..ஆனால் கடைசி வரி மட்டும் அது வெறும் தமாசுக்கு எழுதப்பட்டது என புரிந்தாலும் சகிக்கவில்லை .

 2. ஹரன் பிரசன்னா says:

  ஜோ,

  மனுஷ்யபுத்திரனின் ஃபேஸ்புக்கிலிருந்து:

  //ஏழை படும் பாடு

  கொஞ்ச நாளாக ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். தலைப்பு. ’ஏழை படும் பாடு’ ஒன்லைனர் சொல்லி விடுகிறேன். ஏழைகள் ஏழைகளைக் காதலிப்பார்கள். பிளாட்பாரத்திலேயே வசிப்பார்கள். ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள். பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள். சமூகம் எப்போதும் ஏழைகளைக் கொடுமைப்படுத்தும். ஏழைகள் கொடுமை தாங்காமல் செத்துப் போவார்கள்‘ அல்லது யாராவது ஒரு ஏழை ஒரு பணக்காரனையோ அரசியல்வாதியையோ போலீஸ்காரனையோ கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவான். ஆடியன்ஸ் பாப்கார்ன், ஐஸ்க்ரீம், ஏ.சி சகிதமாக குற்ற உணர்வுடன் கைதட்டி ஆரவாரிப்பார்கள். வசூலும் அவார்டுகளும் பாராட்டுகளும் நிச்சயம்.

  ஏழைகளுக்கும் நிறைய சுக துக்கங்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது. வறுமையைத் தவிரவும் அவர்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். நாம் அதையெல்லாம் எப்போது பார்க்கப் போகிறோம்? எதற்கு அந்தப் போலி மனிதாபிமான நாடகம்? வாழ்க்கை என்பதும் கலை என்பதும் பணம், வறுமை என்கிற ஒற்றைப்டையான கறுப்பு- வெள்ளை சித்திரமல்ல. நமது குற்ற உணர்வை சொரிந்துகொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் அவர்களுக்காக செய்யப் போவதுமில்லை.

  வழக்கு எண் 18/9 இந்த ஆண்டின் சிறந்த படமாகக் கருதப்படுகிறது.//

  https://www.facebook.com/notes/manushya-puthiran/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-189-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/10150891303336725

  என் பதிவில் கடைசி வரி சீரியஸானது என்று நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்!

 3. ஜோ says:

  ஹரன்,
  மனுஷ் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ..ஆனால் குங்கமத்தில் வெளிவந்ததாக சொல்லப்படுவது இதுவல்ல என நினைக்கிறேன் ..இங்கே அவர் சொன்ன கருத்தை கூட என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை ..ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள் , பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்பது போல இந்த படத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .. அந்த போலீஸ்காரர் ஒன்றும் பணக்காரர் அல்ல . அப்பார்ட்மெண்ட் பெண்ணோ அவர் குடும்பமோ மோசமானவர்களாக சித்தரிக்கப்படவில்லை ..அவர்கள் ஒன்றும் ஏழைகள் அல்ல .. அப்பார்ட்மென்ட் பொண்ணு இட்லிக்கடை பையனை காதலித்திருந்தால் உங்களைப் போன்றவர்கள் இதை லொட்டை என சொல்லியிருக்க மாட்டீர்களோ என்னவோ ?

 4. னமெ says:

  மனுஷ்ய புத்திரன் பாடல் எழுதிய படத்துடன் இதை ஒப்பிட்டு எழுதலாமா.அப்போது எதை வரவேற்கத்தக்க முயற்சி என்று சொல்வீர்கள்.சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு விழா நடத்தும் போது அங்கு இலக்கியவாதிகளுக்கு எந்த இடம் தரப்படுகிறது,சூப்பர் ஸ்டாருக்கு என்ன இடம் தரப்படுகிறது.உயிர்மையில் எத்தனை படங்களுக்கு விமர்சனம் வருகிறது இல்லை மபுதான் எத்தனை படங்களை விரிவாக அலசி எழுதியிருக்கிறார்.இதில் வேறொரு அரசியல் இருக்கிறது.அது நமக்கு தெரிவதில்லை.மனுஷ்ய புத்திரன் 100% கறார் கலை-இலக்கியவாதி என்றெல்லாம் இன்னுமா நம்பச்
  சொல்கிறீர்கள்.

 5. thirukumaran says:

  சில நேரங்களில் மகிழ்ச்சியில் ஒப்பீடுதலக்காக பயன்படும் வார்த்தைகள் மிகைபடுத்தலாக படும் .அது வழக்கு என் -ணில் வெளிப்பட்டுள்ளது .
  எனக்குள் ஒரு குணம் உண்டு எல்லாரும் நிறைகளை கூறும்பொழுது ,நான் குறையை கூறுவேன் . எல்லாரும் குறையை கூறும்பொழுது நான் நிறையை காணுவேன் . அவ்வழியே உங்களது சார்பு விமர்சனமாக படுகிறது .

  ரஜினி,கமல்,விஜய் ,அஜித்தை விமர்சித்து குறைகளை கூற முடியுமா ?மனுஷ்யபுத்திரனின் வழக்கு எண் விமர்சனம் எனக்கு வாசிக்க கிடைக்கவில்லை —–குங்குமம் ஒரு மிகச்சிறந்த சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் பத்திரிகை அதனால் . உங்கள் அறிவுத்திறனை எண்ணி வணங்குகிறேன் . முதல் பதிவிட்ட நண்பர் கூறியது போல சகிக்கவில்லை .

 6. கூல்!என்பது அதரப் பழசான வசனம்… ஆகவே D.O.T – டாட் என்று சொல்லுங்கள்.

  நம்மக்கள் முடிவில் துவங்கி தெளிய வைத்துக் குத்துவார்கள்.

 7. thirukumaran says:

  நீங்கள் பேசும் உலக தரம் எவனோ ஒருவன் வரையறுத்ததை மனதில் கொண்டு சொல்வது போல உள்ளது , சமரசம் என்பது அவரவர் சிந்தனைகுட்பட்டது . நானும் இக் காணொளியை கண்டேன் . மனுஷ அவர்களின் விளக்கம் என்னால் ஏற்றுகொல்லும்படி உள்ளது .அதே சமயத்தில் அறிவுமதியின் கேள்வி காயப்படுத்தாமல் என்னும் நோக்கத்துடன் முன்வைத்ததாக பட்டது அது உங்களுக்கு கெஞ்சலாக படுகிறது என்னொரு” உயர் மனப்பான்மை !” உங்களுக்கு . குங்குமத்தில் விமர்சனம் என்றவுடன் அறிவுமதி இறுதியாக கோபத்தில் கேட்டது சரியாகவே பட்டது . இவுலகில் பலருக்கும் ”நான் செய்தால் சமரசம் அடுத்தவன் செய்தால் குப்பை ”. நன்கு உள்ளது விமர்சனம் . புகழ் ஓங்குக !

 8. அம்பேத் சித்தார்த் says:

  குங்குமத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியதை விமர்சனம் என்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்.

  தமிழ் சினிமாவை சீரழிக்கும் கழிசடைகளை எல்லாம் தன்னுடைய விளம்பரத்திற்காக, வியாபாரத்திற்காக மேடை ஏற்றி பயன்படுத்திக்கொள்ளும் நமது ’எழுத்தாளர்’ அவர்களோடு முரன்பட்டுக்கொள்ளாமல்,அதாவது அவர்களைப் பற்றியோ அவர்களுடைய படங்களை பற்றியோ விமர்சனமாக எதையும் எழுதிவிடாமல் கவனமாக தவிர்த்துக்கொள்ளும் நமது எழுத்தாளர் வழக்கு எண்ணோடு முரண்படுவது ஏன் ?

  நமது எழுத்தாளர் படித்த பத்து புத்தகங்களில் ’பிடித்த’ ஒரு புத்தகம் மூலதனம் !!! மூலதனத்தை படித்ததில் பிடித்ததாக கொண்டிருக்கும் ஒருவருக்கு தமது கூலியுழைப்பால் மூலதனத்தை பெருக்கும் ஏழை மக்களை பற்றிய சித்திரம் ஏன் பிடிக்காமல் போனது ? எல்லாவற்றுக்கும் மூலதனம் தான் காரணம் !

  வழக்கு என்னோடு மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பிரச்சினை ? இந்த படத்தை பற்றி இவர் என்ன தான் விமர்சனம் செய்திருக்கிறார் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை, ஒரே புலம்பல். அவருடைய பிரச்சினை வேறு. மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பிரச்சினை என்றால் அவர் இப்போது ஒரு கம்பெனிக்கு முதலாளியாக இருக்கிறார். முதலாளி யார் மாதிரி சிந்திக்க முடியும் ? முதலாளிகள் மாதிரி தான் சிந்திக்க முடியும் !

  ’ஒவ்வொரு சொல்லுக்கு செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது’ என்று மார்க்ஸ் சொன்னாரே அது இது போன்ற வார்த்தைகளைத் தான்.

  பாலாஜி சக்திவேல் என்கிற ஒரு நேர்மையான மனிதன் இந்த கேடுகெட்ட தமிழ் சினிமாவிற்குள்ளிருந்து கொண்டு சமூகத்திலுள்ள வர்க்க முரண்பாட்டை பிரச்சார நெடியின்றி அழகான ஒரு கலைப் படைப்பாக்கியிருப்பது இந்த ’முதலாளி’க்கு பிடிக்கவில்லை. அது தான் விசயம். எழுத்தாளர் பெருந்தகையின் புலம்பலுக்கு அது தான் காரணம்.

  ஏழைகள் என்றால் நல்லவர்கள் பணக்காரர்கள் என்றால் கெட்டவர்களா என்று கேட்கிறார் மனுஷ். ஆம் எழுத்தாளரே ஏழைகள் என்றால் நல்லவர்கள் தான். பெரும்பான்மை ஏழை மக்கள் நேர்மையாக உழைத்து வாழும் நல்லவர்கள் தான். சிறுபான்மை ஏழைகள் தவறானவர்களாக இருப்பதற்கும் பணக்கார கூட்டம் தான் காரணம். பணக்காரர்களின் நலன்களைக் காப்பதற்காகவே இருக்கும் இந்த முதலாளித்துவ சமூகம் தான் அந்த சிறுபான்மை ஏழைகளையும் தவறான வழிகளில் தள்ளிவிடுகிறது.

  அதே போல பணக்காரர்கள் மோசமானவர்கள் தான் ஏமாற்றுப்பேர்வழிகள் தான் அதில் என்ன உங்களுக்கு சந்தேகம். சோற்றுக்காக ஏழைகள் உழைத்துத் தின்கிறார்கள். எந்த பணக்காரன் உழைக்கிறான். பணக்கார கூட்டம் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி தான் தின்கிறது. அப்படி உழைப்பைச் சுரண்டுபவன் உங்களுக்கு நல்லவனாக தெரிகிறானா ?

  இவர் பணக்காரர்களுக்காக பரிந்து பேச காரணம் இவரும் ஒரு பணக்காரர் என்பதே.

  இவர் ஏழை மக்களை பற்றி ஒன்றும் எழுத மாட்டார், பேசவும் மாட்டார். மாறாக சூக்கும கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பார். பாலாஜி சக்திவேல் போன்ற சில அரிய படைப்பாளிகள் இது போன்ற சிறந்த படைப்புகளை செய்துவிட்டால் அதைப்பற்றியும் புலம்பித்தள்ளுகிறார் என்றால் அதற்கு பின்னால் இருப்பது இவருடைய பணக்காரத்தனமும், பணக்கார வர்க்கத்திற்கே உரிய ‘பயமும்’ தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. இது போன்ற கலைப்படைப்புகள் ஏழைகளை பற்றிக்கொண்டால் என்னாவது என்கிற ஆளும் வர்க்கத்தின் ’பயம்’ தான் அது !

  வழக்கு எண் பற்றிய ஒரு சரியான பார்வை
  http://www.vinavu.com/2012/06/13/vazhakku-enn-18-9-movie-review/#comments

  • R Nagaraj says:

   ///போன்ற கலைப்படைப்புகள் ஏழைகளை பற்றிக்கொண்டால் என்னாவது என்கிற ஆளும் வர்க்கத்தின் ’பயம்’ தான் அது ///
   ஒரு பயமும் இல்லை… அந்த காரல் மார்க்ஸ் லெனின் மாவோ சத்தியமாக ஏழைகளை இது பற்றிக் கொள்ளாது… வீணாக அலைபாயதீர்..

  • தியாக.இரமேஷ் says:

   நல்லதோரு சட்டையடி..கைகொடுங்க..பயம் இருக்கலாம்
   ஆனால் அவர்களுக்கு வாழ்க்கையே பயமா போச்சு அதான் இந்த புலம்பல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*