ஞாநியும் சாதியும் (ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தொடர்பாக)

ஞாநி போட்டிருக்கும் ஸ்டேட்டஸ் இது:

https://www.facebook.com/gnani.sankaran/posts/10200867431320770

//இன்றைய உடனடித் தேவை சுயசாதி மறுப்பாள்ர்களே. " நான் பிறப்பால் வன்னியன் என்றார்கள். ஆனால் நான் சாதியற்றவன். சாதிக் கலப்பையும் சமத்துவத்தையும் ஆதரிப்பவன். எல்லா சாதி வெறியையும் எதிர்ப்பேன்" என்று ஒவ்வொரு சாதியிலிருந்தும் குரல் வரவேண்டும். குரல் கொடுப்போர் இங்கு வந்து பதிய அழைக்கிறேன். முதல் குரல் என்னுடையது. நான் பிரந்த பார்ப்பன சாதியை நான் உதறிவிட்டேன். பார்ப்பபன சாதி வெறி உட்பட எல்லா சாதி வெறியர்களையும் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். சாதிக் கலப்பை ஆதரிப்பேன். இங்கே வந்து பதிவு செய்யும்படி முதன்மையாக வன்னியராகப் பிறக்க நேர்ந்த சாதி மறுப்பாளர்களை அழைக்கிறேன்.//

இதில் உள்ள மறுமொழிகளைப் படித்துவிடவும். இது தொடர்பாக என் கருத்து முதலில்:

இப்போதைக்கு எனக்கு ஜாதிய எண்ணம் இல்லை என்றே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பூணூல் அணிவதில்லை. இதனால் ஜாதி எண்ணம் ஒழிந்துவிட்டதா என்றால் தெரியவில்லை என்றே சொல்லுவேன். ஏனென்றால் என் குடும்ப வழக்கம் எல்லாவற்றிலும் ஜாதியின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளது. நான் ஜாதியைப் புறக்கணிக்க வேண்டுமானால் முதலில் என் சொந்தங்களை என் கொள்கையை முன்வைத்து மறுக்கவேண்டும். என்னால் அது இயலவே இயலாது. எனவே நான் முற்றும் ஜாதியைத் துறந்துவிடவில்லை என்பதே உண்மையாகிறது.

நாளை என் மகனுக்கு உபநயனம் செய்விக்காமல் இருப்பேன் என்று என்னால் உறுதி கூற முடியாது. என் அம்மா, என் உறவினர் அனைவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை விளைவிக்கும். அவர்களை எதிர்க்க எனக்கு உறுதி இல்லை. இது ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொல்லலாம். சொல்லிக்கொள்ளட்டும். 

நானே முன் வந்து என் மகனுக்கோ மகளுக்கோ வேறு சாதியில் வரன் பார்த்துத் திருமணம் செய்விப்பேன் என்று இன்றைய நிலையில் என்னால் நிச்சயம் உறுதி கூற முடியாது. அதையும் இப்போதே சொல்லி வைக்கிறேன். ஆனால் என் மகனோ மகளோ அவர்களாக வேறு ஒரு சாதியில் யாரையேனும் விரும்பினால் (ஹிந்து மதம் தவிர வேறெந்த மதத்தையும் ஏற்கமாட்டேன்) அவர்கள் குடும்பமும் அந்த வரனும் நல்ல விதமாக எனக்குத் தோன்றினால் நிச்சயம் மணம் செய்து வைப்பேன். அதேபோல் அவர்களாகவே விரும்புவது இன்னொரு பிராமண வரன் என்றால், அந்த வரனோ அக்குடும்பமோ நல்ல விதமாக இல்லை என்றால் நிச்சயம் திருமணம் செய்விக்க மாட்டேன். இதுவே என் இன்றைய நிலை.

நான் முதலில் இதைச் சொல்லிவிடுவதன் நோக்கம், ஞாநியின் ஸ்டேட்டஸ் குறித்து ஐயங்களை எழுப்பத்தான்.

01. முதலில் இங்கே வந்து நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொல்பவர்களெல்லாம் (பெரும்பாலும்) ஹிப்போகிரஸியை வளர்ப்பவர்களாகவே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். சும்மா வாய் வார்த்தை சொல்வது எந்த வகையில் சரி? இவர்கள் இதை எப்படி நிரூபிக்கப் போகிறார்கள்?

02. பொதுவாகவே உணர்ச்சிவசப்பட்டு பேசுவது நம் அனைவருக்குமே உரிய ஒன்று. இளவரசனின் மரணம் தந்த உளைச்சல் யாவருக்கும் உரியதே. எனக்கும் கடுமையாகவே இருந்தது. அவர் குடித்துவிட்டு செத்துக் கிடக்கிறார் என்று சொன்னவர்களை என் ஃபேஸ்புக்கில் அன்று நான் ப்ளாக் செய்தேன். எனக்கு ஒரு மகிழ்ச்சி இப்படி ப்ளாக் செய்வதில். அதே உணர்ச்சி வேகத்தில் நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொன்னால், அதை எப்படி காலாகாலத்துக்கும் கடைப்பிடிப்பது என்று இவர்கள் யோசித்தார்களா இல்லையா?

03. மிக முக்கியமான கேள்வி, இப்படி ஜாதியை கைவிட்டுவிட்டவர்கள் ரிசர்வேஷன் அடிப்படையில் எச்சலுகையையும் கோரி பெறமாட்டார்களா? இதைப் பற்றி ஞாநியும் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.

04. இந்திய நாட்டில் ஜாதி என்ற ஒன்று நிஜமாகவே வெறும் மோசம் செய்ய  மட்டும்தான் இருக்கின்றதா? எத்தனை எத்தனை ஜாதிகள். நம் வரையறையில் கொஞ்சம் கூட் யோசிக்க முடியாத அளவுக்கு ஜாதிகளும் அதன் பழக்கங்களும் அதன் பாரம்பரியமும் உள்ளனவே. இவைதானே பன்மைத்துவத்தின் உச்சம். ஒற்றை செயல் அடிப்படையில் இவற்றை எல்லாம் நாம் கை கழுவினால், என்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் நாம் விவாதித்திருக்கிறோமா?

இவற்றுக்கெல்லாம் பதில் சொன்னால்தான் ஜாதியைக் கைவிடுபவர்களைப் பற்றி நேர்மையாக என்னால் யோசிக்கமுடியும்.

பின்குறிப்பு: நான் ஜாதி வெறியன் என்று சொல்லப்போகிறவர்களுக்கு – நான் ஜாதி வெறியன் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும். அதை என்னால் நிரூபிக்கமுடியாது என்று ஒப்புக்கொள்கிறேன். இப்போதைக்கு என் நிலை இதுதான் என்பதை எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்லிக்கொள்வது தேவை என்று கருதி இதைச் சொல்கிறேன். நன்றி. 

பின்குறிப்பு 2: நான் இதை ஞாநியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலேயே கேட்கமுடியும். விவாதம் திசை திரும்பிவிடும் என்பதற்காக மட்டுமே தனியாகப் பதிகிறேன்.

Share

Facebook comments:


4 comments

 1. Thiru nila says:

  நான் வன்னியனாக பிறந்தவன். நான் என் சாதியை முற்றும் மறுக்கிறேன். எப்படி கடவுளை, ஏற்றத்தாழ்வுகளை, மூடநம்பிக்கைகளை, பொய்களை வெறுக்கிறேனோ அதே போலல்லாமல் மிக தீவிரமாக (மனதளவிலேனும்) எதிர்க்கிறேன். நான் முகநூலில் எழுதுவதை படிக்கும் சிலர் (சாதி வெறியர்கள்) என்னை அவர்களாகவே ஒரு சாதியிட்டு திட்டுவார்கள் . அப்போதெல்லாம் நான் எந்த வருத்தமும் பட்டதில்லை. அவர்களின் மடத்தனத்தை நிரூபிக்கும் பொருட்டு நான் பிறந்து தொலைத்த சாதியை சொல்லிவிட வேண்டுமென்று நினைத்ததில்லை. ஒருவேளை நான் பிறந்த சாதி பெயரை சொல்லவேண்டி வந்தால் அது சாதி மறுப்புக்காகவே இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் இப்போது சொல்கிறேன் என்னை பிடித்த ஒரே தீட்டு என் சாதியே! என் ஒரே அசிங்கம் ஆண்ட சாதி பெருமை பேச்சே. இதை என் மனதிலிருந்து எப்போதோ தூக்கி எரிந்து விட்டேன். என்னை பிடித்திந்த மதம் என்னும் அழுக்கை எப்போதோ குளித்து கழுவி விட்டேன். மனிதரை மனிதராகவ் பார்க்கும் மனிதன் நான். இதை பார்க்கும் சிலர் நான் ஏதோ சாதி பார்க்க முடியாத ஊரில் இருப்பதாகவும் அதனால் நான் இப்படி இருப்பதாக நினைக்க வேண்டாம். அப்படியெல்லாம் இல்லை, என் ஊரில் மீதம் இருப்பது சாதி பெருமை மட்டுமே. எதற்கும் தகுதியில்லாத சிலர் சாதியை மட்டுமே தம் தகுதியாக நினைத்து கொண்டிருக்கும் ஊர் அது. எனக்கு ஆறறிவு இருப்பதாலும், சிந்திக்க முடிவதாலும் தான் நான் இதை கூறுகிறேன்.

  என்று என் மகனின் பள்ளி சேர் படிவத்தில் சாதிக்கும் மதத்துக்கும் எதிரே இல்லை என பிரகடணம் செய்வேனோ அன்று தான் என்ன தீட்டு என்னை விட்டு அகலும். நன்றி ஞாநி!

 2. Ragool says:

  ஏன் சாதியை வெறுக்க வேண்டும்?

  ஏற்ற தாழ்வு இல்லாத சமூக முறை வேண்டும் என்பதாலா அல்லது வேறு ஏதும் கரணம் உண்டா?

  தூக்கி எறியப்பட வேண்டியது சாதியா இல்லை சாதி வெறியா?

  இவர் கேட்பது போல் சாதியை அழித்தால் சமுதாயத்தில் சமநிலை வந்துவிடுமா? அப்படி ஒரு நிலைமை வந்தால் வேறு வழியில் அதிகார மற்றும் அடிமை வர்க்கம் என்ற நிலை இல்லாமல் போகுமா?

  சாதி முறையிலாவது போராட்ட களம் அமைத்து போராட பாதிக்கபடும் சமூகத்திற்கு ஒரு வழி இருக்கும், இந்த பாதுகாப்பு இல்லாமல் முதலாளிதுவ மாற்றத்திற்கு வழி வகுக்கவே ஞாநி போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளர்களா என்ற சந்தேகம் மேலும் வலுக்கிறது. (தொழிலாளர் சங்கம் எல்லா இடத்திலும் பயன்பட போவது இல்லை மற்றும் இன்றைய தொழிலாளர் சங்கங்கள் முதலாளியின் கை கூலியாகவே செயல்படுகிறது). இன்றைய தர்மபுரி நிகழ்வில் சாதியை எதிர்த்து சாதி தான் முனைப்புடன் நிற்கிறது அன்றி முற்போக்குக் எழுத்தாளர்களோ கருத்து சொல்பவர்களோ களத்தில் இறங்கி போராட வரவில்லை.

  ஒருவேளை தாழ்தப்பட்ட மக்களுக்கு என ஒரு சங்கமோ, கட்சியோ இல்லாவிடில் இந்நேரம் சில கைதுகள் மற்றும் காவல்துறை தடியடியுடன் முடிவுக்கு வந்துஇருக்கும். இன்றைய நிலைமையில் போராடும் மக்களை ஒருங்கிணைக்க ஏதோ ஒரு கட்டமைப்பு தேவை இது சாதி மற்றும் இயக்கம் போன்ற சில உணர்வுகளாலேயே முடியும்.

  இந்தியாவையும் இன்றைய சீனா போல் மக்களை அரச அதிகார வர்கத்தால் அடக்கப்பட்ட நிலைக்கு சுதந்திரமாக பேசகூட முடியாத நிலைக்கு மாற்ற தான் இவ்வளவு நாடகமும் நடத்தப்படுகிறதா?

  தான் முற்போக்காளன் என்று நடிக்க இவர் போன்றோர்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட பிரச்சனைகளே இன்று அனைவரின் தலை வலிக்கும் காரணம். ஒரு தனிப்பட்ட கட்சி தொண்டர்கள் செய்யும் வன்முறையை விமர்சிக்க ஒட்டுமொத்த சாதியை தாக்கி எழுதும் இவருக்கு நடுநிலைமைவாதியாக போடப்படும் வேடம் பொருத்தமாக இல்லை. இது எப்படி என்றால் ஒருசில தீவிரவாதிகள் செய்யும் அநியாயத்திற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் தீவிரவாதிகள் போல் ஆளும் வர்க்கமும் அவர்களின் கை கூலியுமான பத்திரிகைகளும் சித்தரிப்பது போல் முன்னெடுக்கபடுகிறது.

  மருத்துவர் இராமதாஸ் எப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயதினரை ஒதுக்கி மாற்ற அனைத்து சமுதாயத்தையும் ஒன்றினைக்க கூட்டம் நடத்தினாரோ அதையேதான் முற்போக்கு எழுத்தாளர்கள் என சொல்லிகொள்ளும் இவர்களும் செய்கிறார்கள்.

  திரு. ஞானி அவர்கள் இது போல் கூட்டம் சேர்த்து சமுதாயத்தை மேலும் பிரிவு படுத்துவதை விட்டுவிட்டு உண்மையான நடுநிலைமையுடன் ஏதாவது யோசனையை முன் வைத்தால் அவரை பின்பற்ற தயாராய் இருக்கிறோம்.

 3. poovannan says:

  உங்கள் கூற்றில் உள்ள இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கான பதில்

  இட ஒதுக்கீடு பற்றி நிறைய குழப்பங்கள்,புரிதல் இல்லாத நிலை இன்றும் அதிகமாக உள்ளது.
  ஓபன் கோட்டா என்று ஒன்று எதிலும் கிடையாது.எல்லா பதவி ,படிப்புக்கும் ஏதாவது ஒரு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மக்கள் தேர்ந்தெடுக்கபடுவர்
  புதுசேரியில் பல மருத்துவ கல்லூரிகள்(மாநில அரசு மருத்துவ கல்லூரி ஒன்று,மத்திய அரசு ஒன்று ,6,7 தனியார் மருத்துவ கல்லூரிகள்) அசாம் தவிர்த்த ஆறு வட கிழக்கு மாநிலங்களில் ஒரே ஒரு கல்லூரி தான் உள்ளது
  பக்கத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்களுக்கு கூட தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ஓபன் கோட்டாவில் சேருவதற்கு அனுமதி கிடையாது .இங்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்,குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் படித்தவர்கள் தான் ஓபன் கோட்டாவில் சேர முடியும்.மாநிலத்தை வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீடு அது
  நம்மை விட அதிக மக்கள் தொகை,அதிக மாணவர்கள் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் நம்மிடம் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் பாதி இடம் கூட கிடையாது .அவர்கள் யாரும் ஓபன் கோட்டா தானே என்று இங்கு வந்து சேர முடியாது.
  மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேபாளம் ,வங்காளதேசம் சேர்ந்தவர்களும் ஓபன் கோட்டா கீழ் வந்து சேர அனுமதி கோர முடியாது
  மாநில ,குடியுரிமை அடிப்படையில் மொத்த இடங்களும் இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

  கோவா முதல்வர் அற்புதமாக ஆட்சி செய்து வருவாயை பெருக்கி பல ஆயிரம் அரசு வேலைகளை உருவாக்கினால் அதனால் பலன் அவர்கள் மாநிலத்திற்கு தான்.மாநிலத்தில் யாரும் BPL கீழ் கிடையாது என்று அந்த மாநில காவல்துறை,மாநில அலுவலகங்களில் உள்ள வேலைகளை BPL மக்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கோ,நாடுகளுக்கோ வழங்க முடியுமா
  மாநிலவாரி இட ஒதுக்கீடு எனபது நூறு சதவீதம் அல்லது மத்திய அரசு பொது தேர்விற்கு ஒப்பு கொண்ட மாநிலங்கள் என்றால் 85 /75 சதவீதம் .இந்த ஒதுக்கீட்டை தெரியாதது அல்லது புரியாதது போல பேசுவது வியப்பு தான்

  இதில் சாதியின் பெயரால் வரும் இட ஒதுக்கீடு மட்டும் பெரிய குற்றமாக பார்க்கபடுவது ஏன்.

  ஒவ்வொருவருக்கும் பலவிதமான கோட்டா அடிப்படையில் தான் இடங்கள் கிடைக்கிறது
  இதில் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் வரும் சாதிகளுக்கு கிடைக்கும் சாதி அடிப்படையிலான கோட்டாவை மட்டும் கோட்டாவாக ,ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாக பார்ப்பது ஏன்
  கேரளாவை சேர்ந்த பெண்ணையோ,ஆணையோ திருமணம் செய்து கொண்டால் தமிழன் என்பதால் இங்குள்ள கல்லூரிகளில் உள்ள கோட்டாவை விட வேண்டும் எனபது சரியா \
  இரு இடங்களிலும்போட்டியிட அவர்களுக்கு அனுமதி எனபது தானே சரி

  அதே தானே சாதிக்கும் பொருந்த வேண்டும்

  கிரோம்பேட்டை அண்ணா பல்கலை கீழ் வரும் MIT பொறியியல் கல்லூரியின் இடம் ராஜம் ஐயர் என்பவர் துவங்கி பின் அரசுக்கு இலவசமாக கொடுத்த கல்லூரி .அவர் குடும்பத்திற்கு founders கோட்டா என்று சில இடங்கள் உண்டு. அவர்கள் விருப்பப்படும் யாருக்கு வேண்டுமானாலும் அந்த இடங்களை கொடுக்கலாம்.அவர்கள் வீட்டில் பணி புரிபவர்,அலுவலகத்தில் பணி புரிபவர்களின் வாரிசுகள்,அவர்கள் செல்லும் கோவில் பூசாரி வாரிசுகள் என்று பலருக்கும் அந்த இடங்களை இன்றும் கொடுத்து வருகிறார்கள்.

  இதே போல நாளை கிழக்கு பல்கலைகழகம் உருவாகி உங்களுக்கு FOUNDERS கோட்டா என்று சில இடங்கள் இருந்தால் அதை உங்கள் வாரிசுகளுக்கு ,உங்கள் நண்பர்களின் வாரிசுகளுக்கு பயன்படுத்த மாட்டீர்களா.

  எல்லா தரப்பு மக்களும் குறிபிடத்தக்க சதவீதத்தில் அனைத்து தொழில்களிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டம் தான் இட ஒதுக்கீடு.அந்த நோக்கத்தை அடைவதில் இட ஒதுக்கீடு வெற்றி தான் பெற்றுள்ளது.
  கிழக்கில் வேலை செய்தவர்களின் வாரிசுக்கு இடங்கள் என்றால் ,அதில் அதிக சம்பளம் வாங்கியவரின் வாரிசுக்கு தர கூடாது,குறைந்த சம்பளம் வாங்கியவரின் வாரிசுக்கு தான் தர வேண்டும் எனபது சரியான வாதமா.உயர் அதிகாரிகள் வாரிசுகள் மட்டும் பலன் பெறுவது உண்மையில் நடந்தால் அதில் உள் ஒதுக்கீடாக குறைந்த சம்பளம் வாங்கியோருக்கு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கலாம்.ஆனால் அதிக சம்பளம் வாங்கியோருக்கு தரவே கூடாது எனபது நியாயமா

 4. poovannan says:

  சாதி சார்ந்த தொழிலை செய்யாமல்,ஒரே சாதி மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் வசிக்காமல் பல சாதியினரோடு வசிப்பவர்,படிப்பவர்,பயணிப்பவர்,வேலை செய்பவர் எல்லாரும் சாதியை விட்டு விட்டவர்கள் தான்.அவர்களுக்கு சாதி தேவைப்படுவது திருமணதிற்கு மட்டும் தான்
  திருமணத்திலும் வேறு சாதியில் திருமணம் செய்தவர்களை சாதியை விட முடியாது,hypocrites தான் சாதியை விட்டு விட்டதாக சொல்வார்கள் எனபது சரியா

  தாழ்த்தப்பட்ட வகுப்பை /MBC /தெலுகு BC தவிர மற்ற சாதிகள் ஓகே என்பதற்கும் ஹிந்துக்கள் மட்டும் ஓகே என்பதற்கும் என்ன வித்தியாசம்.
  ஹிந்து நாடார்,ஆதித்ராவிடர்,வன்னியர் என்றால் ஒத்து கொள்வேன் ,அதே கிருத்துவ நாடார் என்றால் ஒத்து கொள்ள மாட்டேன் எனபது தான் ஹைபோச்ரிசி.படித்து விட்டு வேலையில் சொந்தக்காலில் நிற்கும் வாரிசுகள் இந்த மதத்தில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கும் ,இந்த சாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*