ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக

லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. தமிழ் என்னும் மொழியின் அழிவாகவே இது அமையும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஆனால் இந்தக் கருத்தைச் சொல்ல, ஒரு விவாதத்தை உருவாக்க யாருக்கும் உரிமையுள்ளது. சொன்னது ஜெயமோகன் என்பதற்காகவே இந்த விவாதம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று பார்க்கும்போது எரிச்சலே மிஞ்சுகிறது. மனநோயாளி, மலையாளி, தமிழை அழிக்கப் பார்க்கிறார், அவரது புத்தகத்தை இப்படி வெளியிடவேண்டியதுதானே, அவரது வலைத்தளத்தை இப்படி நடத்தவேண்டியதுதானே, சம்ஸ்கிருதத்தை இப்படிச் சொல்வாரா, மலையாளத்தைச் சொல்வாரா, தன் கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார் என்பது போன்ற சில்லுண்டித்தனமான எதிர்வினைகளே முன்வைக்கப்பட்டன. 

நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனிடம் ஒருமுறை, கருணாநிதி இலக்கியவாதியல்ல என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டேன். நான் எதைச் சொன்னாலும் அது குறித்து நூறு பக்கங்களாவது என்னால் எழுதமுடியும் என்றால்தான் சொல்வேன் என்றார். இன்றுவரை அவர் அப்படியேதான் இருக்கிறார். வெறும் கவன ஈர்ப்புக்காக எதையும் சொல்லிவிட்டு அவர் ஓடி ஒளிவதில்லை. அவர் நம்பும் கருத்துகளையே அவர் சொல்கிறார். அது கவன ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது அவரது சிறப்பு. இதைக் கருத்தால் எதிர்கொள்ள வழியில்லாதவர்களே அவரை வேறு வழிகளில் ஏசத் தொடங்குகிறார்கள்.

சிலர் ஒரு படி மேலே போய் இது ஜெயமோகனின் கருத்து அல்ல, அவர் காப்பி அடிக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விவாதத்தை ஒழுங்காக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஜெயமோகனின் காப்பி என்பதோடு அவர்களும் நின்றுகொண்டார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தேதான் ஜெயமோகன் முன்பே எதிர்வினையை எழுதி வைத்ததாகச் சொல்லி ஒரு பதிலை அவரது தளத்தில் வெளியிட்டார். வழக்கம்போல அந்தப் பதிலில் அவரது விவாதத்துக்கு மேம்போக்காகப் பதில் சொன்னவர்களை இடது கையால் நிராகரித்திருந்தார். 

இன்று தி தமிழ் ஹிந்துவில் வரும் செய்தியைப் பார்த்தபோது ஜெயமோகனின் இடதுகை நிராகரிப்பு சரிதான் என்று நினைக்க வைக்கிறது.

தமிழறிஞ்சர்கள் ஒன்றுகூடி கண்டுபிடித்தது, ஜெயமோகன் மலையாளி, நாயர், தமிழின் உடலை அழித்து மொழியை அழிக்கப் பார்க்கிறார் என்பதுதான். யாராவது எதாவது பதிலடி கட்டுரைகளைத் தந்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. 

இந்த தமிழறிஞ்சர்கள் நாயர் என்ற சாதிக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று அவர்களை அவர்களே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெயமோகனை நாயராகத்தான் பார்ப்பார்கள் என்றால், அந்த ’நாயர்’ அளவுக்கு எந்த நாயகராவது (நாகரிகத்தொடை கருதி இப்படி எழுதவேண்டியிருக்கிறது) தமிழுக்குப் பங்களிப்பு அளித்திருப்பார்களா என்ன? ஜெயமோகனின் தமிழ்ப் பங்களிப்பு வார்த்தைகளில் அடங்காதது. இதே வேகத்தில் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் அடுத்து எழுதிக் குவித்தவர் ஜெயமோகனாகவே இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தமிழ் பற்றிப் பேசவும் விவாதத்தை முன்னெடுக்கவும் சகல தகுதியும் உள்ளவர். நாயர் உள்ளிட்ட சாதிகளை இவர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அவர்கள் அதை நீதிக்கட்சியின் வரலாற்றில் இருந்து தொடங்கட்டும். பிறமொழி வெறுப்பில் இருந்து தொடங்கினால் அதை ஈவெராவில் தொடங்கட்டும். 

சில ஃபேஸ்புக் டிவிட்டர் இடுகைகள் இன்னும் கேவலமானதாக இருந்தன. இதே கருத்தை ஜெயமோகன் மலையாளத்துக்கோ கன்னடத்துக்கோ சொல்லியிருந்தால் அவரை முட்டி போட வைத்திருப்பார்கள் என்ற கருத்தெல்லாம் சொல்லப்பட்டன. ஒரு கருத்தைச் சொன்னதற்காக முட்டி வைக்கப்படவேண்டும் என்பது பாசிஸம். இதை யார் எந்த வடிவில் எந்த சாதி மதப் போர்வையில் செய்தாலும் அதைக் கண்டிக்கவே செய்யவேண்டும். மலையாளிகளும் கன்னடர்களும் அப்படி நடந்துகொண்டால் அவர்களது கண்மூடித்தனமான வெறியைத்தான் நாம் கண்டிக்கவேண்டுமே அன்றி, அப்படித் தமிழர்கள் நடந்துகொள்வதில்லை என்பது தமிழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று அவர்களைக் கொண்டாடவேண்டுமே அன்றி, தமிழர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லையே என்று நொந்துகொள்ளக்கூடாது. பக்குவம் என்பது நாம் தொடர்ந்து முதிர்ச்சி அடைவதில்தான் உள்ளது, அன்றி வன்முறையாக ஒரு கருத்தை முடக்குவதில் அல்ல.

அ.மார்க்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படி மேலே போய் இது ஆர் எஸ் எஸ் சார்பு என்று சொல்லியுள்ளார். ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவம் தேவநாகரியாக இருக்கவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ் கொள்கையாம். வட இந்திய வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மதமாற்றம் நிகழ்ந்தபோது, கிறித்துவ அமைப்புகள் மிகவும் உக்கிரமாக அங்கிருந்த வட்டார மொழிகளின் வரிவடிவத்தை அழித்து, அவற்றை லத்தின் வரிவடிவில் எழுத வற்புறுத்தினார்களாம். இதை ஒரு நண்பர் சொன்னார். இதை வைத்துக்கொண்டு பார்த்தால், ஜெயமோகன் செய்தது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு விவாதம்! ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார்! விநோதம்தான். மதமாற்றக் கும்பல்கள் செய்த வரிவடிவ அழிப்பைப் பற்றி அ.மார்க்ஸ் எதுவும் பேசப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

மதமாற்ற இங்கே வந்து தமிழறிஞராகக் கொண்டாடப்படும் வீரமாமுனிவரையெல்லாம் விட்டுவிட்டு, உண்மையில் தமிழுக்குப் பெரிய பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் ஜெயமோகனை மதவாதி என்பதுதான் இவர்கள் ஞானத்தின் உச்சம்.

இன்றைய தி தமிழ் ஹிந்துவில் தமிழறிஞ்சர்கள் கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையில் ஒரு விஷயம், பிராமி என்பது தமிழின் மூலமல்ல, அது வேறு; தமிழ்பிராமி வேறாம். முதல் குரங்குக்குத் தொத்தாமல் இருக்க இவர்களால் முடியாது.

தமிழறிஞ்சர்களின் எதிர்வினை இங்கே.

ஜெயமோகனின் கட்டுரை இங்கே.

ஜெயமோகனின் எதிர்வினை இங்கே.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகை இங்கே.

Share

Facebook comments:


8 comments

 1. அண்ணே… அவர் சொல்றது சரி தப்புங்குறது இருக்கட்டும்.

  அது தமிழறிஞ்சர்கள் இல்ல. தமிழறிஞர்கள்.

  தமிழ் முழுமையாக அறியப்படாதவர்களால் தமிழுக்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் முறையாக இல்லாமல் குறையாகவே போகும்.

  மற்றபடி ஜெயமோகனின் கருத்து மிகவும் விரைந்து புறந்தள்ள வேண்டியது என்பது என் கருத்து.

  நன்றி,
  ஜிரா

  • ஹரன் பிரசன்னா says:

   ஜிரா, தமிழறிஞர்கள் வேறு, தமிழறிஞ்சர்கள் வேறு. நீங்க இன்னும் வளரணும். :))

 2. Shankar says:

  அதிசயமா பிரசன்னரு சொல்றதோட முழுசா ஒத்துப்போறேன் (நம்மளையும் ஆரெஸ்ஸெஸுன்னு குத்தி வெச்சிருவாய்ங்களோ? :D)

 3. க்ருஷ்ணகுமார் says:

  கணினியில் ஆங்க்ல எழுத்து வழியாகவும் தமிழ் எழுத்து வழியாகவும் தட்டச்ச முடியும். ஸ்ரீ ஜெயமோகனை குற்றம் சாட்ட விழையும் அறிஞர் பெருமக்களில் எத்தனை பேர் ஆங்க்ல எழுத்து தவிர்த்து தமிழ் எழுத்திலேயே தமிழை கணினியில் தட்டச்சுகிறார்கள்? வீட்டுப் பெண்கள் கோவிலில் சாமி கும்பிட்டாலும் — நெற்றியில் பொட்டு வைத்த அமைச்சரை கண்ட மேனிக்கு சாடிய த்ராவிட மடாதீசர் திருக்குவளையை அடியொற்றும் கும்பல் — நாடகமாடுவதில் தலிவருக்கு சளைத்தவரல்ல என்று சொல்லாமல் சொல்லும் போல.

  \\\ லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. \\\\

  சரி, தப்பு எல்லாம் அடுத்த படி…..விலாவாரியாக இங்கு ஹ.பி எழுதியுள்ளது ஆங்க்ல எழுத்தை உபயோகித்தா இல்லையா? என்று முதலில் சொல்லவும். அப்புறம் ஸ்ரீ ஜெயமோகன் அவருடன் உடன் படுவதைப் பற்றிப் பேசலாம்.

  • ஹரன் பிரசன்னா says:

   ஆங்கில வடிவில் உள்ளிடுவதும் தமிழ் வரிவடிமே வேண்டாம் என்பதும் ஒன்றல்ல.

 4. poovannan says:

  நாயர் என்று சிலர் திட்டுவதை பிடித்து கொண்டு எவ்வளவு பெரிய தவறு என்று கொந்தளிக்கும் இதே கை தான் ஜான் ,இம்மானுவேல் என்ற பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் வேண்டும் என்றே சாதிகளுக்குள் சண்டை மூட்டுகிரார்களா என்று எழுதிற்று
  அது வேறு கை.இது வேறு கை

  http://www.tamilpaper.net/?p=4086
  ஆனால் அந்த ரணம் ஆறிவிடக்கூடாது என்பதில் மற்ற மதங்களின் என்ன பங்கு என்பதையும் யோசிக்கவேண்டும். இம்மானுவேல் சேகரன், ஜான் பாண்டியன் என்ற பெயர்கள் சொல்வது என்ன என்றும் யோசிக்கவேண்டும்

  இன்று இந்தியா முழுவதும் போட்டு கிழி கிழி என்று கிழிக்கப்படும் 11 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட கொல்கத்தா மருத்துவர் (பத்திரிக்கையாளர்கள் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள் )தான் அங்கு தலை சிறந்த மருத்துவராக பெயர் எடுத்தவர்.அதனால் தான் அவரை தேடி சென்று கணவரே மருத்துவராக இருந்தாலும் கேள்வி கேட்க்காமல் அவர் கொடுக்கும் மருந்துகளை கொடுத்தார்கள்
  பல்லாயிரம் உயிர்களை காப்பற்றி பெயர் எடுத்தவர்.குணமாகும் என்று அவர் ஒரே ஒரு நோயாளிக்கு அவர் கொடுத்த அதிக டோஸ் வேலை செய்யாமல் நோயாளி உயிர் இழந்ததால் அவரை திட்ட கூடாது என்று வாதிடுகிரோமா
  இந்த நாட்டில் எல்லாரும் பங்களிப்பு,கொந்தளிப்பு எல்லாம் செய்கிறோம்.ஒரு சிலர் மிக அதிகமாக செய்வதாக,செய்திருப்பதாக எண்ணி கொள்வது மனப்பிராந்தி
  வேறு மதம் என்றாலே கெடுக்க தான் பார்ப்பார்கள் என்ற எண்ணம் ஹிந்டுத்வர்களுக்கு இருப்பது போல வேறு மொழியை பேசுபவர்கள் என்றாலே உள்நோக்கத்தோடு தமிழ மொழியை அழிக்க தான் வேலை செய்கிறார்கள்,ஆலோசனை சொல்கிறர்கள் என்று சொல்லும் ஒரு மொழி வெறி கூட்டமும் உண்டு.
  இந்தவெறி அந்த வெறியை தப்பு என்று சொல்வது வேடிக்கை

  இந்த பதிவில் கூட வேறு மதத்தை சார்ந்தவர என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் மொழி வளர்ச்சிக்காக பங்காற்றிய வீரமாமுனிவர் நக்கல் செய்யபடுகிறார்.இதற்கும் நாயர் என்று சாதியை கண்டுபிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்.

  ஆந்திராவிற்கு 42 எம் பி தொகுதிகள்,ஹைதராபாத் சென்னையை விட வேகமாக முன்னேறி வருகிறது என்பதால் தமிழர்கள் சதி செய்து டேலேன்கானா பிரிவினையை ஏற்படுத்தி விட்டார்கள் என்று பல படித்த தெலுகு மக்கள் இணையம்,பொது கூட்டம்,நேரில் வாதிடுகிறார்கள்.ப சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்து டேலேங்கான பிரிவினையை அறிவித்ததால் அவர் தமிழர் என்பதால் மொத்த தமிழர்கள் மேலும் பழி.

  எதனால் இப்படி செய்கிறார்கள் என்பதற்கு வித்தியாசமான காரணங்கள்.

  • ஹரன் பிரசன்னா says:

   பூவண்ணன், உங்கள் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாயர் என்று சொல்வதைக் கண்டிப்பதையும், தேவர் தலித் இனமோதல் கட்டுரையையும் ஒப்பிடும் உங்கள் பதற்றம் சுவாரஸ்யமானது. ஜாதிப் பிரச்சினை குறித்து ஜாதியை எழுதாமல் என்ன எழுதுவார்கள்? நாயர் என்ற ஜாதி இந்த விஷயத்தில் உள்ளே இழுக்கப்பட்டது. அதைக் கண்டித்தால், உடனே வேறு எதோ பிரச்சினையைப் பேசுகிறீர்கள். மருந்து என்று வருகிறதே என வெடிமருந்தை உண்ணவேண்டாம் டாக்டர்.

 5. க்ருஷ்ணகுமார் says:

  \\\ ஆங்கில வடிவில் உள்ளிடுவதும் தமிழ் வரிவடிமே வேண்டாம் என்பதும் ஒன்றல்ல. \\\

  உண்மையே.

  ஸ்ரீ ஜெயமோகன் அவர்களது வ்யாசம் ஆங்கில எழுத்துக்கள் மூலம் தமிழில் உள்ளிடுவது என்பதிலிருந்து தான் தமிழ் எழுத்துக்களின்றி ஆங்க்ல எழுத்துக்களாலேயே ஆன வரிவடிவத்திற்கு செல்கிறது.

  \\\ நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள். \\\

  ஆங்க்ல key board ஐ வைத்து — ஆங்க்ல எழுத்துக்கள் மூலம் தமிழ் எழுதுவது அல்லாது — தமிழ் எழுத்துக்களை நேரடியாக தட்டச்சும் மென்பொருள்களும் இருக்க — ஆங்க்ல எழுத்துக்கள் மூலமாக தமிழ் எழுதுவது ஏன் என்ற வினாவிற்கு உத்தரம் தேடினால் ஸ்ரீ ஜெயமோகன் அவர்கள் முன்வைத்த கருத்தில் உள்ள ஞாயம் விளங்கும்.

  தமிழ் வரிவடிவத்தின் மீது பற்றுள்ளவர்கள் — கணினியில் தட்டச்சும் போது — ஆங்க்ல வழியாக தமிழை வடிப்பதில் வெட்கம் கொள்ளவில்லை என்பது — தெரிகிறது.

  ஸ்ரீ ஜெயமோகன் அவர்களது வ்யாசத்தில் நான் குறை காணும் விஷயம் இது தான் :-

  \\ ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது? \\\

  இந்த வாசகம் இவ்வாறின்றி — மாறாக

  ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களி லும் எழுதக் கூடாது?

  என்று இருந்திருந்தால் எனக்கு ஏற்புடையதாக இருந்திருக்கும். எந்த வரிவடிவத்தை ஏற்க வேண்டும் என்பது உபயோகிப்பாளர் தீர்மானிக்கட்டுமே.

  இன்றைக்கு ஆங்க்ல வரிவடிவத்தில் தமிழையும் மற்ற பல மொழிகளையும் பலர் வாசிக்கவில்லை என்று நினைப்பது நிதர்சனத்தில் இருந்து விலகுவது அன்றி வேறல்ல.

  தமிழ்ப் பற்று என்பது வேறு தமிழ் வரிவடிவப் பற்று என்பது வேறு என்பது தெளிவு. தமிழ் வரிவடிவம் ஆயிரக்கணக்கான வருஷங்களில் எப்படி மாற்றம் கொண்டுள்ளது என்பதனையும் ஸ்ரீ ஜெயமோகன் விளக்கியே உள்ளார்.

  உர்தூ பாஷையை அரபியில் எழுதுவதே வழக்கம். அரபி அறியாது நாகரலிபி வழியாக உர்தூ எழுதுவதால் உர்தூ பாஷை எந்த அளவிலும் குறை படுவது இல்லை. மாறாக எழுத்து வரிவடிவம் என்ற தடைக்கல்லை தாண்டி இந்த பாஷை பலரையும் அடைய நாகரலிபி உதவியுள்ளது என்றால் மிகையாகாது.

  வேறு வரிவடிவத்தை ஏற்பதால் தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிப்படையலாம் என்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*