Hidden camera!

நாம் இழந்தவை பல. குழந்தையாக இருந்தபோது செய்த பலவற்றை இப்போது நம்மால் செய்யவே முடியாது. அதில் இதுவும் ஒன்று. நேற்று அபிராம் படுக்கையில் படுத்துக்கொண்டு அவனே பேசிக்கொண்டு அவனே விளையாடிக் கொண்டிருக்கிறான். சிறு வயதில் நானும் இப்படி தனியாகப் பேசியதுண்டு. ஒரு கட்டத்தில் அது மிகவும் தீவிரமாகிவிட்டது. என்ன இப்படி பேசிக்கொள்கிறோம் என்று நானே சிரித்துக்கொண்டதுண்டு. சில நண்பர்கள் என்னை ‘தானாப் பொலம்பூனி’ என்று அழைத்திருக்கிறார்கள்.

இன்றும் இதன் சாயலை என்னிடம் காணலாம். பல சமயங்களில் அபிராமும் என் மனைவியும் ‘என்ன தனியா நீங்களே பேசிக்கிறீங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். 

அபிராம் நேற்று இப்படி பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நான் வாலிபப் பருவத்தில் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தபோது இதேபோல பல தடவை பாலகுமாரனிடம் பேசியிருக்கிறேன்! இளையராஜாவுடன் பேசாத நாளே இல்லை, இன்றும். அதன் தீவிரம் இன்று மட்டுப்பட்டுவிட்டாலும், இப்படி அபிராமும் செய்வதைப் பார்க்கும்போது ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைமை ஒரு வரம்.

Share

Comments Closed