ராவண தேசம் – திரைப்பட விமர்சனம்

ராவண தேசம்

சில நேரங்களில் நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத களம் ஒன்றில் திரைப்படங்கள் வந்துவிடக்கூடும். அப்படி ஒரு நிகழ்வு தமிழ்த் திரைப்பட உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. தமிழில் வெளிவர சாத்தியமே இல்லை என்று நாம் நம்பவைக்கப்பட்டுவிட்ட களம் ஒன்றை அஜெய் நூத்தகி திரைப்படமாக்கியிருக்கிறார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மேலோட்டமாக ஈழத் தமிழர்களின் இன்னல்களைக் கோடிட்டுக் காட்டும் படங்கள் சில தமிழில் வந்ததுண்டு. அவை எதுவுமே ஈழ மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகத்துக்கு எந்த வித நியாயத்தையும் செய்ததில்லை. மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் காட்சிப்படுத்திய திரைப்படம். ஆனால் அதுவும்கூட, ஈழத்தைப் பின்னணியாக மட்டும் வைத்துக்கொண்டு, வழக்கமான தமிழ்த் திரைப்பட செண்டிமெண்ட்டை மட்டுமே முன்னெடுத்தது.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் மகிழ்ச்சியான அதிர்ச்சியைத் தருகிறது ராவண தேசம். இந்தப் படத்தை எப்படி சென்சார் அனுமதித்தது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானதாக இல்லை. என்றாலும், புலித் தலைவர் வரும் ஒரு திரைப்படத்துக்கு சென்சார் குழு அனுமதி அளித்ததே ஆச்சரியமான விஷயம்தான்.  

முள்ளி வாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்படும் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்குகிறது திரைப்படம். முள்ளி வாய்க்காலை இலங்கை சிங்கள ராணுவம் கைப்பற்றுகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு சிங்கள ராணுவம் செய்யும் கொடுமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் காண்பிக்கப்படுகின்றன. முள்ளி வாய்க்காலை மீண்டும் புலிகள் (புலிகள் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) கைப்பற்றுகிறார்கள். சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம், எனவே தமிழர்கள் யாரும் முள்ளி வாய்க்காலை விட்டு வெளியேறவேண்டியதில்லை, மீறி வெளியேறினால், கொல்லப்படுவார்கள் என்று அறிவிக்கிறது போராளிகள் குழு.

அங்குள்ள மக்கள் தங்களுக்குப் போரே வேண்டாம், இந்த மண்ணும் வேண்டாம், உயிர்தான் வேண்டும் என்கிறார்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் சொந்தங்கள் சாவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்கிறார்கள். இங்கேதான் ஒரு திருப்பம் நிகழ்கிறது.

தன் கூட்டாளி ஒருவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, போராளிகளின் தலைவர் (பிரபாகரன் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) தன்னைச் சுடும்படிச் சொல்கிறார். அவரும் சுட்டுவிடுகிறார். தலைவர் வீர மரணம் எய்துகிறார். சிங்கள ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று சொல்ல இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்படிப் காட்சிப்படுத்தியிருப்பது எவ்வித நம்பகத்தன்மையையும் அளிக்கவில்லை.

இனியும் இங்கிருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று சொல்லும் பத்து பேர் அடங்கிய குழு, புலிகளுக்குத் தெரியாமல் கடல் வழியாக இந்தியா செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து தப்பிக்கிறது. அவர்கள் கடலில் எதிர்கொள்ளும் உயிரை உறைய வைக்கும் பிரச்சினைகளே மீதிப் படம்.

கடலில் திசை தெரியாமல் வழிதவறிப் போகிறார்கள். கொண்டு வந்த உணவு காலியாகிவிடுகிறது. பணப்பேராசை பிடித்த ஏஜெண்ட் தன் உணவை யாருக்கும் தருவதில்லை. தங்கள் மகனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கும் வயதான கிழவி அந்தப் பயணத்திலேயே மரணமடைய, அந்த உடலை கடலில் வீசிவிட்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். கைக் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக வேறு வழியின்றி கடல் நீரைப் பருகுகிறாள் ஒரு தாய். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் கரு கலைகிறது. இப்படி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மை மிரள வைக்கின்றன.

ராம தேசத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்து கதாநாயகன் ராம தேசத்து மக்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். தங்கள் சாவுக்கு மௌன சாட்சிகளாக விளங்கும் இந்திய தேசம் என்றேனும் ஒருநாள் தங்கள் மனசாட்சிக்கேனும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பொருளில் அக்கடிதம் அமைகிறது.

ஒரு அகதியாகக்கூட வழியின்றித்தான் ஈழத் தமிழனின் நிலை உள்ளது என்பதை மிகவும் அழுத்தமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால் திரைப்படம் என்ற வலிமையான ஊடக மொழியின்படி இப்படம் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளது என்றே சொல்லவேண்டும். இடைவேளை வரும் காட்சிகள் மிகவும் நாடகத்தனமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்து மக்களின் போராட்டம் என்ற அளவில்கூட, ஒரு நாட்டு மக்களின் போராட்டம் இப்படத்தில் பதிவாகவில்லை.

தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மக்களைக் கேடயமாகப் புலிகள் பயன்படுத்தியைப் பற்றியெல்லாம் எவ்விதக் குறிப்புகளும் இல்லை. ஆனால் திடீரென்று மக்கள் எங்களுக்கு உயிர்தான் வேண்டும் என்ற காட்சி மட்டும் உள்ளது. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் காட்டப்படவில்லை.

இந்திய தேசத்துக்குச் செல்ல முடிவெடுக்கும் பத்து பேர் அடங்கிய குழுவை எப்படி இந்தியா எதிர்கொள்கிறது என்கிற சவாலுக்குள்ளேயே இயக்குநர் செல்லவில்லை. கடலோடு படத்தை முடித்துவிட்டது பெரிய ஏமாற்றம். கடலில் சாகும் தறுவாயில் கதாநாயகன் கடிதம் எழுதும்போது குறிப்படப்படும் தேதியும், பிரபாகரன் மரணத் தேதியும் பொருந்தாமல் உள்ளது.

ஈழத்தில் இறந்து மடிந்த ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள். இப்படத்தில் ஈழத் தமிழராக ஹிந்து அடையாளத்தோடு காண்பிக்கப்படும் மனிதரோ மிகவும் மோசமானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். படத்தின் கதாநாயகன், அவரது நண்பர்கள் எல்லாம் நல்ல, அப்பாவிக் கிறித்துவர்களாக மத அடையாளத்தோடு  காட்டப்படுகிறார்கள்.இவ்வளவு துயரத்துக்குப் பிறகும் ஒரு தமிழன் ஹிந்து என்பதாலேயே வெறுக்கப்படும் அரசியலை நினைத்து வேதனையே மிஞ்சுகிறது.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் பற்றிப் படமே எடுக்கமுடியாது என்று சொல்லித் திரிபவர்கள் எல்லாருமே கோழைகளாகவோ அல்லது ஊரை ஏமாற்றிக்கொண்டோ இருக்கவேண்டும். இத்திரைப்படம் அதை வலுவாக நிரூபிக்கிறது. இதுபோன்று ஒரு பத்து திரைப்படங்கள் வந்தால், மிகத் தீவிரமான அரசியல் படங்கள் ஈழத்தை மையாக வைத்து வர வாய்ப்புண்டு. அந்தக் கதவை இந்தத் திரைப்படம் திறந்து வைத்திருக்கிறது.

 

திரைப்படங்கள் இதுவரை பல வகைகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைக்காக, பிரசாரத்துக்காக, இயக்கத்துக்காக, பொழுது போக்கிற்காக என. இன்று உலகக் கவனம் பெறும் திரைப்படங்கள் எல்லாமே தங்கள் நாட்டின் தங்கள் மக்களின் தங்கள் இனத்தின் பிரச்சினைகளைப் பேசுபவையே. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இதைப் பற்றியெல்லாம் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. இன்னும் தமிழ்த் திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களோடு ஒப்பிடத் தகுந்த வகையில், தங்கள் இனம் பற்றியோ மண் பற்றியோ பேசத் துவங்கவில்லை. மேலோட்டமான முயற்சிகள் உண்டு. அவை இன்னும் சரியான அளவில் வடிவம் பெற்று மேலெழவில்லை. இத்திரைப்படம் திரைப்பட மொழியில் மிகவும் மோசமாகத் தோற்றாலும், தன் மக்களைப் பற்றிப் பேசவேண்டும் என்ற உந்துதல் உள்ளது நல்ல விஷயம்தான். முக்கியமான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு தெலுங்கர்.

(நன்றி: ஆழம், டிசம்பர் 2013 இதழ்)

 

Share

Comments Closed