கவிதை

முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.

Share

Comments Closed