தமிழக பாஜக – எங்கே செல்லும் இந்தப் பாதை – தேர்தல் களம் 2016 – தினமலர்

நான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திருச்சியின் கிராமம் ஒன்றான முத்தரச நல்லூருக்குச் சென்றிருந்தேன். அந்த கிராமத்தின் தெருக்களின் பாஜகவின் விளம்பரத் தட்டிகளையும் சுவரோட்டிகளில் அத்வானி மற்றும் வாஜ்பேயியின் முகங்களையும் பார்த்தேன். அன்றுதான் எனக்கு பாஜக என்னும் கட்சி மிகவும் நெருக்கமாக அறிமுகமாகியது. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் மற்ற எந்த ஊர்களிலும் பாஜகவுக்கு இத்தனை விளம்பரங்களை நான் பார்த்ததில்லை. அத்வானி முத்தரசநல்லூருக்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்துக்கு வருகை தந்திருந்தார் என்று நினைவு.

அன்று இருந்த அதே நிலையில் இன்றும் தமிழ்நாட்டு பாஜக கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. இடைப்பட்ட 25 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் பாஜகவின் முகம் பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க தமிழ்நாட்டில் மிக மிக மெதுவான வளர்ச்சியை மட்டுமே பாஜகவால் சாதிக்கமுடிகிறது.

இதன் காரணங்கள் என்ன? 1998 வரை பாஜகவினர் தொலைக்காட்சியின் எந்த நேர்காணல்களிலோ அல்லது விவாதங்களிலோ பங்கேற்றால், எதிர்த்தரப்புக்காரர்கள் அப்படியே பம்முவார்கள். ஏனென்றால் எந்தவித சுமையும் இல்லாத ஒரு கட்சியாக பாஜக இருந்ததனால் தமிழகத்தின் கழகங்களை மிக எளிதாக பாஜகவால் எதிர்கொள்ளமுடிந்தது. 1998ல் அதிமுகவுடனும் 2001ல் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் பாஜகவுக்கு சில எம்பி/எம்.எல்.ஏ சீட்டுகள் கிடைத்தாலும், தமிழகத்தில் முதன்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட சிறிய கட்சிகளின் அந்தஸ்தை அடைந்துவிட்டது. இப்படி ஒரு நிலையை விருப்பப்பட்டு தமிழ்நாட்டு பாஜகவே ஏற்படுத்திக்கொண்டது. பாஜகவினருடன் விவாதத்தில் ஈடுபடவே யோசித்த காலம் போய், இவர்களும் மாறி மாறி கூட்டணி வைப்பவர்கள்தான் என்ற எண்ணம் வந்துவிட்டது.

2014 பாராளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியாவெங்கும் வீசியபோதும் தமிழ்நாட்டில் இலையின் அலையில் முடங்கிப் போனது தமிழ்நாட்டு பாஜக. 2014ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓரளவு வலிமையான மூன்றாவது கூட்டணியை உருவாக்கியது ஒரு முக்கியமான சாதனைதான். ஆனால் அதைத் தொடரமுடியாமல் போனது. இதற்கு முதன்மையான காரணம் பாஜக அல்ல என்றாலும், ஒரு பிரதமரைக் கொண்டிருக்கும் கட்சி இவை போன்ற சிக்கல்களையெல்லாம் தெளிவாகச் சமாளித்திருக்கவேண்டும். ஆனால் தமிநாட்டு பாஜகவுக்கு அத்தகைய சாமர்த்தியங்கள் எல்லாம் இருக்கவில்லை.

இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக நன்றாக வேரூன்றியிருக்கும் மிகச் சில கட்சிகளில் ஒன்று பாஜக. இப்படி இருக்கும் கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைதான் பாஜகவின் முதல் பிரச்சினையும். ஏகப்பட்ட தலைவர்களைக் கொண்ட கட்சி ஏகப்பட்ட முகங்களுடன் உலா வரும்போது எது நம் முகம் என்ற குழப்பம் வாக்காளர்களிடையே ஏற்படும். காங்கிரஸுக்கும் தமிழக பாஜகவுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினை இது.

மத்தியத் தலைவர்கள் ஒன்றைப் பேசிக்கொண்டிருக்க மாநிலத் தலைவர்கள் இன்னொன்றைப் பேசிக்கொண்டிருக்க இரண்டுக்கும் தொடர்பற்ற வகையில் தொண்டர்கள் செயலாற்றிக்கொண்டிருப்பார்கள். அதோடு திடீர் திடீர் என்று ஹெ.ராஜா, சுப்ரமணியம் சுவாமி போன்ற தலைவர்கள் எழுப்பும் சலசலப்புகள் வேறு. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழக பாஜக வெளிவரவேண்டும். அதற்குத் தேவை வலிமையான ஒரு மாநிலத் தலைமை.

மாநிலத் தலைமை வலிமையாக இருப்பதுதான் பாஜகவின் வெற்றிக்கான முதல் படியும் முதன்மையான படியும். இன்றைய தமிழகத் தேர்தல் என்பது ஆர்ப்பாட்டம் நிறைந்ததும் ஆடம்பரம் நிறைந்ததும் என்றாகிவிட்டது. இந்நிலையில் பாஜக இப்படி இந்த நீரோட்டத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்குமானால் மக்களின் பரிதாபத்தை மட்டுமே பெறமுடியும், வெற்றியைப் பெறமுடியாது. அதற்காக கழக பாணி அரசியலைக் கைக்கொள்ளத் தேவையில்லை. இந்த ஆடம்பர அரசியலிலிருந்து விலகவேண்டியதும் புதிய அரசியல் களத்தை உருவாக்கவேண்டியதும் ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். ஆனால் இரண்டுக்கும் மத்தியிலான, பொதுமக்களைக் கவரும் வகையிலான அரசியலையும் மேற்கொள்ளவேண்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்துக்கு வருவதற்காகவாவது இவற்றையெல்லாம் தமிழக பாஜக மேற்கொள்ளவேண்டும். தன்னை நிலைப்படுத்திக்கொண்டுவிட்டபின்புதான் அரசியல் தூய்மையில் இறங்கவேண்டும். இன்று மோடி இந்திய அளவில் செய்துகொண்டிருப்பது போல.

தமிழக பாஜக மக்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வீதிகளுக்கு வருவதில்லை என்பது அடுத்த பிரச்சினை. தமிழக பாஜகவின் போராட்டங்கள் எல்லாம் யாருக்காக யாரோ மேற்கொள்ளும் போராட்டங்கள் என்ற வடிவிலேயே நிகழ்கின்றன. ஒன்று தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள் அல்லது தொலைக்காட்சிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உணர்வு பிரச்சினைகளுக்கான போராட்டத்தைவிட முக்கியமானவை மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டங்கள். அதுவும் மக்களின் கண்முன் நடக்கும் போராட்டங்கள். இவற்றையெல்லாம் பாஜக மேற்கொண்டதா அல்லது பத்திரிகைகள் மறைக்கின்றனவா என்பதெல்லாம் புரிபடாத மர்மங்களாகவே இருக்கின்றன.

இன்று புதியதாகத் தொடங்கும் கட்சிகூட உடனே ஒரு பத்திரிகையையும் தொலைக்காட்சியையும் உருவாக்கும்போது தமிழக பாஜகவால் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. தொடர்ந்து பாஜகவின் கருத்துகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்று பாஜக எப்போது கருதுகிறதோ, அப்போது அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது இப்படி ஊடகத்தைத் தொடங்குவதாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அப்படி எந்த ஒரு முயற்சியிலும் பாஜக இறங்கியதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் பல சாதனைகள், ஊழலற்ற ஆட்சி போன்றவையெல்லாம் தமிழகக் கிராமங்களை அடையவே இல்லை. இன்று தமிழ்நாட்டின் சாதனைகள் எனச் சொல்லப்படும் மிகை மின்சாரம், வெள்ள நிவாரணம் போன்றவற்றில் மத்திய அரசின் உதவிகள், மத்திய அரசின் பல புதிய திட்டங்களெல்லாம் அதிமுகவின் சாதனை போலவே மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் விளக்கி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பெரிய நெட்வொர்க் பாஜகவிடம் இல்லை.

தமிழக பாஜக காற்றில் வாள் சுழற்றிக்கொண்டு உள்ளது. அதிமுக மற்றும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் இன்று கணிசமாகத் திரண்டு வரும் வேளையில் அதை தன்வசப்படுத்திக்கொள்ள தமிழக பாஜக எந்நிலையிலும் ஆயத்தமாக இல்லை. ஒரு தேர்தலின் கடைசி நொடி வரை அதிமுகவிலிருந்து அழைப்பு வராதா என்ற ஏக்கத்திலேயே தமிழக பாஜக காத்துக் கிடக்கிறது. தமிழக பாஜவை ஏற்றுக்கொண்டால் உடனடியாக சிறுபான்மை ஓட்டுக்களை இழக்கவேண்டியிருக்கும் என்பது உலகில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் தமிழக பாஜகவுக்கு மட்டும் தெரியவில்லை. எப்படியும் அதிமுக தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிக் காத்துக் கிடந்தது. அதிமுக இல்லை என்றானபின்பு தேமுதிகவுக்குக் காத்துக் கிடந்தது.

தேமுதிக விஷயத்தில் பாஜக செயல்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. தமிழக பாஜக திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணி வைத்தால் அதை திமுக கூட்டணி என்றோ அல்லது அதிமுக கூட்டணி என்றோ அழைக்கிறார்கள். கருணாநிதியையோ அல்லது ஜெயலலிதாவையோ முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி என்று வரும்போது அதை பாஜக கூட்டணி என்றழைக்கப் பார்க்கிறார்கள். இதிலெல்லாம் பாஜக விட்டுக்கொடுத்துப் போயிருக்கவேண்டும். விஜய்காந்தின் கவனம் முதல்வர் பதவியின் மீது இருக்கும்போது, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக, விஜய்காந்தின் அந்த ஆசையை தமிழக பாஜக பயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். தேமுக நினைப்பதிலும் தவறில்லை. ஆனால் பாஜக இதையெல்லாம் யோசிக்காமல் பாஜக கூட்டணியில் தேமுக வரட்டும் என்று காத்துக் கிடந்தது. இதனால் பாஜக ஆதரவாளர்களே ‘முதலில் கட்சி முடிவெடுக்கட்டும், பின்பு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். இப்போது ஒரு வழியாக தனித்துப் போட்டி என்று பாஜக அறிவித்திருக்கிறது. இது முதல்படிதான். அதிமுக மற்றும் திமுகவின் வெறுப்பு ஓட்டுக்களைப் பெற தனித்து நின்றால் மட்டும் போதாது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே நிலையில் வைத்து விமர்சிக்கவேண்டும். அதிமுகவை விமர்சிப்பதா என்று நினைத்தாலே தமிழக பாஜகவுக்கு வேர்க்க ஆரம்பித்துவிடுவது என்னவிதமான நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். டெல்லியில் இருந்தே குனியத் தொடங்கிவிடுகிறார்கள்.

திமுகவை கடுமையாக விமர்சிப்பது, அதிமுகவை செல்லமாகத் திட்டுவது போன்ற அணுகுமுறைகள் ஒரு காலத்திலும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கப்போவதில்லை. இன்றைய தேர்தலின் ஒரே முக்கிய அம்சம், அதிமுக ஆட்சியின் வெறுப்பு ஓட்டுகள் என்றாகிவிட்ட நிலையில், பாஜகவின் முக்கிய இலக்கு அதிமுகவாக இருக்கவேண்டுமே ஒழிய, திமுகவாக இருக்கக்கூடாது.

உண்மையில் தமிழகத்தின் ஹிந்துக்கள் கட்சி அதிமுக என்ற பிம்பமே இங்கே நிலவுகிறது. எனவே மத்தியில் பாஜகவை ஆதரிப்பவர்கள்கூட மாநிலத்தில் அதிமுகவை ஆதரித்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு இல.கணேசன் போன்றவர்கள், ‘சில விதிவிலக்கான அம்சங்களைத் தவிர, அதிமுகவும் பாஜகவும் ஒரே கருத்துகளைக் கொண்ட கட்சிதான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: 6.4.16 தேதியிட்ட துக்ளக்.)

பாஜகவுக்கு எப்படியும் சிறுபான்மையினர் ஓட்டளிக்கப் போவதில்லை. குஜராத் போல பாஜக ஆட்சி அமைந்து அதை நேரடியாக உணராதவரை சிறுபான்மையினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள். அப்படியானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டியவர்கள் ஹிந்துக்களே. அவர்களைக் கவரும் வகையிலாவது பாஜக செயல்படவேண்டும். அதுவும் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாத வகையில், பெரும்பான்மை மக்கள் ஹிந்து ஆதரவு என்பதை பிரச்சினைக்குரிய ஒன்று என நினைக்காத வகையில் அந்தச் செயல்பாடு இருந்தாகவேண்டும். தமிழ்நாடு ஈவெரா வழி வந்த, பொதுவாக ஹிந்து எதிர்ப்பு அரசியலிலேயே ஊறிக்கிடக்கும் ஒரு மாநிலம். அப்படியானால் தமிழ்நாட்டு பாஜகவின் செயல்பாடு என்பது கத்தி மேல் நடப்பது. முதலில் ஹிந்து ஓட்டுக்களைக் கவரவேண்டும். அந்த ஹிந்து ஓட்டுக்களோ அதிமுக வசம் உள்ளது.

இன்று பல முனைத் தேர்தல் நடக்கிறது. இது அதிமுகவுக்கே பல வகைகளில் சாதகம். அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்க அல்லது குறைக்க சாத்தியமுள்ள ஒரே கட்சி இன்றைய நிலையில் தமிழக பாஜகதான். இன்னும் 30க்கும் மேற்பட்ட நாள்கள் உள்ளன. அதிமுகவுக்குச் செல்லும் ஹிந்து ஓட்டுகளைக் குறிவைத்து அரசியல் செய்தாலே போதும், அதிமுக பல தொகுதிகளில் தோற்கும் நிலை ஏற்படலாம்.

சென்னை வெள்ளம் வந்து தமிழக அரசு ஸ்தம்பித்து நின்று மக்களைக் கைவிட்ட சமயத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கொஞ்சம் அதிமுகவுக்கு எதிராகப் பேசினார். ஆனால் தொடர்ந்த சில நாள்களில் மத்தியத் தலைமை இவ்விஷயத்தை மென்மையாகக் கையாளும்படி அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது. அதன்பின்பு தமிழிசையும் அமைதியாகிவிட்டார். தமிழக பாஜகவின் இப்படியான பரிதாபமான நிலைக்கு மத்தியத் தலைமைகளும் ஒரு காரணம். ஏனோ ஜெயலலிதாவின் ஆதரவை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.

தமிழகத்தின் பிற கட்சிகள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தேவை ஏற்படும்போது தாறுமாறாக அதிமுகவையும் திமுகவையும் தாக்குகிறார்கள். பின்பு இவற்றையெல்லாம் மறந்து கூட்டணியும் வைத்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றுமே நடக்காதது போல் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக பாஜக மட்டுமே இதில் தடுமாறுகிறது.

இன்றைய நிலையில் தமிழக பாஜக செய்யவேண்டியவை என்ன? முதலில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது. என் தேர்வு: நிர்மலா சீதாராமன், அடுத்ததாக பொன்.ராதாகிருஷ்ணன். இன்னும் ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவப் போகும் வெற்றிடத்தை முழுமையாகக் கைப்பற்ற எல்லா வகையிலும் ஆயத்தமாக இருப்பது. ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பது. தனக்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் கவனம்செலுத்துவது. எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகள் தரும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது. கொள்கை அளவிலான போராட்டங்களையும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது. அவை ஊடகங்களில் வருமாறு பார்த்துக்கொள்வது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே தூரத்தில் வைப்பது, விமர்சிப்பது. தமிழ்நாட்டின் ஹிந்துக்கள் கட்சி பாஜகதான் என்று பாஜகவின் ஆதரவாளர்களையாவது முதலில் நம்ப வைப்பது. தொடக்கமாக, வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்தி, அந்த இடங்களில் கட்சியை பலப்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது. பாஜகவுக்கென ஊடகங்களை உருவாக்குவது. இவை எதிலுமே இன்னும் தமிழக பாஜக பெரிய சாதனைகளை நிகழ்த்திவிடவில்லை என்பதுதான் உண்மை. இவற்றைச் செய்தால் இன்னும் ஐந்தாண்டுகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக உருவாகும் கட்சிகளில் முதன்மைக் கட்சியாகவோ அல்லது இரண்டாவது கட்சியாகவோ வரலாம். அப்படிச் செய்யாத வரை தமிழ்நாட்டில் மூன்று சதவீத வாக்கு வங்கிக்கு மேல் வாங்க இயலாமலேயே போகலாம்.

வரலாறு வாய்ப்புகளை மீண்டும் மீண்டும் தராது. ஆளும் கட்சி செய்யும் தவறுகளே மற்ற கட்சிகளின் மீட்சிக்கான வாய்ப்புகள். அதைப் பயன்படுத்திக்கொள்ளாத வரை எந்த ஒரு கட்சியும் மேலெழ வாய்ப்பில்லை. இதைப் புரிந்துகொண்டு அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளாதவரை தமிழக பாஜக இத்தேர்தலில் எதையும் சாதிக்கப்போவதில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தமிழகத்தில் இன்னொரு காங்கிரஸாகத்தான் இருக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மீள ஒரே வழி, தமிழக பாஜக தமிழ்நாட்டின் கட்சிதான் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்குவதுதான். அதை நோக்கியே தமிழக பாஜகவின் ஒவ்வொரு நகர்தலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் இனியும் இருக்கும்.

Share

Comments Closed