ரஜினியின் கழுகுப் பார்வை

யாருக்கு நேரம் சரியில்லை எனத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று நன்றாக உண்டுவிட்டு நன்றாக உறங்கிவிட்டு எழுந்து தொலைக்காட்சியை மேய்ந்தேன். தொலைக்காட்சியில் திரைப்படங்கள், செய்திகள், விவாதங்கள் என்ற பெயரில் வரும் காட்டுக்கத்தல் சண்டைகள், கிரிக்கெட்டைத் தவிர எதையும் பார்ப்பதில்லை. இப்போது தொலைக்காட்சியில் திரைப்படங்களும் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாத் திரைப்படங்களுமே பெரும்பாலும் ஏற்கெனவே பார்த்த திரைப்படங்கள்தான் என்பதால். அன்று என்னதான் இருக்கிறதென்று பார்ப்போமே என்று மேய்ந்தபோது கண்ணில் பட்டது ரஜினி நடித்த ‘கழுகு.’ அப்போதுதான் படம் தொடங்கி இருந்தது. கழுகு என்ற பெயரைப் பார்த்ததும் மனசுக்குள் இரண்டு அலைகளாக ‘பொன்னோவியம்’ பாடலும் ‘காதலென்னும் கோவில்’ பாடலும் ஓடியது. இப்படத்தில் வரும் திகிலூட்டும் இசை ஒன்றைப் பற்றி போகன் சங்கர் தற்சமயம்தான் எழுதியிருந்தார். எனவே கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று பார்க்கத் தொடங்கினேன்.

இப்போதும்கூட உட்கார்ந்த பார்க்கமுடிகிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ரஜினியின் பழங்காலப் படங்கள் பலவற்றை ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாது என்ற கொடும் ரகசியம் ரஜினி ரசிகர்களுக்கத்தான் தெரியும். அதையும் மீறி ரஜினிக்காக மட்டுமே பார்ப்போம். ஆனால் இப்படம் அத்தனை மோசமல்ல. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் ஜாலியாகவே போனது. இளையராஜாவின் இசைதான் எல்லாவற்றையும் பின்னிக்குத் தள்ளி முன்னுக்கு வந்து நின்றது. நரபலி கொடுக்கப்படும் இசையும் வந்தது. அதற்குப் பின் படம் பாதாளத்தில் விழுந்தது. (கருத்தியில்ரீதியாக படம் விழுந்தது ஒரு பக்கம். படமும் செம மொக்கையாகிவிட்டது!)

t0001653

நரபலியைக் கொடுப்பது ஒரு சாமியார். கார்ப்பரேட் சாமியார். அவர் காவி உடை உடுத்தித்தான் வலம் வருகிறார். அவருக்கு சிஷ்யப்பிள்ளை இன்னொரு காவி சாமியார். இவர்கள் திட்டம்போட்டு நரபலி கொடுக்கிறார்கள். இவர்கள் மடத்தில் யாருக்கும் தெரியாத அறையில் விஸ்கி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நிர்வாணப் பெண் சிலை உள்ளது. அமுத பானம் (பெயர் சரியாக நினைவில்லை) என்ற பெயரில் எதோ ஒரு பானத்தைக் கொடுக்கிறார்கள். இதில் போதைப்பொருள் உள்ளது. இதைக் குடித்துவிட்டு அனைவரும் செக்ஸி நடனம் ஆடுகிறார்கள். சாமியார் சொற்பொழிவாற்றும்போதெல்லாம் பின்பக்கத்தில் சிவன் சிலை உள்ளது. ஒரு நல்ல சாமியார்கூட இல்லை. அத்தனை பேரும் கேடுகெட்டவர்கள். இப்படி ஒரு படம்! இன்றெல்லாம் இத்தனை எளிதாக இப்படியெல்லாம் எடுத்துவிடமுடியாது. பெரிய மாற்றம்தான். இதுவரை ஒரு பாதிரியார் இப்படியெல்லாம் செய்ததாக எதாவது படம் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் பட்டியல் கொடுங்கள். மலையாளப் படப் பட்டியலுடன் வராதீர்கள். தமிழ்ப்படப் பட்டியல் வேண்டும்.

தமிழ்ப்படங்களில் ஹிந்து சாமியார்கள் எப்படியெல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் கண்ணில் ரத்தமே வரும். அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஈவெராவின் மண்ணல்லவா, ஈவெராவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் படங்களில் வேறெப்படியும் இருந்துவிடமுடியாது. ஆனால் மிகச் சரியாக இதை ஹிந்து சாமியார்களோடு நிறுத்திக்கொள்வார்கள். ஈவெராவின் வலு அப்படி.

இப்படத்தில் இன்னொரு கொடுமையும் உள்ளது. இந்த சாமியார் விவகாரத்தைவிடக் கொடுமையானது அது. நரபலி தர சாமியாருக்கு உதவுபவர்கள் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் இந்த நரபலியில் நம்பிக்கை உள்ளது போலக் காட்டப்பட்டுள்ளது. பழங்குடி நடனம் என்ற பெயரில் காபரே டான்ஸை சாமர்த்தியமாக ஆடவிட்டிருக்கிறார் இயக்குநர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறாள் என்று ஒரு பழங்குடியினர் கூடக் கோபப்படவில்லை என்று மிகத் தெளிவாக இயக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல, நரபலி தந்தவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் காப்பாற்ற ஒட்டுமொத்தப் பழங்குடிக் கூட்டமும் ரஜினியையும் அவரது நண்பர்களையும் பந்தாட தீப்பந்தத்துடன் புறப்பட்டு வருகிறது. ரஜினி அத்தனை பேரையும், யெஸ், கிட்டத்தட்ட அத்தனை பேரையும் தன் பஸ்ஸைக் கொண்டே நசுக்கித் தள்ளுகிறார். கெட்டவர்கள் போலிஸில் மாட்டிக்கொள்ள, சுபம்.

நரபலி சாமியாருக்கு உதவியாளராக சோ. சோவுமாய்யா என்று நொந்து போய் இருந்த நேரத்தில்தான் தெரிகிறது, சோ அங்கே வந்திருக்கும் ஒரு துப்பறியும் செய்தியாளர் என்று. சோவின் குட்டு வெளிப்பட, போலிச் சாமியாரிடம் மாட்டிக்கொள்கிறார். அவர்கள் சோவை மிரட்டி, சாமியாரைப் பற்றி ஒரு வருடம் தொடர்ச்சியாக அவரது பத்திரிகையில் புகழ்ச்சியாக எழுதச் சொல்கிறார்கள். சோ மறுக்கிறார். சவுக்கடி தரப்படுகிறது. வலி தாங்காமல் துடிக்கிறார். உடன் இருக்கும் இன்னொரு நல்ல பெண் பத்திரிகையாளர் (இவர்தான் சாமியாராக நடிக்கும்போது செக்ஸி டான்ஸெல்லாம் ஆடுகிறார்!) சொல்கிறார், “இப்ப அப்படி எழுதிட்டு, தப்பிச்சு போன பிறகு, உண்மையை எழுதிடலாம்” என்கிறார். அதற்கு சோ, “நம்பமாட்டானுங்க. காசு கொடுத்தப்ப காசை வாங்கிட்டு பாராட்டி எழுதினான், இப்ப காசு பெயரலை, மாத்தி எழுதறாம்பானுங்க. எனக்கு ஜனங்களை பத்தி நல்லா தெரியும்” என்கிறார். சும்மா பதிவுக்காக பதிந்து வைத்தேன்.

கழுகு படம் ஹிந்துக்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல. இதுதான் பிரச்சினையே. திட்டமிட்டு எடுக்காமலேயே, நினைவிலி கட்டமைப்பில்கூட இப்படித்தான் சாமியார்களைச் சித்திரிக்கவேண்டும் என்று அவர்களுக்கு புகட்டப்பட்டுள்ளது என்பதுதான் நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம். இப்படி ஹிந்துக்களை ஆன்மிகம் சார்ந்தும் சாதி சார்ந்தும் இழிவுபடுத்தி எடுக்கப்படும் படங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டிய அவசியம் உள்ளது. அது மிக முக்கியமான ஆவணமாக இருக்கும்.

இதற்கு என்ன அவசியம்? சில வருடங்கள் முன்பு வரை கூட திரைப்படங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எப்படி சித்திரிக்கப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அப்படி அத்தனை எளிதாக போகிற போக்கில் ஒரு இயக்குநர் மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்திவிடமுடியாது. அவர்களுக்கான குரல் என்ற ஒன்று உருவாகி வலுப்பெற்றதே இதன் காரணம். இதுவேதான் ஹிந்து மதத்தினர் இழிவுபடுத்தப்படும்போதும் நிகழவேண்டும். மெட்ராஸ் போல, Fandry போல சாதியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ஒரு படத்துக்கு இது பொருந்தாது. அதற்கான காரணங்களோடு பின்னணியோடு ஒரு திரைப்படம் உருவாகி வருமானால், எச்சாதியைப் பற்றியும் எம்மதத்தைப் பற்றியும் வலுவான விமர்சனத்தோடு வரும் அந்தப் படம் முக்கியத்துவம் பெறவேண்டும். அது எல்லா மதங்களுக்கும் நிகழக்கூடிய சாத்தியத்தோடும் இருக்கவேண்டும். நோக்கம் படைப்புச் சுதந்திரத்தை அச்சுறுத்துவதோ குறுக்குவதோ அல்ல. மாறாக படைப்புச் சுதந்திரத்துக்கு இருக்கவேண்டிய ஒரு பொறுப்பைப் பற்றி அறிவுரைப்பது மட்டுமே. அதற்கு, இப்படி ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு புத்தகம் உதவலாம். உதவும்.

பின்குறிப்புகள்:

* இயக்குநர் எஸ் பி முத்துராமன். திரைக்கதை பஞ்சு அருணாச்சலம்.

* ஹீரோயின் ரதி செம அழகு. 🙂

Share

Comments Closed