சரவெடி

ஒரு பண்டிகையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் ஒரு பிரிவினர். சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினால் அதில் ஒரு குழப்பத்தை உருவாக்குவது. புத்தாண்டு சித்திரையிலா தையிலா என்று சாதாரண மனிதன் குழம்பும் அளவுக்கு எதையாவது சொல்வது. ஒரு பிரிவினர் பூணூல் போட்டுக்கொண்டால் பன்றிகளுக்குப் பூணூல் அணிவிக்கிறேன் என்று அதற்கும் கீழான கூட்டம் கிளம்புவது. தீபாவளி கொண்டாடினால் வெடிக்காதே என்று பிரச்சினை பண்ணுவது. இப்படி ஒரு கூட்டம்.
 
தீபாவளியில் வெடி வெடித்தால் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது என்று அறிவியல் காரணங்களை முன்வைக்கிறார்கள். இப்படி அறிவியல் காரணங்களை முன்வைப்பவரெல்லாம் எப்படியோ திக கும்பலுக்கும் கம்யூனிஸக் கும்பலுக்கும் நண்பர்களாக தற்செயலாக அமைந்து தொலைக்கிறார்கள். இப்படித்தான் ஊரெல்லாம் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு பேசியதாகப் போற்றப்பட்ட ஒருவரின் வீடியோவைப் பார்த்தபோது அவர் பிராமணர்களைத் திட்டிகொண்டிருந்தார். இவரைப் போன்றவர்களுக்கு ஹிந்து மதப் பண்டிகைகளில் மட்டுமே இந்த சுற்றுப்புறச் சூழலெல்லாம் நினைவுக்கு வரும். பண்டிகைகளில் இருக்கும் முக்கிய அம்சத்தை உடைப்பதன்மூலம் பண்டிகையையே இல்லாமல் ஆக்கி ஹிந்து மதத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்த முயல்வதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். இதற்குத் துணையாக அறிவியல், சுற்றுப்புறச் சூழல், முற்போக்கு என எல்லாவற்றையும் சமயத்துக்குத் தகுந்தாற்போல் கலந்துகொள்வார்கள்.
 
கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு மாதம் முழுக்க ஸ்டார் எரிய விட்டால் அதிகம் மின்சாரம் செலவாகுமே என்று மறந்தும் பேசிவிடமாட்டார்கள். (கிறித்துவர்கள் வருடம் முழுக்க ஸ்டார் எரியவிட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.) இஸ்லாமியர்களைப் பற்றி யோசிக்கவே அஞ்சி நடுங்குவார்கள். கிடைத்து ஹிந்து இளிச்சவாயக் கூட்டம்தான்.
 
இதில் உள்ள நிஜமான பிரச்சினை, ஹிந்துக்களும் இதற்குக் காவடி தூக்குவதுதான். சில ஹிந்துக்கள் உண்மையில் நல்ல இதயத்தோடு, இதன் பின்னே இருக்கும் வலையையும் உண்மையையும் புரிந்துகொள்ளாமல், சுற்றுப் புறச் சூழல் குறித்து நிஜமான அக்கறையில் சொல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சினை எல்லாம் ஏன் ஹிந்துக்களுக்கு மட்டுமே வருகிறது என்பதையாவது அவர்கள் யோசிக்கவேண்டும்.
 
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்.
 
பட்டாசு வெடிப்பதால் பறவைகள், நாய்கள் அஞ்சும் என்பது இன்னொரு வாதம். ஒரு நாளில் ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். இவர்களது கருணையை நினைத்தால் நமக்கே தொண்டை விக்கிக்கொள்ளும். தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. பிஸ்கட் போட்டிருந்தாலும் ஹிந்துக்களின் பட்டாசால் நாய்க்குடியே அழிந்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது வேறு விஷயம்.
 
மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள், கண்ணில் படும் மிருகங்களையெல்லாம் எண்ணெய்யில் வதக்கி உண்டால் அவையெல்லாம் இல்லாமல் போய்விடுமே என்று யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே.
 
நூறு கோடிப் பேரும் என்னவோ வெடி வெடிக்காமல் உறங்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு இங்கு பிரசாரம் நடக்கிறது. உண்மையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெடி வெடிப்பது குறைவே. பத்து வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வெடி வெடிப்பதுவும் குறைவே. இதில் பெண்கள் வெடிப்பதும் குறைவு. இதில் சராசரியாக ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்குபவர்களே மிக அதிகம் இருப்பார்கள். ஆயிரம் ரூபாய்க்கு கொசு வெடிதான் இன்றைக்கு வெடிக்கமுடியும் (டெங்குவை ஒழிப்போம்!). இந்த நிலையில் இந்த வெடியால் சுற்றுப் புறச் சூழல் ஒழிந்துவிடும் என்பது வீம்புப் பிரசாரம்.
 
வெடி வெடிக்கும்போது சிறுநீர் கழிப்பேன் என்ற அச்சுறுத்தல் எல்லாம் சிறுநீர் அளவுக்கே மதிக்கப்படவேண்டியது. அந்நேரத்தில் வெடி வெடிக்காமல் அல்லது ராக்கெட் வைக்காமல் இருப்பதும் நம் பெருந்தன்மைதான். 🙂
 
இந்த வீம்புப் பிரசாரங்களை முறியடிப்பதற்காகவாவது எப்போதும் வெடி வாங்கும் அளவுக்கு 200 ரூபாய்க்கு மேலாக வெடி வாங்கி ஆசை தீர வெடிக்கவும். ஒவ்வொரு வெடியிலும் ஹிந்து மதத்தைச் சூழ்ந்துள்ள இந்த இரட்டைவேடக்காரர்களின் மாய்மாலங்கள் பொசுங்குக என்று நினைத்துக்கொண்டு வெடிக்கவும். சுற்றியுள்ள, வெடி வாங்க முடியாத ஏழைச் சிறுவர்களை உடன் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கொண்டு வெடிக்கச் செய்து தீபாவளியை வெடியுடன் கொண்டாடவும். வெடி வெடிக்கும்போது தேவையான பாதுகாப்பு அம்சங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு கடைப்பிடித்து, பாதுகாப்பான தீபாவளியை, ஹிந்துக்களின் வண்ணமயமான பண்டிகையை வெடியுடன் கொண்டாடவும். தீபாவளி வெடி வாழ்த்துகள்.
 
பின்குறிப்பு: ஒவ்வொரு வருஷமும் இதைச் சொல்ல வெச்சதுதான் இரட்டைநாக்குக்காரர்களின் சாதனை.
Share

Comments Closed