விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2
 
நாம் நம் ஊரில் சில தையல்காரர்களைப் பார்த்திருப்போம் அவர்கள் தங்களிடம் மீதமுள்ள துணிகளை வைத்து ஒரு சட்டையைத் தைத்துவிடுவார்கள். அது நன்றாகவும் இருக்காது, அதைத் தூக்கி எறியவும் முடியாது. அதேபோல் கமலஹாசன் தன்னிடம் ஏற்கெனவே இருந்த ஒரு படத்தின் மீதக்காட்சிகளிலிருந்து புதியதாக ஒரு படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டுவிட்டார். அது ஒரு படமாகவும் இல்லாமல் படம் இல்லாததாகவும் இல்லாமல் ஏதோ ஒன்றாக உருவாகி இருக்கிறது.
 
50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். என்னவெல்லாமோ காட்சிகள் திடீர் திடீரென வருகின்றன. தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அக்காட்சி முடிவடைந்ததும் நாம் ஏதேனும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. இதற்கிடையில் கமலின் வழக்கம்போன்ற மேதாவித்தனமான வசனங்கள் வேறு. புரியவில்லை என்பதன் அர்த்தம், கமல் எப்போதுமே 20 வருடங்களுக்கு முன்பான ஒரு திரைப்படத்தை எடுத்து விடுவார் என்று அவரது ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் வகையிலானது அல்ல. தெளிவின்மை தரும் புரிதலின்மை.
 
ஒரு காட்சி ஏன் வருகிறது, அது சொல்ல வரும் செய்தி என்ன என்று எதுவும் யாருக்கும் புரியாது. முதலில் இருந்து கடைசி வரை ஒரே இடத்திலேயே கதை அப்படியே நிற்கிறது. காட்சிகள் தொடர்பின்றி நகர்கின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யாரோ யாரோஒருவரைக் கொன்று கொண்டே இருக்கிறார்கள். யார் செத்தால் நமக்கென்ன என்ற மனப்பான்மையில் நாம் அமர்ந்திருக்கிறோம். முதல் பாகத்தில் தப்பித்துப்போன ராகுல்போஸ் இடைவேளைக்குப் பிறகுதான் தலையைக் காண்பிக்கிறார். இப்படத்தில் இவருக்கு எவ்வித ஸ்கோப்பும் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் வகையிலான காட்சிகள்தான் படம் நெடுகிலும் பெரும்பாலும் வருகின்றன.
 
64 வயது கமலுக்கு இரண்டு பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொண்டும் பேசும் காட்சிகள் பெரும் அலுப்பைத் தருகின்றன. எரிச்சலை அடக்கமுடியவில்லை. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது. கமலின் மனைவி அவரை ஏன் அன்றுதான் கல்யாணம் ஆன ஒருவர் போல உருகுகிறார் என்பதெல்லாம் ஒரு மண்ணும் புரியவில்லை. வசீம் என்று அழைக்கிறார். கொடுமை.
 
கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது. அந்த 64 என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 1947ல் சுதந்திரம் பெற்றதைக் குறிப்பிடுகிறது என்றால் 64 என்பது இடிக்கிறது. நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஒருவேளை 2011ல் நடக்கும் கதையா? இதை விளக்க கமல் இன்னொரு படம் எடுத்துத் தொலைக்காமல் இருக்கவேண்டும்.
 
முதல் பாகத்தில் மிகத் தெளிவாக, இந்திய முஸ்லீம் நல்லவன் என்கிற அடையாளத்தைச் சொல்லி இருந்தால் படத்திற்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, இப்படத்தில் இந்திய முஸ்லிம்களை வெளிப்படையாக உயர்த்தும் காட்சிகள் மிக தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்தத் தெளிவு முதல் படத்தில் கிடைத்த அடியில் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 
பிராமணர்கள் மேல் இருக்கும் எரிச்சல் கமலுக்கு இன்னும் தீரவில்லை. படத்தில் இந்தியாவைக் காட்டிக் கொடுப்பவர் ஒருவர் பிராமணர். அவர் பெயர் ஐயர் என்றே வருகிறது. அதுமட்டுமின்றி வகைதொகை இல்லாமல் எல்லோரும் பிராமண பாஷையில் பேசிக் கொல்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் எட்டிப் பார்த்து ரூம் போட உதவி செய்யும் ஒரு நபர் கூட பிராமண பாஷையில் பேசுகிறார். இது போதாதென்று திடீரென ஆண்ட்ரியாவும் பிராமண பாஷை பேசுகிறார். நல்லைவேளை, அடுத்த காட்சியில் கொல்லப்பட்டுவிடுகிறார். முஸ்லிம்களை வம்பிக்கிழுத்தால், அது இந்திய முஸ்லிம் உலக முஸ்லிம் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி, கொமட்டிலேயே கும்மாங்குத்தாகக் கொண்டு வரும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட கமல், பிராமணர்கள்தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்திருப்பது பெரிதும் வரவேற்கப்படவேண்டியது. அரசியல் செய்ய உயிர் வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்று சுருங்கச் சொல்லினர்.
 
படத்தில் பக்கத்து வீட்டுக்குப் போய் வரும் தோரணையில் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். கமல் நினைத்தால் கண்மூடி ஆப்கானிஸ்தான் போகிறார். அடுத்த காட்சியில் அம்மாவைப் பார்க்க டெல்லி வருகிறார். அவரிடம் தான் மகன் என்று சொல்லத் தேவையில்லை எனச் சொல்லிவிடுகிறார். காலில் விழுகிறார். பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடாய்ப்படுத்துகிறார்கள். அவர் மதமென்ன என்று யோசிக்கும்போதே கமல் வேறு நாட்டுக்குப் போய்விடுகிறார். கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாரா டெல்லியில் இருக்கிறாரா ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா பாகிஸ்தானில் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு வயதாகிவிடுகிறது.
 
கமலுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் அழகாக இருக்கிறார், நடிக்காமல் இருக்கும்போது மட்டும். பிரச்சினை என்னவென்றால் படம் முழுக்க ஏதாவது நடித்துக் கொண்டே இருக்கிறார். பார்த்து பார்த்து புளித்து போன நடிப்பு.
 
பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும். பல காட்சிகள் ஆங்கிலப்படத்தின் தரத்துடன் இருக்கின்றன – பார்க்க மட்டும். இதற்கு இணையாக பல காட்சிகள் தரமற்று இருக்கின்றன.
 
படத்தில் சிரிக்க சீரியஸான பல காட்சிகள் உண்டு என்றாலும் கிளைமாக்ஸ் காட்சி சிரிப்பின் உச்சம். 40 நொடியில் கமல் குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்து வில்லனையும் கொன்று தன் மனைவி கொல்லப்படுவதற்கு முன்னால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வரும் காட்சி, வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அதிலும், உன் கடவுளே உன்னைக் கொல்லும் என்று சொல்லவும், சாகக் கிடக்கும் ஒரு அல்லக்கை கமலைப் பார்த்து சைகையில் கேட்க, கமல் அதை மறுக்க, இவர் ஊதறும் அவ ஆடறதுக்கும் இணையான காட்சி.
 
ஒரு திரைப்படம் எடுத்து முடித்ததும் அதை எப்படி தயாரித்தோம் என்று கடைசியில் ஓட விடுவார்கள். பெரிதினும் பெரிது கேள் என்ற எண்ணத்தில் கமல் அதையே ஒரு திரைப்படமாக்கத் துணிந்து விட்டார். விஸ்வரூபம் பாகம் 1 படத்தித்துக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் படத்தை கமல் தவிர்த்திருக்க வேண்டும்.
 
பின்குறிப்பு: எப்போதும் ஒருத்தன் என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். தம்பி போல அவன். ஒருநாள் திடீரென்று பெயர் சொல்லி அழைத்தான். நீ போ என்று சொல்ல ஆரம்பித்தான். என் மனதுக்குள் மலைபோல கேள்விகள். வேறொன்றுமில்லை. உத்தமவில்லன் வரை ஜிப்ரான் என்றறியப்பட்ட இசையமைப்பாளர் இப்படத்தில் முகம்மது ஜிப்ரான் ஆகியிருக்கிறார். வாழ்த்துக்கள். வரும்போதே ஜோசப் விஜய் ஆகவும் முகமது ஜிப்ரான் ஆகவும் வந்து விடுங்கள் என்பதே நம் வேண்டுகோள்.
Share

Comments Closed