கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்

வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180

மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.

இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.

கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.

மிக ரசிக்கத்தக்க நாவல்.

இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

Comments Closed