சென்னை புத்தகக் கண்காட்சி 2019

நேற்று பொங்கல் நாளன்று ஒரு பார்வையாளனாகப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெற்றேன்.

தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டதால் எப்போதுமே தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமே கண்ணில் படும். இந்தமுறை அபிராமுக்காக ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் போனேன். உண்மையில் அங்கே குவிந்திருக்கும் இத்தனை ஆங்கிலப் புத்தகங்களில் எதை எடுப்பது விடுப்பது என்றே தெரியவில்லை. ஆங்கிலப் புத்தகங்களில் அதிக பரிட்சயம் இல்லை என்பதால் எதைப் பரிந்துரைப்பது, எதை வேண்டாம் என்று சொல்வது என்றே விளங்கவில்லை.

தமிழ்ப் பதிப்பகங்கள் கடை போட்டிருப்பதால் அங்கிருக்கும் புத்தகங்களைப் பற்றி எதாவது கேட்டால் நான்கு பேருக்கு ஒருவராவது அதைப் பற்றிச் சொல்வார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் டிஸ்ட்ரிப்யூட்டர் வழியாக விற்பதால் அங்கிருப்பவர்களுக்கு, அரங்கினுள்ளே குவிந்திருக்கும் புத்தகங்கள் பற்றித் துளியும் தெரிந்திருக்கவில்லை. எழுத்தாளர்கள் பற்றி எந்தக் குறிப்பும் அவர்களுக்குத் தெரியவில்லை.

எதை எடுத்தாலும் 100 ரூ புத்தகக் கடையில் இருக்கும் புத்தகங்கள்தான் என்ன, அவை ஏன் இப்படி யாரும் எடுப்பாரற்று அங்கே வந்தன, அவற்றுள் நமக்குத் தேவையானவற்றைத் தேடி எப்படி எடுப்பது – ம்ஹூம். ஒரு துப்பும் இல்லை. இந்நிலை ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், ஆங்கிலப் புத்தகங்களின் விலைக்கு யானையை வாங்கிக் கட்டி மேய்த்துவிடலாம். சாணித் தாளில் அச்சடித்துப் பளபள அட்டை போட்டுக் கூசாமல் 699 ரூ என்கிறார்கள். அதிலும் கொஞ்சம் பிரபலமான புத்தகங்கள் என்றால், பக்கத்திலேயே போகத் தேவையில்லை. கிட்டத்தட்ட ஷாக் அடிக்கிறது.

கடைசியில் Selected Ghost Stories மட்டும் 100 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வந்தான் அபிராம். அதில் என்ன இருக்கிறது என்று மேய்ந்துவிட்டுப் படிக்கக் கொடுக்கவேண்டும். ஆங்கிலப் புத்தகங்களுக்கு கிண்டில், கூகிள் புக்ஸ்தான் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பாதி விலையிலும், கிண்டில் அன்லிமிடெட்டில் இலவசமாகவும் கிடைக்கும் புத்தகங்களைப் படித்து அறிவை இப்போதைக்கு வளர்த்துக்கொண்டால் போதும்.

பதிப்பாளராகப் புத்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கும் பார்வையாளனாகப் பார்ப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. அத்தனை பெரிய பிரமாண்ட அநாவசியப் புத்தகக் கண்காட்சியில் உட்கார இடம் இல்லை. வெளியே அரங்கில் பேச்சாளர்கள் பேசும்போது உட்கார இடம் கிடைப்பதும் கிடைக்காததும் பேசுபவரைப் பொருத்தது. நன்றாகப் பேசினால் நமக்கு உட்காரம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்தால் யாரோ பேசுவதைக் கேட்க சகிக்காது. ரொம்ப டெலிகேட் சிச்சுவேஷன்.

புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகள் ஒப்பீட்டளவில் இந்தமுறை பரவாயில்லை. இன்னும் பல மைல் தூரம் முன்னேற வேண்டும் என்றாலும், இதுவே ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம்.

வெளி கேட்-டில் இருந்து உள்ளே புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் வர ஒரு கிலோமீட்டராவது இருக்கும். ஏன் ஒருவர் இத்தனை தூரம் நடந்து வந்து புத்தகம் வாங்கவேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பபாஸி கடந்த சில தினங்களாக இலவசப் பேருந்து வசதியை அறிவித்துள்ளது. அது எங்கே நின்று எந்த நேரத்தில் வரும் போகும் என்பது ரகசியம். ஒரு பேருந்து முழுக்க ஆள் ஏறினால்தான் எடுப்பார்கள் போல. நாம் நேரம்கெட்ட நேரத்தில் ஏறினால், அதிலேயே ஒரு நெடுந்தூக்கம் போட்டுவிடலாம். நானும் மனைவியும் குழந்தைகளும் அரை மணி நேரம் காத்திருந்தும் வண்டியைக் காணவில்லை. வேறு வழியின்றி ஓலா புக் செய்து ஆட்டோக்காரரிடம் விடாமல் வழி சொல்லி ஒருவழியாக கண்காட்சியை விட்டு வெளியே வந்தோம்.

ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற காரணங்களை எப்படித் தொகுத்தாலும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் மக்கள் நிஜமாகவே குவிகிறார்கள். பொழுதுபோக்குக்காக வருகிறார்களா? நிச்சயம் இல்லை. இதைவிடத் தரமான பொழுது போக்குகள் ஆயிரம் இருக்கின்றன. 10% தள்ளுபடி கிடைப்பதாலா? ஒருவர் புத்தகக் கண்காட்சியில் 1000 ரூபாய் புத்தகம் வாங்கினால் 100 ரூ தள்ளுபடி. இந்த நூறு ரூபாய்க்கு யாராவது 500 ரூபாய் செலவழித்து வருவார்களா? 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினாலே 300 ரூபாய்தான் தள்ளுபடி. புத்தகக் கண்காட்சியில் 10% பேர்கூட 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கமாட்டார்கள். ஒரே இடத்தில் புத்தகங்கள் குவிந்து கிடப்பதைப் பார்த்து அதிலிருந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருகிறார்களா? தேவைக்கு அதிகமாகக் குவிந்திருக்கும் ஓரிடத்தில் இருந்து உங்களுக்குத் தேவையான ஒன்றைத் தேர்வு செய்யவே முடியாது என்பதே யதார்த்தம். கிடைக்காத புத்தகங்களை வாங்கவா? இது ஒரு மாயை. கிடைக்காத புத்தகங்கள் எங்கேயும் கிடைக்காது. 🙂 ஒருவேளை இங்கே கிடைக்கத் தொடங்கினால் பின்பு எங்கேயும் கிடைத்துவிடும்.

இன்றைய நிலையில் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களை வாங்க ஆயிரம் வழிகள் உள்ளன. எத்தனையோ இணையக் கடைகள் வந்துவிட்டன. அலைச்சல் இல்லாமல் பொறுமையாகப் பார்த்து வாங்கலாம். தள்ளுபடி கிடைக்காது. கொரியர் செலவு கூடுதல் ஆகும். ஆனால் ஒருவர் தன் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வந்து செல்ல ஆகும் செலவைவிடக் குறைவாகவே ஆகும். ஆனாலும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். எழுத்தாளர்களுடன் பேசலாம் என்பதற்காகவா? இதற்காக வருபவர்கள் குறைவே. விற்கும் புத்தகங்களில் 5% எழுத்தாளர்களை இவர்களுக்குத் தெரிந்திருந்தாலே அதிகம் என நினைக்கிறேன். எப்படியோ சென்னை புத்தகக் கண்காட்சி பெரிய ஒரு பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு இயக்கமாகவே ஆகிவிட்டது. ஒரு வகையில் இது மகிழ்ச்சிதான். பெரிய சாதனைதான். ஆனாலும் எனக்கு இதற்கான விடைதான் கிடைக்கவில்லை.

ஒன்றே ஒன்று சொல்லலாம். இத்தனை பெரிய புத்தகக் கண்காட்சியில் அலைந்து, எளிதாக எங்கேயும் கிடைத்துவிடும் இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு மனநிறைவுடன் சென்றாலும்கூட அது ஒருவகையில் தோல்வியே. அரிய புத்தகங்களைத் தேடி வாங்கிக்கொண்டால் புத்தகக் கண்காட்சியின் பயன் முழுமையாகக் கிடைக்கலாம். எளிதாகக் கிடைக்கும் புத்தகங்களை எங்கேயும் பிறகு வாங்கிவிடலாம். இன்னொரு தேவை, குழந்தைகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துவது. அப்போதும் புத்தகம் வாங்கும் பழக்கமும், அதற்குப் பின் ஒருவேளை அதைப் படிக்கும் வழக்கமும் வரலாம். இதுவே புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியத் தேவை என்று நினைக்கிறேன்.

புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. நம் நேரம், பணம் என எதையும் வீணாக்கமல் பயன்படுத்த யோசித்துச் செயல்படவேண்டும்.

Share

Comments Closed