கள நிலவரம் என்னும் கலவரம்

1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய தோல்வி கண்டது. வரலாறு காணாத தோல்வி அது. எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் கூட. 1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றே கருதினார்கள். ஒட்டுமொத்த தேர்தல் கணிப்புகளும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. பல ஊடகங்கள் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றே எழுதின. அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்று கூட மக்கள் சொல்ல கூச்சப்பட்ட நேரம் அது. ஆனால் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியே ஜெயலலிதாவுக்கு மீட்சியாக அமைந்தது என்று சொன்னாலும் மிகையில்லை.

2006 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வெல்லும் என்றே நான் கருதினேன். ஆனால் சிலர் நிச்சயம் அக்கூட்டணி தோற்கும் என்று சொன்னார்கள். நான் எப்படி பாஜக ஆதரவாளனோ, அப்படியே அந்தச் சிலர் திமுக ஆதரவாளர்கள். எனவே நான் அவர்கள் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதுதான் அந்த வார்த்தையை அவர்கள் சொன்னார்கள். கள நிலவரம்! எனக்குக் கள நிலவரம் எதுவும் தெரியவில்லை என்று அவர்கள் சொன்னதில் தவறேதுமில்லை. அதேசமயம் தங்களுக்குக் கள நிலவரத்தின் நாடி கச்சிதமாகத் தெரியும் என்றார்கள். தேர்தல் முடிவு நான் சொன்னபடி இருக்கவில்லை. அவர்கள் ஆரூடம் சொன்னபடித்தான் அமைந்தது.

2011 தேர்தலில் அதே சிலர் கள நிலவரத்தின்படி மீண்டும் திமுகவே வெல்லும் என்றார்கள். நான் நிச்சயம் அதிமுக வெல்லும் என்றேன். எனக்குக் கள நிலவரம் தெரியவில்லை என்று மீண்டும் சொன்னார்கள். கள நிலவரம் என்ற அந்த வார்த்தை எனக்குள் பெரிய கலவரத்தைக் கொண்டு வந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டேன். தேர்தல் முடிவில் அதிமுக பெரும்பான்மை பெற்றது. 2006ல் கள நிலவரத்தைச் சொன்ன திமுக ஆதரவாளர்களின் கூற்றுப்படி அது தனிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது தனிக்கதை. திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும், திமுக தனிப் பெரும்பான்மை பெறாத சிறுபான்மை அரசாகவே அமைந்தது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி நிச்சயம் வெல்ல வாய்ப்பில்லை என்று களநிலவரக்காரர்கள் சொன்னார்கள். நிச்சயம் மோடி வெல்வார் என்று நான் சொன்னேன். குறைந்தது 250 சீட்டுகள் வெல்லும் என்றும், கூடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரப்படி அப்படி இல்லை என்றார்கள். எல்லாக் கள நிலவரத்தையும் தவிடுபொடியாக்கி தேசிய ஜனநாயக் கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வென்று சாதனை படைத்தது.

2016ல் மீண்டும் அதிமுக கூட்டணி வெல்லும் என்று நான் சொன்னேன். மக்கள் நலக்கூட்டணி 7%க்கு மேல் வாக்குகளைப் பெறாது என்றும், அது ஒரு இடத்தில்கூட ஜெயிக்காது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரக்காரர்கள் அடித்துச் சொன்னார்கள். திமுகவே நிச்சயம் வெல்லும் என்றார்கள். என் மேல் மீண்டும் அதே கள நிலவரப் புகார். ஆனால் தொடர்ச்சியாக இரண்டு முறை வென்று, எம்ஜியாருக்குப் பின்னர் ஜெயலலிதா புதிய வரலாற்றைப் படைத்தார்.

இப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று நான் நம்புகிறேன். இப்போதும் அதே நண்பர்கள் கையில் களநிலவரக் குண்டாந்தடியுடன் வருகிறார்கள். தங்களது முந்தைய கள நிலவரங்கள் பிசுபிசுத்துப் போனதில் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. இந்தியாவெங்கும் கள நிலவரம் நிச்சயம் பாஜகவுக்கு எதிராக இருக்கிறது என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள். தேர்தல் முடிவின்போது களநிலவரம் புரிந்துவிடும்.

கள நிலவரம் என்பது ஒரு மாயை. அது யாருக்கு எப்படிப் பார்க்கப் பிடிக்கிறதோ அப்படி முகம் காட்டும். முடிவில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் நாங்கள் அன்றே கள நிலவரத்தைச் சொன்னோம் என்று பெருமை பட்டுக் கொள்வார்கள். தோற்றவர்களோ, ஒரு மாய அலை இருந்ததைக் கணிக்கமுடியவில்லை என்பார்கள்.

ஒவ்வொரு தேர்தல் கணிப்பிலும் இந்த கிரண்வுட் ரியாலிட்டி என்னும் கள நிலவரம் என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். அறிவியல் ரீதியாக நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் கணிப்புகள் தோற்கக் காரணம் என்ன? கள நிலவரம் என்ற சொல் பொய்த்துப் போவது ஏன்? இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் கணிப்புகளை ஓரளவுக்குத்தான் சொல்லமுடியும். அவை நிச்சயம் வெல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தக் கணிப்புகள் ஏன் குறைபாடுள்ளது என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. இவர்கள் குறைபாடுகளை மறந்துவிட்டு, கணிப்புகளை மட்டும் நம்புவார்கள்.

உண்மையில் வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் உண்மைத்தன்மையை அப்படியே வெளிப்படையாகக் கணிப்புகளில் சொல்வதில்லை. முன்பெல்லாம் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குச்சாவடிக் கணிப்புகள் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது இவையும் சரியாகக் கணிப்புகளைச் சொல்வதில்லை. காரணம், மக்கள் தங்கள் வாக்கைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். அதிமுகவுக்கு வாக்களித்தோம் என்று சொல்லக் கூச்சப்படலாம். பாஜகவுக்கு வாக்களித்ததைச் சொன்னால் மதவாதி என்ற முத்திரை கிடைக்கலாம் என நினைக்கலாம். ஜாதிக்கட்சிக்கு வாக்களித்ததைச் சொல்ல அஞ்சலாம். இப்படிப் பல காரணங்கள். எனவே கள நிலவரத்தை நம்பி மட்டுமே நாம் முடிவைக் கணித்துவிடமுடியாது. 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் தமிழ்நாட்டு முடிவுகளே இதற்குச் சரியான உதாரணம்.

அதேசமயம் இந்தக் கணிப்புகள் சுவாரஸ்யமான விளையாட்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. இரண்டு மாதங்கள் ஊடகங்களுக்கு இவை பெரிய உற்சாகத்தையும் செய்திகளையும் தருகின்றன. மற்ற பொருளற்ற பயனற்ற விளையாட்டைப் போல இது இல்லாமல், பயனுள்ளதாக இருக்கிறது என்பதாலேயே, கள நிலவரத்தை ஒரு பொருட்படுத்தத்தக்க விளையாட்டாகக் கருதி விளையாடலாம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 330 இடங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். அல்லது விரும்புகிறேன்! தமிழ்நாட்டில் என்ன ஆகும்?
அதிமுக கூட்டணி 15 இடங்கள் வரை வெல்லலாம். திமுக ஹிந்துக்களை மட்டுமே சீண்டுகிறது என்ற எண்ணம் இன்று பெரிய அளவில் பரவி இருக்கிறது. அது இன்னும் பொதுமக்கள் மத்தியில் கூடுதலாகப்‌ பரவி, ஹிந்து வாக்கு வங்கி என்பதன் முதற்படியை ஒருவேளை அடைந்தால் தேர்தல் முடிவின்போது திமுகவுக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கும்.

Share

Comments Closed