பெருவலி நாவல்

கடந்த ஆண்டு ருசிர் குப்தாவின் Mistress of Throne புத்தகத்தைப் படித்தேன். பேஹம் சாஹிப் என்றறியப்பட்ட முகலாய இளவரசி ஷாஜஹானின் மகள் ஜஹானராவைப் பற்றிய நாவல். இந்த நாவல் மேம்போக்காக எழுதப்பட்டதல்ல. மூல ஆவணங்களைப் படித்துத் தரவுகளுடனும் தரவுகள் இல்லாத இடத்தில் புனைவைக் கொண்டு இணைத்து எழுதப்பட்ட ஒன்று. ஜஹானரா, மும்தாஜ், ஷாஜஹான், தாரா ஷுக்கோ, ஔரங்கசீப், ஜனானா பெண்கள் மற்றும் அந்தக் காலத்திய அரசியல் நடவடிக்கைகளை மிக விரிவாக விளக்கும் நாவல்.

இதே பின்னணியில் எழுதப்பட்ட நாவல் சுகுமாரனின் பெருவலி. காலச்சுவடு வெளியீடு. இதற்கு முன்பு ஜஹானரா குறித்து வெளியான புத்தகங்களின் பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்து உழைத்து எழுதி இருக்கிறார் சுகுமாரன். ருசிர் குப்தாவின் ஆங்கில நாவலில் இருந்து இந்நாவல் வேறுபடுவது, இந்நாவலின் அசர வைக்கும் தமிழ் நடையின் மூலமாக. ஒரு தீவிரமான இலக்கியப் புனைவை வாசிக்கும் இன்பத்தைக் கொண்டு வருகிறது சுகுமாரனின் பெருவலி.

யார் எழுதினாலும் ஷாஜஹானின் கடைசி காலக் கட்டம் குறித்த விவரணைகள் பெரும் பதற்றத்தைக் கொண்டு வந்துவிடும் போல. காமத்திலும் ரத்தத்திலும் தோய்ந்து கிடந்த ஒரு பேரசசன், தான் செய்தவற்றின் இன்னொரு உருவாக வந்து நிற்கும் தன் மகன் ஔரங்கசீப்பிடம் மண்டியிடுகிறான். அதே துரோகங்கள், அதே ரத்தம், அதே படுகொலைகள் மீள அரங்கேறுகின்றன. அதற்குள் தாஜ்மஹாலின் மூலம் உலகில் நிலையாப் புகழைப் பெற்று விடுகிறான் ஷாஜஹான்.

முகலாய இளவரசிகளுக்குத் திருமணம் கிடையாது என்பது விதி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணமானால் அவர்களது கணவன் மூலம், அரசர்களின் ஆண் வாரிசுக்குப் போட்டி உருவாகலாம் என்பதே எண்ணம். இதனால் ஜனானாவில் இருக்கும் இளவரசிகள் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குள்ளே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தனி அரசைச் செலுத்துகின்றன. ஆளாளுக்குக் கையாளாக நபும்சகர்கள் இருக்கிறார்கள். தங்கள் இளவரசிகளின் கற்பைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இரவுகளில் நிகழும் ரகசியச் சந்திப்புகளில் யாரும் யாருக்கும் எந்தவித உத்தரவாத்தையும் அளிக்கமுடிவதில்லை. ஜஹானராவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஔரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஷாஜஹானுக்குத் துணையாக, அவரது மிக அன்பான மகள் ஜஹானராவும் அங்கேயே தங்கிவிடுகிறாள். அப்போது அவள் பாரசீக மொழியில் எழுதி, யார் கண்ணுக்கும் படாமல் மறைத்துவைக்கப்பட்ட குறிப்புகள் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின்றன. The Life of Mogul Empress Jahanara Begum, the daugher of Shajahan by Andrea Butenshon என்ற இந்த நூல் 1938ல் வெளியாகிறது. இது இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை.)

இந்த நூலை மையமாக வைத்தும் பிற நூல்களைப் படித்தும் தனக்கென ஒரு புனைவை உருவாக்கி இருக்கிறார் சுகுமாரன். ஜஹானராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூடகமான மொழியை மிகக் கச்சிதமாக உருவாக்குகிறார். கனவிலும் அரை நினைவிலும் நடக்கும் நிகழ்வுகளுகாக அவை அட்டகாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இடைவெளிகளை நிரப்ப கனவுகளையும் அவற்றுக்கான சூஃபிக்களின் விளக்கங்களையும் பயன்படுத்துகிறார் ஜஹானரா. ருசிர்குப்தா மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் இதனை சர்ரியலிஸப் பாணியைப் பயன்படுத்திக் கடக்கிறார்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளான ஜஹானராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை மிகக் குறைவான வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கடக்கிறது பெருவலி. ருசிர் குப்தாவின் நாவலும் இதே பகுதிகளை மிக இறுக்கமாகப் பேசுகிறது. மிகத் தெளிவாக இவற்றுக்கு நிரூபணம் இல்லை என்கிறார் ருசிர் குப்தா. ஆனால் சுகுமாரன் பூடமாகச் சொல்லும் ஜஹானாராவின் காதலை மிக வெளிப்படையாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஜஹானாராவுக்கும் அவர் சந்திக்கும் மருத்துவர் கேப்ரியல் (இது உண்மையான பெயரல்ல) என்பவருக்கும் இடையே உறவு இருந்ததாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்றும், ராஜபுத்திர அரசர் சத்ரசால்-க்கும் இடையேதான் உறவு இருந்திருக்கும் என்று எடுத்துக்கொண்டு செல்கிறார் சுகுமாரன். முதலில் ராக்கி அணியத்தக்க உறவு என்று ஜஹானாரா சொன்னாலும் பிற்பாடு சத்ரசால் மீதான தனது காதலைப் பதிவு செய்திருக்கிறாள் என்ற உண்மையிலிருந்து இதனை நோக்கிப் போகிறார் சுகுமாரன்.

ஔரங்கசீப்பின் இளமைப் பருவத்தையும் மற்ற விவரங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறது ருசிர் குப்தாவின் நாவல். சுகுமாரனின் நாவல் இவற்றை மிகச் சுருக்கமாக, தேவையான அளவுக்கு மட்டுமே சொல்கிறது. தாரா ஷூக்கோவின் ஹிந்து மதத்தின் மீதான ஆதரவும், ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடுவதும் கூட மிகச் சில குறிப்புகளாக மட்டுமே பெருவலி நாவலில் வெளிப்படுகின்றன. நாவலின் முதல்பாகம் பானிபட் எனப்படும் நபும்சகனின் பார்வையில் விரிவதாலும், இரண்டாம் பாகம் ஜஹானராவின் பார்வையில் விரிவதாலும் இப்படிச் சொல்லவேண்டி வந்திருக்கலாம்.

சுகுமாரனின் நாவல் மிகச் செறிவானது. சுகுமாரனின் தமிழ் நடை நம்மை உள்ளிழுத்துக் கொள்வது. மிக நல்ல முக்கியமான நாவல். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நாவல்.

ருசிர் குப்தாவின் நாவல் எளிமையான ஆங்கிலத்தில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒன்று. அதனைத் தமிழில் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆனால் எவ்வளவு விற்கும் என்பது தெரியாது. J

இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தவறவிடக்கூடாதது, பிற்சேர்க்கைப் பகுதியை. பெருவலி நாவலில் சுகுமாரனின் குறிப்பு உள்ளது. இது நாவல் குறித்த பல சந்தேகங்களை நீக்கும். மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் ருசிர் குப்தாவின் பேட்டி உள்ளது. மிக முக்கியமான பேட்டி.

சுகுமாரனின் தன் குறிப்பில், இந்நாவலை எழுதுவதற்குக் காரணம், வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அதன் இக்காலத்து அரசியலைத் தொடர்புப்படுத்திப் பார்க்கத்தான் என்று சொல்கிறார். உண்மையில் மீண்டும் மீண்டும் இந்த அரசியல் நிகழ்வுகள் அதேபோன்ற அரசியல் நிகழ்வுகளாகவும் அல்லது வேறு வகையிலான நிகழ்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இதே கதைகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்றைய நிலையில் பொருத்தி மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுத்துவிடமுடியும். என்றைக்கும் செல்லுபடியாகும் கதைகளாகவே அவை இருக்கின்றன என்பது உண்மையானதுதான்.

பெருவலி நாவலைத் தவறவிட்டுவிடாதீர்கள். நிச்சயம் வாசியுங்கள்.

Share

Comments Closed