சிசிடிவி கேமராக்களின் தொல்லை

சிசிடிவி கேமராக்களினால் இன்று மிகப்பெரிய நன்மை வந்துள்ளது. பல வழக்குகளை விரைந்து முடிக்க இவை உதவி உள்ளன. ஆனால் எனக்கு வேறு மாதிரியான பிரச்சினை. என்னைப் போன்றே பலர் கோடிக்கணக்கில் இருப்பார்கள் என்பது உறுதி. எதிர்பாராத நேரத்தில் யாரோ எப்படியோ செத்துப்போன அல்லது கொலை செய்யப்படும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் வீடியோக்களைப் பார்க்க நேர்ந்து விடுகிறது. இதனால் ஏற்படும் பதற்றம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுவும் வாட்ஸப் வந்தபிறகு இந்த மாதிரி வீடியோக்கள் கொட்டுகின்றன.

பொதுவாகவே எனக்கு நல்ல வீடியோக்கள் உள்ளிட்ட எந்த வீடியோவையும் முழுவதுமாகப் பார்க்க பெரிய எரிச்சலாக இருக்கும். படிப்பதுதான் எளிதானது. ஆனால் இது வீடியோக்களின் காலம். எனவே பல முக்கியமான தகவல்களைத் தவற விடக்கூடாது என்பதற்காக வீடியோக்களைப் பார்த்தே ஆகவேண்டிய தேவை உள்ளது. அதற்கிடையில் இதுபோன்ற கொடூரமான வீடியோக்கள் தரும் எரிச்சலைச் சொல்லி முடியாது.

இருபது வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒரு வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. எதோ செய்தி என்று பார்த்தால், ஒரு கோவில் குளத்தில் ஒரு மனநிலை சரியில்லாத நபர் தன்னைக் காப்பாற்ற வந்தவரை நீரோடு முக்கிக் கொல்லும் வீடியோ! அந்த வீடியோ தந்த அச்சம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதேபோல் ஒரு யானை தன் பாகனை விரட்டி விரட்டிக் கொல்லும் வீடியோவையும் சன் டிவி ஒளிபரப்பியது. அதிலிருந்தே இது போன்ற வீடியோக்கள் மீது பெரிய அச்சம் எனக்கு.

சமீப காலமாக சிசிடிவியில் பதிவாகும் அனைத்துக் கொலைகளையும் தற்கொலைகளையும் உடனே எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புகிறார்கள். அது வாட்ஸப்பில் வருகிறது. ஃபேஸ்புக்கில் பரப்பப்படுகிறது. இவற்றிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. காலையில் எழுந்ததும் சாதாரணமாக செய்திகளைப் பார்க்கலாம் என்று தொலைக்காட்சிகளில் பார்த்தால் இதுபோன்ற கொடூரமான வீடியோக்களைத் தொடர்ச்சியாக ஒளிபரப்புவார்கள். எல்லாத் தொலைக்காட்சிகளுக்கும் இதுதான் வேலை என்றாலும், பாலிமர் நியூஸ் இதைச் சிறப்புக் கவனம் எடுத்துச் செய்யும். இன்று காலைகூட அப்படி ஒரு செய்தி. (இது பாலிமரில் அல்ல!) பேருந்தின் முன் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஒரு இளைஞர்! நல்லவேளை, அவர் உயிர்தப்பிவிட்டார். சில வீடியோக்களில் மனிதன் மண்ணால் பிசைந்த பொம்மை போல நசுங்கிப் போவதையெல்லாம் காண்பிப்பார்கள்.

இன்னும் சில வீடியோக்கள் சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கொடூரமானவையாக இருக்கும். சில நொடிகளுக்குள் அது ஓடி முடிந்துவிடும். எனக்குத்தான் பல மணி நேரம் பதற்றம் நிற்காது. எத்தனை முறை சொன்னாலும் யாராவது ஒருவர் இப்படியான வீடியோக்களைப் பார்த்துவிட்டு சரியாக நமக்கு அனுப்பித் தொலைவார்கள். இவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது என்றே தெரியவில்லை.

இப்போதெல்லாம் எதாவது வீடியோ வந்தால், உடனே அதை அப்படியே ஃபார்வேட் செய்து கடைசி சில நொடிகளைப் பார்ப்பேன். ஒன்றும் பிரச்சினை இல்லை என்றால் மட்டுமே, முழுவதுமாக முதலில் இருந்து பார்ப்பேன். இத்தனை தவிர்த்தும், நான் சமீபத்தில் பார்க்க வைக்கப்பட்ட இதைப் போன்ற வீடியோக்கள் ஐந்தாவது இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்படி இந்த வீடியோக்களை எல்லாரும் சாதாரணமாகப் பார்த்துவிட்டு சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள் என்றே தெரியவில்லை.

Share

Comments Closed