காப்பான் – திரைப்பட விமர்சனம்

தீவிரமான கமர்ஷியல் படங்களை எடுக்க நாம் இன்னும் பழகவில்லை. உண்மையில் பழக விரும்பவில்லை. வணிகத் திரைப்படங்கள் என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ஒரு காட்சியை எப்படி எடுத்தாலும் அது ஒரு ஹீரோயிஸப் படமென்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். நம் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இதனால் வணிகத் திரைப்படங்கள் ஏனோதானோவென்று எடுக்கப்படுகின்றன.

சமீபத்தைய ட்ரெண்டாக, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை, அதன் ஆழம் புரிதல் எதுவுமின்றி அப்படியே மேம்போக்காக ஒரு வசனமாகப் பயன்படுத்தும் போக்கும் பரவலாக இருக்கிறது. அல்லது சில காட்சிகளை சும்மா பயன்படுத்திக்கொள்வது. இந்த காப்பான் படத்தில் அப்படிப் பலவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக இவர்கள் எடுத்துக்கொண்டிருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை.

நிலம் முக்கியம், திட்டங்கள் முக்கியமல்ல என்று எங்கெல்லாமோ சுற்றி சுற்றி வந்து சொல்லி இருக்கிறார்கள். அதை இவர்கள் கையாண்ட விதத்தைப் பார்த்தால், ‘விவசாயி தற்கொலை செய்துகொள்வதே பரவாயில்லை’ என்று மக்கள் சொல்லிவிடும் அளவுக்கு உள்ளது. ஏகப்பட்ட விஷயங்களையெல்லாம் அப்படியே படத்தில் பயன்படுத்தி, ஒட்டுமொத்தமாக இந்தப் படம் சொல்ல வருவதுதான் என்ன என்பதில் பெரிய குழப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்திய முக்கியம், காஷ்மீர் முக்கியம், தீவிரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும், மிக நல்ல பிரதமர் வர்மா (மோகன்லால் – நரேந்திர மோடி போன்ற கெட்டப்), அவரது மகன் அதைவிட நல்லவர்! இப்படி ஒரு கதை. இவரை கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்கிறது. பிரதமரைக் கொல்கிறார்கள். பிரதமர் மகன் (ஆர்யா) மறு பிரதமராக, அந்த நல்லவரையும் கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்க, அதற்கு போலிஸில் இருப்பவர்களே உதவ என்று என்னவெல்லாமோ சுழற்றி அடிக்கிறார்கள். படத்தில் திருப்பம் இருக்கலாம், அதற்காக திருப்பங்களே படமாக இருந்தால் பார்க்கவேண்டாமா? முறுக்கு சுற்றுவது போல இழுத்துக்கொண்டே போகிறார்கள்.

ரகசிய போலிஸான சூர்யா குண்டு வைக்கிறார். அடுத்த நிமிடமே களை பறிக்கிறார், நீர் பாய்ச்சுகிறார். வெளிநாட்டில் பிரதமரைக் கொலையில் இருந்து காப்பாற்றி, காதலியிடம் இரட்டை வசனம் பேசுகிறார். மீண்டும் விவசாயியாகி விவசாயம் விவசாயம் என்று தஞ்சாவூர் விவசாயிகளுக்குக் கொடி பிடிக்கிறார். மனிதனின் மலத்தை உரமாக்கி அதைக் கொண்டு எக்கசக்கமாக உணவை விளைவிக்கிறார். அடுத்த காட்சியிலேயே பிரதமருக்கு அருகில் அவரது காப்பானாக நிற்கிறார். இத்தனை அசட்டையாக இனி யாராலும் படம் எடுக்க முடியாது.

கதையில் எதாவது பதறும்படி வைக்கவேண்டும் என்பதற்காகவும், அது புதுமையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் ஒரு பூச்சியைக் கண்டுபிடித்து உலவ விட்டிருக்கிறார்கள். அது குட்ஸ் ட்ரைனில் கொண்டு வரப்படுகிறது. அதை சூர்யா முறியடிக்கிறார். இதற்கிடையில் காதலும் செய்கிறார். நட்பையும் கொண்டாடுகிறார். பிரதமரை அபி அபி என்று பெயர் சொல்லி அழைக்கிறார். உரம் போட்ட விவசாயத்தை வெளுத்து வாங்குகிறார். அதாவது விவசாயிகளிலும் இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவாம். இதில் ஆர்கானிக் விவசாயத்தைவிட இயற்கை விவசாயம் ஒரு படி மேல் என்கிறார். இந்தியா போன்ற நாடுகளில், உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை நம்பி விவசாயம் செய்யவில்லை என்றால், உணவுக்கு நாக்குதான் வழிக்கவேண்டி இருக்கும். அப்புறம் மனிதர்களுக்கு மலமும் வராது, அதிலிருந்து உரமும் வராது. ஆனால் இதையெல்லாம் சூர்யா கமுக்கமாகப் பேசாமல் இருந்துவிடுகிறார்.

இதற்கிடையில் சூர்யாவுக்கு ரசாயண குண்டுகளை அழிப்பது, காஷ்மீர் பணி, பாகிஸ்தான் போவது, அங்கிருந்து ஒரு நதியில் குதித்து தப்பித்து இந்தியா வருவது, இங்கே காதலித்துக்கொண்டே அங்கே பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரியைப் போட்டுத் தள்ளுவது என்று ஏகப்பட்ட வேலைகள். என்னவெல்லாமோ செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர் பிரதமராகிவிட்டால் வீட்டுக்கு ஓடி வந்துவிடவேண்டும் என்று நினைத்தேன், நல்லவேளை அப்படி எதுவும் சம்பவிக்கவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜ் – கொடுமை.

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில், கெத்தாக எவ்வித அலட்டலும் இல்லாமல் நடிக்கும் மோகன்லாலைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

இந்திய ஆதரவு, மோடியைக் குறை சொல்லாமல் இருப்பது, அதே சமய கார்ப்பரேட்டைக் குறை சொல்வது, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று பலவற்றையும் பேசி, எதையும் உருப்படியாகச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். சூர்யாவுக்கு வேறு ஏதேனும் கணக்குகள் இருந்தால் அது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகவே ஆகும்.

கே.வி. ஆனந்தின் பொறுத்துக்கொள்ளவே முடியாத தரை வணிகப்படங்களில் கவணுக்கு அடுத்து இது!

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

Comments Closed