வெட்டுக் கிளிகள்

‘தம்பி, திடீர்னு வெட்டுக் கிளிகளா வருதுன்னா அது சும்மா இல்லை’ என்றார் அந்தப் பெரியவர். டீக்கடையில் ஏதோ சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. அதையும் மீறி அவர் என்னிடம் பேசினார். ஏன் என்னைத் தேடி வந்து பேசுகிறார் என்பது புரியவில்லை. கையில் ஒரு மஞ்சள் பை வைத்திருந்தார். நடுத்தர வயது. நெற்றியில் சுருக்கங்கள் தெரிந்தன. காப்பி கலரில் ஒரு வேட்டி அணிந்திருந்தார். வெளுத்துப் போய் சுருக்கங்களுடன் இருந்த வேட்டி முழுங்காலுக்கு மேல் சுருண்டு கிடந்தது. நான் ஆர்வம் இல்லாமல் அவரைப் பார்த்தேன்.

‘திடீர்னு வெட்டுக் கிளிங்க இருந்திருந்தாப்ல எங்கேர்ந்து வரும்?’ என்றவர் சொன்னார், ‘எல்லாம் நம்மவங்க ஆத்மா தம்பி. ஆத்மா. உங்களுக்கு நம்பிக்கை உண்டா இல்லையான்னு தெரியல. ஆனா எனக்கு சந்தேகமே இல்ல, ஆத்மா’ என்றவர், டீக்காரரிடம் தனக்கு ஒரு டீ சொல்லிக்கொண்டார். ‘எல்லா ஆத்மாவும் வெட்டுக் கிளிங்களா வந்திருக்கு தம்பி. அதுவே புலியாவோ சிங்கமாவோ வந்திருந்தா? யோசிக்கவே திக்குன்னு இருக்குல்ல? அதுதான் தம்பி, பாவத்துலயும் கொஞ்சம் புண்ணியம் பண்ணிருக்கோம்ன்றேன். இப்பல்லாம் யாரு தாத்தா பாட்டிய நினைக்கிறா, அம்மா அப்பாவை நினைக்கிறா? ஒரு தவசம் இல்லை, பிண்டம் இல்ல. எதுக்கு ஓடறோம்னு தெரியாம ஓடறோம். அதான் தம்பி எல்லா ஆத்மாவும் ஒண்ணா கிளம்பி வந்திருக்குங்க. ஒரு பக்கம் கோவம், ஒரு பக்கம் சோகம் அதுங்களுக்கு’ என்றவர் என்னையே பார்த்தார். என்னைத் தேடி வந்து ஏன் பேய்க்கதை சொல்கிறார் என்ற ஆச்சரியத்தில் இருந்து நான் விடுபடவில்லை. தன் மஞ்சள் பையைத் திறந்து அதிலிருந்து மண்ணாலான வெட்டுக் கிளியை எடுத்தார். என் கண் முன் நீட்டியவாறே, ‘இதை எடுத்துட்டுப் போய் வீட்ல தண்ணில கரைங்க தம்பி. உங்க வீட்ல இருக்கிற ஆத்மா அமைதியாகட்டும். பணமெல்லாம் நீங்க ஒரு பைசா தரவேண்டியதில்லை’ என்றார். நான் சிரித்துக்கொண்டே வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகிப் போனேன்.

*

வாட்ஸப்பில் வந்த செய்தியைப் படித்துவிட்டு அத்தை என்னிடம் கேட்டாள், ‘எங்கடா கிடைக்கும் இந்த களிமண் வெட்டுக்கிளி?’

Share

Comments Closed