கணிகன்

தென்கரைமுத்து எப்போதாவதுதான் என் அலுவலகத்துக்கு வருவான். சென்னையின் மிகப் பிரபலமான வண்ணத்துப் பூச்சி மேம்பாலத்துக்கு அருகே உள்ள ஒரு பழைய கட்டடத்தில் அலுவலகம். தேசலான காகிதம் காற்றில் மிதந்து வருவதுபோல வரும் தென்கரைமுத்து எங்கள் அலுவலகத்தில் டீ கொண்டு வந்து தரும் பெண்ணையே பார்த்துக்கொண்டிருப்பான். அவள் ஆயிரம் கஷ்டங்களில் அலைந்தபடி இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டாள். அவள் மதிக்காததை இவன் மதிக்கவே மாட்டான். அவளையே பார்த்தபடி இருப்பான்.

இன்று தென்கரைமுத்து வந்திருந்தான். கூடவே கருத்த கோடு போல ஒரு பையனும் வந்தான். தென்கரைமுத்து நேரே என் அறைக்கு வந்து எனக்கு எதிரே உட்கார்ந்துகொண்டான். கூட வந்த பையன் கையைக் கட்டி நின்றுகொண்டிருந்தான். “டீ சொல்லவால?” என்ற கேள்வியை தென்கரை கண்டுகொள்ளவே இல்லை. ஆச்சரியமாக இருந்தது.

பக்கத்தில் இருக்கும் பையனைக் காட்டி, “இவன் ஜோசியம் சொல்வானாம்” என்றான். ஜோதிடமெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பது தென்கரைக்குத் தெரியும். “எல்லாம் பித்தலாட்டம்” என்று சொல்ல வாயெடுத்தவன், அருகில் நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்து அமைதியானேன். தென்கரை சொன்னான், “பித்தலாட்டம்னுதான சொல்ல வார? அவனுக்கு காது கேக்காது, வாயும் பேச வராது. நீ என்ன வேணா சொல்லலாம்.”

ஆச்சரியமாக அவனைப் பார்த்தேன். பிறகு எப்படி ஜோசியம் சொல்வான்? ஆர்வமாக எங்கள் கண்களையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“எங்க ஆஃபிஸ்ல நாலஞ்சு பேருக்கு பாத்தான். அப்படியே நேர்ல பாத்தாமாரி சொல்லுதாம்ல. அதான் இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். ஜோசியம் பாக்க காசே வேண்டாங்கான். ஒரு டீ போதுங்கான்” என்றான். சிரித்தபடியே, “இப்படித்தாம்ல ஆரம்பிப்பானுவொ. பின்னாடி பரிகாரம்பான், செய்வினைம்பான், எடுக்கணும்பான்” என்றேன். “அப்படி சொன்னா கூட்டி வருவேனால?” என்று தென்கரை சொன்னதும் அந்தப் பையனை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தேன். அதிகபட்சம் 20 வயது இருக்கலாம். கருத்து மெலிந்து கைகளைக் கட்டிப் பணிவாக நின்றவன் ஆர்வமாக எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“மொதல்ல நான் பாக்கேன். எங்க ஆஃபிஸ்ல வெச்சி பாத்து இவன் எதாவது ஏடாகூடமா சொல்லிட்டா பிரச்சினைன்னுதான் இங்க கூட்டியாந்தேன்” என்றவன், தன் கையை அந்தப் பையனிடம் நீட்டினான்.

அந்தப் பையன் அவன் கைகளைக் கூர்ந்து நோக்கிவிட்டு, சைகையில் சொல்ல ஆரம்பித்தான். தென்கரையின் அப்பா கண்டக்டராக இருந்தவர். அம்மாவுக்கு தீராத வியாதி. இவன் ஒரு பையன் மட்டுமே. இவனுக்கும் ஒரு பையன் மட்டுமே. பையனுக்கு எதிர்காலம் கணினி துறையில். எல்லாவற்றையும் சொன்னவன், தென்கரைக்குப் பெண்கள் மேல் இருந்த தீரா மயக்கத்தையும் சொல்ல ஆரம்பித்தான். பெண்கள் போல் சைகை செய்தவன் அவனைப் பார்த்து 4 விரல்களைக் காண்பித்து பின்னர் நான்கு நான்கு விரல்களாக நான்கைந்து முறை காண்பிக்கவும் தென்கரை சொன்னான், “சரிடே.. நிறுத்துடே” என்றவன் என்னைப் பார்த்து, “தாயலி.. கூட இருந்து பாத்த மாதிரியே சொல்லுதானே.”

தென்கரை என் கையைக் காட்டச் சொன்னான். “படுத்தாத.. இதெல்லாம் ஃப்ராடு” என்றேன். “புட்டு புட்டு வைக்கான் கண்ணு முன்னாடியே.. பணம் வேண்டாங்கான். இதுல என்னல ப்ராடு?” என்றவன் என் கையை இழுத்து அவனிடம் நீட்டினான். அந்தப் பையன் என் கைகளைக் கூர்ந்து நோக்கினான். பின்னர் என் கண்களைக் கூர்ந்து நோக்கினான். உடனே பெண் போல சைகை செய்து, கழுத்தில் தாலி கட்டுவது போலவும் சைகை செய்து, ரெண்டு ரெண்டு என்று விரல்களைக் காட்டினான். தென்கரை என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான், “அடப் பக்கி.. ஃப்ராடு நீதாம்ல.”

அவனிடம் இருந்து கைகளை உதறிக்கொண்ட நான், உடனே என் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து, கையெடுத்துக் கும்பிட்டு அவனைப் போகச் சொன்னேன். “எதுக்குல இவ்ளோ பணம்?” என்று சொன்ன தென்கரையை நான் பொருட்படுத்தவே இல்லை. பணத்தை வாங்கிக்கொண்ட அந்தப் பையன் என் கண்களையே கூர்ந்து பார்த்துவிட்டு வெளியே போனான். அவன் போனதும் தென்கரை சொன்னான், “எதுக்குல இவ்ளோ பணம் கொடுத்த? ஏன் இப்படி பதர்ற? உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் சொல்லிட்டா ஆச்சா?”” நான் சொன்னேன், “அவன் ரெண்டு பொண்டாட்டின்னு சொன்னதே கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு மக்கா. அதான்.”

Share

Comments Closed