சில மலையாளத் திரைப்படங்கள்

Spoilers ahead.

ஈட (ம) – மலையாளப் படங்கள் பொதுவாக மெல்ல நகரும் படங்கள் என்றால், இப்படம் மெல்ல மெல்ல மெல்ல நகரும் படம். ஹிந்துத்துவவாதிகளைச் சேர்ந்த ஒரு பையனும் (ஆனால் தீவிரமான ஹிந்துத்துவவாதி அல்ல), தீவிர கம்யூனிஸ்ட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். தீவிர கம்யூனிஸ்ட், தீவிர ஹிந்துத்துவவாதி என்று சொன்னால் கூடப் போதாது. இருவரும் கண்ணூர்க்காரர்கள்! தொடர்ந்து மாறி மாறி அரசியல் கொலைகள் செய்யும் ‘பழக்கம்’ உள்ளவர்கள். யார் உயிர் யாரால் எப்போது போகும் என்று தெரியாது. அப்படியான இடத்தில் ஒரு காதல். இரண்டு தரப்பையும் நியாயமாக காண்பிக்க இயக்குநர் முயன்றாலும், கம்யூனிஸப் பாரம்பரியத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. உதாரணமாக, அன்பும் காதலும் உள்ள ஒரு ஹிந்துத்துவவாதி, ஹிந்துத்துவக் கொள்கைக்காக ஜெயிலுக்குப் போக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹிந்துத்துவவாதி, ஹீரோவுக்குப் பிடித்தமான நண்பனான ஹிந்துத்துவவாதி கம்யூனிஸ்ட்டுகளால் கொல்லப்படும் செய்தி மட்டுமே வருகிறது. அவரது பிணம் மட்டுமே காட்டப்படுகிறது. பதிலுக்குப் பழிவாங்க ஹிந்துத்துவவாதிகள் கையெறி குண்டுகள் செய்கிறார்கள். ஹீரோயினின் அண்ணனான, அன்பே உருவான கம்யூனிஸ்ட்டு கொல்லப்படுவதை வெறும் செய்தியாகச் சொல்லவில்லை. ஹிந்துத்துவவாதிகள் ஓட ஓட விரட்டிக் கொல்வதைக் காண்பிக்கிறார்கள். அதிலும் அந்த அண்ணனை நம் ஹீரோ எச்சரிக்கிறான். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த கம்யூனிஸ்ட் தைரியமாக அரசியல் கொலையை எப்போதும் எதிர்நோக்கியே இருக்கிறான். ஓட ஓட விரட்டிக் கொல்லப்படுகிறான். அத்தனை வெட்டியும் எங்கே அவன் பிழைத்துவிடுவானோ என்று ஹிந்துத்துவவாதிகள் அவன் உடலெங்கும் மண்ணையும் தூவிவிட்டுப் போகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளை அன்பே உருவாகக் காண்பிக்கிறார்கள். ஹிந்துத்துவவாதிகளுக்கு இடதுகை ட்ரீட்மெண்ட்தான். ஹிந்துத்துவவாதி தரப்பில் இருந்து ஹீரோ நியாயம் பேசுகிறான். இதெல்லாம் எதற்கு என்கிறான். ஆனால் கம்யூனிஸ்ட்டு தரப்பில் இருந்து யாரும் வாயையே திறப்பதில்லை. கம்யூனிஸ்ட் அரசியலுக்குள்ளே இருக்கும் பாதகமான விஷயங்களையும் சின்ன சின்ன காட்சிகளில் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் ஒருத்தன் ஹிந்துத்துவர்களின் நண்பனான ஹீரோவுக்கு அடைக்கலமெல்லாம் தருகிறான். கடைசியில் ஹீரோவை கம்யூனிஸ்ட்டுகள் ஓட ஓட விரட்டிக் கொல்லப் பார்க்கிறார்கள். நியாயமாகக் காட்டி இருக்கிறார்களே என்று நினைத்துவிடாதீர்கள். அது எல்லாத் திரைப்படங்களிலும் வரும் க்ளைமாக்ஸ் காட்சியில் விரட்டைப் போலவும் சண்டையைப் போலவும்தான் உள்ளது. ஹிந்துத்துவவாதிகள் அரசியல்படுகொலை செய்வதைப் போல இல்லை. இந்த அளவுக்காகவது எடுத்திருக்கிறார்களே என்று தோன்றுவதும் சரிதான். அதே நேரத்தில், எதை எப்படி எடுக்கிறோம், எதை எப்படி விடுக்கிறோம் என்பதில் உள்ள நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இருபத்தைந்து வயதுப் பையனும் இருபது வயசுப் பெண்ணும் ஏன் எப்போதும் அவார்ட் பட ஹீரோ ஹீரோயின் போலக் காதலிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சிரிப்பில்லை, ஒரு கட்டிப்பிடித்தல் இல்லை, ஒரு மலர்ச்சி இல்லை. ஆனால் ஹீரோ ஷேன் நிகம் (ஷெய்ன் நிகம்!) நடிப்பு அட்டகாசம். மலையாளம் திறமையுள்ள நடிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த பத்து வருடங்களில் கிடைக்கப் போகும் எல்லா விருதுகளும் மலையாள நடிகர்களுக்கே போகப் போகின்றன. மொழி மாஃபியா என்று அப்போது கதறிப் பயனில்லை.

நால்பத்தியொண்ணு (ம) – ஒரு கம்யூனிஸ்ட் இன்னொரு கம்யூனிஸ்ட்டை சபரிமலைக்குக் கூட்டிப் போகிறான். கூட்டிக்கொண்டு போகும் கம்யூனிஸ்ட் தீவிர கம்யூனிஸ்ட். கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம், பண்பாடு என எதிலும் நம்பிக்கை இல்லாதவன். லெனினும் மார்க்ஸும் சொன்னது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவன். பாரம்பரியத் திணிப்புக்காகத் தன் திருமணத்தையே துறந்தவன். இன்னொரு கம்யூனிஸ்ட்டோ கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஒரு ஹிந்து ஆதரவாளரைக் கொன்றவன். கட்சி வேறொருவனை ஜெயிலுக்கு அனுப்ப, பார்வையற்ற தன் மகளுக்காக வெளியே இருப்பவன். பெரிய குடிகாரன். இவன் குடியைத் திருத்த சபரிமலைக்குப் போகும் ஒரு முடிவை கட்சி எடுக்கிறது. சிந்தாவிஷ்டயாய சியாயமளே படத்தின் அதே யோசனையை அரசியல் ரீதியாக அணுகி இருக்கிறார்கள். குடிகார கம்யூனிஸ்ட் தான் சபரிமலைக்குப் போகவேண்டும் என்றால், தீவிர கம்யூனிஸ்ட்டும் உடன் வரவேண்டும் என்கிறான். நம்பமுடியாத இந்த ஒரு திருப்பம் நிச்சயம் ஒரு சிரிப்பை வரவழைக்கிறது. இருவரும் போகிறார்கள். பின்பு என்ன ஆகிறது என்பதுதான் படம். கம்யூனிஸ்ட்டுகள் ஒருத்தனைத் திருத்த ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறார்கள் என்பது நியாயமான கேள்வி. பதில் ஒன்றுதான், அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லவா! ஆனால் சமீபத்தில் நடந்த சபரிமலைப் பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் கூடப் பாரம்பரியத்தின் பக்கம் நின்றது நினைவுக்கு வரலாம். அதை ஒட்டித்தான் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இயக்குநருக்குப் பெரும் குழப்பம். யாரைத் திட்டுவது, யாரைக் கைவிடுவது என்பதில். எதோ ஒரு குன்ஸாக பேலன்ஸ் செய்து படம் எடுத்திருக்கிறார். தீவிர கம்யூனிஸ்ட் கடைசி வரை தன் பிடிப்புகளில் இருந்து விலகுவதில்லை. கடவுள் என்பதற்கான வரையறை என்ன என்பதற்கு அவனுக்கு யார் யார் மூலமெல்லாமோ விடை கிடைக்கிறது. ஆனாலும் அவன் கம்யூனிஸ்ட்டாகவே இருக்கிறான். குடிகார கம்யூனிஸ்ட் மனம் திருந்துகிறான். ஆனால் உடல்நலமில்லாமல் சபரிமலையிலேயே செத்துப் போகிறான். கடைசியில் வரும் இயக்குநரின் குரல் சொல்கிறது, ஒரு பகுத்தறிவுவாதியாக இல்லாவிட்டால் இப்படி ஒரு முடிவை எடுத்து, இறந்து போன கம்யூனிஸ்ட்டுக்கு இத்தனை பணத்தையும், அதனால் பார்வையற்ற மகளுக்குப் பார்வையும் கிடைக்கச் செய்திருக்க முடியுமா என்று. அதாவது தீவிர கம்யூனிஸ்ட் பொய் சொல்லி குடிகார கம்யூனிஸ்ட்டின் குடும்பத்துக்கு அவன் மரணத்துக்குப் பிறகு அரசாங்கத்தின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருகிறான். இந்த சமயோசிதப் பொய்க்கு ஏன் ஒருத்தன் கம்யூனிஸ்ட்டாகவோ பகுத்தறிவு வாதியாகவோ இருக்கவேண்டும்? சாதாரணமாக யாருக்குமே அந்த நேரத்தில் தோன்றுவதுதானே? உண்மையில் நியாயம் பார்க்கும் கம்யூனிஸ்ட் இதைச் செய்யக் கூடாது. பொதுவான தர்மம் என்பதைத் தன் நோக்கில் பார்க்கும் ஆன்மிகவாதி வேண்டுமானால் செய்யலாம்! ஆனால் இயக்குநர் தலைகீழ் நியாயம் கற்பிக்கிறார். அதோடு மனம் திருந்திய ஒரு கம்யூனிஸ்ட் சபரிமலைக்குப் போனதால் செத்துப் போகிறான் என்று புரிந்துகொள்ளவும் இடம் தருகிறார். யாரை அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும் என்பதில், குழப்பத்தைத் தாண்டிய புத்திசாலித்தனமும் தெரிகிறதுதான்.

சுமாரான படம்தான். செக்யூலரிஸ மத ஜல்லிக் காட்சிகளும் உண்டு. தீவிர ஐயப்ப பக்தர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கடுப்பாகிவிடுவார்கள். ஆனாலும், சபரிமலையைக் காண்பிக்கும் காட்சிகளுக்காகப் பார்க்கலாம். குழப்பமாகத்தான் இயக்குநர் யோசிக்கிறார் என்றாலும், இப்படியாவது யோசிக்கிறார்கள் மலையாளத்தில். தமிழைப் போல அல்ல.

*

அஞ்சாம் பாதிரா (ம) – அட்டகாசம். தமிழில் ராட்சசன் மட்டும் வரவில்லை‌ என்றால் இப்படத்தைக் குற்ற உணர்ச்சியுடன்‌ பார்க்க வேண்டி இருந்திருக்கும். இப்படம்‌ பல இடங்களில், கதையில் ராட்சசனையும் நிபுணனையும் கொஞ்சம் சைக்கோவையும் நினைவூட்டுகிறது. இது‌போன்ற படங்களுக்கு ஃப்ளாஷ்பேக் எத்தனை முக்கியம் என்பதை ராட்சசனும் இப்படமும் நினைவூட்டுகின்றன. கிறித்துவ தேவாலயங்களில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை அப்படியே ஹிந்து சாமியார்களாகக் காட்டி எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகத்தின் வழக்கம். இப்படம் மலையாளப் படம் என்பதால் அந்தக் கிறுக்குத்தனத்தை எல்லாம் செய்யவில்லை. தமிழ்ப் படங்களில் ஹிந்து மதம் சித்திரிக்கப்படுவதை அணுகுவதைப் போல ஏன் மலையாளப் படங்களை அணுகத் தேவையில்லை என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படியான படங்களும் மலையாளத்தில் வருகின்றன. இதைப் படித்துவிட்டு இப்படம் மத ரீதியான படம் என்று நினைத்து விடவேண்டாம். சைக்கோ த்ரில்லர் படம். பொறுமையாகப் பார்க்கவும்.

*

பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே (ம) – சுமாரான படம். ஒரு புருஷனுக்குப் பல பொண்டாட்டிகள். ஒரு பொண்டாட்டிக்குப் பல காதலர்கள். 18+ கதை, ஆனால் 13+ படம். மிகப்பெரிய குண்டைக்கூட, இந்தா‌ வாழைப்பழம் என்று தருகிறார்கள். மெல்லிய நகைச்சுவை படம் முழுக்கவே இருக்கிறது. ஹீரோயின் நடிப்பு பிரமாதம். அங்காமாலி டைரீஸ், வைரஸ் மூலம் மலையாளப் படங்களுக்குள் வந்தவர்களுக்கு இப்படம் ஒத்துவராது. பொறுமையுடன் பார்க்கவேண்டிய வசனத் திரைப்படம். ஹிந்துத்துவவாதிகள் அந்த ஃபாதர் கதாபாத்திரத்துக்காகப் பார்க்கலாம். தமிழில் இப்படி எடுத்தால் ஜெமினி மேம்பாலத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள் – கிறித்துவர்கள் அல்ல, அரசியல்வாதிகள்! பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்று சொல்லி ஒரே வெள்ளையாக அடித்துவிட்டார்கள். பாவம் செய்திருந்தாலும் பரவாயில்லை, கல்லெறிங்கடா என்று தோன்ற வைத்துவிட்டது இறுதிக்காட்சிகள்!

*

சூஃபியும் சுஜாதயும் (ம) – ஹிந்துத்துவவாதிகள் நெஞ்சு வெடித்துவிடக்கூடாது என்பதற்காகவே முதல்‌காட்சியில் சூஃபி செத்துப் போய்விடுகிறான். அடுத்த காட்சியில் ஹிந்துவுக்கு சுஜாதா வாழ்க்கைப்பட்டுவிடுவதையும் காண்பித்துவிடுகிறார்கள். ஆனாலும் நெஞ்சு வெடித்துத்தான் போகிறது. பாங்கொலி கேட்கும்போதெல்லாம் ஆடுகிறாள். தொழத் தயாராகிறாள் சுஜாதா. சூஃபியோ பாங்கு சொல்கிறான், சுஜாதாவைக் கட்டிப்பிடிக்கிறானே ஒழிய ஹிந்துக் கடவுளைக் கும்பிடுவதில்லை. ஏனென்றால் சுஜாதா ஒரு ஹிந்து. அவள்தானே தொழவேண்டும்! சுஜாதாவாக வரும் அதிதி ராவின் கண்கள் கலங்கடிக்கின்றன. ஜெயசூர்யா கேரக்டரின் பெயரை இளிச்சவாயன் என்று வைத்திருக்கலாம். படத்தின் பெயரையே கூட சூஃபியும் இளிச்சவாயனும் என்றே கூட வைத்திருக்கலாம். பாதிக்குப் பின் வரும் ஜெயசூர்யாவின் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பாங்கொலி‌ போக மீதம் இருக்கும் நேரத்தில் படத்தில் வசனங்களும் வருகின்றன. இன்னுமொரு ‘நடுநிலை’ திரைப்படம்.

*

Forensic (M). Very cruel one. A serial killer murders children for a pathetic motive. Worst one. Serial killing of children, my God, horrible. 🙁 Never try to watch it. Its worse as a movie too. A movie I want to forget. Director sucks. Hope some sense prevails at least in his next project.

*

Kappela (Malayalam) – பதற வைக்கும் இன்னொரு படம். இரண்டு பதற்றம். ஒன்று, திரைப்படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை தொடரும், திரைக்கதை தரும் பதற்றம். இன்னொன்று, வழக்கமான ஒன்றுதான். ஒரு அப்பாவி அழகான கிறித்துவப் பெண்ணை அப்பாவி போல் நடித்து ஏமாற்றி விற்கப் பார்க்கும் ஒரு ஹிந்துவிடம் இருந்து ஒரு ரௌடி காப்பாற்றும் கதை. இயக்குநர் பெயரை கூகிள் செய்து பார்த்துக் கொள்ளவும். அவர் பெண்ணைக் காப்பாற்ற உதவுபவராகவும் நடிக்கிறார். ஸ்ரீநாத் பாசிக்காகவும் திரைக்கதை மற்றும் அதைக் கையாண்ட விதத்துக்காகவும் பார்க்க வேண்டிய படம். எனக்கு ஒரு குறை, நல்ல ரௌடியின் மதம்தான் தெரியவில்லை. கிறித்துவராக அல்லது முஸ்லிமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இன்னொரு முறை பார்த்தால் கண்டுபிடித்து விடுவேன். ஆனால் பார்க்க மனம் ஒப்பவில்லை. கலைக்கு (ஹிந்து) மதம் (மட்டும்) கிடையாது என்பவர்கள் ஒன்றிப் போய்ப் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாமே தற்செயல்தானே!

பின்குறிப்பு: ஒன்றுமில்லாத‌ படத்தைத் தூக்கிப் பிடிப்பதில்லை. அடிப்படையில் நேர்மையற்ற படங்கள் எனக்குத் தேவையில்லை. மத ரீதியான ஆராய்ச்சிக்காகத்தான் இனி படமே பார்க்கப் போகிறேன். எவ்வித மதத்தையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒரு லாபத்துக்காக தூக்கிப் பிடிக்காத படங்களை மட்டுமே கலை என்ற வகையில் அணுகுவேன். இப்படி நூறு பேர் செய்யாவிட்டால் தமிழ் சினிமா போலிகளின் உலகமாகவே தொடரும்.

*

Share

Comments Closed