ஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்

பாலாஜி தரணீதரனின் ஒரு பக்கக் கதை. தமிழின் புதிய அலைப் படங்களில் தலையாயதான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் இயக்குநரின் அடுத்த திரைப்படம் ஒரு பக்கக் கதையாக இருந்திருக்கவேண்டும். இப்படம் அறிவிக்கப்பட்டு பல வருடங்கள் கிடப்பில் கிடந்து, அதற்கிடையில் ’சீதக்காதி’ அறிவிக்கப்பட்டு, அது வருவதிலும் சிக்கலாகி, ஒருவழியாக சீதக்காதி வெளிவந்தது. முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றும், தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டும், இரண்டாம் படத்துக்கு ஒரு இயக்குநருக்கு இந்த நிலைமை.

சீதக்காதி திரைப்படம் பாலாஜி தரணீதரனின் முதல் படம் தந்த அதிசயத்தைத் தகர்த்தது. சீதக்காதியைவிட ஒரு பக்கக் கதை கொஞ்சம் உருப்படியான படம்தான் என்றாலும், ‘ஒரு பக்கக் கதை’ பாலாஜி தரணீதரன் மீதான நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஒன் முவீ ஒண்டராக அவர் தேங்கிப் போகாமல் இருக்கவேண்டும்.

‘ஒரு பக்கக் கதை’யின் நோக்கத்திலேயே தெளிவில்லை. முழுமையான ஒரு அறிவியல் புனைகதையாக எடுக்கும் அளவுக்கு கதையில் வலுவில்லை. எனவே அதை மூட நம்பிக்கையுடன் பிணைக்கப் பார்த்திருக்கிறார்கள். அதிலும் பெரிய பயணத்தைச் செய்யமுடியவில்லை. இரண்டும் இல்லாமல், எதற்காக யாருக்காக இந்தப் படம் என்ற தெளிவின்றி படம் முடிவடைகிறது.

ஆணுடன் எவ்வித உடலுறவும் கொள்ளாமல் ஒரு பெண் தாயாகிறாள். உலகின் முதல் ‘தந்தையில்லாக் குழந்தை’யை உலகமே ஆச்சரியத்துடன் வரவேற்கிறது. இப்பெண்ணின் காதலன் தன் காதலியுடன் கடைசிவரை துணை நிற்கிறான். பிறந்த குழந்தை ஒரு தெய்வக் குழந்தை என்று மடம் பிடுங்கிக் கொள்கிறது. மடத்தில் இருந்து குழந்தை எவ்வாறு மீட்கப்படுகிறது என்பதே கதை!

மடத்தின் மூடநம்பிக்கைதான் முக்கியக் கதை என்றால், படத்தின் முக்கால் மணி நேரக் கதையை அறிவியலிலும் சஸ்பென்ஸிலும் நகர்த்தி இருக்கக் கூடாது. ஓரளவுக்காகவது நன்றாக வந்திருக்கவேண்டிய படத்தை இந்த வகையில் கொஞ்சம் கொல்கிறார் இயக்குநர்.

அடுத்து, படம் அநியாயத்துக்கு மெல்ல போகிறது. கதாநாயகன் நடந்தால் மெல்ல நடக்கிறான். அடுத்து கதாநாயகி ஃபீல் செய்தபடியே மெல்ல நடக்கிறாள். அடுத்து கதாநாயகியின் அம்மா. அவளை ஃபீலுடன் அப்பா பார்க்கிறார். கதாநாயகி தாயானதை மூன்று டாக்டர்கள் நான்கு தடவை உறுதி செய்கிறார்கள். ஒரு குழந்தை தானே தெய்வம் என்று நான்கு தடவை உறுதி செய்கிறது. இது போதாது என்று, மெகா சீரியல்களில் வருவது போல, ஒவ்வொருவரின் எக்ஸ்பிரஷனையும் பத்து பத்து நொடிகள் காட்டி, பின்பு அதையே மொத்தமாகக் காட்டி சாவடித்துவிட்டார் இயக்குநர். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் இது நன்றாக இருந்ததன் காரணம், அதில் இழையோடிய நகைச்சுவை. இந்தப் படமோ மிக சீரியஸான படம். அதில் நகைச்சுவையை இழையோட வைக்க இயக்குநர் முயன்றிருப்பது புரிகிறது. ஆனால் அது எரிச்சலைத்தான் கொண்டு வருகிறது.

மடம் தொடர்பான காட்சிகள் வந்த பிறகு இந்த நகைச்சுவையை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு இயக்குநர் கொஞ்சம் சீரியஸாகிறார். படமும் அந்தக் குழந்தையும் ஒரு பரிதாபத்தைக் கொண்டு வருகிறது. மடம் மிகவும் பெரிய மடம் என்று சொல்வதற்காக, மடத்துக்கு இன்று பிரதமர் வருகிறார் என்றெல்லாம் செய்திகள் காண்பிக்கப்படுகின்றன. செய்திகள் என்றும் நினைவுக்கு வருகிறது. ஒரு விஷயம் நடந்துவிட்டால் உடனே பத்து செய்தி சானல்கள் இதே செய்தியைச் சொல்கின்றன. பத்தையும் காண்பிக்கிறார் இயக்குநர். செய்தித் தாள்களில் ஒரு செய்தி வந்தால், அதை எல்லாரும் படிக்கிறார்கள் என்று காட்ட இருபது பேர் படிப்பதை இருபது காட்சிகளாகக் காட்டுகிறார் இயக்குநர்!

மடம் தொடர்பான காட்சிகளில் நம்பகத்தன்மையின்மை தலைவிரித்தாடுகிறது. ஒரு பாரம்பரிய மடம் இப்படி ஒரு குழந்தையை தெய்வக் குழந்தை என்பதற்காகத் தூக்கிக் கொண்டு போகாது. பெற்றோரின் சம்மதமின்றி எந்தக் குழந்தையையும் ஒரு மடம் கொண்டு போகாது. குறைந்த பட்சம் இந்த மடம் கிராமப் புறத்தில் இருக்கும் ஒரு சின்ன கோவில் சார்ந்த மடம் என்றாவது காட்டி இருக்கலாம். ஆனால் பிரம்மாண்டத்துக்காக பெரிய மடம் என்றும், பாரம்பரிய மடம் என்றும், பிரதமரே வருவார் என்றும், மடத்தின் சாமியாரிடம் ஆசி வாங்க அமைச்சரே வந்து போவார் என்றெல்லாம் வேறு காட்டிவிட்டார்கள். எனவே லாஜிக் பொருந்தவில்லை.

பெற்றோரின் சம்மதத்துடன் குழந்தைகள் துறவிகளாகி மடத்துக்குத் தலைமை ஏற்பார்கள். அப்படி பூர்வாச்ரமத்தில் தன் மகனாக இருந்த ஒரு பையனைப் பெற்றோர்கள் பார்த்த புகைப்படம் இரண்டு நாள்கள் என்னை அலைக்கழித்தது. இப்படத்தில் வரும் அந்தச் சிறுமியின் முகமும் நம்மை அப்படி அலைக்கழிக்கும். இந்த அலைக்கழிப்பை இயக்குநர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னொரு கோணத்தில், கொஞ்சம் புத்திசாலித்தனமாக இதை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.

இப்படி சிக்கலான ஒரு கதையை எடுத்துக் கொண்டும், வேண்டுமென்றே மதத்தைச் சீண்டும் வேலையைச் செய்யவில்லை. இப்படி ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது என்பதை மட்டும் சொல்லும் நோக்கம் மட்டுமே இயக்குநருக்கு இருந்திருக்கிறது. அதில் கூட மூடநம்பிக்கை வேறு, கடவுள் நம்பிக்கை வேறு என்றொரு வசனமும் வருகிறது. எல்லா இடங்களில் எல்லா மதத்தையும் சேர்த்துக் கொள்கிறார் இயக்குநர். இதற்காகப் பாராட்டலாம்.

படத்தில் வசனங்கள் மிகக் கூர்மையாக உள்ளன. இசையும் நன்றாக இருக்கிறது. நடிகர்களின் தேர்வும் நடிப்பும் அபாரம். இத்தனை பிரச்சினைக்குரிய கதையை எடுத்துக்கொண்டாலும் துளி ஆபாசம் கூட இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதே நேரம், தன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தந்தை சொல்லவும், கதாநாயகன் உடனே அந்தச் சின்ன பெண்ணைப் பார்ப்பது, என்னதான் நகைச்சுவை என்றாலும், என்னதான் கதையோடு நேரடியாக சம்பந்தப்பட்டது என்றாலும், எனக்கு மிகவும் நெருடியது. அதைக் கடக்கவே ஒரு நிமிடம் ஆனது. மற்றபடி, நேரம் இருப்பவர்கள் இப்படத்தை ஒரு தடவை பார்க்கலாம். இந்தக் கதையின் மூலம் சொல்லப்  போவது என்ன என்ற தெளிவுடன், மெல்ல நகரும் காட்சிகளைக் கட்டுப் படுத்தி எடுத்திருந்தால், ஒரு பக்கக் கதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

இந்தப் படம் ஸீ5ல் வெளியாகி இருக்கிறது. திரையரங்குக்கு வரவில்லை. இப்படி படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓடிடி சானல்களில் வெளியாவதால் அதை பலராலும் பார்க்க முடியாமல் போகிறது. சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றில்லாமல், நூறு ரூபாய் கொடுத்து ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்ற நிலை வராவிட்டால், இப்படிப் பல படங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் போய்விடும். தமிழ்த் திரை உலகம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை இது.

Thanks: OreIndiaNews

Share

Comments Closed