Archive for ஹரன் பிரசன்னா

நாடோடி – கவிதை

இடது மேல் மூலையில்

மின்னொளிர் ஊதுபத்தி

தொடர்ந்து பேனா, குறிப்பெடுக்க தாள்

கைகட்டிய விவேகானந்தர்

கணினி

தீபாரதனை மணி சகிதம் விர்ச்சுவல் பூஜை

அரட்டைக்கு இயர்·போன்

ஸ்க்ரீன் சேவராய் குடும்பப்படம்

எஸ் எம் எஸ்ஸில் அதிரும் கைத்தொலைபேசியென

மர மேஜையின் நான்கு மூலைகளுக்குள்

சுருங்கிவிட்டது

உலகம்

வரவழைத்துக்கொண்ட சந்தோஷத்துடன்

சின்னச் சின்னச் சண்டைகள்,

உயிர்ப்பகிர்தலின்றி.

Share

மேல் பார்வை – சுந்தரராமசாமி – சிறுகதைத் தொகுப்பு

 

=====================

நிர்மால்யா வெளியீடு,

48, முதலியார் தெரு,

கிருஷ்ணன் கோவில்,

நாகர்கோவில் – 629001

=====================

சுந்தரராமசாமி பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மற்றச் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து இந்தத் தொகுப்பு மாறுபட்டிருப்பதற்கு ஒரு காரணம், இதிலுள்ள கதைகள் எழுதப்பட்ட வருடங்கள். 1953 தொடங்கி 1990 வரையிலான வருடங்களில் வெவ்வேறு காலங்களில்

எழுதப்பட்ட கதைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.

எழுதத்தொடங்கும்போது சுந்தரராமசாமியின் எழுத்து மிக வித்தியாசமானதாக இருந்துவிடவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் 1990ம் ஆண்டில் எழுதப்பட்டு இந்தியாடுடேவில் வெளியாகிய மேல்பார்வை கதையில் அவரது எழுத்தின் நவீனம் தெரிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அவரது எழுத்து எப்படி மாறிக்கொண்டேயிருந்திருக்கிறது என்பதை அவதானிக்க விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

முதல் கதையாகத் தண்ணீர். 1953ல் எழுதப்பட்டது. மழையில்லாமல் வாடும் பயிர்களுக்குத் தண்ணீரில்லை. ஆனால் அந்த வருடத் தெப்போற்சவத்துக்காகத் தண்ணீர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிந்து கொதித்தெழும் மக்கள் மறைத்துவைக்கப் பட்டிருந்த நீரின் வரப்பை உடைத்து பயிருக்குத் திருப்பி விடுகிறார்கள். போலீஸ் வந்து ‘கலகக்காரர்களைக்’ கொண்டு செல்கிறது. கதை இவ்வளவுதான். சில இடங்களில் அழகான அங்கதம் தெரிகிறது. நெல்லை வட்டார வழக்கு எல்லாக் கதைகளிலும் மாதிரி இதிலும் அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அடுத்த கதை கோவில் காளையும் உழவு மாடும். 1955ல் எழுதப்பட்டது. தொலைதூரத்திலிருந்து வரும் கிழவன் ஒருநாள் இராத்தங்க கோவில் பண்டாரத்திடம் அனுமதி கேட்கிறான். பின் நிரந்தரமாகத் தங்கி விடுகிறான். அந்தக் கிழவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாளாய் கிணறு தோண்டுகிறான். உடம்பு மிக மோசமாகி, தான் தோன்றிய கிணற்றில் ஊறிய நீரைப் பருகிவிட்டு, கண்ணை மூடுகிறான். கதை விவரிக்கப்பட்ட விதம் மிக அழகு. கூடவே இருக்கும் பண்டாரத்தின் மன மாற்றங்களும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த கதை சன்னல். 1958ம் வருடம் எழுதப்பட்டது. எல்லாக் கதைகளைப் படித்த பின் மனதுக்குள் ஊடுருவிக்கொண்டு, கீழே இறங்க மறக்கும் கதைகளுள் முதன்மையானது சன்னல் கதை. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒருவனின் மன ஓட்டங்கள் தான் கதை. ஒரு குளவி நெஞ்சில் விழுந்துவிட, கத்த முடியாமல், கை கால் அசைக்க முடியாமல் அவன் பதறும் காட்சிகள் படிப்பவர்கள் மனதுக்குள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியிருக்கும் அந்த ‘அவனுக்கு’ ஒரே ஒரு ஆறுதல் சன்னல். சன்னல்தான் உலகம். சன்னல் வழியாக வெளியில் நிகழும் காட்சிகளைக் காண்பது மட்டுமே அவனுக்கு வாழ்க்கை. மூங்கிலை வண்டு ஓட்டை போடுவதையும், ரோஜாவைத் திருடிப் பால்செம்பில் போட்டுக்கொள்ளும் பால்காரி மகளையும், கன்றுகளாக நட்ட வாழைகள் மரமாகிச் செழித்து நிற்பதையும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷிக்கும் அவனது வாழ்க்கையில் ஒரு இடி விழுகிறது. சன்னல் வழியாக வீசும் தணுப்புக் காற்று உடலுக்காது எனத் தடுப்புச் சுவர் எழுப்புகிறார்கள். அவனது அழுகையோடு கதை முடிகிறது. வாச்கர்கள் மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். கதையின் எளிமையும் உணர்வும் மனது மறக்காத கதையாக்குகின்றன. (இதே கதையை சல்மாவும் அவரது நேர்காணலில் பாராட்டியிருந்தார்.)

அடுத்தது ஸ்டாம்பு ஆல்பம். (1958) பள்ளி மாணவர்களுக்கு மாணவப்பருவத்தில் ஏற்படும் அசூயையையும் அதன்காரணமாக நிகழும் சில நிகழ்வுகளையும் சொல்லும் கதை. தனது ஸ்டாம்பு ஆல்பத்தை விட இன்னொருவனின் ஸ்டாம்பு ஆல்பம் அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வதைப் பொறுக்காமல் எரித்துவிடும் சிறுவன் அதற்காக வருந்துகிறான். தாந்தான் எரித்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகிறான். எரித்த தவறுக்காக வருந்தி, தனது ஆல்பத்தை மனமில்லாமல், இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்கிறான். எந்தவிதச் சிக்கலுமில்லாமல் எளிமையாகப் பயணிக்கும் கதை. சிறுவர்களின் பேசும் விதமும் பேச்சும் வெகு நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

சீதைமார்க் சீயக்காய்த்தூள். பணத்துக்காக சீதையை ‘எடுப்பாக’ வரையச் சொல்லும் கதை. அங்கதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வறுமையிலும் நியாயம் பேசும் கலைஞன் காட்டப்பட்டிருக்கிறான். வட்டார வழக்குத்தான் கதையை தூக்கிப்பிடிக்கிறது. மற்றபடி கதையில் ஆழமாக ஒன்றுமில்லை. ஆனாலும் எழுதின வருடம் 1959 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சன்னல் கதையை அடுத்து மனதைத் தொடும் இன்னொரு கதை. எங்கள் டீச்சர். (1962). மிக நெருக்கமானத் தோழிகளாக இருக்கும் இரண்டு டீச்சர்கள் ஒரு சின்ன நிகழ்வில் பிரிகிறார்கள். மோசமான வகுப்பைத் தனது திறமையால் ஒரு டீச்சர் முதன்மையாகத் தூக்கி நிறுத்த, இன்னொரு டீச்சர் பொறாமையில், கேள்விகளைச் சொல்லித் தந்து முதன்மை பெறச் செய்துவிட்டாள் குற்றம் சாட்டுகிறார். நேர்மையான டீச்சர் நொறுங்கிப் போகிறார். வெளியூரில் கேள்விகள் தயாராகும் அடுத்த தேர்வில் தனது மாணவர்களை மீண்டும் முதன்மை பெறச் செய்து தனது

நேர்மையையும் தனது மாணவர்களின் திறமையையும் நிரூபிக்க ஆயத்தமாகிறார். எதிர்பாராத விதமாக அந்தத் தேர்வில் தவறிழைக்கும் தனது மாணவிக்கு, மறைமுகமாகச் சொல்லித் தர முனையும்போது கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். தவறை ஒத்துக்கொண்டு வேலையை விட்டே போய்விடுகிறார் நேர்மையான டீச்சர். கதையில் இரண்டு

டீச்சர்களுக்கிடையேயான அன்னியோன்யமும் நட்பும், ஒரே ஒரு அசூயையில் (பொறாமை)அது உடைந்து போவதும் எந்தவித மேல்பூச்சுகளும் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தனது மாணவி மீண்டும் வென்றே

ஆக வேண்டும் என்ற நினைப்பில், “நேரமிருக்கிறது. சரி பார்” என இரண்டு மூன்று முறை நிர்பந்திக்கும்போது நமக்கே அந்த டீச்சரின் மீது பச்சாதாபம் தோன்றி விடுகிறது. நடையின் வெற்றி.

விகாசம். 1990ல் எழுதப்பட்ட கதை. கண் தெரியாத ராவுத்தருக்கு ஒரு திறமை. நொடியில் கணக்குப் போடுவார். அவர் இல்லையென்றால், ஓணத்தின் பரபரப்பான ஜவுளி வியாபாரத்தைச் சமாளிக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் தேவை இருந்தது. எதிர்பாராத விதமாய் அவருக்குப் பெரிய இடி ஒன்று கால்குலேட்டர் வடிவில் வந்து சேர்கிறது. அவரை பெயர்த்துகிறது கால்குலேட்டர். அவரின் முக்கியத்துவம் குறைவதாக உணர்கிறார். சிப்பந்திகள் தொகையைச் சொல்ல, முதலாளி கால்குலேட்டரைத் தட்ட, வியாபாரம் கனஜோராக நடக்கிறது. யாரோ ஒரு சிப்பந்தி விலையைத் தவறாகச் சொல்ல, அதை திருத்துகிறார் ராவுத்தர். தவறாகச் சொல்லப்படுவது கால்குலேட்டருக்குத் தெரியாது என்பதை உணர்கிறார் முதலாளி. ஸ்டாக் விவரம், கரண்ட் பில் என்று கட்டவேண்டும் என்பன போன்ற விவரங்களைச் சரியாகச் சொல்கிறார் இராவுத்தர். கால்குலேட்டர் வருவதற்கு முன்பு ‘கால்குலேட்டராக’ இருந்த இராவுத்தர் அதன் வரவுக்குப் பின்னர் மானேஜராகிறார் என்பதோடு முடிகிறது கதை. தன்னை மிஞ்ச ஆள் கிடையாது என்ற போது இராவுத்தரின் நக்கலும் குத்தலும் திமிரும், திடீரென ஒருநாள் அவரது பேத்தி, அவரை விட வேகமாகக் கணக்கைச் சொல்ல, அதிரும் இடமும் அதற்குக் காரணம் கால்குலேட்டர் என்று அறிந்து அதைத் தொட்டுப் பார்த்துப் பயப்படும் இடமும் அருமை. கால்குலேட்டர் எல்லாக் கணக்கையும் செய்யத் தொடங்கும்போது நக்கல், குத்தல் பேச்சில்லாமல் நடைபிணமாகிறார். கால்குலேட்டர் செய்ய முடியாத காரியங்களை அவர் செய்யத் தொடங்கும்போது மீண்டும் நக்கல், குத்தல் எல்லாம் வந்து சேர்கிறது அவருக்கு. கடைசியாக, “இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம்” என்று இராவுத்தர் சொல்வது நச் கமெண்ட்.

அடுத்த கதை மேல்பார்வை. 1994-95ம் ஆண்டுக்கான இந்தியாடுடே ஆண்டுமலரில் வெளியான கதை. இதுவரை கதைகளில் இல்லாதிருந்த கதைக்களம் பற்றிய விவரிப்புகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. எழுத்தில் நவீனம் தெரிகிறது. கூடைப்பந்தாட்டம்தான் கதை. அதன் நடுவர் ஒரு பெண். மைதானத்தில் அந்தப் பெண்ணின் வேகத்தால் கிராம மக்கள் வசீகரிக்கப்படுகிறார்கள். கடைசியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்ட கிழவி ஒருத்தி, ஆட்டத்தில் நடக்கும் தவறை சுட்டிக்காட்டி, சரியான தீர்ப்பைச் சொல்லும் நடுவர் பெண்ணுக்குப் பாராட்டைத் தெரிவிக்கிறாள். ஆட்டத்தைப் பார்க்கும் கிழவியின் கமெண்ட்கள் கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. இந்தக் கதையில் வரும் சில வரிகளைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். “செப்பனிடப்பட்ட ஒரு படியின் மீது சிமெண்ட் காய்வதற்கு முன் கெட்ட வார்த்தை ஒன்றை ஒரு கை எழுதி வைத்திருக்கிறது. அதன் இருப்பு கஷ்டம். அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதில் அடையும் தோல்வி அதைவிடக் கஷ்டம்”. பலமுறை நான் அனுபவித்த விஷயம் இது.

பக்கத்தில் வந்த அப்பா. கடைசி கதை. 1987ல் எழுதப்பட்டது. தொலைபேசி பிரபலாமாகாத காலத்தில் அப்பாவுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. சிறுவயது மகன் கூடச் செல்கிறான். அப்பாவுக்குத் தொலைபேசியில் பேசத் தெரியாமல் போகவே மகன் பேசுகிறான். அவனது பெரியப்பா இறந்த செய்தியை அப்பாவுக்குச் சொல்கிறான். அப்பா இடிந்து போகிறார். வரும் வழியெல்லாம் அழுது புலம்புகிறார், தன் பாசமான அண்ணன் மறைவுக்காக. வீட்டுக்கு வந்து இடிந்து போய் உட்கார்ந்துவிடுகிறார். மகன் தாந்தான் அப்பாவுக்கு உதவினதாய் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை பட்டுக்கொள்கிறான். ஆனால் அப்பா அதைச் சொல்லாமல், அவரது அண்ணன் மறைவுக்காக வருந்துவது அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தச் சிறுவனின் அக்கா அவன் பொய் சொன்னதாக அவனைக் கேலி செய்கிறாள். மனம் நொந்து போன அவன் இப்படிச் சொல்கிறான்: ” இன்னொரு பெரியப்பா வருவாரே.. அவர் செத்துப்போகும்போது போன் வரும். அப்பவும் நான் அப்பாக்கூடப் போவேன். அப்பத்தெரியும் உனக்கு”. ஒரு சிறுவனின் மன ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் கதையின் பலம். நேர்த்தியான நடை. அப்பாவின் குணநலன்களும் அம்மாவும் அக்காவும் அப்பாவைக் கிண்டல் செய்வதும், தானும் அவர்களைப் பார்த்துப் படித்து அப்பாவைக் கிண்டல் செய்வதும், பின்னர் தனக்குப் பெரியத்தனம் வந்துவிட்டதாகத் தானே நினைத்துக்கொள்வதும் என அந்தச் சிறுவனின் மனஓட்டம் நம்மை வசீகரித்துக்கொள்கிறது.

எல்லாக் கதைகளும் நன்றாக இருந்தாலும் சன்னல் கதையும் எங்கள் டீச்சர் கதையும் பக்கத்தில் வந்த அப்பாவும் மனசுக்குள்ளேயே தங்கிவிடுகின்றன. இந்தப் புத்தகத்தில், என் பார்வையில் இந்த மூன்று கதைகளும் சிறந்த கதைகள்.

Share

ரங்கோலி – – கவிதை

கூடுதல் அழகு,

இடப்பட்ட வெள்ளைப்புள்ளிகள்

சுற்றி இழுக்கப்பட்ட

நெளிகோடுகள் காட்டிலும்

சிக்கிச் சிலிர்த்திருக்கும்

நீர் தெளித்த பழுப்பு நிறத் தரை

Share

நதி நீராலானது மட்டுமல்ல – கவிதை

நதி இறந்துவிட்டது என்கிறார்கள்

நீரில்லை என்கிறார்கள்

காய்ந்த மீன்கூடு சொருகிக்கொண்டிருக்கும்

மணல் காட்டுகிறார்கள்

மீன்கொத்தி பார்த்து

வருஷமாகிறது என்கிறார்கள்

நதியின் கரைகளில்

வெறுமையைக் காட்டுகிறார்கள்

பசுமையில்லாத ஊரைக் காட்டுகிறார்கள்

ஊர்ச்சாத்திரை கூட்டாமல்

பூட்டப்பட்டிருக்கும் கோயில் காட்டுகிறார்கள்

கடைசியில்

ஒட்டுமொத்தக் காரணமாய்

நதி இறந்துவிட்டதைக் காட்டுகிறார்கள்

தட்டிக்கொள்கிறேன்

என்றோ

ஆடிப்பெருக்கு நிலாச்சாப்பாட்டிற்குப் பின்

கட்டிப் புரண்டபோது

ஒட்டிக்கொண்ட மண்துகள் முதுகில்

இறக்காது இந்த நதி

என் தலைமுறைக்கேனும்.

Share

வயசு – சிறுகதை


நீளமான அந்தத் தெருவின் ஒரு முனையில் இருந்து பார்க்கும்போது அடுத்த முனையில் பச்சைப் பசேல் என புற்கள் காற்றில் ஆடுவது தெரிந்தது. நாலு எட்டு வேகமாய் நடக்க முடிந்தால் பதினைந்து நிமிடத்தில், வயற்வரப்புகளைக் கடந்து ஓடைக்குச் சென்று விடலாம். ஓடையில் இப்போது நீர் இருக்குமா எனத் தெரியவில்லை. இப்போதெல்லாம் எத்தனைப் பையன்கள் ஓடைக்குச் சென்று குளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஷவர் இல்லாமல் ஷானு ஒருநாள் கூட குளிக்கமாட்டாள். “தண்ணீரைத் திறந்துவிட்டு, ஷவரில் அக்காடான்னு குளிக்கும்போது ஒரு சுகம் வரும் பாருங்க தாத்தா” என்று சொல்லும்போது அவள் சின்னஞ்சிறு முகத்தில் பரவும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவளிடம் ஓடையில குளிச்சிருக்கியாம்மா என்று கேட்கக்கூட பயம் எனக்கு.அவள் கட்சிப்படி, ஓடை, வயற்காட்டில் நீர் பாய்ச்சுவதற்கும் எருமைகள் குளிப்பதற்கும்தான்.

மிகுந்த பிரயாசையுடன் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தேன். நிறைய வீட்டுக் கதவுகள் பூட்டியே இருந்தன. கோபால ஐயர் கோலோச்சிய காலத்தில், எந்த வீடாவது பூட்டியிருந்தால், பெரும் அக்கறையோடு என்னைத் தேடி வந்து, “அந்த அம்மாஞ்சி நாம நினைச்சா மாதிரி சும்மா இல்லைங்காணும். அவன் பெண்டாட்டி மூணாவதா உண்டாயிருக்கா. அதான் அம்மா ஆத்துக்கு கொண்டு போயி விடப் போயிருக்கான்” என்பார். அம்மாஞ்சி மேல் கோபால ஐயருக்கு எப்போதும் ஒரு கோபம் இருந்துகொண்டே இருந்தது. அம்மாஞ்சியின் மனைவியை கோபால ஐயர் ஒரு தலையாக காதலித்ததாக ஊர்க்கதை உண்டு. ஊர்க்கதைகளுக்கா பஞ்சம். என்னைக்கூட குசும்பி என்று என் காது படவே பேசியிருக்கிறார்கள். கோபால ஐயர் செத்தபோது அந்த அம்மாஞ்சிதான் இழுத்துப் போட்டுக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்தான். அதைக் கோபால ஐயரிடம் சொல்ல முடியாது போன வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது.

நான் தெருவில் நடக்கிறேன் என்பதே என்னாலேயே நம்ப முடியவில்லை. தனியாக நடக்கமுடியும் என்ற நம்பிக்கை போன பிறகு நடமாட்டம் எல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான். வெளியில் இறங்கினாலே ஒப்பாரி வைப்பாள் காமாட்சி. வெளியில் பெண்ணெடுத்தால் மாமனாரை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ள மாட்டாள் என்று சுற்றம் எல்லாம் சொன்ன போதும் ஒரு காலில் நின்று விக்கிக்கு அவளை மணமுடித்துவைத்தேன். விக்கிக்கு காமாட்சிமேல் ஒரு பிரியம் இருந்தது எனக்குத் தெரியும். ஊர்வாயை அடைக்கிற மாதிரித்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடிகிறதா என்ன?

சம்சுதீனின் வீடு அடையாளமே தெரியாமல் மாறிவிட்டிருக்கிறது. சம்சுதீன் இறந்த போது அவன் மனைவியிடம் சென்று துக்கம் விசாரிக்கக் கூட முடியவில்லை. நான் செல்லவேண்டுமானால் துணைக்கு யாராவது வேண்டும். விக்கி அவனே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். சம்சுதீன் இறந்த அன்று அவன் குடும்பம் இனிமேல் எப்படி வாழுமோ என்று அத்தனை வருத்தப்பட்டேன். சின்ன வயதிலிருந்தே என் கூட ரொம்பப் பிரியமாக இருந்தவன் அவன் தான். அவன் பிள்ளைகள் யாருமே ஒழுங்காகப் படிக்காமல் ஊர்சுற்றியாக இருப்பதை நினைத்து எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பான். “அஞ்சை பெத்தததுக்கு விக்கி மாதிரி ஒருத்தனைப் பெத்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்” என்று அவன் புலம்பும்போது சங்கடமாக இருக்கும். திடீரென ஒரு நாள் முஸ்தபா வேலைக்கு சவுதி போவதாக வந்து சொல்லிவிட்டுப் போனான். சம்சுதீன் உயிரோடு இருந்த காலத்தில் முஸ்தபா மேல் தனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்று என் நேர்படவே சொல்லியிருக்கிறான். “முஸ்தபா எப்போதும் வாப்பாவை எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான்” என்று சம்சுதீனின் மனைவி நூர்ஜஹான் எத்தனையோ முறை சொல்லி அழுதிருக்கிறாள். இப்போதிருக்கும் வீட்டைப் பார்க்கும்போது முஸ்தபாவை நினைத்துச் சந்தோஷப்படத்தான் தோன்றுகிறது. என்னவோ அப்போதிருந்தே விக்கி மாதிரி எனக்கு முஸ்தபா மேலும் ஒரு அன்பு. இது சம்சுதீனுக்கும் தெரியும்.

அடுத்தது முதலியார் வீடு. பெருமாள்நாயகம் முதலியாருக்கும் எனக்கும் பம்பரம் விளையாடும் காலத்திலிருந்தே ஆகாது. சரியான கோவக்காரன் அவன். பேச்சு பேச்சாய் இருக்கும்போதே கை நீட்டி விடுவான். என் அப்பாவும் அவன் அப்பாவும் எங்களுக்காக எத்தனையோ தடவை சண்டை போட்டிருக்கிறார்கள். அவனும் அதிக நடமாட்டம் இல்லாமல் படுக்கையில்தான் கிடப்பதாகக் காமாட்சி சொல்வாள். படியேற முடிந்தால் ஒரு தடவை போய்ப் பார்க்கலாம்தான். பெருமாள்நாயகத்தின் மருமகள் காமாட்சி மாதிரி இல்லை. ராங்கி. எதாவது படக்கென்று சொன்னாலும் சொல்லிவிடுவாள். நாளை விக்கி திட்டினாலும் திட்டுவான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

லேசாக மூச்சு முட்டியது. கீழே விழுந்துவிட்டால் அசிங்கம். காமாட்சி திட்டமாட்டாள். ஆனால் அழுவாள். வாய்விட்டு அழுவாள். பார்க்கவே கஷ்டமாக இருக்கும். தெருக்கோடியில் இருக்கும் “மஞ்ச வீடு”க்கு எதிரில் இருந்த புளியமரத்தை வெட்டுகிறார்கள் என்று சொன்னபோது எனக்கு எதையோ இழந்த மாதிரி இருந்தது. யாருக்கும் தெரியாமல் அதைப் பார்க்க போனபோதுதான் முதல்முறையாகத் தெருவில் விழுந்தது. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. விழுந்த வேகத்தில் எழ முயன்ற போது, மீண்டும் விழுந்தேன். “ஐயோ.. தாத்தா விழுந்துட்டார்” என்று அம்மாஞ்சியின் பேரன்தான் கத்திக்கொண்டே ஓடினான். காமாட்சி அழுது புலம்பிக்கொண்டே வந்து என்னைத் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போனாள். அன்றைக்கு முழுவதும் “தொங்கிச் செத்துருவோமா” என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அதுக்குக் கூட யாரையாவது கூப்பிட வேண்டும். பெரியநாயகம் நடமாட்டத்துடன் இருந்தாலாவது அவனைக் கேட்டிருக்கலாம்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நடையைத் தொடர ஆரம்பித்தேன். கோபாலு வீட்டைக் காலி செய்து போன பின்னர் வேறு யாரோ குடிவந்திருக்கிறார்கள். காமாட்சி சொன்ன பெயர் ஞாபகத்தில் இல்லை. இன்றைக்கு வந்தால் கேட்டு வைத்துக்கொள்ளவேண்டும். அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்குரல் கேட்டது. தெளிவாகப் புரிந்தது. “ஐயோ.. ஷானுவோட தாத்தா தனியா நடக்குறாங்கம்மா”

கைக்கும் காலுக்கும்தான் க்ஷ£ணம். கண்ணுக்கும் காதுக்குமில்லை.

இன்னும் ரெண்டு வீடு தாண்டி விட்டால் என் வீட்டுக்குப் போய்விடலாம். படியேற வேண்டும் என்று நினைத்த போதே கொஞ்சம் பயமாக இருந்தது. உட்கார்ந்து உட்கார்ந்தாவது ஏறிவிடலாம் என நினைத்துக்கொண்டபோது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் தலையில் யாரோ கட்டையால் அடித்த மாதிரி ஒரு உணர்வு. கண் கட்டிக்கொண்டு வந்து, “செத்தேன்” என்றே முடிவுசெய்துவிட்டேன். இரண்டு நிமிடங்களில் தன்நிலைக்கு வந்தேன். கண் இத்தனை இருட்டிக்கொண்டு வந்தும், நான் கீழே விழவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். என் காலுக்குக் கீழே ஒரு கிட்டிப்பில் கிடந்தது. அதை எடுக்க ஒரு சின்னப்பையன் ஓடி வந்துகொண்டிருந்ததையும் பார்த்தேன். குனிந்து நிமிர்வது அத்தனைச் சுலபமில்லை என்றாலும் அவன் வருவதற்குள் கிட்டிப்பில்லைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் பக்கத்தில் வந்து நின்றான். என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தான். தூரத்தில் இருக்கும் மற்ற இரண்டு பையன்களையும் செய்கையால் அழைத்தான். வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பையன்மார்களில் ஒருத்தனையும் அடையாளம் தெரியவில்லை. மூன்று பேரும் புதுப்பையன்கள். ஒருத்தன் ஆரம்பித்தான்.

“தெரியாம பட்டுட்டு.. குடு தாத்தா”

மற்ற பையன்மாரும் சேர்ந்துகொண்டார்கள்.

“ஆமா தாத்தா”

பையன்கள் இன்னும் கிட்டி விளையாடுகிறார்கள் என்பதைக் காணும்போதே சந்தோஷம் வந்தது. நான் ஆடிய காலத்தில் சம்சுதீன்தான் கிட்டி விளையாட்டில் பெரிய ஆள். அம்மாஞ்சி ஆட்டைக்கே வரமாட்டான். கிட்டி விளையாட்டு என்றாலே அவனுக்குப் பயம்.

நான் ” ஏண்டே இதெல்லாம் இன்னும் ஆடுதிகளா?” என்றேன்.

பையன்கள் பதில் சொல்லாமல் கிட்டியை வாங்குவதிலேயே குறியாய் இருந்தார்கள்.

“தெரியாம பட்டுட்டுங்கேன்லா.. குடு தாத்தா”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கடே மொதல்ல. வேறென்னெல்லாம் ஆடுவீக?”

“கிரிக்கெட் ஆடுவோம். இன்னைக்கு பந்து வாங்கக் காசில்லை. அதுதான்.” அவன் குரலில் எரிச்சல் கலந்திருந்தது. இன்னொருத்தன் கொஞ்சம் ரோஷக்காரன் போல.

“பதில் சொல்லியாச்சுல்ல குடு” என்றான்.

“கேள்வி முடியலை. இன்னும் இருக்குடே” என்றேன் கொஞ்சம் நமட்டுடன்.

என் கிண்டல் அவர்களுக்கு இரசிக்கத்தக்கதாய் இல்லை. அனாலும், கிட்டிப்பில் என் கையில் இருப்பதால் மையமாய்ச் சிரித்து வைத்தார்கள்.

“சரி. என்னையும் ஆட்டைக்குச் சேர்த்துக்கோங்க. நான் தர்றேன்” என்றேன்.

“ஐய.. நடக்கவே முடியலையாம். ஆட்டைக்காம்” ஊமைக்கொட்டான் என நான் நினைத்திருந்த ஒரு சிறுவன் பட்டென்று பதில் சொல்லவும், மற்றவன்கள் சிரித்தார்கள்.

“நான் நல்லா விளையாடுவேண்டே. ஒரு தடவை சான்ஸ் கொடுத்துப் பாரு.. அப்றம் பேசு” என்றேன்.

“சரி ஒரே ஒரு ஆட்டைதான். அப்புறம் கிடையாது” என்று ஒரு வழியாய் இறங்கிவந்தார்கள். கைத்தாங்கலாய் அவர்கள் விளையாடும் இடத்துக்குக் கூட்டிப் போனார்கள். எத்தனையோ வருடங்கள் கழித்து கிட்டி விளையாடப் போகிறேன். எனக்குள் சந்தோஷஅலை அடிக்க ஆரம்பித்தது.

“தாத்தா.. இந்தா கம்பு. சட்டுன்னு கெந்து. உன்னை நான் சீக்கிரம் அவுட்டாக்கிடுவேன்”

அவந்தான் கிட்டியில் பெரிய ஆள் போல. சம்சுதீன் மாதிரி. சம்சுதீன் யாரையும் சீக்கிரம் அவுட்டாக்கி விடுவான். கிட்டிப்பில்லை கேட்ச் பிடிப்பான். அல்லது கிட்டிப்பில்லை எறிந்து தாண்டை அடித்துவிடுவான். அல்லது கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து தாண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை லாங் ஜம்ப் மாதிரி தாண்டிவிடுவான். இந்த மூன்றில் எது செய்தாலும் ஆட்டக்காரன் அவுட். இப்போதெல்லாம் என்ன விதி என்று தெரியவில்லை.

“ஏண்டே இதைக் கம்புன்னா சொல்தீய? நாங்க தாண்டும்போம்”

“நாங்க அப்படியும் சொல்வோம்” என்றான் ரோஷக்காரன்,. ஒரு விதக் கிண்டல்தொனியுடன்.

“சரி.. சும்மா விளையாடுங்கன்னு சொன்னா என்னடே அர்த்தம்? ரூல்ஸ் சொல்ல வேணாமா?”

ஊமைக்கொட்டான் ஒப்புவிக்க ஆரம்பித்தான்.

“நீங்க கெந்தும்போது நாங்க கேட்ச் பிடிச்சா அவுட். இல்லைனா கிட்டிப் பில்லை எறிஞ்சு கம்பை அடிச்சாச்சுன்னா அவுட். இல்லைனா ஓடி வந்து கிட்டிப்பில் இருந்த இடத்துலேர்ந்து கம்பு இருக்கிற இடத்துக்குத் தாண்டுவோம். சரியா தாண்டியாச்சுன்னா நீங்க அவுட்” என்று சொல்லிவிட்டு ரோஷக்காரனைப் பார்த்து “சரிதாம்ல?” என்றான்.

பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.

” சரி ஒரு வேளை இந்த மூணும் நீங்க செய்ய முடியலைனா…?”

” நீங்க விளையாடலாம். மூணு சான்ஸ். அதுக்குள்ள உயிரடியாவது அடிச்சிடனும்…”

பொறுமை இழந்து போன ரோஷக்காரன், “தாத்தா.. ஆட்டயப் பத்தி உங்களுக்குத் தெரியுமா தெரியாதா ? ” என்றான். இனியும் சந்தேகம் கேட்டால் ஆட்டைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டால், ரொம்ப நாள் கழித்துக் கிடைத்த சந்தோஷம் பூர்த்தியாகாமல் போய்விடும் என்று தோன்றியதால் அமைதியாகிவிட்டேன்.

“சரி.. ஒரு தடவை நீ ஆடு. அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் நான் ஆடறேன்” என்றேன்.

ரோஷக்காரன் அலட்சியமாய் கிட்டியை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு கம்பையும் எடுத்துக்கொண்டு ரொம்ப ஸ்டைலாக நடந்து, சாண் நீளத்திற்குத் தோண்டப்பட்டிருந்த குழிக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு…

“ரெடியா..? கெந்தவா?”

“சீக்கிரம் கெந்துல.. தாத்தாவுக்கு காமிக்கிறதுக்குத்தான.. அவரை சீக்கிரம் அனுப்பிட்டு நாம ஆரம்பிக்கலாம்” என்றான் மூன்றாமவன்.

நீளமான குழிக்குப் பக்கவாட்டாய் குச்சியை வைத்து, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு, குனிந்துகெந்தத் தயாரானான்.

“கெந்தப் போறேன்.. கெந்தப் போறேன்..”

“கெந்துல.. உயிரை வாங்காத” – மூன்றாமவன்.

பின்புறத்தை இடதும் வலதுமாய் இரண்டு புறம் அசைத்துவிட்டு, அழுத்தி ஒரு கெந்து கெந்தினான். கிட்டிப்பில் காற்றில் பறந்து உயரே சென்று கீழே வந்து விழுந்தது. இத்தனை தூரம் சம்சுதீன் கூடக் கெந்தியதாய் நினைவில்லை எனக்கு. மூன்றாமவன் கிட்டிப்பில் விழுந்த இடத்தில் இருந்து, தாண்டைப் பார்த்துக் குறி வைத்து எறிந்தான். ஆனால் அடி படவில்லை. ரோஷக்காரன், “என்னயவே அவுட்டாக்கப் பாக்கியா நீயி! இருலே உனக்கு நான் யாருன்னு காட்டுதேன்” என்ற வசனம் பேசிக்கொண்டு தாண்டை எடுத்துக்கொண்டு கிட்டியை அடிக்க எத்தனித்தான்.

எந்த ஓரத்தில் கிட்டி தூக்கிக்கொண்டு நிற்கிறது எனக் குறிபார்த்து, தரையில் மூன்று முறை ஸ்டைலாய் கோடு போட்டுவிட்டு, அடிக்க, கிட்டிப்பில் வானத்தில் எழும்பியது. அது கீழே விழுமுன் தொடர்ந்து தட்ட, “ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு..சே.. எட்டுத்தானா.. பன்னெண்டாவது அடிக்கணும்னு நினைச்சேன்” என்றான். நான் ஆடிய காலத்தில் மூவடி அடிப்பதே பெரும் சாதனை. இவன் சர்வ சாதாரணமாய் எட்டடி அடிக்கிறான்.

இரண்டாவது முறை கிட்டிப்பில் காற்றில் எழும்ப வில்லை. மூன்றாவது முறை கொஞ்சம் எழும்பியது, ஒரே அடியாக இழுத்து அடித்தான். தூரத்தில் சென்று விழுந்தது.

மூன்றாமவன் ” எத்தனை வேணும்? ” என்றான்.

ரோஷக்காரன் ரொம்ப யோசனைக்கு பின் நூத்தம்பது என்றான். ” சரி எடுத்துக்கோ” என்றான் மூன்றாமவன். ஊமக்கோட்டன் இடையில் நுழைந்து, “இருக்காதுல. அளந்து பார்ப்போம்” என்றான். “சரி அள” என்றான் ரோஷக்காரன். ஊமக்கோட்டன் தாண்டை வைத்து அளந்தான். தாண்டின் நீளத்தில், கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து, குழிக்கு நூற்று இருபது தடவைதான் வந்தது. ஊமக்கோட்டான் ரொம்ப உற்சாகமாகி, “நாஞ் சொன்னேம்லா” என்றான்.

ரோஷக்காரன் “ரொம்ப அல்ட்டிக்காதடே..”என்றான்.

“ஆட்டைப் போச்சா நம்பர் போச்சா”

கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் ரோஷக்காரன் “நம்பர் போச்சு” என்றான். அவன் சொன்ன விதம் படு ஸ்டைல். மீண்டும் அவன் கெந்தப் போனான்.

“நான் எபப ஆட?” என்றேன்.

“தாத்தா ஒரு தடவதான கேக்காரு.. அவர் விளையாடிட்டுப் போவட்டும்” என்றான் மூன்றாமவன். ஒரு வழியாக தாண்டு என் கைக்கு வந்தது.

என்னால் குனிந்து நின்று கெந்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஆசை விடவில்லை. செத்தாலும் சரி என்ற வீராப்பு வந்துவிட்டது எனக்கு. கிட்டிப்பில்லை குழிக்கு பக்கவாட்டில் வைக்காமல் நீளவாக்கிலேயே வைத்தேன்.

“இது ஆட்டையில கிடையாது. ராக்கெட்லாம் விடக்கூடாது” என்றான் ஊமக்கோட்டான்.

“சரி விடுல. தாத்தா எத்தனை தூரம் கெந்துதாருன்னு பாக்கலாம்” என்றான் ரோஷக்காரன்.

நான் பின் பக்கமாய்த் திரும்பி நின்றேன். மூச்சு முட்டியது. ஆசுவாசப்படுத்த கொஞ்ச நேரம் அப்படியே நின்றேன். மனதுக்குள் சம்சுதீன், பெரியநாயகம் எல்லாம் வந்து போனார்கள்.

“சீக்கிரம் கெந்து தாத்தா”

மெல்லக் குனிந்த போது, முதுகின் அடிப்பாகத்தில் இருந்து ஒரு வலி மேலே பரவியது. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்த மாதிரி கூடத் தோன்றியது. அதே மாதிரி அதிக நேரம் இருந்தால், மயக்கம் வந்தாலும் வரலாம் என்று தோன்றவே, சிரத்தையில்லாமல் ஒரு கெந்து கெந்தினேன். கிட்டிப்பில் காற்றிலெல்லாம் பறக்கவில்லை. தரையை உரசிக்கொண்டு கொஞ்ச தூரம் சென்று அமைதியானது. இரண்டு கால்களின் வழியாக உலகைப் பார்த்து நாளாயிற்று. பையன்மார்கள் தலைகிழாகச் சிரித்தார்கள்.

“ஹ்ம். இம்புட்டுதானா? இதுக்குத்தான் இம்புட்டு நேரமா?” என்றான் ரோஷக்காரன். நான் மெல்ல நிமிர்ந்தேன். உடலின் பிடிப்புகளில் இருந்து சொடக்கு விழும் சத்தங்கள் கேட்டது.

” என்ன தாத்தா.. ஓடி வந்து தாண்டிரவா? ” கேட்டுவிட்டுச் சிரித்தான் ரோஷக்காரன். பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை. அப்படியே எங்கேயாவது கொஞ்ச நேரம் உட்கார்ந்தால் போதும் எனத் தோன்றியது.

“போனா போவட்டும். ஒரு தடவை விட்டுக்கொடுல.. என்ன அடிக்கார்னு பாப்போம்” என்றான் மூன்றாமவன். சரி என்று சொல்லிவிட்டு, என்னை அவுட்டாக்காமல் விட்டுக்கொடுத்தான்.

“தாத்தா.. ஐயோபாவம்னு விட்டுக்கொடுத்துருக்கேன். நல்லா அடிச்சு பாயிண்ட் எடுக்கனும் என்ன?”

“இல்லடே.. என்னால முடியலை. ஆட்ட போதும். நீங்க விளையாடுங்க”

“தாத்தா.. சும்மா ஆடு தாத்தா.. ஐயோ பாவம்னு அவன் விட்டுக்கொடுத்திருக்காம்லா” என்று வக்காலத்து வாங்கினான் ஊமக்கோட்டான். எனக்கும் ஆசை வந்தது. திக்கித் திணறி நடந்து கிட்டிப் பில் அருகில் சென்றேன். இன்னொரு முறை குனிய வேண்டும் என நினைத்தபோது வந்த பயத்தை ஒத்தி வைத்தேன்.

தாண்டைக் கையில் வைத்து, கிட்டிப்பில் எந்த நுனி தூக்கி இருக்கிறது எனப் பார்த்தேன். ஒரு நுனியும் வாகாய் இல்லை. ரொம்ப யோசனைக்குப் பின் அதிகம் குனியாமல், ஒரு நுனியை அடித்தேன். அது மேலெழும்பாமல், மண்ணில் உள்ளே புதைந்துகொண்டது.

“தாத்தா ஒரு சான்ஸ் போயிடுச்சு. இன்னும் ரெண்டு சான்ஸ்தான் இருக்குது” என்றான் மூன்றாமவன்.

இரண்டாம் முறை அடித்த போதும் கிட்டிப்பில் காற்றில் எழும்பவே இல்லை.

“ஐயோ.. உயிரடியாவது அடி தாத்தா.. இல்லைனா அவுட்..”

கையின் மணிக்கட்டில் வலி விண்ணென்று தெரித்தது. கடைசியாய் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று அடிக்க, கிட்டிப்பில் காற்றில் எழும்பி லாவகமாய், தாண்டில் மாட்ட, விசுக்கென்ற சத்தத்துடன் பறந்தது. அதை நானே எதிர்பார்க்கவில்லை.

“தாத்தா பரவாயில்லைல” என்றான் ஊமக்கோட்டான்.

“ஆமால” என்றனர் மற்ற இரண்டு பையன்மார்களும்.

“சரி தாத்தா உனக்கு எத்தனை பாயிண்ட் வேணும் கேளு!”

நான் “நூறு”என்றேன்.

மூன்றாமவன் “ஸ்தூ..” என்று சொல்லிவிட்டு “தாத்தா.. நூறு இருக்காது. அம்பதுதான் இருக்கும். அம்பது கேளு” என்றான். அவனுக்கு என்னைப் பிடித்துவிட்டது போல.

“இல்லை. நூறுதான்” என்றேன். “வேணும்னா அளந்து பாத்துக்கோ”

ரோஷக்காரன் அளந்தான். அம்பத்தெட்டு தாண்டுகள்தான் வந்தது.

“நாந்தாஞ் சொன்னேம்லா..” என்றான் மூன்றாமவன். அவன் கண்ணில் பரிதாபம் தெரிந்தது.

“சரி ஆட்ட போச்சா? நம்பர் போச்சா?” என்றான் ஊமக்கோட்டான்.

நான் “ஆட்ட போச்சு” என்றேன்.

***

இந்தக் கதை சிறப்பு அம்பலத்தில் வெளியாகியது.


 

***

Share

மீண்டுமொரு கனத்த இரவு – கவிதை

இரண்டாம் முறையாய்

இன்னொரு கனத்த இரவு

தீவிரமாக மழை பெய்த ஒரு நாளில்

தூரத்தில் நிலா பார்த்துக்கொண்டே

கழிந்திட்ட அந்த இரவுக்குப் பின்னர்

சகஜமாகிப்போனது

உடல் தொடுதல்

காதல் பரிமாறிக்கொள்ள மறந்ததில்லை

பயந்து பயந்து தொட்டுக்கொண்ட நாள்கள் போய்

தொடுவதற்காகவே சந்தித்துக்கொண்ட நாளிலும்கூட

எந்தவித முகாந்தரமுமில்லாமல்

காரணங்களைத் தேடிச் சொல்லி

விலகிய நாளிலும்

உள்ளங்கையில் உடல்வாசம் இருந்தது

படுக்கை விரிப்பு கசங்காமல்

விரித்தபடியே இருந்தது

இன்னொரு காதல் வரும்வரை

முதல் காதல் ஆழமென்பார்கள்

ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது

இரண்டாம் கனத்த இரவிலும்கூட

முதல் காதல் தொலைந்த இரவைப் பற்றியே

யோசித்துக்கொண்டிருப்பதால்

Share

இளமையின் விளிம்பில்

இளமையின் விளிம்பில்
—ஹரன் பிரசன்ன

சிணுக்கெடுத்த பின்
சுருட்டி எறிந்த முடிக்கற்றை
மூலையில் முட்டிக்கொண்டிருப்பதிலிருந்தும்
முகங்காட்டும் கண்ணாடியின்
ஸ்டிக்கர் பொட்டுத் தடங்களிலிருந்தும்
கல்கட்டிக்கொண்டு தொங்கும்
பாம்புப்புடலைத் தோட்டத்தின் வழி வீசும்
ஈரக்காற்றிலிருந்தும்
மீண்டு
படியிறங்க
கண்ணை உறுத்துகிறது
எதிர்வீட்டுக்கொடி

Share

கண்ணில் நிற்கும் துளிகள்

கண்ணில் நிற்கும் துளிகள்
–ஹரன்பிரசன்னா

இரட்டைக் கோட்டுக்குள் சிறைபடாமல்
நான்கு கோடுகளுக்குள் அடங்காமல்
பிதுங்கி வழியும் எழுத்துகளை
சலிப்போடு
இரப்பர் கொண்டழிக்கும்
சிறுகையைப் பற்றி முத்தமிட
வெறிக்கும் சிறுமிக்கு
வாய்திறக்காமல் ஒரு வார்த்தை-
ஒன்றிலிருந்து நூறுவரை
சும்மா எண்ண,
வேண்டியிருக்கிறது ஒரு தனிப்பொழுது.

Share