Archive for அரசியல்

புரியாத பேச்சு – விஜய்காந்த்

விஜய்காந்தின் பேச்சு புரியவே இல்லை என்பதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. ஆனால் நிஜமாகவே புரியவில்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இதை வைத்துக் கிண்டல் செய்பவர்களை நான் ஏற்கவில்லை. (ஆனால் சில மீம்கள், வீடியோக்கள் கடுமையான சிரிப்பை வரவழைக்கின்றன. அதைச் செய்தவர்களின் வெற்றியாக மட்டும் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்!) ஆனால் இதைத் தவிர்க்கமுடியாது. ஜெயலலிதாவையும் இப்படி கிண்டல் செய்திருக்கிறார்கள். இது தலைவிதி, இதிலிருந்து தப்ப முடியாது.

ஆனால் விஜய்காந்த் பேசுவது நிஜமாகவே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் பேசுவது புரியவில்லை என்றால் நான் அவருக்காகப் பரிதாபப்படுவேன். ஆனால் நாளைய முதல்வராகப் போகிறேன் என்று சொல்பவர் பேசுவது புரியவில்லை என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வேன். விஜய்காந்த் தரப்பிலிருந்து மிகத் தெளிவான விளக்கம் இதற்குத் தரப்படவில்லை என்பதுதான் விஷயம். இப்போதுதான் தொண்டைப் புண் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவரை அவரது குடிப்பழக்கமே காரணம் என்று திரைமறைவில் சொல்லப்பட்டது. எது காரணமாக இருந்தாலும் அவர் பேசுவது புரியவில்லை என்பது புரியவில்லைதான்.

எம்ஜியாருக்கு சுடப்பட்டு பேச்சு போனபோது இதே சமூகம் பதறியது. பின்பு கிண்டலும் செய்தது. ஆனால் விஜய்காந்துக்கு அப்படி அல்ல. ஜெயலலிதா பற்றியும் பல கதைகள். ஏன் இத்தலைவர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை பொதுவில் வைக்க இப்படி தயங்குகிறார்கள்? எல்லா மனிதர்களுக்கும் வரும் பிரச்சினைதானே? ஏன் மூடி மறைக்கவேண்டும்? சர்க்கரை நோய் பிரச்சினை என்று வெளியே தெரிந்துவிட்டால் என்ன ஆகிவிடும்?

இன்றைய நவீன உலகத்துக்கேற்ப தலைவர்கள் உருவாகி வரவில்லை. ‘என் பிரச்சினை இதுதான், இதைத்தான் நான் எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறேன், என் பலவீனம் இது’ என்று வெளிப்படையாகச் சொல்லும் தலைவர்களே மக்கள் மனத்தில், ஆயிரம் கிண்டலையும் மீறி, இடம் பிடிக்கப் போகிறார்கள். இந்த எளிய சூத்திரம் கூடத் தெரியாமல் இல்லாத இமேஜைக் கட்டிக் காக்க இவர்கள் போடும் நாடகம், மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தேவையற்ற கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இதையே பெருமையாகக் கருதிக்கொள்வார்களோ என்னவோ.

மூப்பனார் பேசும்போது கீழே சப்டைட்டில் போட்டது சன் டிவி. அதற்குப் பலர் கொதித்தார்கள். ஆனால் சன் டிவி சப்டைட்டில் போட்டதில் தவறே இல்லை. விஜய்காந்த்துக்கும் சப்டைட்டில் போட்டால் நல்லது. உடல் நலம் சரியாகி அவர் நன்றாகப் பேசும் வரை இது தொடரவேண்டியது அவசியம். கிண்டலாக இல்லை, சீரியஸாகத்தான் இதைச் சொல்கிறேன்.

Share

ஊடக இந்தியாவும் உண்மையான இந்தியாவும்

ஜவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த இந்திய எதிர்ப்புக் கோஷங்களைத் தொடர்ந்து பலரும் ‘நான் தேசத் துரோகிதான்’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் விருதைத் திருப்பித் தருதல் அளவுக்குப் போகும் என்றே நினைக்கிறேன். தேசத் துரோகிதான் என்று சொல்லாதவர்கள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படப்போகும் நாள் தூரத்தில் இல்லை. மிகத் தெளிவாக இந்தியாவின் முகத்தை வரையறுக்கும் விலைபோன ஊடகங்கள் வெளிநாடுகளில் இதையே தலைப்புச் செய்தியாக்கும்.

 

Custom Image

 

காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் எப்படி ஊடகங்களிலும் கருத்தைப் பரப்பும் இடங்களிலும் இந்திய எதிர்ப்பாளர்களும் வெறுப்பாளர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கும் காலம் இது. மோதியின் ஆட்சி தொடங்கியதில் இருந்தே இந்தியா ஒரு சகிப்பின்மையில் சிக்கித் தவிப்பதாக இவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். எந்த ஒரு பிரச்சினையும் மிகச்சரியாக இந்த சகிப்பின்மையில் முடியலாம். யாராவது ஒரு வி ஐ பி சம்பந்தமே இல்லாமல் திடீரென சகிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கலாம். உடனே அங்கிருந்து பற்றிக்கொள்ளும்.

ஆனால் இதெல்லாம் இனிமேல் எடுபடுமா எனத் தெரியவில்லை. இன்றைய உலகம் இரண்டாகப் பிரிந்துகிடக்கிறது. ஒன்று, கருத்துக்களை உருவாக்கி அதை நம்பி அதையே வழிபடும் சோஷியல் நெட்வொர்க் – மீடியா உலகம். இன்னொன்று, இவற்றோடு தொடர்பே இல்லாத மக்களின் உலகம். இந்த மக்களின் உலகம் வழியேதான் மோதி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார். ஏனென்றால் ஷோஷியல் நெர்வொர்க் உலகம் பாஜக தனித்து ஆட்சிக்கு வரும் என்று ஒருமுறைகூட சொல்லவில்லை.

இந்த இரண்டு உலகங்களுக்கு இடையே உள்ள இடைவெறி பிளந்து கிடக்கிறது. இதை எப்படியாவது குறுக்கி தங்கள் கருத்தே மக்களின் கருத்தாக மாற்ற இவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். சில சமயம் வெற்றியும் கிடைக்கக்கூடும். இங்கேதான் நாட்டுக்காகவும் அறத்துக்காகவும் பேசுபவர்கள் கவனமாக இருக்கவேண்டியது.

அறம், நாடு போன்றவற்றைப் பேசுவதே முட்டாள்தனம், பிற்போக்குத்தனம் என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வார்கள். ஆனால் அதீத நாட்டுப்பற்று பொதுமக்களிடம் என்றுமே தவறாகப் பார்க்கப்பட்டதில்லை. ஒரு கல்லூரியில் இந்திய எதிர்ப்புப் பேச்சு தேவையில்லை என்று சொல்வதிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய தேசியக்கொடி பறக்கவேண்டும் என்று சொல்வதிலோ எவ்வித சுந்திரப்பறிப்பும் இல்லை. இவையெல்லாம் இயல்பாக இருந்திருக்கவேண்டும். இந்தியாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்க சொல்லவில்லை. இந்திய விமர்சனம் என்பது தேவையானதுதான். ஆனால் அதன் பின்னணி என்ன என்று ஆராய்வது முக்கியமானது. அது இந்தியாவின் வளர்ச்சியை நோக்கியதா அல்லது இந்தியா உடையவேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடா எனப்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு பிஎச்டி தேவையில்லை. மிக மேலோட்டமாகவே புரிந்துகொள்ளலாம்.

இந்தியா உடையவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் விரும்புவதாக நான் சொல்லவில்லை. ஆனால் இந்தியா உடைந்தால் இவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அல்லது அதில் இவர்கள் நலன் பாதிக்கப்படும் என்றால் மட்டுமே கவலைப்படுவார்கள். ஏன் கம்யூனிஸ்ட்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், மற்றவர்கள் இந்தியாவைப் பயன்படுத்தி தங்களை முன்னேற்றவே முயல்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்தியாவில் இது சாத்தியமில்லை. எனவே இந்திய வெறுப்பு எதிர்ப்புக் குழுக்களோடு கை சேர்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான் எங்கெல்லாம் இந்திய எதிர்ப்பும் வெறுப்பும் புரண்டோடுகிறதோ அங்கே கம்யூனிஸ்ட்டுகள் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் உலா வருகிறார்கள். ஒவ்வொரு இந்திய வெறுப்புக்குப் பின்பும் அதற்கான பின்புலத்தை மிகப்பெரிய அளவில் உலகமே ஏற்கும் வண்ணம் வாதத்தை உருவாக்கித் தருவதில் இவர்கள் பெரிய பங்காற்றுவார்கள்.

சாதாரணமாகக் கேட்கும் யாரும் இவர்கள் கருத்தில் உள்ள ‘நியாயத்தை’ ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அது பல்வேறு கருத்தாங்களால் உருவாக்கப்பட்ட ஒரே நியாயமாக இருக்கும் – இந்தியாவுக்கு எதிராக இருப்பதுதான் அது.

இந்தியாவைத் துண்டாடவேண்டும் என்பது இவர்களுக்கு தேச விரோதப் பேச்சாகத் தெரியாது. மாறாக கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகத் தோன்றும். ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வித சுதந்திரமும் ஒரு எல்லைக்குக் கட்டுப்பட்டதே என்பது இவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சுதந்திரம் என்றே பேசுவார்கள். இவர்கள் முன்வைக்கும் மாற்று என்பது ஒட்டுமொத்தமாக மனிதர்களை அடிமையாக்கும் ஒரு கருத்தாக்கமாக இருக்கும். ஆனால் அதையே உலகத்தின் சிறந்த ஒன்று என்று பல்வேறு மொழியில் பல்வேறு குரலில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் விரும்பும் இந்திய முகத்தையே மீண்டும் மீண்டும் ஊடகங்களில் காட்டுவார்கள். ஆனால் உண்மையான இந்தியாவோ எப்போதும்போல் அமைதியாகவும் நாட்டுப்பற்று உடையதாகவும்தான் இருக்கும்.

ஜே என் யு விவகாரத்தில் அமைதியாக இருந்த மாணவர்களை அரசு கைதுசெய்துவிடவில்லை. மிகத் தெளிவாகவே இந்தியாவுக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைத் துண்டாக்குவோம் என்பதும் அப்சல்கள் முளைப்பார்கள் என்பதும் கருத்துச் சுதந்திரம் இல்லை. அப்பட்டமான இந்திய எதிர்ப்புக் கோஷங்களே. இந்த விஷயத்தில் அரசுத்தரப்பில் இருக்கும் ஒரே பிரச்சினை, கன்னையாவின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே. அதை அரசு கவனமாகவே கையாளவேண்டும். ஓர் அரசுக்கு எல்லாப் பொறுப்புகளும் உண்டு, கன்னையா போன்றவர்களைக் காப்பது உட்பட. தேவைப்பட்டால் கல்லூரிகளில் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கலாம். இதையும் கருத்துச் சுதந்திர எதிர்ப்பென்றும் பிற்போக்கென்றும் சொல்வார்கள். படிக்கப்போன இடத்தில் படி என்ற காலம்காலமான நம் நம்பிக்கையைச் செயல்படுத்தினாலே போதும். மற்றவை கல்லூரிகளில் இருந்தும் பல்கலைக்கழக்கங்களில் இருந்தும் வெளியே இருக்கட்டும்.

மோதி அரசு முற்போக்காளர்களின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அசரக்கூடாது. இத்தனை நாள் தங்கள் வசமிருந்த பிடி நழுவும்போது வரும் பதற்றம் இது. மேலும் பல்வேறு பிரிவினைவாத சக்திகள் ஒன்றிணைந்து எது அவர்களுக்கு வேண்டுமோ அதைச் செய்யத் துடிக்கும்போது இப்படித்தான் எதிர்ப்புகள் நிகழும். எது இந்திய விரோதம் என்பதை அரசு இவர்களுக்குத் தெளிவாகவே காட்டவேண்டும். இந்த எதிர்ப்பெல்லாம் மோதி அரசுக்கு நன்மையையே கொண்டுவரும். ஏனென்றால் மக்கள் உலகம் என்றுமே நாட்டுப்பற்றுக்கு ஆதரவானதாகவும் எதிர்ப்பு சக்திகளுக்கு எதிரானதாகவே இருக்கும். ஊடகம் உருவாக்கும் மாயையை எதிர்கொள்வதும் முக்கியமான சவாலே. ஊடகங்கள் சொல்லும் கருத்தில் தனக்கு வேண்டியதை மட்டுமே இந்த அரசு கவனத்தில்கொள்ளவேண்டும். மற்றவற்றைப் புறம்தள்ளி நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து நாட்டுப்பற்று, இந்திய ஆதரவு போன்ற விஷயங்களை முன்னிறுத்தியே செயல்படவேண்டும். நாட்டுப்பற்று என்பது இழிவானதல்ல. அதை இழிவு என்று சுற்றி வளைத்துச் சொல்லும் போலி முற்போக்காளர்களே இழிவுக்குரியவர்கள்.

Share

ஈழம் அமையும் – புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஈழம் அமையும்’ புத்தகத்தை வாசித்தேன். சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகமாகவே இதை நினைக்கிறேன். இதிலுள்ள அரசியல் என் நிலைப்பாடுகளுக்கு எல்லா வகையிலும் எதிரானதுதான் என்றாலும், இது எழுதப்பட்டிருக்கும் விதம் இந்நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.

cover_104771
ஈழம் அமையும், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம்
அச்சுப் புத்தகம் ரூ 250, மின் புத்தகம் ரூ 100
அச்சுப்புத்தகத்தை வாங்க: NHM site | Flipkart | Amazon
மின்புத்தகத்தை வாங்க: DailyHunt (NewsHunt)

ஈழம் அமையும் என்ற தலைப்பிலேயே நாம் எத்தகைய நிலைப்பாட்டுள்ள நூலை வாசிக்கப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம். எனவே மிக எளிதான முன் தயாரிப்புகளுடன் இந்நூலை அணுகமுடிகிறது. ஆனால் ‘ஈழம் அமையும்’ என்று தலைப்பிருந்தாலும், இந்நூல் 99% பேசுவது எப்படி விடுதலைப்புலிகளும் அப்பாவி ஈழத்தமிழ் பொதுமக்களும் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதையே. ஈழம் எப்படி அமையும் என்பதற்கு இந்நூல் அரசியல் ரீதியாகவோ செயல்பாட்டு ரீதியாகவோ எவ்வித தீர்வையும் சொல்லவில்லை. இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் தீர்வு, இந்நூலின் கனத்துடன் ஒப்பிடுகையில் இதை வாசிக்கும், இக்கொள்கையையொத்த மனமுடையவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். ஆம், அரவிந்தர் அருளில் ஒருநாள் ஈழம் அமையும் என்கிறார்.

ஒரு தமிழ்நாட்டுத் தமிழனாக உண்மையில் தனி ஈழம் அமைகிறதா இல்லையா என்பதில் எனக்கு எவ்வித தீவிரக் கருத்தும் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் உடல்சார்ந்தோ சுதந்திரம் சார்ந்தோ நான் எந்தவொரு இன்னலையும் அனுபவிக்கவில்லை. மிகச் சாதாரண ஒரு சுயநலமியாகவும் நான் இருக்கலாம். ஆனால் அங்கே நடக்கும் இனப்படுகொலை நிச்சயம் மனத்தை உலுக்கியது என்பதில் மாற்றமில்லை. ஒருவகையில் இப்பார்வை இந்தியாவின் பார்வைதான். என் பார்வை இந்தியாவின் பார்வையாகத்தான் இருக்க முடியும். என் போலவே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே உணர்ச்சிபொங்க இந்த அரசியலை அணுகுகிறார்கள் என்பது என் எண்ணம்.

இதில் மிக முக்கியமான விஷயம், விடுதலைப் புலிகளையும் அப்பாவி ஈழத் தமிழர்களையும் பிரித்துக்கொள்வது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், எனவே அவர்கள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களை சாக்காக வைத்து பொதுமக்களைக் கொல்வது என்பது ஏற்புடையதல்ல. இங்கேதான் பெரிய அரசியலை இருபக்கமும் நாம் பார்க்கலாம். ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்துக்கொள்ளாதவாறு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்களை ஈழத்தமிழர்களின் எதிரிகளாகச் சித்தரிப்பார்கள். இந்த சித்தரிப்பு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்பதுதான் இன்றைய நிலை.

இப்புத்தகம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் விடுதலைப்புலிகளையும் ஈழப் பொதுமக்களையும் எவ்விதத்திலும் பிரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. எங்கெல்லாம் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் வருகின்றனவோ அதை ஒட்டியே ஈழத்தமிழர்கள் பற்றிய குறிப்புகள் மிகக் கவனமாகச் சொல்லப்படுகின்றன. எவ்வித அரசியலும் இன்றிப் இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அவர்களறியாமலேயே இதில் விழுந்துவிடுவார்கள்.

இப்புத்தகம் முன்வைக்க வரும் மிகமுக்கியமான ஒரு விஷயம், விடுதலைப்புலிகளின் அழித்தொழிப்புக்கு, எனவே ஈழத்தமிழர்களின் ஒழிப்புக்கு மிக முக்கியக் காரணம் இந்தியாதான் என்பது. தொடக்கம் முதல் புத்தகத்தின் இறுதிவரை இந்திய வெறுப்பு இலங்கையின் சிங்கள பேரினவாத அரசின் மீதான வெறுப்புக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக ஆசிரியரின் கொள்கைக்கு வலுவூட்டும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளது. அத்தனை ஆதாரங்களின் அடிப்படையும் ஒன்றுதான். புவிசார்நலனுக்காக இப்போரை இந்தியா நடத்தியது என்பதுதான் அது. இந்தியாவுக்குப் போட்டியாக சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இப்போருக்கு ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக உதவின என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்த உலகங்களின் முக்கிய நாடுகளும் விடுதலைப்புலிகளை எனவே ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டினார்கள் என்கிறார் ஆசிரியர் அய்யநாதன்.

மறந்தும்கூட ஒரு வார்த்தைகூட விடுதலைப்புலிகளின் மீதான விமர்சனத்தை வைக்கவில்லை. விடுதலைப்புலிகள் சமாதானத்துக்குத் தயாராக இருந்தார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு ஆதாரங்களுடன் சொல்லும்போது, விடுதலைப்புலிகள் காந்திய இயக்கம்தானோ, நமக்குத்தான் உண்மை புரியாமல் போனதோ என்றும் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. அதிலும் விடுதலைப்புலிகள் சுனாமியின்போது எப்படி சிங்களவர்களுக்கும் உதவினார்கள் என்று மறுபடி மறுபடி சொல்லும்போது, இது ஒன்றைத்தவிர விடுதலைப்புலிகள் சிங்களவர்களுக்கு எப்போதும் உதவியதில்லையோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் பிரதமர்களின் இந்திரா காந்தி மட்டுமே தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக உண்மையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் இந்நூல், இந்தியாவின் மற்ற எல்லா பிரதமர்களையும் ஒரே தட்டில் வைக்கிறது – வாஜ்பாய் உட்பட. இன்று ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில் பேசிய வைகோ இக்கருத்தை மறுத்து வாஜ்பாய்க்கே தெரியாமல் அதிகாரிகளின் லாபியால்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலை இந்திய அரசால் அச்சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார். இந்திரா காந்தியின் ஈழப்பாசத்துக்குக் காரணம் கூட, இலங்கை அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததுதான் என்றும் அய்யநாதன் இந்நூலில் சொல்கிறார்.

இந்நூலின் முக்கியத்துவம் என்பது – மிக வரிசையாக அத்தனை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. மிகத் தெளிவான எழுத்துநடை. ஆதாரங்களுக்கு இடையேயான புள்ளிகள் மிகத் தெளிவான தர்க்கத்தால் இணைக்கப்பட்டுள்ளன. தன் கொள்கை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு எப்படி ஒரு சிறந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு கையேடு. அதே சமயம் இந்நூல் சறுக்கும் இடங்களைப் பார்க்கலாம்.

முதல் குறை என்பது, கூறியதைப் பலமுறை மீண்டும் மீண்டும் கூறுவது. ஒருகட்டத்தில் சலிப்பேற்பட்டுவிடுகிறது.

இன்னொருகுறை, அய்யநாதனின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிர்நிலைப்பாட்டுடையவர்களுக்கு இந்நூல் எப்படி உதவும் என்பது. இதை மிகக் குழப்பான ஒரு மொழியில், புத்தகம் படிக்காதவர்களுக்குப் புரியாத வகையில், ஜென்ராம் இன்று ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் குறிப்பிட்டார். இந்நூலை இக்கொள்கையை ஏற்காதவர்களும் கொண்டாடமுடியும் என்பதுதான் அவர் சொல்ல வந்தது. அதை என் உதாரணம் மூலமே விளக்குகிறேன்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியவர்களே என்பதே என் நிலைப்பாடு. அதை இந்தியா செய்து முடித்தது என்றால் அதை நான் இந்தியாவின், காங்கிரஸின், அதற்கு உதவிய எதிர்க்கட்சிகளின், அண்டைநாடுகளின் சாதனையாகவே பார்ப்பேன். இந்நூலே அதற்கான தரவாக அமையும். இதைத்தான் ஜென்ராம் சொல்லவந்தார் என்று நினைக்கிறேன். அப்படித்தான் இந்நூல் உள்ளது. விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படும்போது பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்கான உறுதியை இந்திய அரசு பெறவில்லை, அப்படிக் கேட்டுப் பெறும் வகையில் இந்திய அரசு இல்லை அல்லது அதை முக்கியமாக இந்திய அரசு நினைக்கவில்லை, அல்லது ஈழத்தமிழ்ப்பொதுமக்கள் ஒழிந்தாலும் பரவாயில்லை புலிகள் ஒழியட்டும் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம் என்பதில் எது ஒன்று உண்மையென்றாலும் அது இந்தியாவின் பக்கம் நிகழ்ந்த பெரிய சறுக்கல்தான். அதுவும் மீண்டும் சரிசெய்யப்பட இயலாத ஒரு தோல்வி. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் இத்தகைய ஒரு பயங்கரவாத ஒழிப்பில் இப்படி நடப்பதுதான் உலகம் முழுக்க நடந்த வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்வது. இப்படிச் சொல்லி எவ்வகையிலும் நான் இதை நியாயப்படுத்தவில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இப்படித்தான் நடக்கிறது. இந்திய அமைதிப்படையின் மீதான குற்றச்சாட்டுகளிலும் நாம் இதைப் பார்க்கலாம். இதைவிட மிக முக்கியமான எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமென்றால் – விடுதலைப்புலிகளின் செயல்பாட்டிலேயே நாம் பார்க்கலாம். அவர்கள் எத்தனை பேரை எதற்காகக் கொன்றார்கள் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். சிறுவர்களை, தமிழ் முஸ்லிம்களை, சக இயக்கத்தவர்களைக் கொன்றார்கள். அதற்கான நியாயங்கள் மெல்ல அத்தரப்பிலிருந்து உருவாகிவரும். இதுவே மிகப்பெரிய பரப்பில் ராணுவத்தரப்பிலும் நடந்துவிடுவது கொடுமைதான்.

இந்நூலின் இன்னொரு சறுக்கல் – இறுதி அத்தியாயங்களில் அய்யநாதன் சொல்லும் ஆதாரமற்ற வம்புகள் பற்றிது. ராஜிவ் காந்தி கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும், அவரைக் கொல்வதற்கான காரணம் எதுவும் விடுதலைப்புலிகளுக்கு இல்லை என்றும், சர்வதேச சதியில் ராஜிவை ஒழிக்க விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் ஜெயின் கமிஷனை சுட்டிக்காட்டி அய்யநாதன் சொல்கிறார். (புத்தகத்திலிருந்து: ராஜிவ் காந்தியை படுகொலை செய்யச் சர்வதேச அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது; அத்திட்டம் தீட்டியவர்களே ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்என்கிற உண்மைகள் எல்லாம் மத்திய அரசு அமைத்த நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் விசாரணை ஆணையத்தில் வெளிவந்தது.) ஆயிரத்தோராவது முறை இந்த வம்பை நாம் படிக்கிறோம். விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்ற ஒருதரப்பிலிருந்து வேறுபட்ட இன்னொரு புலிஆதரவு தரப்பு இது. புலிகள்தான் கொன்றார்கள், ஆனால் சதி அவர்கள் செய்யவில்லை என்பது. அய்யநாதன் ஒருபடி மேலேபோய், புலிகள் கொன்றிருக்க வாய்ப்பில்லையோ என்ற சந்தேகத்துடன் நிச்சயமாக சதியை அவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்கிறார். கருமைக்கும் வெண்மைக்குமிடையேதான் எத்தனை நிறங்கள். சிபிஐ ஏன் சதிக்கான காரணத்தைக் கண்டறியவில்லை என்பதைப் பெரிய விஷயமாக முன்வைக்கிறார் அய்யநாதன்.

இந்திராகாந்தி கொலையில் உள்ள மர்மங்கள், அதில் சோனியாவின் பங்கு என்ன (தாக்கர் ஆணையத்தை முன்வைத்து சொல்கிறார் ஆசிரியர்), நரசிம்மராவ் சந்திராசாமி பங்கு என்ன, லக்குபாய் பதக்கிடம் சந்திராசாமி சொன்னது என்ன, சுப்ரமணியம் சுவாமி திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு எப்படி உளறினார், எப்படி நடுங்கினார் என்றெல்லாம் திண்ணைப் பேச்சுகளில் அலைபாய்கிறது இப்புத்தகம். சுப்ரமணியம் சுவாமிக்கு கொலையில் பங்கிருக்கிறது என்றால் அதே சுப்ரமணியம் சுவாமி சோனியாவுக்குப் பங்கிருப்பதாகச் சொல்கிறாரே, சோனியாவும் மௌனமாக இருக்கிறாரே என்ற கேள்விக்கு ‘அது புரியாத ஒரு புதிர்’ என்று ஓரிடத்தில் நழுவும் அய்யநாதன், இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்: இந்திரா காந்தி படுகொலையில் சோனியாவின் பங்கு பற்றிய உண்மைகளை இந்திய மக்கள் அறியாதிருக்கலாம், ஆனால், இந்திரா காந்தியைச் சதி செய்து வீழ்த்திய அந்த சக்திகளுக்கு தெரியாமல் இருக்குமா? அதனால்தான், சந்திராசாமி, சுப்ரமணியம் சுவாமி ஆகியோரின் முகத்திரைகள் விசாரணை ஆணையங்களில் கிழித்தெறியப்பட்ட பின்னரும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் சோனியா காந்திக்கு இல்லாமல் போனது. இல்லையென்றால், சோனியாவை இன்றுவரை சுப்ரமணியம் சுவாமி மிரட்டிக்கொண்டிருக்கிறாரே, என்ன காரணம்? அதன் பின்னணி என்ன?” இவ்வாறாக ஒரு பட்டியலை இட்டுவிட்டு, சோனியா தன் கணவர் ராஜிவின் கொலைக்காக விடுதலைப்புலிகளை ஒழிக்கவில்லை, தன் மீதான பழியை மறைக்கவே விடுதலைப்புலிகளை ஒழிக்கும் இலங்கையின் போருக்கு உதவியுள்ளார் என்று முடிக்கிறார் அய்யநாதன்.

இதைவிட இன்னொரு வம்பு என்னவென்றால், சிவராசன் எப்போதோ புலிகள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் இவர்களையெல்லாம் வழிநடத்துவதெல்லாம் சந்திராசாமியும் சுப்ரமணியம் சுவாமியும்தான் என்று பெங்களூர் ரங்கநாத் (ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர், சிவராசன், சுபா உள்ளிட்டவர்களுக்கு பெங்களூருவில் தங்குவதற்கு வீட்டை ஏற்பாடு செய்தவர்) சொன்னதையும் இந்நூலில் காணலாம்! ராஜிவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமியைப் பற்றி திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளதையும், ரகோத்தமன் அவரது ‘ராஜிவ்கொலை – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் மரகதம் சந்திரசேகர் பற்றியும் மறைக்கப்பட்ட வீடியோ பற்றியெல்லாம் கூறும் அய்யநாதன், திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைப் பற்றியும்  வைகோ ஏன் சாட்சியாக சேர்க்கப்பட்டார், ஏன் ரகோத்தமனால் விசாரிக்கப்படவில்லை, சிவராசனுக்கு உதவியது சீனிவாசய்யா என்ற நபர் வைகோவின் சகோதர் ரவிச்சந்திரனாக இருக்கலாம் என்றெல்லாம் ரகோத்தமன் சொல்லியிருப்பதை எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒழிக்க ராஜபக்ஷே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கருணாநிதியும் உதவினார் என்று பல இடங்களில் பதிவு செய்கிறார். அதாவது கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதம் முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அதை தில்லி வட்டாரங்கள் அறிந்திருந்தன என்றும் சொல்கிறார். 2ஜி வழக்கின் கோப்புகளைக் காட்டி கருணாநிதியை எம்.கே.நாராயணன் மிரட்டினார் என்றும் சொல்கிறார்.

இந்நூலின் மிக மோசமான அத்தியாயம், கேரளா மாஃபியா என்று எழுதப்பட்டிருக்கும் அத்தியாயமே. உண்மையில் இந்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றிய பலரில் முக்கியமான மலையாளிகளைப் பொறுக்கியெடுத்து (எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், டி.கே.ஏ.நாயர், சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார், நிருபமா மேனன் ராவ்) கேரள மாஃபியாவே விடுதலைப்புலிகளின் எனவே ஈழத்தமிழர்களின் இனஒழிப்புக்கு காரணம் என்கிறார். ஏன் ‘கேரளா மாஃபியா’ ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அய்யநாதன் சொல்கிறார் பாருங்கள்! இந்நூலை ஒட்டுமொத்தமாகத் தகர்க்கும் அத்தியாயம் அது. ஹனி டிராப்பிங் என்பதை வைத்து ஒரு மலையாளியை விடுதலைப்புலிகள் மாட்டிவிட்துதான் ‘கேரள மாஃபியா’வின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு காரணமாம்! முக்கியமான புத்தகம் கிசுகிசு கட்டுரைக்கு இணையாக இறங்கிவிடும் இடம் இது. உண்மையில் அங்கே கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் வேறு யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செயல்பட்டிருப்பார்கள். 2-10-15 அன்று நடந்த ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் ‘கேரள மாஃபியா’வை மறுத்த ஒரே ஜீவன் ஜென்ராம் மட்டுமே. மிக மோசமான வன்மத்தை வெளிப்படுத்தும் இப்புத்தகத்தின் ஒரு மிகப்பெரிய கறை என்றே சொல்லவேண்டும். மிகத்தெளிவாக இந்திய வெறுப்பு, விடுதலைப்புலி ஆதரவு என்ற மடையை தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பும் உத்தி இது என்றுதான் தோன்றுகிறது.

புத்தகத்தின் முதல் பகுதி மிக நேர்த்தியான (கூறியது கூறல் ரொம்பவே அதிகம் என்றாலும்) ஆய்வுநூல் போன்று தோற்றம் கொள்ள, பிற்பகுதி வெற்று வம்புகளில் உழன்றுவிட்டது. இதைத்தான் ஜென்ராம் (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) நாசூக்காக பத்திரிகையாளர் அய்யநாதன் என்றும் அரசியல்வாதி அய்யநாதன் என்றும் பிரித்துக்கூறினார். கூறிவிட்டு, ஆனாலும் பத்திரிகையாளர் அய்யநாதனே முழுக்க வெளிப்பட்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். சபை நாகரிகம் கருதி இருக்கலாம் என எடுத்துக்கொண்டேன்.

இந்நூலின் கடைசி அத்தியாயமே மிக முக்கியமானது. பலருக்கு அதிர்ச்சிகரமானது. அதில் நாம் புரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன. அரவிந்தரின் அருளால் ஈழம் அமையும் என்கிறார் அய்யநாதன். இதை வைகோ (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) மிக நாசூக்காகக் குறிப்பிட்டு, ஆங்கிலத்தில் ஹிந்தியில் மொழிபெயர்க்கும்போது கொஞ்சம் பார்த்து செய்ங்க என்று கேட்டுக்கொண்டார். அரவிந்தரின் அருளில் ஈழம் அமையும் என்றால் அத்தனை பிரச்சினை எல்லாருக்கும். விடுதலை பத்திரிகையில் இந்நூலைக் கைகழுவியே விட்டார்கள். ஈவெரா வகுத்துக்கொடுத்த பாதையில் எதையும் ஒற்றைவரியில்தான் இவர்களால் புரிந்துகொள்ளமுடியும் போல. நூல் முழுக்க மாங்குமாங்கென ஒருவர் தொகுத்து ஒரு தரப்பை முன்வைத்திருக்கிறார். கடைசியில் அவரது நம்பிக்கையின்பாற்பட்ட ஒன்றைச் சொல்கிறார். உடனே நூலை நிகாகரிக்கிறார்கள். ‘அரவிந்தரின் அருளில் அமையும் என்றால் அது இஸ்லாமிய கிறித்துவ நாடாக இருக்க வாய்ப்பில்லை, ஹிந்து நாடாக இருந்துவிடுமோ’ என்று பயந்து இந்நூலை நிராகரிக்கிறார்களோ என்னவோ யார் கண்டது.

Share

யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை

உண்மையில் யாகூப் மேமன், கஸாப் என்று யார் தூக்கில் தொங்கினாலும் உள்ளே சின்ன பதற்றமும் வருத்தமும் வரத்தான் செய்கிறது.அதிலும் அவர்களது கடைசி நிமிடங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களது உறவினர்கள் மனைவி மகன் மகள் என எல்லாரையும் நினைத்துப் பார்த்தால் ஏற்படும் சோகம் அளவில்லாததுதான்.

ஆனாலும் மிக அரிதான வழக்குகளில் தூக்கு என்னும் இந்திய நிலைப்பாட்டுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அதிலும் இந்தியா போல தெருவுக்கு நூறு ‘முற்போக்காளர்கள்’ திரியும் நாட்டில், இந்த ஒரு சட்டம் இல்லாமல் போனால் இங்கே தீவிரவாதிகளெல்லாம் தியாகியாகிவிடுவார்கள்.

இந்திய மனசாட்சிக்காக (மனுசாட்சியாம்!) உச்சநீதி மன்றம் இவர்களைத் தூக்கிலிடுகிறது என்ற மொன்னை வாதத்தையெல்லாம் நான் நம்பவில்லை. கடைசி வரை இவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. மேலும் இந்திய மனசாட்சியை நிறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் செயல்பட எக்காரணமும் இல்லை. இப்படி பேசி பேசித்தான் எல்லாவற்றின் மேலும் இந்த முற்போக்காளர்கள் அவநம்பிக்கையையை விதைத்தவண்ணம் உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் இது எடுபடுகிறது என்பது இப்போதைக்கான ஆறுதல். இத்தனைக்கும் யாகூப்மேமன் 23 வருடங்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். ஒருவகையில் இந்த அளவுக்கான காலம் கழிந்த தண்டனை ஒரு பின்னடைவுதான். இதைத்தான் நீதிமன்றங்கள் சரி செய்ய முயலவேண்டும்.

யார் தூக்கிலிடப்பட்டாலும் அதை ஏற்கவில்லை என்பவர்கள், எல் டி டி ஈ, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ வரலாற்றில் கொன்று குவிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு, அவர்களை நிராகரித்துவிட்டு, பின்னர் கொள்கைகளைப் பேசவேண்டும்.

தூக்குத் தண்டனை தேவைதான், ஆனால் யாகூப் மேமன் நிரபராதி என்பவர்கள் நிச்சயம் ஜோக்கர்கள்தான். அவர்களை நாம் பார்த்து சிரித்துவிட்டு நகர்வதே சரியானது.

தூக்குத் தண்டனை தேவை, ஆனால் யாகூப் மேனனுக்கு தூக்கு அவசியமில்லை, இப்படிச் சொல்வதால் யாகூப் மேமன் நிரபராதி என்றோ அப்பாவி என்றோ அர்த்தமில்லை என்ற பி.ராமன் போன்ற கருத்து உடையவர்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒரே பதில், நான் உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன் என்பது மட்டுமே.

இந்திய வெகுஜன முஸ்லிம்கள், இந்திய வெகுஜன கிறித்துவ ஹிந்துக்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் என்றுமே இந்திய மனசாட்சியுடன் உள்ளவர்களே. ஆனால் யாகூப் மேமன் போன்றவர்கள் தீவிரவாதிகள். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி பேசுபவர்களே – அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – கடும் கண்டனத்துக்குரியவர்கள். இவர்களைத்தான் முதலில் கண்டுகொள்ளவேண்டும்.

Share

ஈவெ ராமசாமி நாயக்கரும் ஆழம் இதழின் நட்டநடு செண்டர் நிலையும்

ஆழம் இதழ் ஈவெரா சிறப்பு இதழாக வெளிவந்திருக்கிறது (என்று நினைக்கிறேன்!). பெரியார் அன்றும் இன்றும் என்று அட்டையில் உள்ளது. 

ஈவெராவுக்கு ஆதரவாக (அல்லது எதிர்க்காமல் விமர்சனப் பார்வையுடன், செல்லமாகக் குட்டி தட்டி கட்டித் தழுவி!) எழுதியிருப்பவர்கள்:
 
அ.குமரேசன் – 12 பக்கங்கள்
வழக்கறிஞர் அருள்மொழி – 12 பக்கங்கள்
மருதன் – 12 பக்கங்கள்
ராமசந்திர குஹா – 2 பக்கங்கள்
 
மொத்தம்: 38 பக்கங்கள்
 
ஈவெராவுக்கு எதிராக, அதிலும் மயிலாப்பூர் பூணூல் அறுப்பை முன்வைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக எஸ் வி சேகர் சொன்னவை:
 
எஸ்.வி.சேகர் – 4 பக்கங்களில் உள்ளது.
 
மொத்தமே 4 பக்கங்கள்தான்!
 
ராமசந்திர குஹா எழுதியவற்றில் இருந்து 2 பக்கம் எடுத்து போட்டதுபோல, ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தில் இருந்து ஒரு 12 பக்கம் எடுத்துப் போட்டிருக்கலாம். சார்பு இருக்கவேண்டியதுதான். அது எதிர்க்கருத்து என்ற ஒன்றே இல்லை என்ற பாவனையில் இருக்கக்கூடாது.
 
–பிரசன்னா
Share

ஜீவா – காட்சிப்பட்ட தந்திரமும் காட்சிப்படவேண்டியவையும்

ஜீவா திரைப்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். கிரிக்கெட் அரசியல் பற்றிய திரைப்படம். பிராமணர்களின் ஆதிக்கத்தால் திறமை இருந்தும் மற்ற சாதிக்காரர்களுக்கு ரஞ்சி டிராபியில் இடம் கிடைக்காததை அழுத்தமாகச் சொல்லும் படம். இது முக்கியமான விஷயமே. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஆடிய 16 பேர்களில் 14 பேர் பிராமணர்கள் என்பது தற்செயல் அல்ல. நிச்சயம் பின்னணி ஏதோ உள்ளது. அதைத் தெளிவாகக் காட்டிய வகையில், அதுவும் நெஞ்சைப் பிசையும் வகையில் காட்டியதால் மிக ஆழமாகவே இக்கேள்வி மனத்தில் பதிகிறது. 

முக்கியமான விஷயத்தைவிட்டு காதல் என்று சுற்றுவதற்கே பாதிப் படம் போய்விடுகிறது. நான் திரைப்பட விமர்சனமாக இதை எழுதவில்லை என்பதால் இந்த திரைப்பட கோணல்களையெல்லாம் விட்டுவிட்டு, அரசியலுக்குப் போகிறேன். படம் நெடுகிலும் மிகத் தெளிவான கிறித்துவப் பின்னணியை வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர், அந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர். ஹிந்துக் குழந்தை கிட்டத்தட்ட கிறித்துவனாகவே வளர்கிறது. எந்த அளவுக்கு? ஹிந்துப் பையனின் காதல் வெளியே தெரியவரும்போது பாதிரியார் கூப்பிட்டுப் பேசுகிறார். ஒரு ஹிந்துப் பையன் கிறித்துவ குடும்பத்தோடு பழகினாலே அவன் கிறித்துவன், எனவே நாம் ஒரு கிறித்துவக் குடும்பத்தை விசாரிப்பதைப் போலவே விசாரிக்கலாம் என்ற அளவுக்கு ஒரு பாதிரியாரும், அவன் கிறித்துவனே என்று ஒரு கிறித்துவ தம்பதி பெற்றோரும் நம்பும் அளவுக்கு! 

சீனியர் சூரி கிறித்துவர். கோச் கிறித்துவர். பக்கத்துவீட்டுக்கு வந்து சேரும் பின்னாள் காதலி கிறித்துவர்! பிராமணர்களுக்கு மட்டும் இடம் கிடைப்பது எப்படி தற்செயலல்ல என்று இயக்குநர் நம்புகிறாரோ, அதேபோல் சுசீந்திரனின் இந்த பின்னணித் திணிப்பு தற்செயலானதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலும் வெகுவான கிறித்துவ பின்னணி. கிறித்துவ பின்னணி வருவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. (நீர்ப்பறவை ஆழமான கிறித்துவப் பின்னணி கொண்ட திரைப்படம். ஆனால் அதில் அரசியல் இல்லை. நிஜமான பதிவு மட்டுமே இருந்தது.) ஆனால் தொடர்ந்து இயக்குநர் ஒருவரின் படத்தில் இப்படி வருமானால் அதை தற்செயல் என்று ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?

அதிலும் ஒரு காட்சி வருகிறது. காதலுக்காக இரண்டு நிபந்தனைகள். ஒன்று, ஹீரோ மதம் மாறவேண்டும். இரண்டாவது, கிரிக்கெட்டை விட்டுவிடவேண்டும். அப்போது ஹீரோ சொல்கிறார், மதம் மாறுவது ஒரு பிரச்சினையில்லை. அதாவது வாயசைப்பில் இப்படி வருகிறது. டப்பிங்கில் மாற்றி இருக்கிறார்கள், மதம் மாறுவதை அப்புறம் பார்த்துக்கலாம் என்பது போல. ஸ்கிரிப்ட்டில் மிகத் தெளிவாகவே இயக்குநர் மதம் மாறுவது பிரச்சினையில்லை என்றே எழுதியிருக்கிறார். (பார்க்க: கடைசியில் உள்ள 11 நொடி வீடியோ.) கல்யாணத்துக்காக மதம் மாறுவதைப் பற்றி சமூக அக்கறையுள்ள இயக்குநர் இப்படி சிந்திப்பாரென்றால், பிராமண ஆதரவுக் குழுக்கள் வேறெப்படி சிந்திக்கவேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்க்கிறார்? இப்படிச் சொன்னாலும், பிராமண ஆதரவு கிரிக்கெட் தேர்வில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு, திறமை இருந்தும் முன்னேற முடியாத அதேசமயம் திறமை இல்லாமல் முன்னேறிவிடுகிற மற்ற சாதிகளைப் பற்றிய பிராமணர்களின் குமுறலையும் பேசவேண்டுமே. சுசீந்திரன் என்ன பைத்தியமா இதைப் பேச. எது எடுபடுமோ அதைப் பேசுகிறார். ஒரே படத்தில் அத்தனையையும் காட்டிவிடமுடியாது. திரைக்கதை வீரியத்துக்கு ஒருமுனையில் படத்தை குவிப்பது தேவைதான். ஆனால் அதைப் பற்றிய ஒரு வரி கூட படத்தில் இல்லை! ஏனென்றால் இயக்குநருக்கு அது பற்றிய அக்கறை இல்லை.

ஆனால் இன்னொன்றில் அக்கறை உள்ளது. அபிராமணர்கள் என்ன சாதி என்று சொல்லக்கூடாது என்பதில் அக்கறை இருந்திருக்கிறது. நல்லது. போகட்டும். ஜீவாவின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைக்கும் கதாபாத்திரம் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளது. தமிழகத்தில் இருந்து உருவான கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் பெரும்பான்மை பிராமணர்கள் என்று தெரிந்துகொண்ட சுசீந்திரனுக்கு, இந்திய அளவில் தன் செல்வாக்கு மூலம் இன்னொருவனுக்கு வாய்ப்புத் தர முடியக்கூடிய ஒரு கிரிக்கெட்காரர் ஹிந்துவாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. இந்திய அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமிய ஆட்டக்காரர்கள் எத்தனை பேர், அவர்களில் அத்தனை செல்வாக்குப் பெற்று, ரஞ்சி டிராஃபியில்கூட விளையாடியிருக்காத ஒருத்தனுக்கு ஐபிஎல் (படத்தில் சிபிஎல்) குழுவில் இடம்வாங்கித்தரும் அளவுக்கு உள்ள முஸ்லிம் ஆட்டக்காரர் என்று ஒருவரைக் காட்டமுடியுமா? பிராமணர்களைச் சொல்லும்போது தரவோடு வருகிறவர், ஹிந்துக்களைப் புறக்கணிக்க எந்தத் தரவோடும் வருவதில்லை. இது புதியதல்ல. ஏற்கெனவே நன்கு போடப்பட்ட பாதை. அதிலே சுசீந்திரனும் மிக இலகுவாகச் செல்கிறார்.

குறைந்தபட்சம், இந்தியாவின் முக்கிய அச்சுறுத்தலான தீவிரவாதம் பற்றியும் அதில் அதிகமான இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றியும் சுசீந்திரன் படம் எடுக்கவேண்டும். இந்தப் படத்தில் கிறித்துவர்களை நல்லவர்களாக வைத்ததுபோல் புதிய படத்தில் ஹிந்துக்களை அப்பாவி நல்லவர்களாக வைக்கவேண்டியதில்லை. இந்திய அப்பாவி பொதுஜன முஸ்லிம்களை நல்லவர்களாக வைக்கட்டும். உண்மையும் அதுதான், எனவே யதார்த்தமாகவும் இருக்கும். இப்படி வைத்தாவது அவரால் ஒரு படத்தை இயக்கிவிட முடியுமா என்ன? முடியும். செய்யட்டும். செய்யவேண்டும்.

இதை ஒட்டி வேறு சில வாய்ப்பரசியலைப் பார்க்கவேண்டும். திறமை இருந்தும் புறக்கணிப்படுகிற பிராமணர்களின் குமுறலைப் படமாக்கினால் அதுவே அந்த இயக்குநருக்குக் கடைசிப் படமாக இருக்கலாம். இடஒதுக்கீட்டில் கைவைக்கும் திரைப்படம் ஒன்றை எடுப்பது சாதாரணமானதல்ல. எதிர்ப்புக் கூட்டம் போட்டே சாகடித்துவிடுவார்கள். ஆனால் பிராமணர்களைத் திட்டி, ஹிந்துக்களைத் திட்டி படம் எடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை தொடர்ச்சியான லாபம்கூட இருக்கலாம்! இதை எந்த ஒரு இடத்திலும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு ஹிந்துத்துவ ஆதரவுத் திரைப்படம், அதிலும் கலை ரீதியாக மேம்பட்ட படம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஹிந்துத்துவப் படமே வராது, சரி, ஜஸ்ட் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ். அதைப் பாராட்டி ஒரு கட்டுரையை நீங்கள் எங்கேயும் பார்த்துவிடமுடியாது. எந்த இதழும் வெளியிடாது. ஒருவேளை நீங்கள் எழுதினால், கட்டுரையோடு அந்தப் பத்திரிகை உங்களையும் நிராகரிக்கும் அந்தப் படத்துக்கு எதிர்க்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்பதற்கு நான் உத்திரவாதம்.

ஏதேனும் ஒரு படம் வந்தால், ஒரே பத்திரிகையில் அதே படத்தை ஐந்து விதமாக விமர்சிப்பார்கள். ஐந்து விமர்சனங்களும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும். ஒரு பொது அடித்தளத்தைப் பெற்றிருக்கும். இந்த அடித்தள சமரசத்துக்குட்பட்டே நீங்கள் அந்தப் பத்திரிகையில் எழுத முடியும். சமரசமே இல்லாமல் கட்டுரை எழுதுவது என்று அந்த எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் குறைந்தபட்ச சமரசம் என்பது உங்கள் கொள்கையாக இருந்தால்மட்டுமே நீங்கள் அங்கே எழுதமுடியும். அடித்தளம் மறைந்திருக்கும், அது ஒன்றேயானது. மேலே கட்டுமானங்கள் மட்டும் விதம்விதமாக.

இது ஹிந்த்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிற இதழுக்கும் பொருந்தும். ஆனால் ஹிந்துத்துவ இதழ் இங்கே நடுநிலை இதழ் இல்லை. மற்றவை நடுநிலை இதழ்கள். சமரசமற்ற இதழ்கள். இதுவே முக்கியமான வேறுபாடு.

ஒரு ஐயாயிரம் பிரதி விற்க கஷ்டப்படும் இதழில் எழுதக்கூட இத்தனை வாய்ப்பரசியல் என்றால், கோடிகள் புரளும் விளையாட்டும் வாய்ப்பரசியல் இருக்காது என்று நம்ப யாருமே முட்டாளல்ல. ஆனால் வாய்ப்பரசியலை ஹிந்துக்களையும் பிராமணர்களையும் விமர்சிக்கப் பயன்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சுசீந்திரனும் புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதை எதிர்வரும் அவரது படங்கள் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.


வாயசைப்பையும் டப்பிங்கையும் கூர்ந்து நோக்க.

Share

யமுனாவின் மேற்கோள் அரசியல்

ஃபேஸ்புக்கில் போட்டது, சேமிப்புக்காக இங்கே.

/உலோகம் ஒரு கார்ப்போரேட் காக்டெயில் நாவல். ‘தமிழின் முதல் சைக்கலாஜிகல் திரில்லரான’ சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே, ‘அரபு தேசக் கதைக்களனுடன் அதகளப்படுத்தும் திரில்லரான’ ராம் சுரேஷின் பழி, பாவம், படுக்கையறை, ‘பர்மா பஜார் நிழல் உலகைப் பதைபதைக்கச் சுற்றிவர’க்கோரும் யுவ கிருஷ்ணாவின் அழிக்கப் பிறந்தவன், ‘இங்கிலாந்து உளவாளியின் மயிர்க்கூச்செறியும் அட்டகாசங்கள் நிறைந்த’ தரணியின் ஓடு, ஓடு, ஒளி போன்ற ‘அட்டகாச’ திரில்லர்கள் வரிசையில், ‘கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டுவந்து’ ஜெயமோகன் உலோகம் எழுதியிருக்கிறார்.

தயவு செய்து குபுக்கெனச் சிரித்துவிட வேண்டாம். சத்தியமாக மேலே இருக்கிற நாவல்கள் குறித்த வர்ணனைகளை நான் எழுதவில்லை. கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை. இந்த நாவல்களின் பண்புகளுடனான உணர்ச்சிகமான திரில்லர் சமச்சாரங்களுடன் அங்கங்கே ஜெயமோகனுக்கு ஈழம் குறித்துத் தெரிந்த இலக்கியம் இலக்கியவாதிகள் அவர்களுக்குச் சுந்தர ராமசாமியுடன் இருந்திருக்கக்கூடிய உறவுகள் போன்றவற்றுடன உருவாகியிருக்கிற சுத்த இலக்கியக் காக்டெயில் யுனிக் நாவல்தான் உலோகம்.//

இப்படி யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.

ஆனால் உலோகம் பின்னட்டையில் உள்ளவை –

”உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. த்ரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தைக் கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு த்ரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணர வேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம், கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம், அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு முடிச்சைப்போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த த்ரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக்கூடியது. ஈழத்தோடு தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்க முடிகிறது.”

புத்தகத்தின் உள்ளே, உள் முன்னட்டையில் நில்லுங்கள் ராஜாவே மற்றும் பழிபாவம்படுக்கையறை நாவல்கள் பற்றிய விளம்பரங்கள் உள்ளன. உள் பின்னட்டையில் அழிக்கப் பிறந்தவன், ஓடு ஓடு ஒளி நாவல் பற்றிய விளம்பரங்கள் உள்ளன.

ஆனால் யமுனா ராஜேந்திரன் சொல்வது: ”கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை.”

 

எப்படி யமுனாவால் ஒரு விஷயத்தை திரித்து எழுதமுடியும் என்பதற்கு இது உதாரணம். நான்கு விளம்பரங்கள், பின்னட்டையில் உள்ள வாசகத்தை ஒன்றாக்கி, சில வரிகளில் கோட் போட்டுவிட்டு, என்னவோ கிழக்கு பதிப்பகம் அப்படி எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது மூலம் இவர் சாதிக்கப் போவதென்ன என்று தெரியவில்லை.

 

 

யமுனா ராஜேந்திரனின் வலைத்தளம்: http://yamunarajendran.com/?p=1035

Share

ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்

மதிப்புரை.காம் தளத்தில் ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் என்ற புத்தகம் பற்றிய என் மதிப்புரை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

விரிவான ஆழமான விமர்சனத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மதிப்புரை.காம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள் சில புத்தகங்களை இலவசமாகப் பெற்று விமர்சனம் செய்யும் வசதியும் உள்ளது.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை விமர்சனத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

சேமிப்புக்காக இங்கே:

ஆர் எஸ் எஸ்ஸை மிக நெருக்கமாக கடந்த 45 வருடங்களாகப் பார்த்துவரும் ஒருவர் ஆய்வு செய்து எழுதிய புத்தகம் இது. இவர் ஆர் எஸ் எஸ்ஸிலும் இருந்தவர். எனவே உள்ளே இருந்து எழும் ஒரு விமர்சனக் குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் குரல். அது கலகக்குரல் இல்லை. மாறாக விமர்சனக் குரல். ஒருவகையில் ஆர் எஸ் எஸ் எப்படி இருந்து இப்போது இப்படி வீழ்ச்சி அடைந்துவிட்டதே என்று வருத்தப்படும் குரல். அல்லது மீண்டும் ஆர் எஸ் எஸ் பழையபடி வீறுகொண்டு எழாதா என்று விரும்பும் ஏக்கக்குரல். இப்படி ஒரு கலவையாகவே இந்தப் புத்தகத்தைப் பார்க்க முடிகிறது.

ஆர் எஸ் எஸ்ஸின் முழுமையான வரலாற்றுப் பார்வையை இப்புத்தகம் தரவில்லை. என்றாலும், ஆர் எஸ் எஸ்ஸின் முக்கியமான மூன்று தலைவர்களின் ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் அலசுவதன்மூலம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வரலாறும் விவரிக்கப்படுகிறது.

ஹெட்கேவர் காலத்தில் இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகவே ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டது. அங்கே சமத்துவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானவையாக வலியுறுத்தப்பட்டன. உயர்சாதி தாழ்ந்த சாதி வேறுபாடுகள் ஆர் எஸ் எஸ்ஸுக்குள் நுழையக்கூடாது என்பது ஹெட்கேவர் காட்டிய அக்கறையை மிகத் தெளிவாகவே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இந்த சாதி விஷயத்தில் ஆர் எஸ் எஸ் என்றுமே தன் நிலையிலிருந்து, யார் தலைவராக இருந்தபோதிலும், மாறிவிடவில்லை என்பதைத் தெளிவாகவே கூறுகிறார் நூலாசிரியர். முஸ்லிம் அராஜகத்துக்கு எதிராக ஆர் எஸ் எஸ் துவங்கப்பட்டது என்ற பொதுப்புத்தி கருத்துக்கு சஞ்சீவ் கேல்கர் தரும் பதில் மிக முக்கியமானது. 1974ல் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம், “எல்லா முக்கிய 22 கலவரங்களும் ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிமகளால் தொடங்கப்பட்டது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் நபர்கள் பெரிய பதவிகளில் இல்லை. மிகப்பெரிய கட்சியாக ஜனசங்கம் அறியப்பட்டிருக்கவில்லை. எல்லா நீதிபதிகளையும் இப்படித் தீர்ப்புக்கூறும் அளவுக்கு ஆர் எஸ் எஸ் பெரிய சக்தியாக இல்லை என்கிறார். அதாவது ஆர் எஸ் எஸ் என்பது முஸ்லிம்களுக்கு எதிரானதாக தொடங்கப்படவில்லை, மாறாக ஹிந்துக்களின் ஒற்றுமைக்கானது என்பதைச் சொல்கிறார். அதிகாரத்தைக் கையாள கொள்கையும் நேர்மையும்தான் அடித்தளமானது என்பதை இரண்டு தலைவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்கிறார், ஒருவர் காந்தி, மற்றொருவர் கோல்வல்கர்.

நூலில் கோல்வல்கரின் மீது வைக்கப்படும் ஒரு முக்கியமான விமர்சனம் அவர் தொலைநோக்கோடு முஸ்லிம்களை அணுகவில்லை என்பதுதான். கோல்வல்கரின் தேசியம் என்பது தேசத்தின் மதம் மற்றும் கொள்கையை நிச்சயம் ஏற்றுக்கொள்வதிலிருந்து தொடங்கி, அங்கேயே முடிந்துவிடுகிறது. ஒரு சமயம் ஹிந்து மதம் பரந்த மனம் கொண்டது என்று சொல்லும் கோல்வல்கர், இன்னொரு சமயம் இந்த தேசத்தின் கலாசாரத்தை முஸ்லிம்கள் ஏற்கவேண்டும் என்பதை எப்படி நியாயப்படுத்தமுடியும் என்கிறார் நூலாசிரியர். இதில் மிகமுக்கியமானது, முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்பதை கோல்வல்கர் ஏற்கவில்லை என்பதுதான்.

கோல்வல்கரின் மிக முக்கியமான அம்சமாக ஆசிரியர் சொல்வது – அதிகார வெறுப்பு. அதாவது அரசியலில் இருந்து விலகி இருத்தல். கோல்வல்கர் ஒரு தூய்மைவாதி. இதனால் ஆர் எஸ் எஸ் இறுகிப் போன ஒரு அமைப்பாக இருந்தது என்பதே ஆசிரியரின் பார்வை. ஒருவகையில் இந்த இறுகிப் போன தன்மைதான், ஆர் எஸ் எஸ்ஸின் நெருப்பு நிமிடங்களைக் கடக்க உதவியது என்றால் மிகையில்லை. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸின் மீதான பழி, ஆர் எஸ் எஸ் தடை என எல்லாவற்றையும் கோல்வல்கர் தனது தூய்மைவாதத்தால்தான் வென்றெடுத்தார். ஒருவகையில் அந்த நிலையில் கோல்வல்கரின் பார்வை சரியானதே. ஆனால் ஆசிரியர் இதை ஏற்கவில்லை.

காந்தி கொலையில் ஒரே வரியில் அதில் ஆர் எஸ் எஸ் பங்குபெற்றிருக்குமோ என்று சந்தேகம்கூடப் படமுடியாது என்று கடந்துபோகிறார் சஞ்சீவ் கேல்கர். அந்த நிலையைக் கோல்வல்கர் கையாண்ட விதத்தையும் மிகப்பெரிய ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார். மூர்க்கத்தனமான தடையைத் தாண்டி வெளியேற ஆர் எஸ் எஸ் கைக்கொண்ட சக்தியை, அதற்குப் பின்னர் சரியாக கோல்வல்கர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். தேவையே இல்லாமல் ஆர் எஸ் எஸ் தன்னை குறுக்கிக்கொண்டு, சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து, தன்னை வெளிப்படுத்தாமல் நடந்துகொண்டது என்கிறார். இதுவே கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் கோல்வல்கரிடம் இருந்து பெற்றுக்கொண்டது என்கிறார்.

கோல்வல்கர் தூய்மைவாதி என்றால் தேவரஸை நவீனவாதியாக ஆசிரியர் பார்க்கிறார். உண்மையில் கோல்வல்கரின் மீதான ஒவ்வொரு விமர்சனத்தின் பின்னாலும் தேவரஸைப் பற்றிய ஆசிரியரின் பிம்பம் உள்ளது என்பதே உண்மை. இதை ஒட்டி கோல்வல்கரின் செயல்பாடுகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை ஆசிரியர் முன்வைக்கிறார். கோல்வல்கரின் பிடியில் ஆர் எஸ் எஸ் செல்வதற்கு முன்பாகவே தேவரஸ் வந்திருந்தால் ஆர் எஸ் எஸ் மிக உன்னதமான நிலையை எட்டியிருக்கும் என்பதே ஆசிரியரின் எண்ணம்.

கோல்வல்கருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் (இதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன) முதலில் ஆர் எஸ் எஸ்ஸின் பணிகளில் இருந்து விலகியிருந்த தேவரஸ் திரும்ப வருகிறார். அரசியலில் பங்கெடுக்க தேவரஸை கோல்வல்கர் அனுமதிக்கவே இல்லை. தூய்மைவாதிக்கும் நவீனவாதிக்கும் இடையேயான முரண் இது. தேவரஸை ஆர் எஸ் எஸ் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும், கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் மையவாதத்திலிருந்து மாறுபட்ட போக்கை தேவரஸ் கையாண்டது சரியானது என்பதும் ஆசிரியர் பல இடங்களில் பல விளக்கங்களுடன் சொல்லிச் செல்கிறார். மிக முக்கியமான விஷயம், இந்த மூன்று தலைவர்களுக்குள்ளும் கொள்கையில் வேறுபாடு இல்லை என்பதே. ஆனால் அதை அடையும் வழி குறித்து மிகத் தீர்மானமான கருத்துகள் ஒவ்வொருவர் முன்னேயும் இருந்தன. ஹெட்கேவரின் சிந்தனையையும் வழியையும் மீண்டும் கொண்டு செல்பவர் தேவரஸ் என்றே ஆசிரிரியர் விவரிக்கிறார். ஆனால் கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் அதை முதலில் விரும்பவில்லை.

1973ல் தேவரஸ் ஆர் எஸ் எஸ் தலைவரானதும்தான் அரவணைத்துச் செல்லும்போக்கு தொடங்குகிறது. எல்லாருடனும் நட்புடன் இருப்பது பாவமல்ல என்றும் தனக்குள் ஆர் எஸ் எஸ் சுருங்கிக் கிடக்கவேண்டியதில்லை என்றும் புரியத் தொடங்குகிறது. ஆர் எஸ் எஸ்ஸின் புறத்தோற்றத்தை மாற்ற, அதன் ஷாகாவிலிருந்து தொடங்க நினைக்கிறார். கால் சட்டையை மாற்றக் கூட நினைக்கிறார். சிலவற்றை அவரால் செய்யமுடியவில்லை. பழமையை மாற்ற பலர் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஆர் எஸ் எஸ் யதார்த்தவாதத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய அமைப்பாக தேவரஸ் காலத்தில் மாறுகிறது என்பது உண்மைதான்.

முஸ்லிம்களைத் தள்ளி வைப்பதைத் தவிர்க்கும் தேவரஸ், அவர்கள் குறைந்தபட்ச சாகா நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இந்தியாவைத் தாய்நாடாகக் கருதினால், தங்கள் முந்தைய காலம் இந்தியாவுடன் தொடர்புடையது என்று கருதினால் அவர்களும் நம்மவர்களே என்ற எண்ணத்தை விதைக்கிறார். முஸ்லிம்களுக்கும் ஆர் எஸ் எஸ்ஸுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒழிக்க ஆர் எஸ் எஸ்ஸுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து செயல்பட்டவர் தேவரஸ் என்கிறார் சஞ்சீவ் கேல்கர்.

இதற்குப் பின்பு நெருக்கடி நிலை பற்றியும் அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் தொண்டு பற்றியும் விளக்குகிறார். கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய அவரது பார்வையும், அவர்களது வீழ்ச்சியும் இப்புத்தகத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோ ஒரு புள்ளியில் கம்யூனிஸமும் ஆர் எஸ் எஸ் கொள்கையும் இணையவேண்டும் என்று ஆசிரியர் விரும்புதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் அதே சமயம், கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வியிலிருந்து ஆர் எஸ் எஸ் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் சொல்கிறார்.

இந்நூலிம் முக்கியத்துவம், வெறுமனே ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடாதது. அதேபோல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாது. மாறாக, மிகத் தெளிவான கறாரான விமர்சனங்கள், அவையும் அவற்றுக்கான ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளதுதான். ஜாதியைப் பொறுத்தவரை ஆர் எஸ் எஸ்ஸில் மாற்றுக் கருத்துகளே இல்லை என்பதில் தொடங்கி, காந்தி கொலையில் ஆர் எஸ் எஸ் பங்கிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்வதிலாகட்டும், இந்தியாவில் ஹிந்துக்களிடையே ஒரு பரந்த கலாசார ஒற்றுமை இருக்கிறது என்று எடுத்துக்காட்டுடன் சொல்வதிலாகட்டும், சஞ்சீவ் கேல்கருக்கு எவ்வித சந்தேகங்களும் இருப்பதில்லை. மிகத் தீர்க்கமான பார்வையுடன் அனைத்தையும் அணுகிறார். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு வகை அணுகல்தான் புத்தகம் முழுக்க.

தேவரஸ் மீதான ஆசிரியரின் சாய்வு ஒரு கட்டத்தில் கோல்வல்கரை மிக அதிகமாக விமர்சிப்பதில் முடிகிறதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை.

ஆர் எஸ் எஸ் பற்றியும், கோல்வல்கர் தேவரஸ் பற்றியும் புரிந்துகொள்ள மிக முக்கியமான நூல் இது. ஆர் எஸ் எஸ்ஸின் வரலாற்றோடு இந்தியாவின் வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்திலும் பார்க்கமுடிகிறது.

இந்த நூலின் பின்னிணைப்பாக ‘தலித்களின் தசராவும் ஆர் எஸ் எஸ்ஸின் தசராவும்’ என்று ஒரு கட்டுரை உள்ளது. மிக முக்கியமானது. மிக உணர்வுப்புர்வமானது. டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் ஹெட்கேவரும் உருவாக்கிய அமைப்புகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தைச் சொல்வது. இன்னொரு பின்னிணைப்பு ஆர் எஸ் எஸ்ஸின் சாசகம் பற்றியது. இதுவும் முக்கியமானது.

மிகச் சிக்கலான ஆழமான ஒரு நூல் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும், சஞ்சீவ் கேல்கர், தமிழில் சாருகேசி, 382 பக்கங்கள், விலை ரூ 300, கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-156-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Share